எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 30 நவம்பர், 2020

தொடரும் 'ரஜினி தொற்று'!!!

1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்று சொல்லித் தமிழக அரசியலில் தனக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தினார் உச்ச நடிகர் ரஜினிகாந்த்.

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னரும் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தபோது, "தமிழ்நாட்டில் சிஸ்டம் கெட்டுப்போச்சு" என்று பேசி,  தூய்மையான ஆட்சியை விரும்பும் நேர்மையாளனாகத் தன்னைக் காட்டிக்கொண்டார்.

2017 டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.

"எனது அரசியல் பிரவேசம் உறுதி. இது காலத்தின் தேவை" என்று அந்த அறிவிப்பின்போது அவர் பேசி இருந்தார்[ஊடகங்கள் இவரின் இந்த அறிவிப்பை ஊதிப் பெருக்கின].

அதற்கான எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

இவர் கட்சி தொடங்கி, தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆகாவிட்டால், தமிழக மக்கள் நாதியற்றுப் போவார்கள் என்று நினைத்தோ என்னவோ, தமிழ்த் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும், அவ்வப்போது, 'ரஜினி கட்சி தொடங்குவாரா? தேர்தலில் போட்டியிடுவாரா?' என்பதாகச் செய்தி வெளியிட்டு, 'உச்ச நடிகர்' என்று பெயர் பெற்ற இவரை உச்ச அரசியல்வாதி ஆக்குவதில் தீவிரம் காட்டின.  

இந்நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிப்பதாக அறிவித்தார் நடிகர்.

இதற்காகவே தவம் கிடந்தவர்கள் போல, ஊடகக்காரர்கள், கையில் புகைப்படக் கருவியும் குறிப்பேடுமாக இவரைத் தேடி ஓடினார்கள். 

ஏமாற்றமே மிஞ்சியது.  

"என் அரசியல் குறித்து நிலவும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், எனது வருங்கால அரசியல் எப்படி இருக்கும் என்று விளக்கவுமே இந்தச் சந்திப்பு" என்று அறிவித்ததன் மூலம், அரசியக் கட்சி தொடங்குவாரா ரஜினி என்று மக்களை எதிர்பார்க்கத் தூண்டிவிட்டு,  தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்படும்போதுதான் அரசியலுக்கு வருவேன்" என்று அறிவித்து 'அந்தர் பல்டி' அடித்தார் 'உச்சம்'.

இதன் பின்னர், கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. 

இவரின் ஊடக அடிமைகளால் சும்மா இருக்க முடியவில்லை. இவரின் ரசிகர்களைச்[சினிமா பார்ப்பதைத் தவிர, படிப்பறிவோ பகுத்தறிவோ பட்டறிவோ இல்லாத ஒரு சிறு கூட்டம்] சந்தித்துப் பேட்டி கண்டும், வேறு வேலை வெட்டி இல்லாத நாலு பேச்சாளர்களைத் தேடிப் பிடித்துக் கலந்துரையாடச் செய்தும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தான கருத்துகளை வெளியிட்டு ஆத்ம திருப்தி கண்டார்கள்.

நடிகருக்குப் பைசா செலவில்லாமல் விளம்பரம் கிடைத்துக்கொண்டே இருந்தது.

கொரோனா காலத்தில் தமது உடல்நிலை, வெளியே வந்து மக்களைச் சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக நடிகரே தெரிவிப்பது போல் சமூக ஊடகங்களில் கடந்த அக்டோபர் மாதம் செய்திகள் பரவின.

இது குறித்து விளக்கம் அளித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றித் தகுந்த நேரத்தில் என் 'ரஜினி மக்கள் மன்ற' நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று அறிவித்திருந்தார். இதன் மூலம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கித் தான் ஒரு 'பிரபலம்' என்பதைப் பறைசாற்றிக்கொண்டார்.

இந்த நிலையில்தான் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டார். 'இந்தக் கூட்டத்தின் இறுதியில் தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை ரஜினிகாந்த் அறிவிப்பாரா?' என்று கேள்வி எழுப்பிப் பெரும் பரபரப்பை உண்டுபண்ணினார்கள் ஊடகக்காரர்கள். 

ரஜினி, 37 மாவட்டச் செயலாளர்களிடமும் தனித்தனியே கருத்து கேட்டாராம். இந்த ஆலோசனையின் போது சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ரஜினி அதிருப்தி தெரிவித்தாராம். 'என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர். பலமுறை எச்சரித்தும் நிர்வாகிகள் சிலரின் தவறான செயல்பாடுகளில் மாற்றம் இல்லை. அதனாலேயே சிலரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லியிருக்கிறாராம்[பல்வேறு ஊடகச் செய்திகளை ஆதாரமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது இந்தப் பதிவு].

கட்சியே ஆரம்பிக்கவில்லை. ரஜினி மன்றப் பொறுப்பாளராக இருக்கும் ஒருவர் அப்படி என்ன பெரிய தவற்றைச் செய்துவிட முடியும்? 

இவர் பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார்களாம். கட்சி தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சிறிது காலமாவது ஆண்டால்தானே இவர் நேர்மையானவரா, களங்கமுற்றவரா என்பது தெரியும்!

இப்போதே எதற்கு இம்மாதிரிப் பேச்செல்லாம்?

இவர் மாதிரியான பிரபலங்கள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் தற்பெருமை பேசலாம். எதைப் பேசினாலும் நம்புவதற்கு இங்கே ஒரு கூட்டம் எப்போதும் காத்துக்கிடக்கிறது!!!
===============================================================

சனி, 28 நவம்பர், 2020

பெரியார் இந்துமதத்தை மட்டுமே சாடினாரா?!


 பகுத்தறிவாளன்:

மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டன?

ஆத்திகன்:

கடவுளால் உண்டாக்கப்பட்டன.


கேள்வி:
மதங்கள் எத்தனை?
பதில்:
பல மதங்கள் உள்ளன.

கேள்வி:
இந்துமதம் யாரால் ஏற்படுத்தப்பட்டது?
பதில்:
கடவுளால்.

கேள்வி:
என்ன ஆதாரம்?
பதில்:
வேதங்கள் சொல்கின்றன..

கேள்வி;
வேதங்கள் தோன்றியது எப்படி?
பதில்;
கடவுளால் தோற்றுவிக்கப்பட்டன.

கேள்வி:
இதற்குச் சாட்சியோ ஆதாரங்களோ உண்டா?
பதில்:
இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பதே பாபம்.

கேள்வி;
இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களை மூடர்கள் ஆக்கிவிட்டீர்கள். போகட்டும். கிறித்துவ மதம் என்பது என்ன?
பதில்:
ஏசுநாதரின் போதனைகளைச் சொல்வது.

கேள்வி:
ஆதாரம்?
பதில்:
பைபிள்.

கேள்வி;
ஏசுநாதர் என்பவர் யார்?
பதில்:
கடவுளின் குமாரர்.

கேள்வி;
அப்படி என்று யார் சொன்னது?
பதில்:
ஏசுவே சொல்லியிருக்கிறார்.

கேள்வி;
அது அவரது வாக்குமூலம். இதை நிரூபிக்க இந்த வாக்குமூலம் போதுமா?
பதில்:
ஏன் போதாது?

கேள்வி;
இப்போது ஒருவன் உம்மிடம் வந்து, ‘நான்தான் கடவுள்” என்று சொன்னால் நம்புவீரா? இருக்கட்டும். முகமதிய மதம் என்றால் என்ன?
பதில்:
முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகளைக் கொண்டது.

கேள்வி;
அதற்கு என்ன ஆதாரம்?
பதில்;
குரான்.

கேள்வி;
அது யாரால் சொல்லப்பட்டது?
பதில்:
கடவுளால் முகமதுநபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.

கேள்வி;
அப்படி என்று சொன்னது யார்?
பதில்:
நபி அவர்கள் சொன்னார்கள்.

கேள்வி;
அப்படி என்று யார் சொன்னார்?
பதில்;
குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன் வேறு பல சாட்சியங்களும் இருக்கின்றன.

கேள்வி:
வேறு பல சாட்சியங்கள் என்பவை எவை?
பதில்;
அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்களின் வாக்கு.

கேள்வி;
அவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?
பதில்:
எல்லாம் நம்பிக்கைதான்.

[உரையாடல் தொடர்கிறது..........]
*****************************************************************************************

ஆதார நூல்; ‘புத்தரும் தந்தை பெரியாரும்’, கண்மணி பப்ளிகேஷன்ஸ்< 4, இந்து காலனி, முதல் மெயின் தெரு, உள்ளகரம், சென்னை - 600 091; முதல் பதிப்பு: செப்டம்பர் 2000.

நூலாசிரியர்; தந்தை பெரியார்.
=============================================================
மீள் பதிவு[2015].

வெள்ளி, 27 நவம்பர், 2020

புரியாமல் எழுதியே 'பிரபல எழுத்தாளன்' ஆன ஜெயமோகன்!!!

https://www.jeyamohan.in/2470/ என்னும் தளத்தில்['ஜெயமோகன்'] வெளியானது பின்வரும் கேள்வி-பதில்['தியானம்', November 26, 2020] பகுதி. பிழைகளைத் திருத்தவில்லை. பல பத்திகள் நீக்கப்பட்டுள்ளன. அடைப்பில் இடம்பெற்றுள்ள வினாக்களும் விளக்கங்களும் என் சிந்தனையில் முகிழ்த்தவை.

'மதிப்பிற்குரிய ஜெ,

நீங்கள் பயணத்தில் இருக்கும் போது உங்களை தொந்தரவு செய்வதற்க்கு மன்னிக்கவும்.

தியானம் செய்வது எப்படி என்று எளிய முறையில் ஒரு செயல்முறை விளக்கம் கூறினீர்களென்றால் அது என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நேரம் கிடைக்கும்போது இதையும் கவனத்தில் கொண்டு எழுதலாமே? ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நல்ல புத்தகங்கள் இருப்பின் அவற்றை எனக்கு பரிந்துரை செய்யுங்கள்.

இப்படிக்கு

கிறிஸ்

ன்புள்ள கிறிஸ்டோபர்,

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.

நம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி[மனம் என்பது எண்ணங்களின் நீட்சி என்றால், மனமும் எண்ணமும் ஒன்றா? எண்ணங்கள் உருவாவதே மனதில்[மூளை]தான். அப்புறம் எப்படி இரண்டும் ஒன்றாகும்? ஆரம்பமே சொதப்பல்!]    என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்[கூடும் என்ன கூடும், எண்ணங்களின் பிறப்பிடமே மூளைதான். மூளையைத்தான் வழக்கில் மனம் என்கிறோம். அது[மனம்] இன்றளவும் நிரூபிக்கப்படாதது].

அந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து[மனதுக்கு விளிம்பா? அடிச்சி விளையாடுறார் ஜெமோ?!] விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை[விளிம்பு என்று ஒன்று இருப்பதாகச் சொல்லிவிட்டு, இவையெல்லாம் இல்லை என்பது ஏன்?]. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.

ஆகவேதான் நம் தியான மரபில் மனதை மனச்செயல்[மனம் வேறு அதன் செயல் வேறு அல்லவா?] என்றுதான் சொல்கிறார்கள். அது ஒருசெயல்பாடு. ஓர் அமைப்போ பொருளோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது நமக்கு தன்னைக் காட்டியபடியேதான் இருக்கிறது. நாம் நம் மனதை உணர்ந்த அக்கணமே மனம் இரண்டாகப்பிரிந்து[மனம் பிரிகிறதா? ஹ...ஹ...ஹ!!!]] ஒரு பகுதி நாம் ஆக மாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்[நம் மனதை நாம் பார்க்கிறோமா?[இது ஜெமோ போன்ற ஞானிகளுக்கு மட்டுமே புரிகிற விசயம்!]. இது மிக விந்தையான ஒரு செயல். ஏனென்றால் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.

இந்த மனச்செயல் நின்று, அது[எது?] இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம்  அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.

இக்கணங்களையே நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம்[இது சரி. அப்புறம், இதுவரையினான, புரியாத வெட்டி வியாக்கியாணம் எல்லாம் எதற்கு?]. ஆழமான பொருள்கொண்ட சொல் இது– தமிழில் அடிப்படையான எல்லாச் சொற்களும் தத்துவகனம்[???] கொண்டவை. நம் மரபு மெய் என்று சொல்வது உண்மை,உடல் இரண்டையும்தான். உண்மை என்ற சொல் உண்டு என்றசொல்லில் இருந்து உருவானது. அதாவது இருத்தல் [இது எதுக்கு, சம்பந்தமே இல்லாமல்?].

உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்[இரண்டும் இல்லாமல் ஆதல் எப்படிச் சாத்தியம்?] 

அந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது? ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது[அதான், ஏற்கனவே மெய்மறத்தல்னு சொல்லிட்டாரே?]. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்[நல்லாவே குழப்புறாரய்யா!]

ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு[எப்படியெல்லாம் சொற்சிலம்பம் ஆடுகிறார்?]

ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது.  அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.

ஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது

நாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்[மெய்மறத்தலுக்கு இத்தனை விளக்கமா?]......

தொல்தமிழில் தியானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் சொல்லுக்கு ஊழ்தல்என்னும் ஒலிமாறுபாடும் உண்டு . ஊழ்கம் அதிலிருந்து வந்தது. ஊழ்கம் செய்பவர்கள் ரிஷிகள் என்று சம்ஸ்கிருதத்திலும் படிவர் என்று தமிழிலும் சொல்லப்பட்டார்கள்.

பதஞ்சலி யோக சூத்திரமே இந்திய ஞானமரபின் முதன்மையான யோக நூலாகும். அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தேன். இந்த இணையதளத்தில் இரு அத்தியாயங்கள் வெளியாகின. முடிக்கவேண்டும்[இது வேறயா?].

தியானம் என்றால் எதுவெல்லாம் அல்ல என்று இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.[தியானத்துக்கே சரியான விளக்கம் தரல. எது தியானம் அல்ல என்று ஆராயுறாராம்!} ஒன்று, வேண்டுதல் அதாவது பிரார்த்தனை என்பது தியானம் அல்ல. சமீபகாலமாக கிறித்தவ மத நிகழ்ச்சிகளில் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். லௌகீகமாகவோ அல்லது வேறுவகையிலோ நமக்குத்தேவையானவற்றை ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்குத்தான் வேண்டுதல் என்று பெயர். அது ஒருபோதும் தியானம் அல்ல.  -ஜெ'

இதுவரை பொறுமையுடன் வாசித்தமைக்கு நன்றி. உங்களின் பயனுள்ள நேரத்தை வீணடிக்க விரும்பாததால், எஞ்சியுள்ள பத்திகளை[15] தவிர்த்திருக்கிறேன்.

எதைப் பற்றியும் சலிப்பில்லாமல் எழுதித் தள்ளுகிற திறமை ஜெயமோகனுக்கு உள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. ஆனால், இவரின் படைப்புகளில் மிக மிக மிகப் பெரும்பாலானவை இந்தக் கட்டுரையைப் போலவே வாசிப்பவரின் மனதைக் குழப்பிப் பித்தம் தலைக்கேறச் செய்பவை என்பது என் திடமான நம்பிக்கை.

இவர் எப்படிப் பிரபல எழுத்தாளர் ஆனார் என்பது இன்றளவும் விடுவிக்கப்படாத புதிர் எனலாம்.

===============================================================


வியாழன், 26 நவம்பர், 2020

'ஆண்மை நீக்கம்'...அசத்தும் பாகிஸ்தான்!!!

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்புக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது. 

இந்நிலையில், கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்குவதற்கும்[ஏற்கனவே இந்தோனேசியா அரசு இது குறித்த சட்டத்தை இயற்றியுள்ளது], கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான்கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான அவசரச் சட்ட வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்தக் கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவுச் சட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

குற்றவாளிகளைப் பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஆண்மை நீக்கத் தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளார்[https://www.maalaimalar.com/news/world/2020/11/25115909/2104078/Tamil-News-Pakistan-PM-Approves-Chemical-Castration.vpf?utm_source=vuukle&utm_medium=talk_of_town].

இம்ரான்கான் கொள்கையளவில் இதை ஒப்புக்கொண்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்[நவம்பர் 25, 2020 11:59 IST], இதே நாளில்[25/11/2020] பிற்பகல் 4:19 மணி அளவில் இம்ரான்கான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக, சத்தியம் தொ.கா. செய்தி வெளியிட்டுள்ளது[தினமலர், தினகரன் போன்ற ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன]. செய்தி கீழே.

#இந்தியாவைப் போன்று, பாகிஸ்தான் நாட்டிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக அந்நாட்டில் அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

அதாவது, பாலியல் குற்றவாளிகளுக்கு, ரசாயனங்களைப் பயன்படுத்தி, ஆண்மை இழக்கும் தண்டனையைக் கொடுப்பதற்கான சட்டத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் வழங்கியுள்ளார்# https://www.sathiyam.tv/pm-imran-khan-approves-chemical-castration-of-rapists/

குற்றவாளிகளுக்குக் கடுங்காவல் தண்டனை, ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை என்று பல தண்டனைகளை வழங்கியும் பெண்கள் மீதான வன்புணர்வுக் குற்றங்கள் குறையாத நிலையில், 'ஆண்மை நீக்கம்' என்பது இம்மாதிரிக் குற்றங்கள் குறைவதற்கு வழிவகுக்கக்கூடும்.

பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடாக இருந்தபோதிலும், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆண்மை நீக்கம்' தொடர்பான சட்டத்தை அது இயற்றியிருப்பது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நற்செயலாகும்.

ஏனைய நாடுகள் யோசித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக, பாகிஸ்தானைப் பின்பற்றி 'ஆண்மை நீக்கத் தண்டனை' குறித்து உரிய முறையில் இந்திய அரசு சட்டம் இயற்றுதல் வேண்டும் என்பது நம் போன்றோர் விருப்பம் ஆகும்.

===============================================================

ஆண்மை நீக்கம்:  ரசாயன முறை அல்லது பிற வழிகள் மூலம் ஆணின் விரைகளைச் செயலிழக்கச் செய்தலாகும்.


புதன், 25 நவம்பர், 2020

ரோபோ[Robot] புணர்ச்சி!!!

தற்போதைய கணக்கெடுப்பின்படி, உலகத் தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாகத் தொழிற்நுட்பத் திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை(Robots)ப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன என்பது அண்மைச் செய்தி; உண்மைச் செய்தியும்கூட.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் ஆபத்தான மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கென்று தனித்தன்மை வாய்ந்த எந்திரங்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளன.

எஃகு, கார் போன்ற பல்வேறு உற்பத்தி ஆலைகளை எந்திரங்களை வைத்தே முழுவதுமாகக் கையாளுகின்றனர். இதனால் பணி இழக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ரோபோ விஞ்ஞானம், பத்திரிக்கைத் துறையையும் தற்போது ஆக்கிரமித்து வருகிறது என்பது அதிர வைக்கும் உண்மை.

"இந்நிலையில், ரோபோக்களால் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?" என்பது ஆர்வமூட்டும் ஒரு கேள்வியாக உள்ளது.

"முடியும்" என்பது விஞ்ஞானிகளின் பதிலாக உள்ளது.

உடலுறவுக்குப் பயன்படும் 'Sex Androids' எனப்படும் Moving Dolls[ரோபோக்கள்] இன்னும் பத்தே ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டுவிடுமாம்!

இதைச் சொல்பவர் ரோபோ குறித்த ஆய்வில் ஈடுபட்டுவரும் டாக்டர் Lan Pearson என்பவர்.

பெண்ணுடல் போன்று தயாரிக்கப்பட்ட ரோபோ, கையைப் பற்றும் போதும் உதட்டைத் தீண்டும் போதும் அதற்கேற்ப ஆசைமொழிகளை வெளிபடுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது; சூழலுக்கேற்பப் பாடல் ஒன்றையும் ஒலியிடும்.

அதனை உணர்ச்சிப்படுத்திய பின்னரே கட்டிலுக்கு அழைக்க இயலும். கையாள்பவனைப் பிடிக்கவில்லை என்றால், மறுக்கவும் ரோபோவில் நிரல்மொழி பதிவு செய்யப்படுகிறது.

உணர்ச்சியைத் தூண்டும் பகுதிகளில் சென்சார்கள் பொதிய வைத்துத் தீண்டலுக்கு ஏற்பப் பாவனைகளை வெளிபடுத்தும வகையில் உருவாக்கப்படுகின்றன. உடலினுள் வெப்பத்தை உண்டாக்க வெப்பக் கருவிகள் உள்ளன.

விபச்சார விடுதிகள், கிளப்புகள் போன்ற இடங்களையும் இவை ஆக்கிரமிக்கும் என்கிறார்கள் ரோபோ ஆர்வலர்கள்.

வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளிலும், நாடகங்களிலும் இப்போதே பயன்படுத்தப்படுகின்றனவாம்.

பயன்படுத்துபவரின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு இவை புணர்ச்சி சுகத்தை வாரி வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்களாம் அறிவியல் அறிஞர்கள். உலகின் பிரபலமான ரோபோ தயாரிக்கும் நிறுவனங்கள் இவ்வகை ரோபோக்களைத் தயாரிக்கும் பணியில்[?!] ஈடுபட்டிருக்கின்றனவாம். 'உங்களின் மனைவி அல்லது பெண் நண்பருக்கு மிகச் சரியான மாற்று எங்களின் செக்ஸ் ரோபோக்கள்தான்' என்று அவை விளம்பரமும் செய்கின்றனவாம்[அடப் பாவிகளா!!!].

ஆண்களின் தேவையை இவை நிறைவு செய்யும், சரி. பெண்களுக்கு?

அவர்களுக்கான ஆண்மை மிகு ரோபோக்களும் தயாரிப்பில் உள்ளன என்கிறார்கள். இதற்கு 'Rockey' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் வளர வளர மனித உணர்வுகள் மங்கிக்கொண்டிருக்கின்றன. அன்பான மனைவி, குழந்தைகள் என்னும் குடும்ப உறவு இந்த செக்ஸ் ரோபோக்களால் சிதையும். ஒருவரோடு ஒருவர் மனம் கலந்து பேசிச் சிரித்து மகிழும் அன்பு தவழும் வாழ்க்கை காணாமல் போய்விடும் என்று சமூக ஆர்வலர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்களாம்.

ஏற்கனவே, ஆண் பெண் உறவுகளுக்கு இடையேயான புரிதல் மேன்மை அடையாமல் உள்ள நிலையில், இம்மாதிரியான செக்ஸ் ரோபோக்களால், மனிதன் செயற்கை இன்பத்திற்கு அடிமையாகி விடக்கூடும் என்று பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுனர்கள் கருதுகிறார்கள் என்பதும் உண்மை. 

"இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போனால், மனித இனத்தில் ஆணுக்குப் பெண் தேவையில்லை; பெண்ணுக்கு ஆண் அவசியமில்லை. இருவருக்குமிடையே உடலுறவும் இல்லாமல் போகும். வாரிசுகளும் உருவாக வாய்ப்பு இல்லை.  அப்புறம்.....

அப்புறம் என்ன, மனித இனமே பூண்டோடு அழிந்துவிடும்.

அழிந்து தொலைத்தால் நல்லதுதான். மனிதர்களின் தொல்லை இல்லாமல் மற்ற உயிரினங்கள் நிம்மதியாக வாழ வழி பிறக்கும்" -இது அடியேனின் விருப்பம்! ஹி...ஹி...ஹி!

=============================================================== 

உதவி: https://tamil.asianetnews.com/life-style/we-will-be-having-sex-with-robots-in-next-10-years

https://maayon.in/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/


செவ்வாய், 24 நவம்பர், 2020

கொரோனா: குணமடைந்தவரை மனநோயாளி ஆக்கும் ஆராய்ச்சியாளர்கள்!!!

#கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களில் 20% பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் இருப்பதாக, 'தி லான்செட் சைக்காட்ரி' ஜார்னலில் வெளியான கட்டுரையில் எச்சரிக்கப்பட்டுள்ளது[http://www.puthiyathalaimurai.com/newsview/86160/One-in-five-COVID19-patients-develop-mental-illness-within-90-days].

62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது என்பது செய்தி.

இப்பாதிப்பு உள்ளவர்களுக்குக் கவலை, மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவை இருக்கும் என்று கண்டறிந்திருக்கிறார்களாம்.

இது குறித்து, பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் பால் ஹாரிசன், "கொரோனாவிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவது சாத்தியமே" என்று உறுதிப்படுத்தியிருக்கிறாராம்.

20% பேர் மனநோய்க்கு ஆளாகிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கட்டும். அவர்கள் அந்நிலைக்கு ஆளாவது ஏன்?

குணமான பின்னரும், அவர்கள் கவலையுடனும் மனச்சோர்வுடனும் தூக்கமின்றித் தவிப்பதே காரணமாகும்.

இந்தத் தவிப்புக்கு அவர்களை ஆளாக்குவது எது?

கொரோனா குறித்த ஆராய்ச்சியாளர்களின்[டாக்டர்களும்கூட] 'எதிர்மறை' அறிக்கைகள்தான்.

'குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றும்' என்று அறிக்கை விடுகிறார் ஓர் ஆராய்ச்சியாளர்.

'மூன்று மாதங்கள் கேரண்டி. அப்புறம் தொற்றுவதற்கு வாய்ப்புண்டு' என்று அறிக்கை விடுகிறது  ஓர் ஆராய்ச்சி நிறுவனம்.

'இரண்டு மாதங்களுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். அப்புறம் நான்கு மாதங்களுக்கு அதிகரிக்கும். அப்புறம் என்னவாகும் என்பது தெரியாது.' -இப்படி ஓர் அறிக்கை.

'கடும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகம். அறிகுறி இல்லாதவர்களுக்கு அது குறைவாகவே இருக்கும்.' -இது இன்னொன்று.

'தலைவலி, மூட்டு வலி, உடம்பு வலின்னு நிறையப் பேர்[குணமடைந்தவர்கள்] வருகிறார்கள்.'  இது, ஊசி குத்தவும் மருந்து எழுதித் தரவும் மட்டும் தெரிந்த ஒரு பெங்களூர் டாக்டரின் பேட்டி.

'குணமடைந்தவர்களில் ஐந்தில் ஒருவரை மனநோய் தாக்கும்.' -இது இன்றைய அதிர்ச்சித் தகவல்.

[அறிக்கைகள் பலவும் பலராலும் அறியப்பட்டவை என்பதால் ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை]

இவ்வகையில் ஆளாளுக்குத் தட்டிவிடும் அறிக்கைகள்தான் குணமடைந்தவர்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்குகின்றன. அவர்களைக் கவலைக்கும் மனச்சோர்வுக்கும் உள்ளாக்கி மனநோயாளிகளாக ஆக்குகின்றன.

நல்ல பலன் தரும் ஊசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வரும்வரை மேற்கண்ட வகையிலான 'எதிர்மறை' அறிக்கைகளைத் தவிர்த்தல் மிகவும் அவசியம். 

எந்தவொரு நாடும் கண்டுகொள்ளவில்லை. விளைவு.....

"குணமடைந்துவிட்டோம். கொரோனா இனி நம்மை அணுகாது' என்று மனமும் உடம்பும் தேறி மகிழ்வுடன் வாழ வேண்டியவர்கள் போதிய ஊணவும் உறக்கமுமின்றித் தவிக்கிறார்கள்.

அவர்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாகிப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.

===============================================================


திங்கள், 23 நவம்பர், 2020

பழங்காலக் கருத்தடையும் பருவப் பெண்கள் பட்டபாடும்!!!

* "போடு தோப்புக்கரணம்":

பாலுறவு முடிந்தவுடன், தோப்புக்கரணம் போடுவது போல நேராக உட்கார்ந்து எழுவது மற்றும் குதிப்பதன் மூலம், கருப்பையில் விந்தணு நுழைவது தடுக்கப்படும். அத்துடன் கொஞ்சம் தும்மினால் பலன் உறுதி செய்யப்படும். குழந்தை உருவாகாமலிருக்க, பழங்காலக் கிரேக்கர்கள் கையாண்ட முறை இது[ஆண்களுக்கு உடலுறவு இன்பம் வழங்கும் பெண்களுக்கு இப்படியொரு தண்டனையா?! அடப்பாவிகளா!]]

* கசடு நீர்க்கலவை:

கொல்லர்கள் பயன்படுத்திய நீரின் கசடுகளைக் குடித்தால் கரு உண்டாகாது என்று நம்பப்பட்டது. கொல்லர்கள் தங்களுடைய உபகரணங்களைக் குளிர்விப்பதற்காக இந்த நீரைப் பயன்படுத்தினர்.

ஒரு வகையில் இது பலன் அளித்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த நீரில் கந்தகம் மிகுந்திருக்கும். இந்த முறை கரு உண்டாவதைத் தடுக்கும் என்றாலும் குமட்டல், சிறுநீரகச் செயலிழப்பு, மரத்துப் போதல், கோமா மற்றும் மரணம் போன்ற பக்கவிளைவுகள் இதில் உள்ளன.

இந்த நுட்பம், முதலாவது உலகப் போர் நடந்த காலம் வரைகூடப் பயன்படுத்தப்பட்டது. தங்களுக்குக் குழந்தை பிறக்காத நிலையை உருவாக்கும் என்பதால் கந்தகம் சார்ந்த தொழிற்சாலைகளில் வேலைபார்க்கப் பெண்கள் தாங்களாக முன்வந்தார்களாம்.

* முதலைச் சாணம்:

தேன் மற்றும் முதலையின் சாணத்தைக் கலந்து பிறப்புறுப்பில் பூசித் தடையை உண்டாக்கினால் கரு உண்டாகாது என்பது  எகிப்தியரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது[மனுசச் சாணம் தவிர, மாட்டுச் சாணம், கழுதைச் சாணம், குதிரைச் சாணம் எல்லாம் பயன்படுத்தியிருந்தாலும் தப்பில்லை.

* விதைப்பை வைத்தியம்:  

"பீவர்" எனும் சிறு உயிரினம் ஒன்றின் விதைப் பைகளைக் கால்களுக்கிடையே கட்டிக்கொள்வது, அல்லது, அந்த விதைகளை நன்றாக அரைத்து, பழங்கால மதுவில் கலந்து குடிப்பது கருத்தரிப்பைத் தடுக்கும் என்று கனெடியர்கள் நம்பினார்கள்[மனுசனுங்க விதைகளையே அறுத்து எடுத்திருந்தா கருத்தடைப் பிரச்சினையே இருந்திருக்காதே].

* அந்தக்கால ஆணுறை:

இந்த ஆணுறை  பன்றியின் குடலில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என வழிகாட்டும் பயனாளர் கையேடும் அதனுடன் தரப்பட்டுமாம்.

இந்த ஆணுறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு மிதமான வெப்பம் உடைய பாலில் இதை நனைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டுமாம். இதைப் பயன்படுத்திய அதி புத்திசாலி ஆண்கள் எந்த நாட்டவர் என்பது தெரியவில்லை.

* எலுமிச்சைச் சாறு:

விந்தணுவைக் கொல்லும் குணம் எலுமிச்சைக்கு இருப்பதால், அதன் ஒரு துண்டை 'உள்ளே ' வைத்துவிடுவது[பாவி ஆண்கள் பொண்ணுகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்!]

*தலைப்பிரட்டை மருத்துவம்:

இது, கி.மு. 900ஆம் ஆண்டுப் பழக்கம். உடலுறவு முடிந்தவுடன் பெண்கள், பாதரசத்தில் வறுத்த 16 தலைப் பிரட்டைகளை(தவளைக் குஞ்சு)ச் சாப்பிட வேண்டும் என்று சீன நாட்டுப் பிறப்புக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் கூறி வந்துள்ளனர். கொல்லர்களின் தண்ணீரைப் போல, இதுவும் தவறான வழிகாட்டுதலாக இருந்துள்ளது. இதுவே விஷமாகும் ஆபத்து உள்ளது.

இதைச் சாப்பிட்டு நிரந்தரமாகவே கருத்தரிக்கும் தன்மையைப் பெண்கள் இழந்தனர். கல்லீரல், சிறுநீரகங்களில் கோளாறு மற்றும் பிற முக்கிய உறுப்புகளில் கோளாறு ஏற்படும் பக்க விளைவுகள் இதில் உள்ளன. நிலைமை மிக மோசமாகிப் போனால் மரணமும் ஏற்படும்.

* அபின் பூ:

இருபுறம் வெடித்துள்ள 'அபின் பூவை' உடலுறவின்போது ஒரு மெல்லிய திரையைப் போல பயன்படுத்துவார்கள் அல்லது அதற்கு மாற்றாக, பெண் உறுப்புக்குள் இந்தப் பூக்களை நுழைத்துக்கொள்வார்கள். புகைபிடித்தல் போன்ற தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று நம்பினார்கள் சில நாட்டவர்கள்.

* கோக--கோலா:

உடலுறவு முடிந்ததும் பெண்கள் கோக-கோலாவை உறுப்பில் ஊற்றிக் கொள்வார்கள். அதில் உள்ள சர்க்கரை, விந்தணுக்களைச் செயல் இழக்கச் செய்யுமாம். 1950களில் இந்தப் பழக்கம் மக்களிடையே இருந்திருக்கிறது.

===============================================================

நன்றி: https://www.bbc.com/tamil/global-54314302

ஞாயிறு, 22 நவம்பர், 2020

மருட்டும் மனநோயும் மதி மயங்கும் மனிதகுலமும்!!!

"இந்தியாவில் மனநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு மனநோயாளிகளாக இருக்கிறார்கள். இது ஜப்பான் நாட்டின் மொத்த மக்கள் தொகையைவிட அதிகம். இதயநோய், சர்க்கரை நோயைவிட மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாக உள்ளது."  -பெங்களூரு, தேசிய மனநலச் சுகாதார மற்றும் நரம்பு அறிவியல்(நிமான்ஸ்) நிறுவனம் சார்பில் நடைபெற்ற 22ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, டாக்டர்களுக்குப் பட்டங்கள் வழங்கி உரையாற்றுகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவ்வாறு கூறினார்[https://www.dailythanthi.com/amp/News/Districts/2017/12/31050146/Mental-patients-in-India-Increase-in-number.vpf].

இந்திய மாநிலங்களில் 1990 முதல் மனநலக் கோளாறுகளின் போக்குகள் மற்றும் தற்போதுவரை அதனால் ஏற்பட்டுள்ள நோய்ச் சுமை குறித்த விரிவான மதிப்பீடுகள் The Lancet Psychiatry இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

'நாட்டிலுள்ள மக்களில் 1 லட்சம் பேரில் குறைந்தது 836 பேர் மனச்சோர்வுக் கோளாறுகளால்[மன நோய்] ஒருவிதக் குறைபாட்டைச் சந்தித்துள்ளனர்' என்பது பற்றியும், 'ஏராளமான மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?' என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1990 மற்றும் 2017-க்கு இடையில் மனநலக் கோளாறுகளின் நோய்ச் சுமை இரட்டிப்பாகியுள்ளது. 2016ஆம் ஆண்டில் 4.3 சதவீத இயலாமை(Disability) மற்றும் இறப்புகளுக்குத் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்ளும் குணமான சுய தீங்கு(Self-harm) என்பது காரணமாக இருக்கிறது. இதுவே 1996இல் 3.6 சதவீதமாக இருந்தது. 2017இல் ஏழு இந்தியர்களில் ஒருவர் மனச்சோர்வு, பதற்றம், [Schizophrenia, Bipolar disorders, Idiopathic developmental intellectual disability] நடத்தைக் கோளாறுகள், மாறுபட்ட தீவிரமான ஆட்டிசம் உள்ளிட்ட மனநலப் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

மனச்சோர்வு மற்றும் கவலைக் கோளாறுகளால் ஒவ்வோர் ஆண்டும் உலகப் பொருளாதாரத்திற்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அல்லது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 71 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் தலைமையிலான ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு இந்தியர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளின் தீவிரப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அதில் மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற பாதிப்புகள் பொதுவானவையாக உள்ளன என்று 2017இல் Lancet Psychiatry என்கிற மருத்துவ இதழில் வெளியான ஆய்விலும் மதிப்பிடப்பட்டுள்ளது[http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3461&id1=101&issue=20200201]

இந்தச் சமூகம் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறது. ஆனால், மன நோயாளிகளை மட்டும் ஏற்க மறுக்கிறது. 

சொந்த உறவுகளே இவர்களைக் கவுரப் பிரச்சினையாகக் கருதுகிறார்கள். மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால்தான் மனநோய் வருகிறது என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அதனால்தான், மனநோய் என்பது கடவுளின் சாபம், பேய்க் கோளாறு, சூனியம் என்று ஏதேதோ சொல்லி மனநோயாளிகளைப் புனிதத் தலங்களில் கொண்டுபோய் விடும் கலாச்சாரம் இன்னமும் தொடர்கிறது. ராமேஸ்வரம், ஏர்வாடி, திருச்சி குணசீலம், நெல்லை மாவட்டம் புளியம்பட்டி, வேளாங்கண்ணி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே காரணம்.

தென்னகத்தின் காசி என்று சொல்லப்படும் ராமேஸ்வரத்தில் சமீபகாலமாக மன நோயாளிகள் வந்திறங்குவது அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பகுதியினர் ஆந்திரம் மற்றும் பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களில், தானாகத் தப்பித்தோ வழிதவறியோ வந்தவர்களைவிட, யாத்திரை வருவது போல் அழைத்து வந்து உறவுகளால் தெரிந்தே தொலைக்கப்பட்டவர்களே அதிகம்.

தமிழ்நாடு மனநலத்திட்டத்தின் மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளரும், மனநல மருத்துவருமான செ.ராமசுப்பிரமணியன், "மனநோயும் ஒரு வியாதிதான் என்பதை உணராதவர்கள் இதைத் தீர்க்கவே முடியாது என்ற முடிவுக்குச் சென்றுவிடுகின்றனர். அதேசமயம், இதற்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள் இந்தியா முழுவதுக்குமே மொத்தம் ஐயாயிரம் பேர்தான் உள்ளனர். மனநோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெற இந்தியாவில் 42 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன. மேலும், இந்தச் சிகிச்சைக்கான எல்லா மருந்துகளுமே விலை அதிகம். இதில்லாமல், சாப்பாடு, போக்குவரத்துச் செலவுக்கும் பணம் தேவை. இந்தச் சிகிச்சை ஓரிரு நாளிலும் முடியக்கூடியதும் இல்லை. தொடர்ந்து 2, 3 ஆண்டுகள் மருந்து எடுக்கவேண்டும். இதற்கெல்லாம் நடுத்தர, ஏழைக் குடும்பங்கள் தயாரில்லை; அவர்களிடம் அதற்கான விழிப்புணர்வும் இல்லை. இதனால், குணப்படுத்தக்கூடிய ஒரு வியாதியைக் குணப்படுத்த முடியாததாகவே ஆக்கிவிடுகிறார்கள்.

மனநலப் பிரச்சினையையும், மனநோயாளிகளையும் சமூகம் சார்ந்த பிரச்சினையாகக் கருதினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும். 2001இல் ஏர்வாடி மனநலக் காப்பகத் தீ விபத்து நடந்தது. அதன்பிறகு, மனநலத் துறையின் மூலம், மனநோயாளிகளைக் காக்க எல்லா மாவட்டத்திலும் மனநல மருத்துவர்களையும், மன நல மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளனர். மறுவாழ்வுத் துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 நோயாளிகளை வைத்துப் பாதுகாக்கும் வகையில் காப்பகங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனாலும், மன நலத்துறைக்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றன'' என்றார் அவர்[https://m.dailyhunt.in/news/nepal/tamil/the+hindu+kamadenu-epaper-thehinta/bunithath+talama+mananoyalikal+madama+avathiyil+ramesvaram-newsid-125387804].

இதுகுறித்து உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

உலக நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நீண்டநாள் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகம். தற்போது கொரோனா தாக்கம் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி உண்டாகி உள்ளது. இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் இதுவும் ஒன்று.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உலகச் சுகாதார நிறுவனம் 130 நாடுகளில் கணக்கெடுப்பு மேற்கொண்டது. '35 சதவீத நாடுகளில் நீண்டநாள் மனநோய்ப் பாதிப்புகொண்ட நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.

குறிப்பாக, 193 நாடுகளில் 93 சதவீத நாடுகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை வசதி இன்றி, கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழிவதால் மனநல நோய்ப் பாதிப்பு உடையவர்களுக்குப் படுக்கை வசதிகூட இல்லாமல் பின்தங்கிய நாடுகள் பல சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன.' -இவ்வாறு உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது[https://www.dinamalar.com/news_detail.asp?id=2627317]



சனி, 21 நவம்பர், 2020

மக்களை மக்குகள் ஆக்கும் சத்குரு ஜக்கி வாசுதேவ்!!!

ஞானி என்றும் யோகி என்றும் குரு என்றும் நம் மக்களில் பலராலும் போற்றப்படுகிற ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ் ஏராளமான தத்துவக் கட்டுரைகளை எழுதியுள்ளார்; அவற்றை நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். மக்களுக்குத் தத்துவம் போதிக்கும்போது, தேவப்படும் இடங்களில் கதைகள் சொல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவர் சொல்லும் உதவாக்கறைத் தத்துவங்களைப் போலவே, கற்பித்துக் கூறும் கதைகளும் கேட்போரை மதி மயங்கச் செய்வனவாகவே உள்ளன என்பது என் எண்ணம். எடுத்துக்காட்டாகச் சில கதைகள். நீட்சி அஞ்சி, கதைகளின் கருதுகோள் சிதையாத வகையில் சுருக்கிப் பதிவு செய்திருக்கிறேன்.

கதை ஒன்று: மிதக்கும் மாட்டு வண்டி... 

ஒரு தாய் கடவுள் பக்தனான தன் ஒரே மகனிடம் காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையைத் தெரிவித்தார்.

இருவரும் காசி நோக்கி நடந்தார்கள். தாயால் நடக்க இயலாத நிலை வந்தபோது, அவரைத் தோளில் சுமந்து நடந்தான் மகன். தனது முழுபலமும் தீரும்நிலையிலும்கூட தனது தாயின் ஆசையை என்ன விலைகொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு அவனுக்கு இருந்தது. ஆனாலும், களைப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தது.

ஒரு காட்டின் அடர்ந்த மையப் பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்துகொண்டிருந்தது. தனது தாயைத் தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்த அந்த மனிதனின் அருகில் அது நின்றது.

"உள்ளே ஏறுங்கள்" என்றார் மாட்டுவண்டி ஓட்டுநர். தன் தாயை வண்டியினுள்ளே பத்திரமாக அமரவைத்த மகன் தானும் ஏறிக்கொண்டான். வண்டி நகரத் துவங்கியது. 

மேடுபள்ளங்களில் ஏற்படும் அதிர்வுகள் இன்றி மிதந்து செல்வது போல் மகன் உணர்ந்தான். வண்டியின் சக்கரங்களைக் கவனித்தபோது அவை சுழலவில்லை என்பது தெரிந்தது. வண்டியை இழுக்கும் காளையோ கால்மடக்கி அமர்ந்தவாறு இருந்தது. ஆனாலும், வண்டி சென்றுகொண்டிருந்தது.

வியப்புக்குள்ளான மகன் ஓட்டுநரைப் பார்த்தான். முகமில்லாத ஒரு மேலாடை மட்டுமே இருந்தது. அது, "வெறுமையான முகம்." அந்த ஆடைக்குள் ஒன்றும் இல்லை! அவர் தனது தாயைப் பார்த்தான். அவர் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

அந்தத் தாய் உடனே எழுந்து உட்கார்ந்து, “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்! அவர் இங்குதான் இருக்கிறார். நான் போகும் நேரம் வந்துவிட்டது" என்று சொல்லி, தனது உடலை அங்கேயே துறந்தார். https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/mithakkum-mattu-vandiyil-mugamilla-manithar

மாட்டு வண்டி அதிர்வில்லாமல் மிதந்து போனதாம். சக்கரங்கள் சுழலவில்லையாம். ஆடை மட்டுமே ஓட்டுநரா இருந்து வண்டியை ஓட்டிச்சாம். வண்டியை இழுக்க வேண்டிய மாடு கால் மடக்கிக் குந்திகிட்டிருந்ததாம். நம்ம காதுகளில் நல்லாவே பூ சுத்துறாரு சத்குரு!

சத்குருவுக்கு  நம் வேண்டுகோள்:

இனியும் இப்படி 'வெத்து'க் கதைகள் சொல்லாம, மக்களுக்குப் 'புத்தி' வளர்ற மாதிரி ஏதாவது சொல்லுங்கய்யா.


இரண்டு: "நரகம்தான் வேண்டும்!"

வின்டோஸ் சாப்ட்வேரை உருவாக்கிய பில்கேட்ஸ் ஒரு நாள் இறந்து போனார். அவர் செய்த நல்ல காரியங்களாலோ என்னவோ அவர் சொர்க்க வாசலை அடைந்தார். சொர்க்கத்து வாசலில் காத்துக்கிடந்த செயின்ட் பீட்டர், “உங்கள் வின்டோஸ் கண்டுபிடிப்பின் மூலம் இந்த உலகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள், உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்துள்ளீர்கள், அதனால் தேர்வை உங்கள் கைகளில் விட்டுவிடுகிறோம், சொர்க்கமா நரகமா நீங்களே சொல்லுங்கள்” என்றார்.

அதற்கு பில்கேட்ஸ், “நான் முதலில் நரகத்தை சுற்றிப் பார்க்க விரும்புகிறேன்,” என்றார். ஒரு எலிவேட்டரில் கீழே சென்றார். அங்கே கதகதப்பான கடற்கரை, அற்புதமான கால்ஃப் மைதானம், பிகினியில் பெண்கள் என்று அவர் விரும்பியபடியே இருந்தது அந்தச் சூழல். சியாட்டில் நகரில் அவருக்கு வெகு பரிச்சயமான விஷயங்கள் ஆயிற்றே இவையெல்லாம். “இது நன்றாகவே இருக்கிறது,” என்று திருப்தி கொண்ட பில்கேட்ஸ் அடுத்து சொர்க்கத்தை அடைந்தார்.

சொர்க்கத்தின் கதவுகள் பில்கேட்சுக்காகத் திறந்தன. அங்கே ஒரே மேகமூட்டமாக இருந்தது, தேவதைகள் பாதி உடல்களுடன் மிதந்து கொண்டிருந்தனர், யாழிசை இசைந்துக் கொண்டிருந்தது. அத்தனை பெரும் ஆனந்தப் பரவசத்தில் இலயித்துக் கொண்டிருந்தனர்.

இரண்டு இடங்களையும் பார்த்த பில்கேட்சுக்குத் தெரிவு சுலபமாய்ப் போனது. “ஒருநாள் நான் இந்தச் சொர்க்கத்தில் இருக்கும் நிலைக்கு வளர்வேன் என்று நினைக்கிறேன்[சொர்க்கத்தில் இடம் தரப்பட்டதுன்னு சொன்ன ஜக்கி குழப்புகிறாரே?!], ஆனால் தற்சமயம் நரகம்தான் எனக்குப் பொருத்தமாய்த் தெரிகிறது. ஒருவேளை நரகம் எனக்கு அலுத்துப் போனால் யாழிசை கேட்கும் சொர்க்கத்திற்கு நான் வருகிறேன்” என்றார்.

அடுத்த கணம் நரகத்தின் பதிவேட்டில் பில்கேட்சின் பெயர் பொறிக்கப்பட்டது. எலிவேட்டர் கீழே சென்றது. நரகத்தில் கால் பதித்த பில்கேட்சுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு எரியும் நெருப்பு, தகிக்கும் அனல், பைத்தியம் பிடித்த மனிதர்கள், கொடூரமான சித்திரவதைகள் என்று கண்ணால் பார்க்க முடியாத பல விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. அதிர்ந்து போன பில்கேட்ஸ், “என்ன இது, கடற்கரை, கால்ஃப் மைதானம், அந்தப் பெண்கள் எல்லாம் என்னவானார்கள்?” என்றார். அதற்குச் சாத்தான், “உங்களை வசீகரிக்க நாங்கள் செய்திருந்த விளம்பர டெமோ அது” என்றார்.

பில்கேட்சுக்கும் ஜக்கிக்கும் ஏதேனும் பிரச்சினையா? உயிரோடு இருக்கிற மனுசனைக் கொன்னுட்டாரே!

இந்தக் கதையின் வாயிலா சத்குரு என்ன சொல்ல நினைக்கிறார் ஒரு மண்ணும் புரியலையே!? https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/naragamthan-vendum

இந்த மாதிரி வெறும் குப்பைக் கதைகளை எழுதுறது கடவுளுக்கே குருவான[சத் - பிரம்மம் > பரம்பொருள்] ஜக்கி வாசுதேவுக்கு அழகல்லவே!


மூன்று: இறந்தவர்கள் நல்லவர்கள்?![இந்தக் கதை கொஞ்சம் தேவலாம்]

ஒருமுறை ஒரு தாயும், அவரது ஏழு வயது மகனும் அவர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கல்லறைத் தோட்டத்திற்குச் சென்றார்கள். அது போன்ற ஒரு இடத்திற்கு அந்தச் சிறுவன் அப்போதுதான் முதல் முறையாகச் செல்கிறான்.

அவனது தாய் ஒரு குறிப்பிட்ட கல்லறையை நோக்கி நடந்து சென்று அங்கே அமர்ந்து கொண்டார். அந்தச் சிறுவனுக்குக் கல்லறை மைதானத்தை முழுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஒவ்வொரு கல்லறையாகச் சென்று அதில் எழுதப்பட்டவற்றைப் படித்தான்.

இப்படி கல்லறை முழுக்க சென்று படித்து விட்டு, தன் தாயிடம் திரும்ப வந்து, “அம்மா, கல்லறைகளில் புதைக்கப்பட்டவங்க எல்லாருமே நல்லவர்களாவே தெரியறாங்க! மோசமானவர்களை எல்லாம் எங்கே புதைப்பார்கள்?” என்றான்.

பையன் கேள்விக்கு அம்மா பதில் சொல்லல. ஜக்கியும் சொல்ல வைக்கல. தலைப்பில் பதில் இருக்கு.

'இறந்தவர்கள் [எல்லோரும்] நல்லவர்களே.'

===============================================================

வெள்ளி, 20 நவம்பர், 2020

'நாத்திக' இராமன் கதை!

அறிவை மழுங்கடிக்கிற ஆன்மிகக் கதைகளைப் போட்டிபோட்டுக்கொண்டு  வெளியிட்டுவருகிறார்கள் நம் பத்திரிகையாளர்கள். பகுத்தறிவு வளர்ப்பில் ஈடுபாடுள்ள படைப்பாளர் எவரும் மூடநம்பிக்கைகளைச் சாடும் கதைகளைப் படைப்பதில் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை.

சற்று முன்னர், இவ்வகையிலான படைப்புகளைத் இணையத் தளங்களில் தேடியபோது, கீழ்க்காணும் 'நாத்திக இராமன் கதை' தட்டுப்பட்டது[சற்றே ஆறுதல் அளிக்கும் கதை]. மகிழ்வுடன் பகிர்கிறேன்.

திகாலை நேரம், எல்லோரும் வரிசையாக நின்று பால் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்றுகொண்டிருந்த நாத்திக இராமனும் காசு கொடுத்து, சிறிய கிண்ணத்தில் 100 மி.லி. பால் வாங்கினான். 

வழக்கமாக 500 மி.லி. வீட்டிற்கு வாங்கிச் செல்லும் இராமன் இன்று ஏன் வெறும் 100 மி.லி. மட்டும் வாங்குகிறான் என்று யோசித்த பால்காரன், கூட்டம் அதிகம் இருந்ததால் இராமனிடம் பேச்சுக் கொடுக்காமல் பால் ஊற்றினான்.

நாத்திக இராமன் அந்தப் பாலை வாங்கிக்கொண்டு வரிசையைக் கடந்து, எல்லோரும் பார்க்கும்படியாகப் பாலைத் தரையில் கொட்டிவிட்டு மீண்டும் வரிசையில் நின்றான். 

இரண்டாவது முறையாக வாங்கிய 100 மி.லி. பாலையும் முன்பு போலவே தரையில் கொட்டிவிட்டு வரிசையில் இணைந்தான். 

இவனுடைய செயலைக் கவனித்துவந்த பால்காரன், மூன்றாவது முறையாகப் பால் கேட்டு வரிசையில் வந்த இராமனுக்குப் பால் ஊற்ற மறுத்தான்.

நாத்திக இராமனோ, "எனக்குச் சும்மாவா பால் ஊத்துறே? காசு கொடுக்கிறேனே, ஊத்து" என்றான் கண்டிப்பான குரலில்.

பால்காரன், "நீ விலை கொடுத்துப் பால் வாங்கினாலும்  அதைத் தரையில் கொட்டுறே. காசு கொடுத்தாலும் உனக்கு இனிமேல் பால் ஊற்ற மாட்டேன்" எனறான் திட்டவட்டமாக.

பால் வாங்க வந்தவர்கள் இவர்களைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.

இராமன் விடாப்பிடியாக, காசைக் கொடுத்து பால் ஊற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருந்தான். நேரம் வீணாவதால் கடுப்பாகிப்போன பால்காரன், இராமனிடம், "இந்தத் தடவை, பால் வாங்கித் தரையில் ஊற்றி வீணாக்க மாட்டேன் என்று உறுதியளித்தால் தருகிறேன்" என்றான். 

நாத்திக இராமன், "அதெல்லாம் முடியாது. நான் காசு கொடுத்து வாங்கிய பாலை என்ன வேண்டுமானாலும் செய்வேன். எல்லோருக்கும் கொடுப்பதைப்போல எனக்கும் காசை வாங்கிக்கொண்டு பேசாமல் பாலை ஊற்று" என்று சொன்னான்.

கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர், "பாலை இப்படி வீணாக்குறியே, இது நியாயமா?" என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டார்.

நாத்திக இராமன், "நான் 200 மி.லி. பாலை வீணாக்கிவிட்டேன் என்று பால்காரர் பால் ஊற்ற மாட்டேன்னு சொல்றார். பெரியவர் நீங்களும் மத்தவங்களும் வருத்தப்படுறீங்க" என்று சொன்ன ராமன், அருகிலிருந்த ஓர் ஆளைச் சுட்டிக்காட்டி, "இதோ நிற்கிறாரே இவர், நேற்று அபிசேகம் பண்றதாச் சொல்லி 200 லிட்டர் பாலை வாங்கிட்டுப் போய், சிலை மேல ஊத்தி வீணடிச்சார். இது, இந்தப் பால்காரருக்கும் தெரியும். இவருக்குப் பால் ஊத்த மாட்டேன்னு சொல்லுவாரா?" என்றான்.

"உன்னோட எல்லாம் விவாதம் பண்ணி ஜெயிக்க முடியாது. பாத்திரத்தை நீட்டு" என்று சொல்லிப் பால் ஊற்றி நாத்திக இராமனை அனுப்பி வைத்தார் பால்காரர்.

===============================================================

நன்றி: ச. கந்தசாமி, அருப்புக்கோட்டை. http://periyarpinju.com/2008/200812/page10.php