புதன், 31 மே, 2023

கணக்கில் வராத ‘கருணைக் கொலை’கள்! கவனத்தில் கொள்ளுமா நடுவணரசு?

குறிப்பிட்டதொரு தீராத நோயால் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த முடியாதபோது, அவர் தினம் தினம் வேதனையால் துடிப்பதைத் தடுக்கும் வகையில் அவரைக் கருணை கொலை செய்ய, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அரசிடம் அல்லது நீதிமன்றத்திடம் அனுமதி கோருவது நடைமுறையில் உள்ளது[On 9 March 2018 the Supreme Court of India legalised passive euthanasia by means of the withdrawal of life support to patients in a permanent vegetative state...  மூளைச் சாவு அடைந்தவர்களுக்கு வென்டிலேட்டரை அணைக்க முடியும்...

ஆனால், கருணைக் கொலைக்கு அனுமதி வழங்குவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்போரும் உள்ளனர். கருணைக் கொலை என்னும் பெயரில், வேண்டாத குடும்ப நபர்களைக் கொலை செய்வதும் நடபெறக்கூடும் என்பதே இதற்கான முக்கியக் காரணம்.

இங்கு, க.கொலைக்கு அனுமதி கிடைப்பது எளிதல்ல என்பதால், சம்பந்தப்பட்ட குடும்ப நபர்கள், மருத்துவத் துறையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஆட்களின் உதவியை நாடுவதும், அவர்கள் பணத்துக்காகக் கருணைக் கொலையை ஒரு தொழிலாகச் செய்வதும் நடைமுறையில் உள்ளது[இத்தொழிலில், இருதரப்பினராலும் ரகசியம் காக்கப்படுவதால் இது பற்றிய செய்திகள் வெளிவருவதில்லை].

பாதிக்கப்பட்ட நோயாளியின் குடும்பத்தினரே இதைச் செய்கிறார்கள் என்பது அவ்வப்போதைய செவிவழிச் செய்தி.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில், கருணைக் கொலையைச் சிலர் சட்டவிரோதமாக செய்துவருகிறார்கள்(நாடெங்கும் இது பரவலான நிகழ்வாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இவர்கள் மீது மிகக் கடும் நடவடிக்கை தேவை) என்பது ஊடகச் செய்தி[https://ilakkiyainfo.com/; காணொலிகள் இணைக்கப்பட்டுள்ளன..

இதைச் செய்பவர்கள், இது ரகசியமாகச் செய்யும் கொலை என்பதால் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் வரன்முறை இல்லாமல் பெரும் தொகையைக் கூலியாகப் பெறுவர் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

முதியோர்களையும், பிறர் உதவியை எதிர்பார்த்து வாழும் சாதாரண நோயாளிகளையும்கூட ‘வீண் சுமை’ என்று நினைக்கும் குடும்பத்தவர்கள், கருணைக் கொலை என்னும் பெயரால் சாகடிப்பது சர்வ சாதாரண நிகழ்வாக ஆகிவிட வாய்ப்புள்ளது.

எனவே, நடுவணரசு, இதற்கென உடனடியாகக் குழு அமைத்து ஆராய்வதும், கருணைக் கொலை செய்தற்குரிய நபர்களின் எண்ணிக்கையை ஒரு கணக்கெடுப்பின் மூலம் தோராயமாகவேனும் அறிவதும் மிக அவசியம்.

குழுவின் பரிந்துரைப்படி, தேவையான சட்ட நடவடிக்கைகளை[உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதாரமாகக்கொண்டு] மேற்கொள்ளலாம். 

அரசு மருத்துவமனைகளுடன், அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் கருணைக் கொலை செய்வதற்கான அனுமதியை[க.கொலை பற்றி முடிவெடுப்பதற்கான அதிகாரம் உட்பட] வழங்கினால், உரிய தருணத்தில் க. கொலையைச் செய்துமுடிப்பது சாத்தியப்படும்.

இதன் மூலம், கருணைக் கொலை என்னும் பெயரில் பரவலாகக் குற்றச் செயல்கள் நடப்பதை பெருமளவில் தவிர்க்க இயலும்.

இது மேலோட்டமான ஒரு பரிந்துரை மட்டுமே.

                                            *   *   *   *   *

***கருணைக் கொலை[Euthanasia] என்பது உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரைத் திட்டமிட்டு முடிவடையச் செய்தல் ஆகும். வதையா இறப்புத் தொடர்பான வரையறைகளும் சட்டங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. எனினும் பெரும்பான்மை நாடுகளில் இதற்குச் சட்ட ஏற்பு இல்லை.

வதையா இறப்பு சமூக, சமய, அரசியல், சட்ட, அறிவியல் நோக்கில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகவே இருந்துவருகிறது.

                          

                                   *   *   *   *   *

https://ilakkiyainfo.com/2023/04/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-300-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9/

செவ்வாய், 30 மே, 2023

மதங்களை ஆளும் சாதிகள்! கிறித்தவமும் விதிவிலக்கல்ல!!

கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள செயின்ட் மேரி மாக்டலின் தேவாலயம் கும்பகோணம் கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்தது.

இக்கிராமத்தில் சுமார் 540 தலித் கிறிஸ்தவக் குடும்பத்தினரும், 100 ஆதிக்கச் சாதிக் கத்தோலிக்கர் குடும்பத்தினரும் வாழ்கின்றனர்.

இரு தரப்பாருமே கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது நினைவுகூரத்தக்கது. ஆயினும் என்ன, இங்குள்ள ஆதிக்கக் கத்தோலிக்கர்களின் சாதி வெறியைக் கிறித்தவ மதம் தணிக்கவோ அழிக்கவோ செய்யவில்லை என்பதற்கு இவர்களுக்குள்ளே நிலவும் ஏற்றத்தாழ்வுகளே சான்று.

ஏற்றத்தாழ்வுகள் குறித்து, மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த தலித் கிறித்தவர்களான ஜே தாஸ் பிரகாஷ், ஏ பவுல்டாஸ், ராஜ் நோபிலி ஆகியோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு பின்வருமாறு:

“தேவாலயத்தில் உள்ள சபைக்கு[council] ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர்களாகவும் செயல்பாட்டாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேவாலயத்துக்கான சந்தாவோ நிதியுதவியோ செலுத்தவும் தலித் கிறித்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.”


ஆயினும், மேலாதிக்கக் கத்தோலிக்கர்களின் கிராமத் தலைவர் ஏ கண்ணன் என்பவர், “அனைத்துச் சாதிக் கத்தோலிக்கர்களும் சகோதர சகோதரிகளாக வாழ்கிறார்கள்” என்றும், “அவர்களுக்குள் எந்தவிதப் பாகுபாடும் இல்லை” என்றும் கூறுகிறாராம்The Times of India16h ago

உண்மை நிலவரம் என்ன என்பதை, இவர்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுகொள்ளாத கர்த்தரே அறிவார்!


ஹி...ஹி...ஹி!!!


* * * * *

[https://www.msn.com/en-in/news/other/dalit-christians-in-tamil-nadu-village-allege-church-discrimination/ar-AA1bQPXJ?ocid=msedgdhp&pc=U531&cvid=c906bf9be3bf4368a56603a8316db096&ei=8]

திங்கள், 29 மே, 2023

காலை நேரம்... காலி வயிறு... கால் லிட்டர் தண்ணீர்... மறவாதீர்!!!

காலை எழுந்தவுடன் காலி வயிற்றில் தண்ணீர் குடிப்பதால்[குறைந்தபட்சம் கால் லிட்டர்] விளையும் அளப்பரிய நன்மைகள்:


=அது குடலைச் சுத்தம் செய்கிறது. 

=குடலின் இயக்கத்தைச் சீராக்குகிறது.

=மலச்சிக்கலுக்கு வாய்ப்பே இல்லை. 

=செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்படும்.

=உடலின் மெட்டபாலிசத்தைச்{மெட்டபாலிசம் என்பது நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்பட்டு அதிலிருந்து நியூட்ரிஷியன்கள்[ஊட்டச்சத்து] பிரிந்து நம் உடலில் சேருகிற நடைமுறை} சீராக வைக்க உதவுகிறது.

=இரவுப் பொழுதில் உடம்பில் உருவான அனைத்து நச்சுக்களும் வெளியேற்றப்படுகின்றன.

=உடலின் வெப்பநிலை சீராகப் பராமரிக்கப்படுகிறது.

=உடலில் நிகழும் அனைத்து இரசாயன மாற்றங்களையும் ஒழுங்குபடுத்துகிறது வெறும் வயிற்றில் குடிக்கும் தண்ணீர்.

=தோலின் ஆரோக்கியம் மேம்படும்.

=முகப்பரு உருவாவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறையும்.

=தோலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 

=ஒட்டுமொத்த உடம்பும் மிகு பொலிவுடன் காட்சியளிக்கும்.

***தகவல்கள் இடம்பெற்ற தளத்தின் முகவரியை முறையாகச் சேமிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

ஞாயிறு, 28 மே, 2023

எல்லாப் புகழும் இறைவனுக்கே!?!?!


ராசுவின் தந்தை ஒரு தனியார் வங்கி அலுவலர்.

அவர் கொச்சிக்கு மாறுதல் ஆன போது, தன் குடும்பத்தையும் அங்கே அழைத்துப் போனார்.

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தன் சொந்த ஊரான கோவைக்கு மாறுதல் பெற்றார்.

பிறந்த மண்ணுக்குத் திரும்பியதில் ராசுவுக்கு அளப்பரிய ஆனந்தம். நண்பர்களைத் தேடிப் போய் அளவளாவினான்.

பள்ளித் தோழன் அறிவழகனை ஒரு விளையாட்டு மைதானத்தில் சந்தித்த போது, அவன் விழிகளில் மகிழ்ச்சி கலந்த வியப்பு.

“நல்லா இருக்கியா?” என்று கேட்ட அறிவழகனிடம், “நான் நல்லா இருக்கேன். நீயும் நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன். அப்போ நீ நோய்வாய்ப்பட்டிருந்தே. உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையறதால, ஒரு சில வருசங்களில் நீ இறந்துடுவேன்னு டாக்டர்கள் சொல்லியிருந்தாங்க. அது நடந்து அஞ்சு வருசம் ஆச்சு. நீ இப்போ திடகாத்திரமாவும் உற்சாகமாவும் இருக்கே. நீ சாவை எப்படி ஜெயிச்சே?”-ராசுவின் குரலில் ஏராள ஆர்வம்.

“சாவை விரட்டியடிக்கணும்கிற வெறியோட, தினமும் ஒரு மணி நேரம் வலியைப் பொறுத்துட்டு ஓடினேன்; உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்ணினேன். ‘நான் வாழ்வேன்...வாழ்ந்துகாட்டுவேன்’னு அப்பப்போ மனசுக்குள்ள சபதம் எடுத்தேன். படிப்படியா என் உடம்பில் எதிர்ப்புச் சக்தி கூடிச்சி. நோய் இருந்த இடம் தெரியாம ஓடி ஒளிஞ்சிடுச்சி. டாக்டர்கள் ஆச்சரியப் பட்டாங்க” என்றான் அறிவழகன்.

அறிவழகனைக் கட்டியணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ராசு.

அறிவழகன் வீடு திரும்பிய போது, அவன் அம்மா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

“உன் மகனுக்கு நோய் எப்படிக் குணமாச்சு?” 

“அஞ்சு வருசமா நான் போகாத கோயில் இல்ல. வேண்டாத சாமி இல்ல. ‘கடவுளே, என் மகனைக் காப்பாத்து’ன்னு கண்ணீர் விட்டு அழுதேன். கடவுள் கண் திறந்துட்டாரு”- அறிவழகனின் அம்மா குரலின் ஏகப்பட்ட உருக்கம்!

“அம்மா, என் நோயைக் குணப்படுத்தக் கடவுளுக்கு அஞ்சு வருச அவகாசம் எதுக்கு? நீ முதல் தடவை வேண்டிகிட்ட போதே அவர் ஏன் கண் திறக்கல?” என்று கேட்டான் அறிவழகன்.

“இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பா”. அவசரமாக அவன் வாய் பொத்தினார் அம்மா.

வெள்ளி, 26 மே, 2023

அது என்னங்க ‘பேரின்பம்’?!?!

குழந்தையை அணைத்து முத்தமிடுகிறோம். இன்பமாக இருக்கிறது. 

அருவியில் குளிக்கிறோம்; கமகமக்கும் மலர்கள் நிறைந்த பூங்காவின் பசும் புல்தரையில் மெல்ல நடக்கிறோம்; மலர்க் குவியலின் மீது மல்லாந்து படுத்துத் தண்ணிய வெண்ணிலவையும் சுடர் விடும் விண் மீன்களையும் கண்ணாரக் காண்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளை ஆர அமர அனுபவித்து உண்கிறோம். இம்மாதிரியான செயல்களில் ஈடுபடும்போதெல்லாம் இன்பமாக இருக்கிறது. 

ஆக,  இன்பம் எது என்று நமக்குப் புரிகிறது. 


அது என்ன பேரின்பம்?

பிறப்பை அறுத்து, இறைவனின் திருவடியில் நிரந்தர இடம் பெற்று, அந்தம்[முடிவு] இல்லாத இன்பத்தில் திளைப்பது பேரின்பம் என்கிறார்களே, அந்தப் பேரின்பம் எப்படியிருக்கும்?

மீண்டும் கேட்கிறோம், சிற்றின்பம் நமக்குத் தெரியும். மேலே விளக்கிச் சொன்னது போல புலன்களால் அனுபவிக்கும் அந்தச் சிற்றின்பம் பற்றி நமக்குத் தெரியும். அந்தப் பேரின்பம்.....?

தெய்வங்களைத் தொழுவதன் மூலம் பெறுகிற இன்பம்தான் பேரின்பமா??

அந்த இன்பம், வண்ணமயமான மேகங்கள் உலாவும் விண்வெளியில், இதமாக வருடும் தென்றலை  அனுபவித்துக்கொண்டே..... கமகமக்கும் பூந்தேரில் பவனி வரும்போது பெறும் அனுபவம் போல் இருக்குமா? 

ஏதோ ‘அமுதம்’ என்கிறார்களே, அது போன்றதொரு பானத்தை மூச்சு முட்டக் குடித்துவிட்டு, கடவுளின் திருவடியில், கோடி கோடி கோடி ஆண்டுகள், யுகயுகாந்தரங்கள் என எஞ்ஞான்றும் கிளுகிளுத்துக் கிடக்கும்போது கிடைப்பதா? 

என்னய்யா பேரின்பம்?

பேரின்பமாம் பேரின்பம்... பெருங்காயம்! வெங்காயம்!!

புதன், 24 மே, 2023

நடமாடும் ‘பலான’ சேவை வாகனம்!!!

டமாடும் சிற்றுண்டி வாகனம், நடமாடும் காய்கறி&பழக்கடை, நடமாடும் சலவை நிலையம், நடமாடும் மருத்துவமனை, நடமாடும் குப்பை வண்டி என்று எது எதற்கெல்லாமோ சம்பந்தப்பட்ட வாகனங்கள் மக்களைத் தேடித் தெருத் தெருவாக உலாவருவதை அண்மைக் காலங்களில் பெருமளவில் காண இயலுகிறது.

எஞ்சியுள்ள துறைகளுக்கும் இவ்வசதி நீட்டிக்கப்படுதல் வேண்டும் என்பது நம் மக்களில் பலரின் விருப்பமாக உள்ளது.

குறிப்பாக, ‘பலான’ தேவைகளுக்காக, அது சம்பந்தப்பட்ட வீடுகளுக்கும் விடுதிகளுக்கும் செல்ல விரும்பாத/‘தில்’ இல்லாத வாடிக்கையாளர்களுக்காக ‘நடமாடும் பலான சேவை வாகனங்கள்’ தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தவிர்க்க இயலாத தேவையை அறிந்த இலங்கைக்காரர் ஒருவர் ‘நடமாடும் பாலுறவுத் தொழில் வாகனம்’[காலிமுகத்திடலில்- நடமாடும் விபசார வியாபாரம்] ஒன்றைத் உலா வரச்செய்தார் என்பது அறியத்தக்கது[செய்தி வழங்கல் தெளிவாக இல்லாததால், தொழிலில் ஈடுபட்டவர் ஒருவரா, பலரா என்பதைத் துல்லியமாக அறிய இயலவில்லை].

இவர், அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களை வாடிக்கையாளர் குறிப்பிடும் இடத்திற்கே அழைத்துவருவார். அலுவலகப் பெண்கள் என்பதாலோ என்னவோ, ஒருத்திக்கான ‘ரேட்’ கொஞ்சமே கொஞ்சம் அதிகம்[ஒரு மணி நேரத்திற்கு ரூ55,000[ரூபாய் ஐம்பத்தைந்தாயிரம் மட்டும்].

அண்மையில் இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது பாலுறவில் அதீத நாட்டம் கொண்ட அன்பர்களுக்குப் பெரிதும் வருத்தமளிக்கும் செய்தியாகும்! [Galle Face ProtestSri Lanka Police Investigation -16 மணி நேரம் முன்பு]

[பாலுறவுச் சேவை புரிந்த அன்பரைக் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டம்]

மொழி ஒரு கருவி! அதில் மந்திரச் சக்தியுமில்லை; பிடுங்குவதற்கு ஒரு மயிரும் இல்லை!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக[கடவுள்கள் சுயமாகத் தோன்றி அருள்பாலிக்கும் கதைகள் இங்கு ஏராளம்] எழுந்தருளியுள்ளார். 

உமையம்மை அளித்த ஞானப் பாலினை அருந்தி ஞானசம்பந்தனார் தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோடுடைய செவியன் என்ற பதிகத்தைப் பாடியது இங்குதானாம்.

3 வயதில் என்பது தவறு; பிறந்த சில வினாடிகளிலேயே பாடினாராக்கும்!!! இது பலரும் அறியாத தகவல். ஹி... ஹி... ஹி!!!

//சீர்காழி, சட்டை நாதர் கோயில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) காலை 8:30 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள் முடிவடைகிறது.

குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்றுப் புனித நீர் எடுத்து வரப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவிலின் மேற்குக் கோபுர வாசல் அருகே 88 குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில், தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தப் பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலைப் பிரவேசம் எல்லாம் நடைபெற்றன// https://www.dailythanthi.com/News/State/after-32-years-at-chattainath-temple-kudamukku-970693

இன்னும் 1008 யாகம், அதற்கும் மேற்பட்ட தானம் எல்லாம் இருக்கு. மறந்துட்டாங்களா, ஒத்தி வெச்சுட்டாங்களான்னு தெரியல.

//தொடர்ந்து 20ஆம் தேதி(சனிக்கிழமை) முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 21ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், அதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி(திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகளுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆறாம் கால மற்றும் ஏழாம் கால யாக பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன// என்றிவையும் இது தொடர்பான செய்திகள்.

இன்று[24.05.2023] மேளதாளங்களோடு ஊர்வலம் வந்து குடமுழுக்கு நடத்தவிருக்கிறார்களாம்.

* * * * *

கோயில் பழுதடைந்திருந்தால் புதுப்பிக்கச் செலவு செய்யலாம்.

அது போகக் கைவசம் நிறையப் பணம் இருந்தால், கோயில் சார்பாகவே ‘தான தர்மம்’ பண்ணலாம். தீராத நோயாளிகள் நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களின் மருத்துவச் சிகிச்சைக்கு வழங்கலாம்.

அனாதை விடுதிகளும் முதியோர் இல்லங்களும் ஏராளமாக இருக்கின்றன. நேர்மையாக நடத்தப்படுகிற இல்லங்களுக்கு உதவலாம்.

பணம் செலவழிக்க இப்படி எத்தனையோ நல்ல வழிகள் இருக்க இந்தக் கும்பாபிசேகம், கோபுர அபிசேகம், சிலை அபிசேகம் எல்லாம் எதற்கு?

மனிதர்கள் தங்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் தங்களுக்குள் பகிர்வதற்காக அவர்களாலேயே உருவாக்கப்பட்டது மொழி.

அது[சமஸ்கிருதமோ, தமிழோ வேறு எதுவோ] ஒரு கருவி மட்டுமே. அதைக் கடவுள் மொழி என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அதில் ‘மந்திரச் சக்தியுமில்லை ஒரு மசுரும் இல்லை’ என்ற விழிப்புணர்வு தமிழனுக்கு எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் அவன் உருப்படுவான்!

செவ்வாய், 23 மே, 2023

இத்தனைக் குரூரமானவரா கடவுள்!?!?!?

வ்வுலகில் வாழும் உயிரினங்கள் கணக்கில் அடங்காதவை. அவற்றில் மனித இனமும் ஒன்று.

மனிதன் தனித்து வாழவில்லை. அணுக்களால் ஆன அவனைச் சூழ்ந்து, கண்ணுக்குத் தெரிபவை தெரியாதவை என எண்ணிக்கையில் அடங்காத உயிரினங்கள் இருந்துகொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கின்றன.

அவன் முழு உடல்நலத்துடன் வாழும்போதே அவனைத் தாக்கி அணு அணுவாகச் சிதைத்துத் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும் முயற்சியில் அவை எந்நேரமும் ஈடுபட்டவாறு உள்ளன.

அவனின் உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையும்போதெல்லாம் அவை அவனை முனைந்து தாக்குகின்றன.

சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு ஆகியவற்றின் மூலமாகவும் அவனின் உடம்புக்குள் நுழைந்து உறுப்புகளைச் சிதைத்து உண்டு உயிர்வாழ முயல்கின்றன; முயன்றுகொண்டே இருக்கின்றன.

இதன் விளைவாக அவன் நோய்வாய்ப்படுகிறான். உரிய மருத்துவச் சிகிச்சைகளின் மூலம் நோயிலிருந்து விடுபடுதல் உண்டு. அது இயலாத நிலையில் உயிரிழக்கிறான்[மற்ற உயிர்களுக்கும் இதே கதிதான்].

செத்தொழிந்து, சவம் ஆகிவிட்ட நிலையிலும் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளால் தாக்கப்பட்டு, அவறிற்கு இரையாகி முற்றிலும் இல்லாமல் போகிறான்.

இந்த அவலம் வினாடிதோறும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆதி மனிதன் தோன்றிய நாளிலிருந்து இடைவிடாமல் நிகழ்ந்தவாறு உள்ளது.

ஆக.....

கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால், மனித உடம்புக்கு வெளியேயும் உள்ளேயும் எல்லா நேரமும் ஆதிக்கம் செலுத்துக்கொண்டிருப்பவை தீநுண் கிருமிகள்தான் என்பதை உணர முடியும்.

மனித உடம்பு அணுக்களால் ஆனது. தீய கிருமிகள் உடபட அனைத்து நுண் உயிர்களும்கூட அணுக்களால் ஆனவையே[?]. 

அந்த அணுக்களில் கருணைக் கடலான கடவுள் இருந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள் அவரைப் போற்றும் மகான்களும் அவதாரங்களும் மத வெறி பரப்புவோரும்.

“அங்கே இருந்து கொண்டு அவர் ஆற்றும் பணிதான் என்ன?

வெறுமனே வேடிக்கை பார்க்கிறாரா, மனிதர்களும் பிற உயிர்களும் படும் வேதனையைக் கண்டு கண்டு குதூகலிக்கிறாரா?”

இது கொடியதொரு குரூரப் புத்தி அல்லவா?!

திங்கள், 22 மே, 2023

கட்டிளங்காளைகளின் காமமும் ‘குடு குடு குடு’ கிழவிகள் படும்பாடும்!!!

காமம் என்றால் என்ன?

இணையத்தில் தேடியதில்.....

‘இது ஒருவித உணர்வு; புலன் சார்ந்த இன்பத்தை அளிக்கவல்லது’ என்பன போன்ற, பொத்தாம்பொதுவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன; துல்லியமானதொரு விளக்கவுரை கிடைக்கப்பெறவில்லை.

காமம் என்பது, விந்துவை வெளியேற்றுவதற்கான ‘உந்துதல்/தூண்டுதல் உணர்ச்சி’ என்பது சற்றே பொருத்தமான உரையாகத் தோன்றுகிறது.

உந்துதல், அல்லது தூண்டுதலுக்குக் காரணமானவை என்று கீழ்க்காண்பன போன்றவற்றைச் சொல்லலாம்.

‘பெண்ணின் இளமை, கட்டழகு, கவர்ச்சி, காந்தப் பார்வை, நளினமான அங்க அசைவுகள்.....’

வயது ஆக ஆக இவை குறைந்து குறைந்து முதுமையில், பெருமளவிலோ, முற்றிலுமாகவோ இல்லாமல்போவது இயற்கையாகும்.

ஆனால், மேற்கண்டவற்றின் தூண்டுதல் இல்லாதபோதும், உடம்பில் காமம் இருந்துகொண்டுதான் இருக்கும்{காமச் சுரப்பிகள்[ஹார்மோன்ஸ்] இயக்கத்தில் உள்ளவரை}. 

உந்துதல்[தூண்டுதல்] இல்லையெனினும், ஏற்கனவே மனதில் பதிந்துள்ள பெண்களின் கவர்ச்சி உறுப்புகளை மனதில் காட்சிப்படுத்தியும், ஆபாசப் படங்களை முன்னிறுத்தியும் சுயமாக விந்துவை வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஆண் ஈடுபடுவதும் உண்டு.

இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது, மேற்கண்ட இளமை, கவர்ச்சி போன்றவற்றை முற்றிலுமாய் இழந்துவிட்ட முதுபருவப் பெண்களைச் சந்திக்க நேரும்போது, காமம் முற்றிலுமாய் முடங்கிப்போகும் என்பது. இது இயற்கையும்கூட.

இதற்கு விதிவிலக்கானவையும், அதிசயத்தக்கனவும், மகளிரை மருளச் செய்வனவுமான நிகழ்வுகளும் அவ்வப்போது, அல்லது எப்போதாவது சமுதாயத்தில் இடம்பெறுவது புரிந்துகொள்ளவே இயலாத புதிராக உள்ளது.

எடுத்துக்காட்டாக, அண்மைய நிகழ்வு ஒன்று[‘தினத்தந்திநாளிதழில் வெளியாகியுள்ளது]:

தோல் சுருங்கி, தலை நரைத்து, ஒடுங்கிச் சோர்ந்த உடம்புடனும், பொக்கை வாயுடனும் காட்சியளிக்கும் 78 வயதான கிழவியை, 30 வயது மதிக்கத்தக்க, ‘குடிபோதையில் இருந்த’ இளைஞன் ஒருவன் வன்புணர்வு செய்ததைச் சொல்லலாம்.


இம்மாதிரியான நிகழ்வுகள், கட்டழகு, கவர்ச்சி போன்றவற்றின் தூண்டுதல் இல்லாமலே அந்தரங்க உறுப்பை[கிழவியே ஆயினும்] மட்டுமே நினைவில் இருத்தி, விந்துவை வெளியேற்றுவதில் முனைப்புக் காட்டுகிறார்கள் சில மனித மிருகங்கள் என்று எண்ண வைக்கின்றன!

இதைவிடவும், போதை ஆசாமிகளின் கண்களுக்குச் சில நேரங்களில் கிழவிகளும் குமரிகளாகக் காட்சியளிக்கிறார்கள் என்று சொல்வது மிக மிகப் பொருத்தமானதாக அமையும்!!

ஞாயிறு, 21 மே, 2023

‘மர’ மனிதனும் மரத்துப்போன கடவுளின் மனமும்!!!

டவுளால் படைக்கப்பட்ட மனிதர்களுள் ஒருவர்தான் அவர்; ஆனால், மற்றவர்களைப் போல, கொஞ்சம் இன்பங்களைத் துய்த்துப் பெருமளவுத் துன்பங்களைத் தாங்கி வாழும்  சராசரி மனிதரல்ல. 

துன்பங்களுக்குக் காரணமானவற்றுள் நோயும் ஒன்று.

குறிப்பிட்ட காலம்வரை மட்டும் துன்புறுத்தி மறைந்துவிடும் நோய்கள் பல. இறுதி மூச்சுவரை நம்மை விட்டுப் பிரியாமலிருப்பவை ‘தீராத நோய்கள்’.

தொற்றியிருப்பது தீரவே தீராத நோய் என்று தெரிந்தால், காலமெல்லாம் அல்லல்பட்டு அழுத கண்ணீருடன் சாவதைவிடத் தற்கொலை செய்து செத்தொழியலாம்.

ஆனால் அதற்கு இடம்தராமல், குணமாகுமா ஆகாதா என்று அறிவது எளிதில் சாத்தியப்படாமல், மருத்துவர்களையே திகைக்க வைக்கிற நோய்களும் உள்ளன.

அத்தகையதொரு நோய்க்கு உள்ளாகி நாளெல்லாம் பெரும் துன்பத்தை அனுபவிப்பவர் அபுல் பஜந்தர்[32 வயது]’ என்னும்  வங்காளதேச மனிதர்.

அவரின் கைகளில் தோன்றிய ‘மருக்கள்’ மறைவதில்லை என்பது மட்டுமல்ல, கைகளை மறைக்கும் அளவுக்கு, மரத்தின் சிறு சிறு கிளைகள் போல அவை வளர்கின்றன[இதனால், இவர் ‘மர மனிதன்’ என்றே அழைக்கப்பட்டார்].

இந்த அசாதாரண மருக்களை அகற்ற ‘அபுல்’ கடந்த ஏழு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளைச் செய்துள்ளார்.  ஆனாலும், மருக்கள் தோன்றுவதும் வளர்வதும் தொடர்கிறது.

இளமைப் பருவத்திலேயே இந்த நோய் இவரைத் தாக்கத் தொடங்கியுள்ளது. 

“இவருக்கு ‘எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெர்ருசிஃபார்மிஸ்(EV)’ இருப்பது கண்டறியப்பட்டது. இது Lewandowsky-Lutz syndrome என்றும் அழைக்கப்படுகிறது. இது மரபணு மாற்றங்களால் நோயாளிகளை மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றுக்கு ஆளாக்கும் பரம்பரை ஜெனோடெர்மடோசிஸ் ஆகும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

"நான் ஒரு சாதாரண மனிதனாக, என் மகளுடன் நெருக்கமாக இருக்கவும், அவளைத் தொட்டு அணைத்து மகிழவும் விரும்புகிறேன். அதற்கு இந்த நோய் பெரும் தடையாக உள்ளது” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் ‘அபுல்’.

இவரின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய பெரும் பொறுப்பு மருத்துவர்களுக்கு மட்டுமல்ல, இவரைப் படைத்த கடவுளுக்குக்கும் உள்ளது.

கடவுள் கல்மனதுக்காரர் என்பதால் அவரை நம்பிப் பயனில்லை. மருத்துவம் கற்ற ஆறறிவு மனிதர்களை நம்புவதே புத்திசாலித்தனம்.

மனிதனுக்கு ஆறறிவைக் கொடுத்தவரே கடவுள்தான் என்பவர்கள் அயோக்கியர்கள். “இம்மாதிரியான அவலநிலைகளுக்கு அவர் மனிதர்களை உள்ளாக்குவது ஏன்?” என்னும் கேள்வியைக் கண்டுகொள்ளாத கயவர்கள் அவர்கள்.


சனி, 20 மே, 2023

உலக அளவில் ‘எச்.ஐ.வி’ & ‘எய்ட்ஸ்’ நோயிலிருந்து குணமடைந்த அந்த 5 பேர்!!![புதிய செய்தி?]

WHO, Global Fund மற்றும் UNAIDS ஆகியவை 2030க்குள் எச்.ஐ.வி தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்குகளுடன் இணைந்துள்ளன. https://www.who.int/news-room/fact-sheets/detail/hiv-aids


*‘ஹெச்.ஐ.வி.’ தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்துவருகின்றன. இது வர இன்னும் ஐந்து ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோ ஆகலாம். இப்படியொரு தடுப்பூசி எப்போது வரும் என்று மருத்துவர்களே காத்திருக்கிறார்கள்.' https://www.vikatan.com/health/148634-a-detailed-analysis-on-hiv-and-aids

                                               *   *   *   *   *


பதிவு:

‘எச்.ஐ.வி’, 1920களில் சிம்பன்சிகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவியதாக நம்பப்படுகிறது. அது சரியோ இல்லையோ, 1980களில் அதிலிருந்து எய்ட்ஸ் உருவாகி, உலகளாவிய தொற்றுநோயாக மாறியது.

40 ஆண்டுகளுக்கு மேலாக மில்லியன் கணக்கானவர்களின் மரணத்திற்கு எச்.ஐ.வி. காரணமாக இருந்துள்ளது.

1980களின் முற்பகுதியில் இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து 40 மில்லியன் பேர் இறந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, தற்போது 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், ‘நேச்சர் மெடிசின் என்ற அறிவியல் வெளியீடு, பிப்ரவரி 2023க்குள் ஐந்து பேர் வெற்றிகரமாக எச்.ஐ.வி-யில் இருந்து மீண்டுள்ளனர் என்னும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குணமடைந்த முதல் மனிதர்:

‘திமோதி ரே பிரவுன்’, எச்.ஐ.வி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டவர்.

2007இல் அவரது லுகேமியாவைச் சமாளிக்க ஒட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல், மாற்று அறுவைச் சிகிச்சையை நிராகரித்ததால் அவர் கிட்டத்தட்ட இறந்துவிட்டார் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆயினும், அவர் உயிர் பிழைத்தது மட்டுமல்லாமல், அவரது உடலில் இருந்து வைரஸ் மறைந்துவிட்டமை அறியத்தக்கது.

குணமடைந்த இரண்டாவது நபர்:

2016ஆம் ஆண்டில், லண்டன் நோயாளி என்று அழைக்கப்பட்ட ’ஆடம் காஸ்டில்ஜோ’, 70 பவுண்டுகள் இழந்து பல நோய்த்தொற்றுகளுக்கு ஆளான பிறகும், எச்ஐவியிலிருந்து குணமடைந்தார்.

குணமடைந்த ஒரு பெண்[அடுத்த இரண்டு நபர்கள் பற்றிய விவரங்கள் இடம்பெறவில்லை]:

நியூயார்க் பெண் ஒருவர் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, எச்.ஐ.வி-யிலிருந்து மீண்டார்; இவர் முந்தைய இரண்டு நிகழ்வுகளைப் போலல்லாமல், எந்தவொரு பக்க விளைவும் இல்லாமல் 17 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தி நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, அவர் முதல்-நிலை உறவினரிடமிருந்து இரத்த ஸ்டெம் செல்களைப் பெற்றார். இது தானம் செய்யப்பட்ட தண்டு இரத்தத்திற்கு ஒரு "பாலமாக" செயல்பட்டது[புரியவில்லை], இந்த செயல்முறை குறைவான ஆபத்தை உள்ளடக்கியது.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை என்பது ஒரு கடினமான செயலாகும். இதைச் செய்துமுடிக்க இன்னும் பல ஆய்வுகள் தேவைப்படும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, எய்ட்ஸ் நோய்த் தொற்று, மரண தண்டனைக்குச் சமமானதாக் இருந்தது. இன்றைய நவீன சிகிச்சைகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தைத் தவிர்த்து வாழ்ந்திட வழி செய்கின்றன.

ஆயினும், இந்நோயிலிருந்து அவர்கள் முற்றிலுமாய் விடுபடுவதற்கான சிகிச்சை முறைகளைக் கண்டறிவது மிக மிக அவசியம்.

* * * * *

https://www.msn.com/en-in/news/other/a-cure-for-hiv-more-real-than-you-might-think/ss-AAUiIqY?ocid=msedgdhp&pc=U531&cvid=c597548ec446429b8730685a96c431ae&ei=44#image=21

வெள்ளி, 19 மே, 2023

“வேண்டாம் புகழாசை!”..... வாழ்வியல் நெறிக் கதை!!

பெரும்பாலான நேரங்களில், திரைப்படப் பாடல்களை முணுமுணுத்துக்கொண்டு ‘ஜாலி’ மனநிலையில் இருக்கும் பார்த்திபன் அன்று அவனின் நண்பன் சிவானந்தத்தைச் சந்தித்தபோது சோகம் போர்த்து, பொலிவிழந்த தோற்றத்துடன் காட்சியளித்தான்.

“என்னடா ஆச்சு?” -தோழன் சிவானந்தம், நெஞ்சில் கவலை தேக்கி விசாரித்தான்.

“கொஞ்ச நாளா, தொட்டதெல்லாம் தோல்வியில் முடியுது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா.” -சலிப்புடன் வார்த்தைகளை உதிர்த்தான் பார்த்திபன்.

 “எதையெல்லாம் தொட்டே? சொல்லு.”

“ஒரு கவிதைப் போட்டியில் கலந்துகிட்டேன். ஆறுதல் பரிசுகூடக் கிடைக்கல.....”

“ம்ம்ம்.....”

“பட்டிமன்றத்தில் ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கிப் பேசினேன். என் அணி தோல்வியைத் தழுவிடிச்சி. எங்க அலுவலக ‘மனம் மகிழ் மன்றத் தலைவர்’ பதவிக்குப் போட்டி போட்டு.....”

குறுக்கிட்டான் சிவானந்தம். “தோத்துட்டே. இருக்கட்டும், இதிலெல்லாம் ஜெயிச்சிருந்தா என்ன கிடைச்சிருக்கும்?”
“அது வந்து..... தெரிஞ்சவங்க புகழ்வாங்க. கவிதைப் போட்டியில் கொஞ்சம் பணம் கிடைச்சிருக்கும். தலைவர் பதவியில் அதுவும் இல்ல. ஆனா.....”

“ஆனா என்ன ஆனா..... இதுக்கு மேல உன் விளக்கம் தேவையில்ல. இந்த  நவீன உலகத்தில், வயித்துக்காகப் போராடுறவங்களைத் தவிர மத்த எல்லாருக்குமே புகழாசை இருக்கு. அதை அடையறதுக்கான போராட்டமும் தொடர்ந்து நடந்துட்டே இருக்கு. யாரும் யாரையும் மனப்பூர்வமா புகழ்றதில்ல. சிலர் விதிவிலக்கா இருக்கலாம்.....”

கொஞ்சம் தாமதித்துத் தொடர்ந்து பேசினான் சிவானந்தம். “ஆக, வளர்ச்சிக்குப் பயன்படும் என்பதால், வளர் இளம் பருவத்தில் புகழையும் பலரின் பாராட்டுகளையும் எதிர்பார்க்கலாமே தவிர, அறிவு வளர்ச்சி பெற்ற நிலையில் அதை எதிர்பார்த்துச் சாதனைகள் நிகழ்த்த நினைக்கிறது முட்டாள்தனம்.” -அடித்துச் சொன்னான் சிவானந்தம்.

“புகழாசை வேண்டாம்னா சாதனைகள் நிகழ்த்துறதும் இல்லாம போயிடுமே?” என்றான் பார்த்திபன்.

“போகாது. புகழுக்குன்னு இல்லாம, வாழ்ந்து முடிக்கிறதுக்குள்ள மக்களுக்குப் பயன்படுற மாதிரி எதையாவது செய்துட்டுப் போகணும்கிற உத்வேகம் இயல்பாகவே சிலருக்கு   இருக்கும். அவங்க சாதிப்பாங்க.”

“நீ ரொம்பவே புத்திசாலிடா” என்று பார்த்திபன் புகழ, அசட்டுச் சிரிப்புடன் உடல் நெளிந்தான் சிவானந்தம்.

                                          *   *   *   *   *
***நீங்களும் மனப்பூர்வமா சிவானந்தத்தைப் பாராட்டுறீங்கதானே? அந்தச் சிவானந்தம் வேறு யாருமில்லீங்க; நானேதான்! ஹி... ஹி... ஹி!!!

வியாழன், 18 மே, 2023

‘அவர்கள்’ மட்டுமா பிச்சைக்காரர்கள்?!


கோயிலுக்குப் போகிறவர்களின் சீரிய சிந்தனைக்கு.....

“நீங்கள் சாமி கும்பிடப் போவது எதற்காக?”

“வரவிருக்கும் தேர்வை நன்றாக எழுதி நல்ல மதிப்பெண் வாங்கணும்.”

“நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கணும்.”

“கல்யாணம் ஆகணும்.”

“தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கணும்.”

"தீராத நோய் குணமாகணும்"

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கோரிக்கை வைக்கத்தான் கோயிலுக்குப் போகிறீர்கள்.

“ஆண்டுக்கு எத்தனை முறை போவீர்கள்?” என்பது உங்களுக்கான அடுத்த கேள்வி.

“மாதம் ஒரு முறை.....” 

“விசேச நாட்களில்.....”

“அவ்வப்போது.....”

இப்படியாக நீங்கள் தரும் பதில்களிலிருந்து, நீங்கள் நாள்தோறும் கோயிலுக்குப் போவதில்லை என்பதை யூகிக்க முடிகிறது[விதிவிலக்காக மிகச் சிலர் இருக்கலாம்].

ஆக, “எப்போதாவதோ அவ்வப்போதோ கோயிலுக்குப் போய், சாமிகளிடம் சமர்ப்பிக்கிற உங்களின் கோரிக்கை, அல்லது கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறா” என்று நான் சொன்னால் கோபிக்காதீர்கள்.

எந்த அடிப்படையில் நான் இப்படிச் சொல்கிறேன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். 

சொல்கிறேன்.

கோயில் என்றால் அங்கே பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். பிச்சைக்காரர்கள் இல்லாத கோயில்களே இல்லை என்றும் சொல்லலாம்[பிரபலம் ஆகாத கிராமப்புறக் கோயில்கள் விதிவிலக்கு].

இங்குப் பிச்சை எடுப்போரெல்லாம் பிறவிப் பிச்சைக்காரர்கள் அல்ல. பார்த்த வேலையில் போதிய வருமானம் இல்லாமலோ, செய்த தொழில் நொடித்துப்போனதாலோ கோயில் கோயிலாகச் சென்று சாமிகளிடம் கோரிக்கை வைத்து.....

அவை நிறைவேறாத நிலையிலும், உற்றார் உறவினரால் கைவிடப்பட்ட நிலையிலும்[இவை போல நிறையக் காரணங்கள் உள்ளன] பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்னுமொரு கட்டத்தில் இத்தொழிலை மேற்கொண்டவர்கள்[இதை நன்கு மனதில் பதிய வையுங்கள்].

தங்களின் தொழிலுக்கான[பிச்சை எடுத்தல்] இடமாகக் கோயிலின் வாயிலை இவர்கள் தேர்வு செய்யக் காரணம்.....

கோயில்களில் குடியிருக்கும் கடவுளர்கள் கருணையுள்ளம் கொண்டவர்கள்[பிச்சை எடுக்கும் நிலையிலும் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்காதவர்கள்] என்பதோடு, அங்கு வருகிறவர்களும் இரக்கக் குணம் கொண்டவர்கள் என்பதால் நிறையப் பிச்சை கிடைக்கும் என்று எண்ணுவதுதான். வயிறாரச் சாப்பிட்டு, கொஞ்சம் வசதியோடு வாழலாம் என்று நம்புவதும் காரணம் எனலாம். 

இந்த நம்பிக்கைகள் ஓரளவுக்கேனும் பலித்தனவா? பலிக்கின்றனவா?

இல்லை[“ஆம்” என்று சொல்வதற்கான ஆதாரம் ஏதும் நம்மிடம் இல்லை; ஆய்வுகளும் நிகழ்த்தப்படவில்லை]. 

அன்று பிச்சை எடுத்தவன் இன்றும் பிச்சைக்காரனாகத்தான் இருக்கிறான். போதுமான அளவுக்குப் பிச்சை கிடைக்காதவன் பட்டினி கிடந்து செத்தொழிகிறான்.

நாட்டில் எத்தனை எத்தனைப் பிச்சைக்காரர்கள்! அத்தனை பேரையும் இந்தவொரு அவல நிலைக்கு ஆளாக்கியவர்கள் இந்தக் கடவுள்கள்தானே?[கடந்த பிறவிகளில் செய்த பாவபுண்ணியம் என்னும் சமாளிப்பு இங்குத் தேவையில்லை].

அவர்கள் வயிற்றுப்பாட்டுகாகக் கையேந்துகிறார்கள். நாமெல்லாம் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும் பிற தேவைகளை நிறைவேற்றவும் கடவுள்களிடம் கையேந்துகிறோம்[இதுவும் ஒருவகைப் பிச்சைதான்; கௌரவப் பிச்சை! ஹி... ஹி... ஹி!!!]; கைகூப்பித் தொழுகிறோம்.

அவர்களுக்குக் கருணை காட்டாத கடவுள்கள் நம் மீது கருணை மழை பொழிவார்கள் என்பது என்ன நிச்சயம்?!