பார்வதிக்கு நாளை கல்யாணம். ஆமாம், இந்த ஊமைச்சியைக் கைபிடிக்க எங்கிருந்தோ ஒரு மாப்பிள்ளை வந்து குதித்திருக்கிறான்.
தாலி கட்டிய ஜோரோடு அவன் ஊருக்கே இவளை அழைத்துக்கொண்டு போய்விடப் போகிறானாம். இது தெரிந்ததும் பித்துப் பிடித்துப் புலம்பியது என் இதயம்.
பழம் நழுவிப் பாலில் விழும் என்று எந்தப் பைத்தியக்காரன் காத்திருப்பான்? நான் காத்திருந்தேன். கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் பறித்துச் சுவைக்கத் தவறிய என் கையாலாகாத்தனத்தை எண்ணி மனம் புழுங்கினேன்.
எதிர் எதிர் குடியிருப்பு. கதைவைத் திறந்தால் நடமாடும் ஓவியமாக என் கண்குளிரக் காட்சி தருவாள். கொடுத்துவைத்தவை இந்தக் கண்கள் மட்டும்தான் போலும் என்ற அரைகுறைத் திருப்தியுடன் கடந்த கொஞ்சம் காலத்தை வீணடித்துவிட்டேன்.
போன வாரத்தில்கூட ஒரு பொன்னான வாய்ப்புக் கிட்டியது. நழுவ விட்டுவிட்டேன்.
கிணற்றடியில் துவைத்த துணிகளை உலரப் போட்டுவிட்டுக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் மீது அமர்ந்தவாறு, தனது செவ்விதழைப் போல் சிவந்த கொய்யாக் கனி ஒன்றைச் சுவைத்துக்கொண்டிருந்தாள், விபத்தொன்றில் பேசும் சக்தியை இழந்துவிட்டிருந்த பார்வதி. குளிக்கச் சென்ற என்னைக் கண்டதும் இறங்கி நின்று புன்னகைத்தாள்.
“என்ன? அது” என்று என்றேன்.
பழத்தைக் காட்டினாள்.
“எனக்கில்லையா?” என்று கேட்டுக் கை நீட்டினேன்.
“இல்லை” என்பதாகக் கை விரித்து ஆட்டினாள்.
“அதைத்தான் கொடேன்” என்று அவள் ருசித்துக்கொண்டிருந்த பழத்தைக் காட்டினேன்.
“இது என் எச்சில்” என்பது போல் தன் இதழ் தொட்டுச் சாடை காட்டினாள். அவள் கொஞ்சமும் எதிர்பாராத வகையில், எச்சில் பழத்தைப் பறித்து என் வாயில் போட்டுக்கொண்டேன்.
நாண மிகுதியால் ‘குப்’பென்று சிவந்துவிட்ட முகத்தை இரு கைகளாலும் பொத்திக்கொண்டாள் பார்வதி.
“பார்வதி.” -மெல்ல அழைத்தேன்.
“உம்” கூட்டினாள்.
“என்னோடு சினிமாவுக்கு வர்றியா?”
“ஊஹூம்” என்பது போல் தலையாட்டினாள்.
“ஏன், பாட்டி திட்டுவாளா?”
அதற்கும் இல்லை என்பது போல் தலையசைப்பு.
“பின்னே?”
என்னை நிமிர்ந்து பார்த்தாள் பார்வதி. ஒரு கையால் தன் கழுத்தைத் தொட்டுக் காட்டிப் பரிதாபமானதொரு பார்வையை என் மீது நிலைக்கச் செய்தாள். “என்னை மனைவி ஆக்கிக்கொள்ளுங்கள். உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்” என்று சொல்வது போலிருந்தது அந்தப் பேதையின் பார்வை.
பாவம் பார்வதி.
ஐந்தாறு மாதப் பழக்கத்தில் என்னை ஒரு யோக்கியன் என்று நம்பிவிட்டாள். குடும்பப் பந்தம் என்னும் கயிற்றால் எனக்கு நானே சுருக்கு வைத்துக்கொண்டு, ஒற்றை மலரையே சுற்றி வந்துகொண்டிருக்கும் ஆள் அல்ல நான் என்பது அவளுக்குப் புரிய வாய்ப்பில்லை.
“எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் கல்யாணத்துக்குப் பிறகு நம் கல்யாணம்” என்று புளுகி வைத்தேன்.
அவளின் முகம் ஏமாற்றத்தால் வாடியது. அவநம்பிக்கை செறிந்ததொரு பார்வையை என் மீது வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
இப்படி இலவு காத்த கிளியாவேன் என்பது அப்போதே தெரிந்திருந்தால், கல்யாணம் என்னும் சடங்கை ஒப்புக்கு நிறைவேற்றிவிட்டு, சலிக்கும்வரை அவளை அனுபவித்துவிட்டு அடுத்த மலரை நாடி ஓடியிருப்பேன். அவள் மனம் இளகட்டும் என்று காத்திருந்தது பெரும் தவறாகிவிட்டது.
என் சிந்தனை ஓட்டத்தைச் சட்டென்று தடுத்து நிறுத்தியது ஒரு பெண் குரல்.
காமுப் பாட்டியின் குரல் அது.
பார்வதியின் வளர்ப்புத் தாயும் அவளுக்குள்ள ஒரே ஆதரவும் அவள்தான்...அந்தக் கிழவிதான்.
வெப்பக் கனல் தெறிக்கக் கத்தினாள் கிழவி. “ஏண்டி சும்மா அழறே? அழுது அழுது பட்டினி கெடந்து சாவு. உன்னை வேண்டாம்னு தடுக்க யாரும் இல்ல. இந்த மாப்பிள்ளை கசக்குதா, ஏண்டி ஊமைக் கோட்டான். நீ கெட்ட கேட்டுக்கு எந்த மன்மதன்டி உனக்கு மாலை சூட்ட வருவான்? இந்தப் பிள்ளையாண்டானுக்கு என்ன குறச்சலுங்கறேன். கூடிக் கூடிப் போனா அறுபது வயசிருக்கும். ஆம்பிள்ளைக்கு அறுபதெல்லாம் ஒரு வயசா? எழுந்திருடி. போய்ச் சாப்புடு. நான் கடைவீதி வரைக்கும் போய்ட்டு வர்றேன்.”
-
‘தரக்...தரக்’ என்ற மிதியடி ஓசை, கிழவி புறப்பட்டுப் போய்விட்டாள் என்பதை அறிவிக்கவே, என் மூளை சுறுசுறுப்படைந்தது. உடம்பில் சூடு பரவியது.
சொர்க்கத்தின் கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. நழுவ விடாமல் எப்படியும் நுழைந்துவிட வேண்டும். மனம் விரும்பாத ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தம். வளர்த்த கிழவியின் கண்டிப்பு. இந்த இக்கட்டான நிலையில் பார்வதி என் இச்சைக்கு நிச்சயம் இணங்குவாள். மறுத்தால்.....
பலவந்தம்தான்.
இங்கு என்ன நடந்தாலும் இப்போது ஏனென்று கேட்க எவருமற்ற தனிமை. என் பசிக்கு இரையாகப் போகிறவளோ, தான் பலவந்தப்படுத்தப்பட்ட சோகக் கதையை எவரிடமும் எடுத்துச் சொல்ல இயலாத ஊமை.
என் அறிவு உணர்ச்சிக்கு அடிமையானது. பள்ளத்தில் பாயும் வெள்ளமாக, பார்வதி இருந்த அறையை நோக்கித் தாவினேன்.
கை பட்டதும் திறந்துகொண்டது கதவு. துணிந்து உள்ளே நுழைந்தேன். என் வரவால் முதலில் திடுக்கிட்டாலும் சில நொடிகளில் வழக்கம் போல குழந்தைத்தனமானதொரு புன்னகை அவளின் முகத்தில் படர்ந்தது. கையிலிருந்த ஏதோ ஒரு பொருளை முதுகுப்புறமாக மறைத்துக்கொண்டாள்.
“என்ன அது?” என்றவாறு அவளை நெருங்கினேன்.
ஒரு கையை மட்டும் விரித்துக் காட்டிச் சிரித்தாள்.
“எங்கே, அந்தக் கையைக் காட்டு” என்று கேட்டு இடைவெளியைக் குறைத்தேன்.
பொருள் கை மாறியது. வெறுமையாய் இருந்த இன்னொரு கையைக் காட்டினாள்.
“ஏய், என்னையா ஏமாத்துறே. ரெண்டு கையையும் ஒருசேரக் காட்டு” என்று கூறிக்கொண்டே அவளின் கைகளைப் பற்ற முயன்றேன்.
அவள் பின்வாங்கினாள். நான் முன்னேறினேன்.
கண்ணிமைப் பொழுதில் தன் கையிலிருந்த பொருளை வாயில் திணித்துக்கொண்டாள் பார்வதி.
அது, உரித்த வாழைப்பழம்.
“எச்சில் படுத்திவிட்டால் விட்டுவிடுவேனா? உன் எச்சிலைச் சுவைப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்” என்றவாறு அவளைத் தாவி அணைத்தேன்.
அவளின் வாய்க்குள் அடங்காமல் வெளிப்பட்டிருந்த பழத்தின் ஒரு பகுதி இப்போது என் வாய்க்குள். அதை மிச்சமில்லாமல் விழுங்கினேன்.
என்னுள் பெருக்கெடுத்து அலைமோதிக்கொண்டிருந்த காமம் கரையை உடைத்துக்கொண்டது. வெறியனாகி அவளை இழுத்து அணைத்து இறுக்கினேன். அமுதம் சுரக்கும் அழகிய வழவழத்த இதழ்களில் என் உதடுகளை அழுந்தப் பதித்தேன். இதழ் நீரை அசுரத்தனமாக உறிஞ்சிச் சுவைத்தேன்.
திடீர் அரவணைப்பால் நிலைகுலைந்த பார்வதி, விடுபடப் போராடினாள். எப்படியோ வளைந்து நெளிந்து வழுக்கிக்கொண்டு விடுபட்டு நின்றாள்.
முந்தானை நெகிழ்ந்து சரிய, கட்டுவிடாத பருவ மொட்டுகள் என் உணர்ச்சிகளை மேலும் கட்டவிழ்த்து விட்டன. சிறிதும் தணியாத தாபத்துடன் மீண்டும் அவள் மீது தாவினேன்.
நழுவிப் போக்குக் காட்டினாள். சுழன்று சுழன்று ஓடினாள். விடுவேனா? சூழ்ந்து சூழ்ந்து அவளைத் துரத்தினேன் நான்.
பெண்ணல்லவா? சிறிது நேரத்தில் சோர்ந்து தரையில் சரிந்துவிட்டாள். துவண்டு கிடந்த அந்தத் தோகை மயிலின் மீது சரிந்து சாய்ந்து தழுவிச் சுகம் காண முயன்றபோது.....
நெஞ்சில் தீப்பற்றிக் கொண்டாற்போன்ற பயங்கர எரிச்சல்! கொடூரமான வலி!
என்ன இது? ஏன் இப்படி? பார்வதியிடம் பறித்துச் சுவைத்த பழத்தில் ஏதாவது.....
மார்பை அழுத்திப் பிடித்துக்கொண்டு பலம் கொண்ட மட்டும் கத்தினேன். “ஏய், ஊமைச்சி, பழத்துக்குள்ளே விஷம் சேர்த்திருந்தியா?”
பதிலில்லை. அவளை உற்று நோக்கினேன்.
உடலோடு உயிர் கலந்திருந்த காலத்திலேயே பேசும் சக்தியை அவளுக்கு ஆண்டவன் அருளவில்லை. இப்போது எப்படி அவள் பேசுவாள்?
* * * * *
[கதை முன்னணி வார இதழில் வெளியானது. இப்போது விற்பனையில் அது பின்தங்கிவிட்டது!]
கதாசிரியர்?
ஹி... ஹி... ஹி!!!