பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

‘அவன்’இன் எழுச்சியும் வீழ்ச்சியும்!!!

ட்டவகுப்பு இறுதித் தேர்வில் வெற்றிபெறத் தவறியதால், வேலைவெட்டி இல்லாமல் தவிப்பதைப் பார்த்த ‘அவன்’இன் அப்பா, “டவுன் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துக்கோ. நிறையப் புத்தகங்களும் பத்திரிகைகளும் படிக்கலாம். பொழுதும் போகும்; பொது அறிவையும் வளர்த்துக்கலாம்” என்றார்.


அவர் அறிவுரையை ஏற்று அவன் நூலக உறுப்பினர் ஆனான்.

கல்லூரி நூலகத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியிருந்த அவன், பொது நூலகத்தின் அருமையைப் படிப்படியாக உணர்ந்தான். புத்தகங்கள் மூலமாக, உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களும் தத்துவ ஞானிகளும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் படைப்பிலக்கிய எழுத்தாளர்களும் அவனுக்கு அறிமுகம் ஆனார்கள்.

அவர்கள் குறித்த நூல்களைத் தேடித் தேடிப் படித்ததன் விளைவு அவனின் பொது அறிவு வளர்ச்சியுற்றது.

பலவகைப்பட்ட பத்திரிகைகளை வாசித்ததில், கவிதைகள், கதைகள் என்று நவீன இலக்கியங்களின் மீதான ஈடுபாடும் அதிகரித்தது.

கவிதைகள், கதைகள் எல்லாம் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் அளவுக்கு அவனின் படைப்பார்வம் அதிகரித்தது.

அவை பிரசுரம் ஆகவில்லை என்றாலும், ஓர் இதழுக்கு அவன் அனுப்பிய ஒரு கேள்வி, ‘கேள்வி-பதில்' பகுதியில் வெளியானதும், ‘ஆசிரியருக்கு...’ ஆன பகுதியில் கடிதம் ஒன்று பிரசுரம் ஆனதும் அவனுக்கு எழுத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.

ஆயினும், அடுத்தடுத்துத் தொடர்ந்து தோல்விகளைத் தழுவியதால் பெரிதும் சோர்வுற்றான்.....

                         *   *   *   *   *

பின்னர் பெற்ற அனுபவங்களை ‘அவனே’ விவரிக்கிறான்:

“நூலகத்தில் இடம்பெறாத, பெட்டிக் கடைகளில் தொங்கும் ஜோதிடம், ராசிபலன் பற்றிய சிறியப் புத்தகங்களும், கவர்ச்சிப் படங்களை அட்டையில் தாங்கிய ஆபாசப் புத்தகங்களும் என்னை ஈர்த்தன.

சில ஆபாச[போர்னோகிராபி]ப் புத்தகங்களை, என்னதான் எழுதுகிறார்கள் என்று அறியும் ஆசையுடன் வாங்கிப் படித்ததில், மிகக் குறுகிய காலத்திலேயே அவற்றிற்கு அடிமை ஆனேன்.

வாங்கிப் படித்துவிட்டு, சாக்கடையில் வீசி எறிந்த நிலை மாறி, வீட்டுக்கே எடுத்துச் சென்று பெற்றோருக்குத் தெரியாமல் படிக்கும் அளவுக்குத் துணிச்சல் உள்ளவனாக மாறினேன்.

அன்று அப்பாவும் நானும் மட்டும் வீட்டில் இருந்தோம்

பண்ணை ஆட்களுடன் அவர் காரசாரமாக எதையோ விவாதித்துக்கொண்டிருந்தபோது, படுக்கை அறையில், வாங்கி வந்திருந்த ஆபாசப் புத்தகம் ஒன்றைப் படிக்கலானேன். 

மீண்டும் மீண்டும் படித்து உணர்ச்சிவசப்பட்டதில் உடலும் மனமும் சோர்வடைய, புத்தகத்தை மறைத்து வைக்க மறந்தவனாக, படுக்கையில் மல்லாகப் படுத்துக் கண்ணயர ஆரம்பித்தேன். அப்போது அப்பா அங்கு வருவதைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.

வந்தவர் என்னை நெருங்கிவந்து, நான் சோர்ந்து படுத்துக் கிடப்பதையும், அட்டையில் ஆபாசப் படம் பதிக்கப்பட்ட புத்தகம் கிடப்பதையும் பார்த்திருந்தால்,  கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பார்; ‘நல்ல பையன்’ என்னும் என் மீதான நம்பிக்கையை அறவே இழப்பதோடு வெறுக்கவும் செய்திருப்பார்.

அப்படியொரு நிலை வரும்போது நான் உயிர்வாழ்வதேகூடக் கேள்விக்குறி ஆகியிருக்கும்.

என் நல்ல நேரமோ என்னவோ, என்னை நெருங்காமல் எட்ட நின்றபடியே, “பாடப் புத்தகம் படித்த களைப்பில் தூங்குறான். எழுப்ப வேண்டாம்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அவரின் குரல் கேட்டுப் பேரதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் உள்ளான நான் அவசர அவசரமாகப் புத்தகத்தைக் கால்சட்டைப் பையில் மறைத்துக்கொண்டு வீட்டின் வெளித் திண்ணையில் இருந்த அப்பாவைப் போய்ப் பார்த்தேன்,

“நீ தூங்கிட்டிருந்தே. எழுப்ப வேண்டாம்னு காத்திருந்தேன். வெளியே வேலை இருக்கு. சந்தைக்குப் போன உன் அம்மா வர நேரமாகும். வீட்டைப் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு, ஒரு தூக்குப்பையுடன் அங்கிருந்து வெளியேறினார்.

அவர் புறப்பட்டுப்போன அடுத்த சில நிமிடங்களிலேயே அடுப்பைப் பற்றவைத்து, புத்தகத்தைத் தீயிலிட்டுக் கரி ஆக்கினேன்.

அந்த மாதிரியான புத்தகத்தை இனி வீட்டுக்குக் கொண்டுவருவதில்லை என்று முடிவெடுத்த சில நிமிடங்களிலேயே, “ஆபாசப் புத்தகங்களை இனி ஒருபோதும் படிக்க மாட்டேன்” என்று சபதமும் செய்தேன்.

மேற்கொண்ட சபதம் ஓரிரு வாரங்களிலேயே காலாவதி ஆன சோகக் கதையைப் பிறிதொரு நாளில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்!

                         *   *   *   *   *

***இது, ‘அவன்’இன் 2ஆவது அனுபவப் பதிவு. எதிர்பாராமல் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறான். நலம்பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பது நம் விருப்பம்.

அடுத்த அனுபவப் பதிவு வெளியாகச் சற்றே காலதாமதம் ஆகலாம் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.