அறியாமை மற்றும் பகுத்தறிதல் இன்மையால் வெளிப்படும் நம்பிக்கை ‘மூடநம்பிக்கை’ எனப்படும். [Superstitious beliefs are an outcome of ignorance and lack of rational thinking...
‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதை, சூன்யம் போன்றவற்றின்மீது மக்கள் கொள்ளும் நம்பிக்கை’ என்றும் சொல்லலாம். [‘Some believe that a superstition is anything that people believe that is based on myth, magic, or irrational thoughts. - dazeinfo[website]
‘அறிவின் துணைகொண்டு, காரணங்களை ஆராயமல் மூதாதையர் சொல்லிப் போனவற்றை நம்புவது’ என்றும் விளக்கம் தருகிறார்கள். [Superstition is credulous belief or notion, not based on reason, knowledge, or experience. -Wikiquote]
சங்கம் மருவிய காலக்கட்டத்தில் இதை ‘இயற்கை இறந்த நிகழ்ச்சி[Super Natural] என்று குறிப்பிட்டார்கள். தங்க முலாம் பூசியிருக்கிறார்கள்!
இராமாயணத்தில் சீதை வான ஊர்தியில் கடத்தப்பட்டது; பாரதத்தில், கடவுளே மண்ணுலகுக்கு வருகை புரிந்து மனிதர்களுடன் உறவாடியது; தேடோட்டியது; சிலப்பதிகாரத்தில், கண்ணகி மார்பகத்தைக் கையால் திருகித் துண்டாக்கி எறிய மதுரை நகரம் தீப்பற்றி எரிந்தது; மதுராபுரிப் பெண் தெய்வம் அவள் முன் தோன்றிப் பேசியது; மணிமேகலையில், அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரத்தால் மக்களுக்கு மணிமேகலை உணவு வழங்கியது போன்ற நிகழ்வுகள் இதற்கு உதாரணங்களாகும்.
நம்பிக்கை[belief]க் குடும்பத்தின் ஓர் அங்கம் மூடநம்பிக்கை[superstition]. ஏனையவை,அவநம்பிக்கை[disbelief], தன்னம்பிக்கை[self cofidance] ஆகியன.
[belief, trust, hope என்னும் மூன்றையும், ‘நம்பிக்கை’ என்றே தமிழ் படுத்துகிறது கூகிள் மொழிபெயர்ப்பு. நாம் நம்பிக்கை என்ற ஒரு சொல்லையே ‘முன் ஒட்டு’ சேர்த்து மாறுபட்ட பொருள்களில் பயன்படுத்துகிறோம். இது பற்றிய விரிவான ஆய்வு இங்கு தேவையில்லை].
“நான் வெல்வேன்” என்று இயல்பாகச் சொன்னால், அது நம்பிக்கை.
“வென்றே தீருவேன்” என்று அடித்துச் சொன்னால், தன்னம்பிக்கை.
“நான் வெல்வேனா?” என்று சந்தேகத்துக்கு இடமளித்தால், அது அவநம்பிக்கை.
“குறுக்கே பூனை வந்தது. நான் தேர்வாகமாட்டேன்” என்று புலம்பினால் மூடநம்பிக்கை.
‘மூட நம்பிக்கை என்ற வார்த்தையே தவறு. சரியான நம்பிக்கை, தவறான நம்பிக்கை என்றே அறிவியல் சுட்டிக் காட்டுகிறது’ என்கிறது ‘உயிரோசை’, வார இணைய இதழ்.
எந்த அறிவியல் இப்படிச் சொல்கிறது என்பது தெரியவல்லை. ‘அவநம்பிக்கை’,‘தன்னம்பிக்கை’ ஆகியவை வழக்கில் இருப்பதை, உயிரோசை கருத்தில்
கொள்ளவில்லை போலும்.
'நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை...
என்று எதுவும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத்தனம். அதிலே தனியாக ஒரு மூட நம்பிக்கை ஏது?’ என்கிறார் கவியரசு கண்ணதாசன்.
கவிஞரின் கருத்துப்படி, ‘வெல்வேன்’ என்று நம்பியவன் தோற்றுப்போனால்,
அவனின் நம்பிக்கை பொய்த்ததே தவிர, அது மூடநம்பிக்கை ஆகிவிடாது. ‘நான்
வெல்வேனா?’ என்று சொல்லியிருந்தால், அதுவும் நம்பிக்கைதான். ‘பூனை
குறுக்கே வந்ததால்...’என்று பகுத்தறிவுக்குப் பொருந்தாத ஒரு
காரணத்தைச் சேர்க்கும்போதுதான் அது மூடநம்பிக்கை ஆகிறது.
##பூமிதோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள், பிரபஞ்சம் உருவாகி 14.5 பில்லியன் ஆண்டுகள் என்று விஞ்ஞான முறையில் நிறுவியபிறகும், இல்லையில்லை
கிறிஸ்தவ பைபிளின்படி, இந்தப் பூமியும், பிரபஞ்சமும் உருவாக்கப்பட்டு
6000 ஆண்டுகள் தான் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தால்,
அது மூடநம்பிக்கை.
உடலுறவின் மூலம், ஆணின் விந்தணுவும், பெண்ணின் முட்டையும்
இணைந்து கருத்தரிக்க முடியாவிட்டாலும், செயற்கை முறையில் அதைச்
சாதிக்க முடியும் என்ற நிலை உருவான பிறகும் விரதமிருந்து, விக்கிரகங்களை
வழிபட்டால் தான் குழந்தை கிடைக்கும் என்று நம்புவதும் மூடநம்பிக்கையே.
சூரியன் ஒரு கிரகமல்ல, அது ஒரு நட்சத்திரம், சந்திரனும் ஏனைய கிரகங்கள் போல ஒரு கிரகமல்ல, அது பூமியின் துணைக்கோள் என்று நிறுவிய பின்பும், இல்லையில்லை அவையிரண்டும் நவக்கிரகங்களுக்குள் அடங்கும் என்று நம்பினால் அது அறியாமையால் ஏற்பட்ட மூடத்தனத்தின் உச்சம் ஆகும்.
இப்படிப் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.##
-[மதுவர்மன், ‘நம்பிக்கைகள் பற்றி ஓர் ஆய்வு’, புதன், ஆகஸ்டு 6.2008]
முத்தாய்ப்பாக, மூடநம்பிக்கையின் தோற்றம் குறித்த ஒரு வரலாற்றுக் குட்டிக்கதை..........
[மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னர், பகுத்தறிவுப் பிரச்சார இதழில் படித்தது. இதழின் பெயர், கட்டுரைத் தலைப்பு முதலானவை நினைவில் இல்லை]
###வேத, புராண காலங்களுக்கு முன்னரே இந்த மண்ணுலகை ஆண்ட ஒரு மன்னன் தன் மந்திரி பிரதானிகளுடன் கோயிலுக்குச் சென்றான்.
இறைவனின் சந்நிதிக்குள் நுழைய முற்பட்டபோது, வாயில்படியில் கால் இடறித் தரையில் குப்புற விழுந்தான்.
அருகிலிருப்போர் நகைப்பார்களே என்று நினைத்த அவன், தரையில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த நிலையிலேயே இறைவனை வழிபட்டு, அசம்பாவிதம் ஏதும் நடவாததுபோல எழுந்து நின்றான்.
இந்த ரகசியத்தைப் பிறர் அறியாமலிருக்க, அடுத்தடுத்த நாட்களிலும் தரையில் நீட்டிப்படுத்த நிலையிலேயே வழிபட்டான். [அப்போதெல்லாம், நின்ற கோலத்தில் வணங்குவதுதான் வழக்கத்தில் இருந்ததாம்].
மன்னனிடம் அதுபற்றி விளக்கம் கேட்கப் பயந்த ஏனையோரும், அவனைப் போலவே ஒட்டுமொத்த அங்கமும் தரையில் படும்படியாக விழுந்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டார்கள்.. இதுவே பின்னர் அஷ்டாங்க நஸ்காரம்’ எனப்பட்டது.
[‘[8 அங்கங்கள் பூமியில் பதிய செய்யும் நமஸ்காரமே அஷ்டாங்க நமஸ்காரம். இதில் நெற்றி, காதுகள், நெஞ்சு, கைகள் மற்றும் கால்கள் பூமியில் பட, மனதை ஒருநிலையில் வைத்து, பகவத் பாதங்களை நாம் ஸ்பர்சிப்பதாக உருவகம் செய்து வணங்குவது நலம்’]
இவ்வழிபாட்டு முறை குறித்து, ஓலைச் சுவடிகளிலும் செப்பேடுகளிலும் பின்னர் எழுதி வைத்தார்கள்.
காலப் போக்கில், மன்னர் குலத்தைச் சர்ந்தவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றலானார்கள். இன்றளவும் இம்முறை தொடர்கிறது###
அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதலால் வெகுவாகத் துவண்டுபோன மனிதர்கள், இறைவனின் சந்நிதியில் விழுந்து உருண்டு புரண்டு கவிழ்ந்து படுத்து அவனிடம் முறையிட்டுத் தம் துயர் தணித்துக்கொண்ட நிகழ்வுகளே காலப்போக்கில் அஷ்டாங்க வழிபாட்டு முறையாக மாறியது என்று சொல்வாரும் உளர்.ஜென் கதைகளில் ஒன்றான, குரு வளர்த்த பூனை கதையும் இவ்வகையைச் சார்ந்ததுதான். பலரும் படித்திருப்பீர்கள். படிக்காதவர்களுக்கு மட்டும்.....
‘அது ஓர் ஆசிரமம். அதற்கு ஒரு குரு இருந்தார். சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்குக் குரு பாடம் எடுப்பது வழக்கம்,
ஒரு நாள் பாடம் எடுக்கையில் அவர் வளர்த்த பூனை குறுக்கும் நெடுக்குமாக நடந்து தொந்தரவு செய்தது, குரு காரணம் ஏதும் சொல்லாமல், சீடர்களிடம் அந்தப் பூனையைப் பிடித்து தூணில் கட்டச்சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது,
மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அது தொந்தரவு செய்தது. பூனை தூணில் கட்டப்பட்டது. அதற்கு மறுநாள், பாடம் ஆரம்பிக்கும் முன்னரே அதைத் தூணில் கட்டினார்கள் சீடர்கள். அது தொடர்ந்தது.
ஒரு நாள் அந்தப் பூனை செத்துப்போனது. வேறொரு பூனையைத் தேடிப் பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் சீடர்கள்!. குரு அவர்களின் செயலுக்குக் காரணம் புரியாமல் விழித்தார்.’
===========================================================================================