ஏழுமலையான் கோவில் மீது விமானங்களும், ஹெலிகாப்டர்களும், பறக்கத் தடை விதித்து தேவஸ்தானம் அறிவித்திருந்த நிலையில், சமீபக் காலமாக அதன் மீது விமானங்களும், ராணுவப் பயிற்சி ஹெலிகாப்டர்களும் பறந்து செல்வது மட்டுமல்லாமல், உளவு பார்ப்பதற்காக[?] ஆளில்லா விமானங்களும் பறப்பதாகத் அது அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் ‘ஆகம விதி’ மீறப்படுவதாகச் சொல்லும் அது, இனியும் விமானங்களோ ஹெலிகாப்டர்களோ கோயிலின் மீது பறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நடுவணரசிடம் கோரிக்கை வைத்ததாகவும், நடுவணரசு மறுத்துவிட்டதாகவும் ‘தினத்தந்தி’ செய்தி வெளியிட்டுள்ளது.
இது தேவஸ்தானத்துக்கும் நடுவணரசுக்கும் இடையிலான விவகாரம் என்பதால், அது நமக்கு ஒரு பொருட்டல்ல.
ஆனால்.....
விமானங்கள் பறப்பதால் ‘ஆகம விதி’ மீறப்படுகிறது என்று அவர்கள் சொல்லும் பொய்தான் நம்மைக் கதிகலங்கச் செய்கிறது.
ஆகம விதிகள் வகுக்கப்பட்டது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு[நீங்கள் யுக யுகாந்தரங்களுக்கு முன்பு என்றும் சொல்லிக்கொள்ளலாம்] என்கிறார்கள்.
விமானம் கண்டுபிடிக்கப்பட்டது 20ஆம் நூற்றாண்டில்(1890-1903).
இந்த நிலையில், திருப்பதி கோயிலுக்கு மேலே விமானங்கள் பறப்பதை ஆகம விதி அனுமதிக்கவில்லை என்கிறார்களே, அது எப்படி?
அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களின் மீது காக்கை, கழுகு, குருவி, கோட்டான் என்று எந்தவொரு பறவையும் பறப்பதை ஆகம விதி தடை செய்திருக்கிறது என்று சொல்வதில்கூட நியாயம் இருக்கிறது.
அந்த விதியை அறிந்துகொள்ளும் அறிவு பறவை இனங்களுக்கு இல்லை என்பதால், அந்த விதிக்குக் கடவுள் அனுமதி வழங்கியிருக்கமாட்டார் என்று சொல்லி அவர்கள் சொல்வதை நியாயப்படுத்தலாம்.
விமானங்கள் பறப்பதற்கான அனுமதி மறுக்கப்படுதல் வேண்டும் என்பதற்கு, தேவஸ்தானிகள் ‘ஆகம விதி’யைத் தூக்கிப் பிடிப்பது நகைப்புக்குரியதாகும்.
ஆகம விதியைக் காரணம் காட்டிக் காலங்காலமாகக் கோயில்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்; செலுத்துகிறார்கள் ‘அவர்கள்’.
இந்தக் கூத்து இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்?
ஏழுமலையானுக்கே வெளிச்சம்!