கடவுளைக் கற்பித்தவர்கள் மகா...மகா...மகா புத்திசாலிகள். ஒட்டுமொத்த அறிவுக்கும் ஆற்றலுக்கும் நல்ல குணங்களுக்கும் அவரே பிறப்பிடமும் இருப்பிடமும் ஆவார் என்று சொல்லிவைத்தார்கள்; தொடர் பரப்புரைகள் மூலம் மக்களை நம்ப வைத்தார்கள். அந்த நம்பிக்கைக்குக் கொஞ்சமும் பங்கம் நேராமல் பாதுகாத்து வருபவர்கள் ஆன்மிகவாதிகள்.
கடவுள் கருணை வடிவானவர் என்று சொல்லிக்கொண்டே, அவரைப் பழித்தால் தண்டிப்பார் என்பதான பீதியையும் மக்களின் அடிமனங்களில் ஆழமாகப் பதித்துவிட்டார்கள் இந்த ஆன்மிகப் பெருந்தகைகள். விளைவு.....
கடவுளிடம் கோரிக்கை வைத்து அது நிறைவேறவில்லை என்றாலும் "ஒழிக" முழக்கங்களைப் பக்தர்கள் ஒருபோதும் எழுப்புவதில்லை; அவரை நிந்திப்பதும் இல்லை.
கடவுளிடம் கோரிக்கை வைத்து அது நிறைவேறவில்லை என்றாலும் "ஒழிக" முழக்கங்களைப் பக்தர்கள் ஒருபோதும் எழுப்புவதில்லை; அவரை நிந்திப்பதும் இல்லை.
'விதி, தலை எழுத்து, முற்பிறப்பில் செய்த பாவம்' போன்றவற்றைக் காரணங்களாக்கித் தமக்குத்தாமே பழி சுமத்திக்கொள்ள இவர்கள் தயங்குவதில்லை.
பலமுறை கோரிக்கை வைத்தும் குறை நிவர்த்திக்கப்படாதபோதும், கோரிக்கை வைப்பதை இவர்கள் தவிர்ப்பதில்லை; கடவுள் நம்பிக்கையைக் கைவிடுவதும் இல்லை. பதிலாக.....
ஒரு கடவுள் கண் திறக்கவில்லை என்றால் இன்னொரு கடவுளைத் தேடிப்போவது இவர்களின் பரம்பரைப் பழக்கமாக உள்ளது.
விதம் விதமாய்க் காணிக்கை செலுத்தியோ காலங் கருதாமல் துதிபாடியோ அவர்களைத் திருப்திபடுத்துவார்கள்.
பொங்கல் வைப்பது, கிடா வெட்டுவது, முடி இறக்குவது; லட்சார்ச்சனையோ கோடியார்ச்சனையோ செய்வது; அன்னதானம் வழங்குவது; உண்டியலில் கட்டுக்கட்டாகப் பணமும் கொத்துக்கொத்தாகத் தங்க நகைகளும் கொட்டுவது என்றிவ்வாறு கடவுளை மனம் இளகச் செய்வதற்கு விதம் விதமாய், வகை வகையாய் வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் புத்திசாலிப் பக்தர்கள்.
மேற்கண்டவற்றில் சிலவற்றையோ பலவற்றையோ கையாண்டும் கடவுள்கள் கண் திறக்கவில்லையெனின் முக்கால நிகழ்வுகளையும் கணித்துச் சொல்கிற ஜோதிட ஞானிகளைத் தேடிப் போகிறார்கள். அவர்களின் அறிவுரைக்கிணங்க, எச்சிலையில் உருளுகிறார்கள்; அன்னதானம் ஆடை தானம் எல்லாம் செய்கிறார்கள்; நவக்கிரகம் சுற்றுகிறார்கள்; சனி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றுகிறார்கள்; பகவானின் அருட்பார்வைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வைத்த கோரிக்கைகளில் ஒன்று நிறைவேறிவிட்டால் போதும்[ஒன்பது ஏன் அலட்சியப்படுத்தப்பட்டது என்று சிந்திப்பதில்லை], "கடவுளின் கருணையே கருணை!" என்று மெய் சிலிர்க்கிறார்கள்; ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார்கள்.
குடம் குடமாய்ப் பாலாபிஷேகம், பழ அபிஷேகம், சந்தனாபிஷேகம் என்று அபிஷேக மழை பொழிந்து கடவுளைக் குளிப்பாட்டுகிறார்கள்; மனம் குளிரச் செய்கிறார்கள்; போகும் இடமெல்லாம் அவனின் புகழ்பாடுவதே இவர்களின் தொழில் ஆகிறது.
இப்படி ஊருக்கச் சிலர் செய்கிறபோது அந்தக் கடவுள் பிரபலம் ஆகிறார். நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை அநியாயத்துக்குக் கூடிக்கொண்டே போகிறது. காணிக்கை என்ற பெயரில் கணக்குவழக்கில்லாமல் செல்வம் குவிகிறது.
அப்புறம் என்ன, இவர்களால் கொண்டாடப்பட்டவர் எளிய ஏழைக் கடவுளாக இருந்திருப்பினும் கோடீஸ்வரக் கடவுள் ஆகிறார்.
ஆக.....
சீந்துவாரற்றுக் கிடக்கும் ஒரு கடவுள் மக்களிடையே 'சக்தியுள்ள சாமி' என்று பெயரெடுப்பதும், கோடி கோடி கோடியாய்ப் பணம் குவிப்பதும் இந்த வகையில்தான்!
* * * * *
***இது புள்ளி பிசகாமல் நகல் எடுக்கப்பட்ட பழைய இடுகை!