அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 24 செப்டம்பர், 2020

எதிர்நீச்சல்!...ஒரு பக்கக் கதை

“கவின், உன்     பள்ளித்  தமிழாசிரியரைப் பார்த்தேன். ஆண்டுவிழாவுக்கான பேச்சுப் போட்டிகள் நடக்க இருப்பதாகச் சொன்னார்.  போட்டிகள்ல நீயும் கலந்துக்கிறதானே?” என்று மகனிடம் கேட்டார் துரைசாமி.

“இல்லப்பா.” -சலிப்புடன் சொன்னான் கவின்.

“ஏன் கவின்?”

“பேச்சுப் போட்டி எதிலும் என்னால் ஜெயிக்க முடியறதில்ல; ஆர்வமும் இல்ல.”

“அப்படிச் சொல்லக்கூடாது. வெற்றியோ தோல்வியோ இன்னிக்கே பேர் கொடுத்துடு.”   

தலையசைத்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டான் கவின்.

துரைசாமியின் மனைவி சரிதா கேட்டார்: “கவின் ரொம்ப நல்லாப் படிக்கிறான். பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் அவனுக்குப் பிரியம் இல்ல. வேண்டான்னா விட்டுடலாமே. ஏன் கட்டாயப்படுத்துறீங்க?”

“நாட்டில் மக்கள் தொகை பெருகிட்டே போகுது. எல்லார்த்திலேயும் போட்டி அதிகமாயிட்டு வருது. பிரியப்படுற வேலை கிடக்கும்கிறது நிச்சயமில்ல. பிடிக்காத வேலையைச் செய்தாத்தான் பிழைக்க முடியும்கிற நிலை வரலாம். அதுக்கான மனப் பக்குவத்தை இப்போதிருந்தே வளர்த்துக்கிறது நல்லதில்லையா?” என்றார் துரைசாமி.

கணவன் சொல்வது சரியே எனப்பட்டது சரிதாவுக்கு.

===============================================================