செவ்வாய், 23 ஏப்ரல், 2019

நாத்திகர்கள் தீண்டத் தகாதவர்களா?!

பகுத்தறிவாளர்கள் இணைந்து, சேலம் மாவட்டம் மேட்டூரில்  இம்மாதம் 27ஆம் நாளில் 'நாத்திகர் மாநாடு' நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். உள்ளூர்க் காவல் துறையிடம் அனுமதி கேட்டபோது, அவர்கள் தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை அணுகும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

ஆட்சியரோ, ஏற்பாட்டாளர்களின் மனுவுக்குப் பதில் தராமல் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்[ஆட்சியாளர்களின் வழிகாட்டுதலின் பேரிலேயே அவர் செயல்படுவார் என்பது நாம் அறிந்ததே]. 

வேறு வழியின்றி, நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் மாநாடு நடத்துவோர். நீதிமன்றம், சட்டப்படியான முடிவினை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு வழங்கியிருக்கிறது என்பது இன்றைய செய்தி.
ஆன்மிகம் என்னும் பெயரில், நாளிதழ்கள் உட்பட இங்குள்ள அத்தனை ஊடகங்களும் டன் கணக்கில் மூடநம்பிக்கைகளைத் திணித்து மக்களின் மனங்களைப் பாழடித்துக்கொண்டிருக்கின்றன.

கோயில்களில் தினம் தினம் விதம் விதமாய் அபிஷேக ஆராதனைகள், திருவிழாக்கள், சாமிகளின் வீதி உலாக்கள், திருக்கல்யாணங்கள் என்று மக்களின் பொன்னான நேரத்தையும் பொருளையும் வீணடிப்பதோடு சிந்திக்கும் அறிவை முடமாக்கும்  காரியங்களும் தடையேதுமின்றித் தொடர்கின்றன.

தத்தமக்குரிய அரசுப்பணிகளை மேற்கொள்ளும்போது சாதி மதச் சார்பற்றவர்களாய்க் கடமையைச் செய்யவேண்டிய ஆட்சியாளர்களில் பலரும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் பக்திமான்களாய்த் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளத் தவறுவதே இல்லை. காரணம்.....

'கடவுள் பக்தி உள்ளவனே யோக்கியன்' என்னும் நம்பிக்கையைப் பல்லாண்டுக் காலப் பரப்புரையின் மூலம் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டார்கள் ஆன்மிகவாதிகள். இதன் காரணமாகத்தான் நம்மில் மிக மிக மிகப் பெரும்பாலோர் தம்மைப் கடவுள் பக்தராகக் காட்டிக் கொள்வதில் முனைப்புக் காட்டுகிறார்கள்.

இது ஒருவகை மனநோய் ஆகும்.

இந்நோய் தீர, ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் பணியைப் பகுத்தறிவாளர்கள் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இப்பணியின் அவசியத் தேவையை உடனடியாக உணரச் செய்வதே இந்த நாத்திகர் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

எனவே, உடனடியாக இதற்கான அனுமதியை நம் மாநில அரசு வழங்கிட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக