ஞாயிறு, 29 ஜூலை, 2018

வாருங்கள்... விதியோடு கொஞ்[சி]சம் விளையாடலாம்!

ன்ன நேரத்தில், இன்ன இடத்தில், இது இதெல்லாம், இப்படி இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டது விதி என்கிறார்கள்.

15.07.2013 பிற்பகல் மணி 04.03க்கு இந்தப் பதிவு எழுதி முடிக்கப்படணும்கிறது இந்த ஒரு நிகழ்வுக்கான விதி.

இதைத் தீராத அறிவுப்பசியோடு[!?!?!] அலைகிற நான்தான் எழுதணும்கிறது  எனக்கென வகுக்கப்பட்ட விதி.

ஏற்கனவே படிச்சதை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் படிச்சித் தொலைக்கணும்கிறது உங்களுக்கான  [தலை]விதி.

#எதிர்பாராம மின்சாரம் துண்டிக்கப்படுது[மின் சேமிப்புக்கலம் இல்லீன்னு வெச்சிக்கோங்க]. ''அடச் சே...”ன்னு எரிச்சலோட மேசை மேல ஓங்கித் தட்டுறீங்க. அங்கே உட்கார்ந்திருந்த ஒரு ‘ஈ’ நசுங்கிச் செத்துப் போகுது. இது ஈயோட விதி.

“டாக்டர் எஞ்சினீர்னு யார்யாரோ என்னைப் பெண் கேட்டு வந்தாங்க. ஆளு ஹீரோ  மாதிரி இருக்கார்னு இந்த ஆளை ஆசைப்பட்டுக் கட்டிகிட்டேன். இப்போ கல்யாணம் காட்சின்னு போனா கட்டிக்க ஒரு பட்டுப் புடவைகூட இல்ல. ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கிறோம். எல்லாம் விதி...என் தலை விதி.” -இது என் எதிர்த்த வீட்டு அன்னபூரணியின் புலம்பல். இப்படித் தன் விதியைச் சொல்லிச் சொல்லிக் கண்ணீர் சிந்துகிற அன்னபூரணிகள் எல்லா ஊர்களிலும் இருக்காங்க.

“சென்னைக்குக் கார் எடுத்துட்டுக் கிளம்பினான். ரெண்டு தோசை போடுறேன் சாப்பிட்டுப் போடான்னு சொன்னேன். ஆம்பூர் போயி பிரியாணி சாப்பிடுறேனுட்டுப் போனான். பின்னால போன கார்க்காரன் இடிச்சதுல அந்த நிமிசமே எமலோகம் போய்ச் சேர்ந்துட்டான். தோசை சாப்பிட்டுட்டுப் பத்து நிமிஷம் கழிச்சிப் போயிருந்தா இந்த விபத்து நடந்திருக்குமா? விதி யாரை விட்டுவெச்சுது?” -இப்படிப் புலம்பினது என் சிநேகிதனுக்குச் சினேகிதனோட அம்மா செல்லம்மா. இப்படி ஒரு செல்லம்மாவை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம். மேலும் பல பேரைக் கேள்விப்பட்டும் இருக்கலாம். 

இப்படி, விதியை நினைக்காத, அதைப் பத்திப் பேசாத மனுசங்க இந்த உலகத்தில் இல்ல; இல்லவே இல்லை.

இப்போ, உங்க பகுத்தறிவு மூளையில், மனுசங்களுக்கு மட்டும்தான் விதியா, மத்த உயிர்களுக்கு இல்லையான்னு ஒரு கேள்வி தலை தூக்கியிருக்கும்.

அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு மான். வயிராறப் புல் மேஞ்சுது. தாகம் எடுத்ததால ஒரு நீர்நிலையைத் தேடிப் போகுது. அந்தப் பக்கத்தில் சிங்கம், சிறுத்தை, ஓநாய் போன்ற கொடிய மிருகங்களின் நடமாட்டம் இருப்பது அதுக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையா நாலா புறமும் பார்த்துட்டே நீர்நிலையை அடைந்து, தண்ணீரில் வாயை வெச்சி உறிஞ்ச ஆரம்பிக்குது. தாகம் எல்லை மீறிப் போனதால தண்ணிக்குள்ள முதலை இருப்பதை மறந்துடிச்சி. தண்ணியில் வாயை வெச்ச அடுத்த நொடியே உள்ளேயிருந்து ’சரேல்’னு மேலெழும்பிய ஒரு முதலை மானின் தலையைக் கவ்விப் பிடிச்சி உள்ளே இழுத்துட்டுது. அன்னிக்கி தினத்தில் ஒரு முதலைக்கு இரையாகணும்கிறது அந்த மானுக்கு நிர்ணயிக்கப்பட்ட விதி. சுவையா மான் கறி சாப்பிடணும்கிறது முதலையோட விதி. இப்படி எல்லா உயிரையும் விதி ஆட்டிப்படைக்குது.

ஜடப்பொருள்களையும் அது விட்டு வைக்காது.

பூமி தன்னைத்தானே சுத்திட்டிருக்கு. சூரியனின் ஈர்ப்புச் சக்தியால அது சூரியனையும்  சுத்திச் சுத்தி வருது. என்னிக்கோ ஒரு நாள்,  சூரியனைச் சுத்துறதை நிறுத்திட்டு, தன்னைத்தானே சுத்துறதும் தடைபட்டுக் கீழே கீழே கீழே சரிஞ்சி துக்கிளியூண்டு புள்ளியா மாறி மறைஞ்சும் போச்சுன்னா, அதுக்கும் விதிதாங்க காரணம். யுக யுகாந்தரங்களுக்கு அப்புறம், சூரியனே வெடிச்சிச் சிதறி, வெட்ட வெளியில் சிறு சிறு தீப் பந்துகளா சுத்தி வர ஆரம்பிச்சா  அதுவும் விதியினுடைய சித்து விளையாட்டுதான். ஆக, பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு பொருளும் விதியின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பவே முடியாது..........#

''என்னப்பா பரமு, விதி விதின்னு நீ பாட்டுக்குக் கதை அளந்துட்டே போற? ஐந்தறிவு ஜீவன்களும் ஜடப்பொருள்களும் ஒரு பக்கம் இருக்கட்டும். மனுசங்க தங்களுடைய ஆறாவது அறிவைக்கொண்டுதான் சிந்திக்கிறாங்க; செயல்படுறாங்க. அவங்களை எப்படி விதி கட்டுப்படுத்தும்?”னு நீங்க கேட்க நினைக்கிறீங்கதானே?

அதே கேள்வியைத்தான், கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, பாவம், புண்ணியம்னு ஏதேதோ பேசுற ஆன்மிகவாதிகள்கிட்டே  நானும் கேட்க நினைக்கிறேங்க.”

“என்னப்பா இது, விதிக்கு விளக்கம் தந்து, உதாரணம் எல்லாம் தந்த நீ இப்போ கட்சி மாறிப் பேசி குழப்புறே?”-இது நீங்க.

நான் கட்சியெல்லாம் மாறலீங்க. மேலே நீங்க படிச்சதெல்லாம் ஆன்மிகவாதிகள் சொல்லிட்டுப் போன வியாக்கியாணங்களை அடிப்படையா வெச்சி நான் சொன்னதுங்க. எனக்கு இந்த விதி சதி மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது. மனுசனுக்கு ஆறறிவு இருக்கு. தன்னிச்சையாச் சிந்தித்துச் செயல்பட முடியுது. மூளையின் செயல் திறனைப் பொருத்து அவனுக்கு இன்ப துன்பங்கள் நேருதுன்னு நம்புறவன் நான்.

ஒரே ஒரு உதாரணம் மட்டும். [பாதி படிச்சதோட நீங்க ஓடிடக் கூடாதில்ல?]

மழை பெய்து தரையெல்லாம் ஈரமா இருக்கு. காத்தும் வேகமா வீசுது. அந்தக் கட்டம் போட்ட சட்டைக்காரர் அவசர வேலையா போய்ட்டிருக்கார். ஒரு சாலையைக் கடக்க நேரும்போது, எதிரே ஒரு கார் வருது. ஈரமான தரை வழுக்குங்கிறது அவருக்குத் தெரியும். ரொம்ப எச்சரிக்கையாத்தான் நடையை எட்டிப் போடுறார். ஆனாலும், தரையில் கால் சறுக்க, குப்புற விழறார். கார் அவரை மோதித் தள்ளி அரைச்சிட்டுப் போயிடுது.

கட்டஞ்சட்டைக்காரர், அறிவுபூர்வமா செயல்பட்டும் அவர் சறுக்கி விழுந்ததுக்குக் காரணம் திடீர்னு வேகமா வீசிய காத்து. அது அவரை ‘விசுக்’னு பாதையில் தள்ளி விட்டுடிச்சி.”

ஒரு மனிதன் அறிவுபூர்வமா செயல்பட்டும்கூட, எதிர்பாராத சம்பவங்களால் உயிரிழக்கிறான்கிறதுக்கு இந்தச் சம்பவத்தை உதாரணம் காட்டினேன். இந்தச் சம்பவத்தைத் தற்செயலானதுன்னு ஆன்மிகவாதிகள் ஒத்துக்க மாட்டாங்க.

“திடீர்னு அதி வேகத்தில் காத்து வீசிச்சே, அது எப்படி? அதுதான் விதியின் செயல். கட்டஞ்சட்டைக்காரரைக் கொல்வதற்கு இங்கே அதி வேகக் காற்றைப் பயன்படுத்தியது விதி”ன்னு வாதிப்பாங்க.

’காற்றின் வேகத்தை அனுமானித்து, தன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அவர் உயிர் பிழைத்திருந்தால்......’ -இப்படி நாம் மடக்கினா, அதுக்கும் ரொம்பச் சாமர்த்தியமா பதில் சொல்லிடுவாங்க.

அந்தப் பதில், “அவர் அன்னிக்கி சாகக் கூடாதுங்கிறது விதி. ’இதை இப்படிச் செய். அதை அப்படிச் செய்’ என்று மனித அறிவை நெறிப்படுத்துவதே விதிதான். சுருக்கமாச் சொன்னா, ஐந்தறிவு, ஆறாவது அறிவு, பகுத்தறிவு, பகுக்காத அறிவு எல்லாமே விதிக்குக் கட்டுப்பட்டவைதான்” என்பதாக இருக்கும்.

இவங்க வாதத்தைச் சரின்னு ஏத்துகிட்டா,  கை அசைக்கிறது, கண் சிமிட்டுறது, ஒன்னுக்கு ரெண்டுக்குப் போறது, பொறாமைப் படுறது, பொய் பேசுறது, புணர்ச்சி பண்றது ...இப்படி எல்லார்த்துக்குமே விதிதான் காரணம்னு சொல்லவேண்டி வரும்.

பிறக்கிற குழந்தைக்குத் தலையில் எத்தனை மயிர் இருக்கணும். வளர்ந்த ஒரு மரத்தில் ஒரு மைக்ரோ வினாடியில் எத்தனை இலை உதிரணும். உலகத்திலுள்ள  ஒவ்வொரு உயிரும் பெய்யுற மூத்திரம் என்ன என்ன எடையில் இருக்கணும் என்பதெல்லாம்கூட விதியின் மூலம் நிர்ணயிக்கப் படணும். இல்லையா?

இதெல்லாம் சாத்தியமா? அப்புறம் என்னங்க விதி? வெண்டைக்காய் விதி.

”எல்லாம் விதிப்படிதான் நடக்கும்னா, மனுசனுக்கு அறிவுன்னு ஒன்னு எதுக்கு?”

இப்படி ஒரு கேள்வியை முன் வைத்தால்?

“மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, அவன் பல பிறவிகள் எடுத்து இன்ப துன்பங்களை  அனுபவிக்கணும்கிறது விதி. பிறவித் துன்பத்திலிருந்து விடுபட விதியை எதிர்த்துப் போராடி ஜெயிக்கணும். அதுக்குக் கடவுளின் கருணை தேவை. கடவுளை உணர ஆறறிவு தேவை” என்பது அவர்கள் பதிலாக இருக்கலாம்.

“என்னதான் பகுத்தறிவுடன் செயல்பட்டாலும், விதிப்படிதான் எல்லாம் நடக்கும்னு சொல்றீங்க. விதியே நம்முடைய அத்தனை செயல்களுக்கும் காரணம்னா, நாம் செய்யுற பாவ புண்ணியங்களுக்கும் விதிதானே பொறுப்பு? மனுசன் பொறுப்பாக மாட்டானே! அப்புறம் எதனால் அவனுக்குப் பல பிறவிகள். துன்பங்கள், துயரங்கள் எல்லாம்? 
விதியைப் பத்தி ரொம்பவே எழுதிட்டேன். இதுக்கும் மேல எழுதினா, ''இன்னிக்கி, இதைப் படிச்சி மண்டை காயணும்கிறது என் தலைவிதி''ன்னு தலைதலையா அடிச்சுக்குவீங்க. நிறுத்திடுறேங்க.

சனி, 28 ஜூலை, 2018

கேளு...கேளு...கேள்வி கேளு!!!

'உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உள்நிலையில் உச்சத்தைத் தொட முடியும்' என்கிறார் ஓர் உலகறிந்த ஞானி. அற்ப ஆயுளில் செத்துத்தொலைக்கப் பிறந்தவன் மனிதன். சாவதற்குள் உச்சத்தை எங்கு தேடி அலைவது?!
#இந்தக் 'குரு பவுர்ணமி' நாளில்தான் இந்த உலகின் 'ஆதி யோகி' என்னும் முதல் குரு பிறந்தார். ஆதியோகியான சிவன் 'ஆதிகுரு'வாக மாறி சப்தரிஷிகளுக்கு[ளுடன்] யோக விஞ்ஞானத்தைப் பகிர்ந்துகொண்டார். நீங்கள் கடவுளாக வணங்கும் சிவனை, 'யோக கலாச்சாரத்தில் ஆதி யோகியாகப் பார்க்கிறோம். அதாவது, முதல் யோகியாகப் பார்க்கிறோம். சிவன் இந்த மண்ணில் நம்மைப் போன்றே மனிதனாக வாழ்ந்து உள்நிலையில் உச்சத்தைத் தொட்டவர். அதனால்தான் சிவனுடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உள்நிலையில் உச்சத்தைத் தொட முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் சிவன்#

கோவை 'ஈஷா யோக மையம்' சார்பில், 'ஆதி யோகி' சிலையின் முன்பு நேற்றுக் கொண்டாடப்பட்ட குரு பவுர்ணமி விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக, 'சத்குரு' ஜக்கி வாசுதேவ் ஆற்றிய உரையின்[தினத்தந்தி, 28.07.2018] சாராம்சம் இது.

சத்குருவின் உரையைத் தொடர்ந்து ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சி, கூட்டுத் தியானம், 'கேள்வி - பதில்' நிகழ்ச்சி போன்றவையும் இடம்பெற்றதாகத் தினத்தந்தி குறிப்பிட்டிருக்கிறது.

''ஆதிசிவன் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிற கடவுள். அவர் பிறப்பு இறப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். தான் இருக்கும் கோலத்தில்[?] இருந்துகொண்டே ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை அருளியிருக்க முடியும். இந்த உலகில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை.  நீங்களோ, முதல் குருவாக இந்த உலகில் அவதரித்து ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தைக் கற்றுத் தந்ததாகச் சொல்கிறீர்கள். இது கதையா? அல்ல என்றால், அதற்கான ஆதாரம் உள்ளதா?'' 

''ஆதிசிவன், குரு பவுர்ணமி நாள் பார்த்துப் பிறந்தது ஏன்? மற்ற நாட்களில் பிறந்திருக்கக் கூடாதா? கடவுளும்கூட நல்ல நாள், கெட்ட நாளெல்லாம் பார்ப்பாரா?''

''அவர் மனித குருவாகப் பிறந்தார் என்றால், அந்த மனித குருவின் தோற்றம் எவ்வாறு இருந்தது?''

''ஆதிசிவன் இம்மண்ணில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து 'உள்நிலையில் உச்சம்' தொட்டவர் என்கிறீர்கள். அதென்ன, உள்நிலையில் உச்சம் தொடுவது? மனத்தளவில் உச்சம் தொடுவது என்று கொள்ளலாம்தான். ஆனாலும், அதென்ன உச்சம் தொடுவது? எது உச்சம்? அதன் வரம்பு என்ன?''

''சிவனை யோக கலாச்சாரத்தில் ஆதியோகியாகப் பார்க்கிறோம் என்கிறீர்கள். யோகம் ஒரு கலையாக இருக்கலாம். இதைக் கலாச்சாரங்களில் ஒன்றாகச் சேர்க்க முடியுமா? இப்படியொரு கலாச்சாரம் இருக்கிறதா?''

''உள்நிலையில் உச்சம் தொடுவது, யோக கலாச்சாரம் என்பவையெல்லாம் ஞானியான உங்களுக்குப் புரிந்திருக்கலாம். எங்களுக்குப் புரியும்படியாகச் சொல்வது உங்கள் கடமை அல்லவா? எதையெதையோ சொல்லிச் சொல்லி எங்களை ஒருவித மயக்க நிலையில் அல்லவா ஆழ்த்துகிறீர்கள்?''

சத்குருவின் பக்தர்களே,

மேற்கண்டவை, 'பசி'பரமசிவமாகிய என் மனதில் உதித்த கேள்விகள். இவற்றையும், இவை போன்ற நீங்கள் கேட்க விரும்பும் பிற கேள்விகளையும் சத்குருவுக்குச் சமர்ப்பணம் செய்யுங்கள்[இக்கேள்விகள் எவ்வகையிலும்  உங்களின் மனங்களை நோகடிப்பதற்காக அல்ல; உங்களின் பக்தி, பலவகை மூடநம்பிக்கைகளுக்கு வழிகோலுவதைத் தடுப்பதற்காகவே].

அவர் அளிக்கும் விளக்கங்கள் உங்களுக்கு மனநிறைவைத் தருமாயின்.....

உங்களாலும் 'உள்நிலையில் உச்சத்தை'த் தொடுவது இயலக்கூடும்.

உண்மையில் இத்தகையதொரு உச்சத்தைத் தொடுவது உங்களின் விருப்பம் என்றால், அது நிறைவேற என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000














வெள்ளி, 27 ஜூலை, 2018

இந்தப் புண்ணிய பூமியில்தான் 'இது'வும் நிகழ்ந்தது!!

'அவர்கள்' நான்கு வர்ணத்திற்குள்ளும் வராதவர்கள்; தீண்டப்படாத சூத்திரச் சாதி மக்களையும்விடக் கீழானவர்கள்; 'பஞ்சமர்கள்'.

அவர்கள் ஓட்டு வீடுகளில் வசித்தல் கூடாது; காலில் செருப்பு அணியக்கூடாது; பெண்கள் இடுப்புக்கு மேலே எந்தவொரு ஆடையும் உடுத்துதல் கூடாது. 

இளம் பெண்களின் மார்பகங்கள் பெரிதாக ஆக, விதிக்கப்பட்ட அதற்குரிய வரியைச் செலுத்துதல் வேண்டும்.
ஆண்கள் தோளில் துண்டு போடக்கூடாது. முழங்காலுக்குக் கீழே ஆடை எதுவும் உடுத்துதல் ஆகாது. [நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு உயர் மேல்மட்டச் சாதிக்காரன் [பிராமணன] பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடித் தன்னைச் சுத்திகரிக்க வேண்டும்”.
(A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter)

அந்த இன மக்கள் இம்மாதிரிக் கொடுமைகளுக்கு உள்ளானது கன்னியாக்குமரியை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் மாவட்டத்தில்.

இச்சூழலில் இடம்பெற்ற ஓர் உண்மை நிகழ்வின்  சுருக்கம் பின்வருமாறு:

திருநெல்வேலியில்,  'அந்த'ச் சாதிப் பெண்கள் மேலாடை உடுத்த அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஊரைச் சார்ந்த பெண்ணொருத்தி இரணியலைச்[இங்கு, பெண்களுக்கு மேலாடை உடுத்த அனுமதியில்லை] சேர்ந்த அதே சாதி இளைஞனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்.

இரணியலில் இருக்கும் கணவன் வீட்டுக்குப் புறப்படும்போதே,  அவளின் உறவினர்கள் மேலாடையை அகற்றிவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்துகிறார்கள்.

அவளோ, ''எல்லோரும் என் மார்பகங்களைப் பார்ப்பார்கள். அதை என்னால் சகிக்க முடியாது'' என்று சொல்லி, அதை அகற்றாமலே கணவன் ஊரான இரணியலுக்குச் செல்கிறாள்.

மேலாடையை அகற்றுமாறு அந்த ஊர் மேல் சாதிக்காரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். உடன்படாத அந்த 'ரோஷக்காரி' அதை உடுத்திய நிலையிலேயே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.

அவள் செத்தொழிந்த பின்னரும் அதை அகற்றும் முயற்சியில் 'அவர்கள்' ஈடுபடுகிறார்கள். பெண்ணின் கணவன் அழுது புலம்பி வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. 

பரிதாபத்துக்குரிய அந்த இளம் பெண்ணின் மேலாடை அகற்றப்பட்டு, அவளின் மார்பகங்களை எல்லோரும் பார்த்த பின்னரே அவள் அடக்கம் செய்யப்படுகிறாள்.

இது அன்றைய நிகழ்வு.

நெஞ்சுருக வைக்கும் நடையில் இதைச் சிறுகதையாக வடித்தெடுத்தவர், மறைந்த எழுத்தாளர் சு,சமுத்திரம் அவர்கள்.

கதையின் முழு வடிவம் நினைவில் இல்லை. என் நடையில் அதை வடித்தெடுத்தால் அதன் சிறப்புக்குப் பங்கம் விளையும் என்பதால் கதைக்கான நிகழ்வை மட்டும் தந்திருக்கிறேன்.

இது கடந்த கால நிகழ்வுதான், ஆயினும்,  மறத்தற்கரியது.

இந்நிகழ்வை மட்டுமல்ல, இம்மாதிரிக் கொடும் பாதகங்களுக்கு அடித்தளம் இட்டவர்களையும்  மறத்தல் சாத்தியம் அல்ல.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியேனும், இந்த மண்ணில் நல்லவை மட்டுமே நடக்கட்டும்.
========================================================================







புதன், 25 ஜூலை, 2018

மரணத்தின் 'கிடுக்கி'ப் பிடியில் மதங்கள்!!!

இன்று, உலகில் மிகக் குறைவான மதங்களே உள்ளன. அவற்றில் கிறித்தவம், இஸ்லாம், இந்து, புத்தம், ஜைனம், யூத மதம், கன்ஃப்யூஷிய மதம், சீக்கிய மதம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இவற்றில் எந்த ஒன்றும், 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லுமளவுக்குப் பழைமையானது அல்ல.

2500 ஆண்டுகளுக்கு முன்பும் ஏராளமான மதங்கள் இருந்தன. புதிய மதங்கள் தோன்றத் தோன்ற, அவை  காலப்போக்கில் அழிந்தொழிந்தன; புதியவற்றுடன் இரண்டறக் கலக்கவும் செய்தன.

மதங்கள் தோன்றியதற்கான முதன்மைக் காரணம் மனிதனுக்கு இயபல்பாய் அமைந்திருந்த அச்ச உணர்வே என்பது பலரும் அறிந்த ஒன்று.

பல்வேறு காரணங்களால் பழைய மதங்கள் அழிந்து மறைந்தமை போல, இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் முன்னணி மதங்களும் காலப்போக்கில் அழிந்துபோதல் நிகழுமா என்னும் கேள்வி தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

''நிகழும்'' என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அவர்கள் சொல்லும் காரணங்கள் யாவை? பட்டியல் கீழே.....

#ஒன்று:
மனிதர்களில் பலரும் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மத நம்பிக்கை உட்படப் பலவகை மூடநம்பிக்கைகளிலிருந்தும் விடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது 100%  உண்மை.

இரண்டு:
'உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் மத நம்பிக்கையாளர்கள் அல்ல' என்னும் புள்ளிவிவரம் இதற்கு ஆதாரமாக அமைகிறது.

மூன்று;
வழிபாடு நிகழ்த்தியும்கூட, மக்கள் அனுபவிக்கும் துன்பங்களின் தொகை நாளும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், கடவுளின் மீதான நம்பிக்கையை இழப்பவர்களின் தொகையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

நான்கு:
கிறித்தவ மதத்தினர் தம்முள் பிளவுபட்டு ஒரு பிரிவினர் பிற பிரிவினருடன் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

ஐந்து:
இஸ்லாம் மதத்திலும் பிரிவுகள் உருவாகி, ஒன்றோடொன்று மோதிப் போரிடுகின்றன.

ஆறு:
இந்து மதத்தவர்கள், பிற மதத்தவரைக் காட்டிலும் அதிக மூடநம்பிக்கைகளைக் கட்டிக்காப்பதோடு அவற்றை எதிர்ப்பவர்களைத் தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்துமதத்தின் மீதான நம்பிக்கையை இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஏழு:
முன்னணி மதத்தவர் 'மத மாற்றம்' செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதால் மதங்களுக்கிடையிலான மோதல் அதிகரிக்கும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது.

எட்டு:
சமணம் போன்ற மதங்களின் கொள்கைகள் மக்களால் எளிதாகப் பின்பற்ற இயலாதவை என்பதால் அவை மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருக்கின்றன.

ஆக, இத்தனை ஆண்டுகள் என்று திட்டவட்டமாய்க் கணிக்க முடியாது எனினும், காலப்போக்கில் அனைத்து மதங்களும் முற்றிலுமாய் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்#

முக்கிய குறிப்பு:
நான் ஆய்வாளன் அல்ல; இந்தப் பதிவு என் கற்பனையில் உருவானதும் அல்ல. 'த.அமலா' அவர்களால் மலையாள மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட'மதமும் பகுத்தறிவும்'[சூலூர் வெளியீட்டகம், கோவை 641402; முதல் பதிப்பு: ஜூலை, 2004] என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

Tamil translation made from
YUKTHIDARSANAM[Philosophy of Rationalism]
Edited by Pavanan
Published by Yukthivada Sanghom, Calicut.
September 1982.

செவ்வாய், 24 ஜூலை, 2018

ஒரு நடுவணமைச்சரின் 'நவ அநாகரிக'ப் பேட்டி!!!

ஒரு நடுவணமைச்சரின் பேட்டி இந்த வார விகடனில்[25.07.2018] வெளியாகியிருக்கிறது. நிருபர் தொடுத்த பல கேள்விகளில் இரண்டனுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் என் கவனத்தை ஈர்த்தன.

#கேள்வி 1:
'தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் தவறு செய்யத் துணிந்தவர்கள்' என்கிறீர்கள். சிறைச்சாலைக் கைதிகளில் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கை கொண்டவர்கள்தானே?

அமைச்சரின் பதில்:
தமிழகத்தில் தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று கணக்கிட்டால்[அமைச்சர் கணக்கு ஏதும் போடவில்லை; ஆதாரபூர்வமான புள்ளிவிவரப் பட்டியலும் தரவில்லை; குத்துமதிப்பாக அடித்துவிட்டிருக்கிறார்] ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே[ஒரு விழுக்காடு என்றே வைத்துக்கொள்வோம்] இருப்பார்கள். இந்த விகிதாச்சாரப்படிக் கணக்கிட்டால், தெய்வ நம்பிக்கை இல்லாத சிறைக் கைதிகளின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு விழுக்காடாக இருக்கும்[நான்கு விழுக்காடாகவே இருக்கட்டும்]. இதைச் சவால்விட்டே சொல்கிறேன். ஏனெனில் அவர்களுக்குப் பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கிடையாது#

இங்கே ஆதாரமில்லாத ஒரு புள்ளிவிவரத்தைத் தந்திருக்கிறார் அமைச்சர். தவறான புள்ளிவிவரம் தருவது எத்தனை பெரிய தவறு என்பது இந்தப் பெரிய மனிதருக்குப் புரியாமல் போனது ஏன் என்று புரியவில்லை. சவால் விட்டதன் தேவை என்ன என்பதும் தெரியவில்லை.

மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ள நாத்திகர்களில் குற்றம் புரிந்து சிறைக்குச் சென்றவர்கள் 4 விழுக்காடு. மக்கள் தொகையில் 99 விழுக்காடாக இருக்கும் ஆத்திகர்களில் குற்றம் புரிந்து சிறையில் அடைபட்டிருப்பவர்கள் 94 விழுக்காடு[ஆத்திகர்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் ஆயிற்றே. குற்றம் புரிந்து இத்தனை பேர் சிறை புகுந்தது எவ்வாறு?] மட்டுமே என்பது மாண்புமிகுவின் கணக்கு.

நாத்திகரில் குற்றம் புரிவோர் அதிகம் என்பதும் ஆத்திகரில் அந்த எண்ணிக்கை குறைவு என்பதும் அமைச்சரின் வாதம்.

நிருபரின் கேள்விக்கு மிகச் சரியான விடையளிக்கும் வகையறியாமல் இப்படிச் சதவீதக் கணக்குப் போட்டுச் சொதப்பியிருக்கிறார் நடுவணமைச்சர். கொஞ்சமே கொஞ்சம் யோசித்திருந்தால்.....

''சமுதாயத்தில் உள்ள அத்தனை ஆத்திகர்களுமே பரம யோக்கியர்கள். சிறையில் இருப்பவர்கள் எல்லாம் வெளியில் நாத்திகம் பேசி வாழ்ந்த அயோக்கியர்கள். இவர்கள்  தண்டனைக்காலம் முடிவதற்குள் விடுதலை பெறும்[நன்னடத்தைக்காக] ஆசையில் ஆத்திக வேசம் போட்டு நல்லவர்களாக நடிக்கிறார்கள்'' என்று சொல்லி நிருபரின் வாயை அடைத்திருக்கலாம். ஏனோ செய்யவில்லை!

#கேள்வி 2:
எல்லாம் வல்ல இறைவனை மனிதனால் அவமானப்படுத்த முடியுமா? தெய்வத்துக்கே பரிகாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வது இறைவனை அவமானப்படுத்துவதாக ஆகாதா?

மாண்புமிகு பதில்:
அதாவது, தெய்வத்தை யாரும் அசிங்கப்படுத்த முடியாது... ஆனால், அவமானப்படுத்த முடியும். எந்த மதத்தைச் சேர்ந்த கடவுளும் 'எனக்கு மரியாதை வேண்டும்' என்று கேட்பதில்லை. ஆனாலும், அவரவர் மதத்துக்கு ஏற்றபடி தெய்வத்துக்குச் செய்யக்கூடிய மரியாதையைச் செய்து வருகிறார்கள். அந்த மரியாதையை அவமானப்படுத்தும்போது, அது தெய்வத்தையே அவமானப்படுத்திவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். அதையேதான் நானும் சொல்கிறேன்#

அசிங்கப்படுத்த முடியாது, அவமானப்படுத்த முடியும் என்கிறாரே அமைச்சர், அசிங்கப்படுத்துதலுக்கும் அவமானப்படுத்துதலுக்கும் என்னங்க வேறுபாடு? நிருபர் கேட்டிருக்கலாம் கேட்கவில்லை. நாம் கேட்கலாம். கேட்டால் பதில் வருமா?

'மரியாதையை அவமானப்படுத்தும்போது...' என்றும் சொல்லியிருக்கிறார். 

மனிதர்களை மனிதர்கள் அவமானப்படுத்தலாம். மரியாதையை அவமானப்படுத்த முடியுமா? எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் மகிழ்ச்சி.

மாண்புமிகு நடுவணமைச்சர்[பொன்.ராதாகிருஷ்ணன்]  அவர்கள் சிறந்த பக்திமானாக வாழ்ந்து இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழட்டும். ஆனால், ஆத்திகம் நாத்திகம் ஆகியவை குறித்து அதிகம் அறிந்திராத நிலையில், அவை குறித்தான விமர்சனங்களை அவர் தவிர்ப்பது நல்லது. இது அறிவுரை அல்ல; இகழ்வுரையும் அல்ல; என் அன்பான பரிந்துரை.
------------------------------------------------------------------------------------------------------------------
ஆனந்த விகடனுக்கு என் நன்றி.










திங்கள், 23 ஜூலை, 2018

அழித்தலும் அழிதலும்.....!

அணுக்களால் ஆன ஒவ்வோர் உயிரும் அணுக்களால் ஆன பிற உயிர்களை உணவாக்கிக்கொண்டுதான் வாழ்கின்றன; வளர்கின்றன. இத்தகைய ஒரு 'வாழ்வியல் நெறி'யை உருவாக்கியவன் நல்லவனா, கொடியவனா?
மூலக்கூறுகள்[பஞ்ச பூதங்கள்], கோள்கள், விண்மீன்கள், பிற பொருள்கள் என்றிவை மட்டுமின்றி, இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறையும் அனைத்து உயிர்களும் அணுக்களால் ஆனவை என்கிறது அறிவியல்.

அணுக்களால் ஆன ஒவ்வோர் உயிரும் அணுக்களால் ஆன பிற உயிர்களைத் தனக்கு உணவாக்கிக் கொள்வதன் மூலமே தன் இருப்பைத் தக்கவைக்கிறது. பொதுமைப்படுத்திச் சொன்னால்.....

'உயிர்கள் வாழ்வது உயிர்களின் அழிவில்'

அழித்தலைச் செய்யாத உயிர் எதுவும் இல்லை. அழிப்புக்கு ஆளாகாத உயிரும் இல்லை.

அழிவைச் சந்திக்கும்  அனைத்து உயிர்களும் வலியை உணர்வதும் துன்பத்திற்குள்ளாவதும் நிகழ்கிறது. வலியும் துன்பமும் இல்லை என்றால், உயிர்கள், தாம் வாழ்வதற்காகப் பிற உயிர்களை அழிப்பது பற்றி எவரும் கவலைப்படத் தேவையில்லை.

துன்புறுத்தல் காலங்காலமாய்த் தொடர்ந்து நிகழ்வதால்தான், 'துன்புறுத்தித் துன்புற்று வாழும் வாழ்க்கை ஏன்?' என்று மனித மனம்  கேள்வி எழுப்பிகிறது.

இக்கேள்விக்கு இயற்கை என்பது பதிலாக இருப்பின்.....

இந்த இயற்கை நிகழ்வுக்கு மூல காரணம் எது அல்லது எவை, எவர் அல்லது யாவர் என்றெல்லாம்  ஆறறிவு படைத்த மனிதர்கள் ஆராயலாம்; விடை கிடக்கிறதோ இல்லையோ மனிதகுலம் உள்ளளவும் ஆராய்ந்துகொண்டிருக்கலாம்.

காரணம் கடவுள் என்றால்.....

உயிர்களைத் துன்புறுத்தி உயிர் வாழ்வதான ஒரு 'வாழ்வியல் நெறிமுறை'யை வகுத்த அவன் கொடியவன் என்றாகிறது.

ஆனால், 'கடவுள் கருணை வடிவானவன்' என்று இன்றளவும் பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில்.....

கடவுள் கொடியவனா, கருணை வடிவானவனா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






சனி, 21 ஜூலை, 2018

இந்திய மொழி மின்னூல்கள் விற்பனையில் தமிழுக்கு முதலிடம்!

#கடந்த ஆண்டு இறுதியில், அமேசான் நிறுவனம், ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் தொடங்கியது. தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளே அவ்வைந்து மொழிகள். திறன்கருவிகளில் இயங்கும் அமேசானின் கிண்டில் செயலிகளிலோ, மின்னூல்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கிண்டில் கருவிகளிலோ, இந்த நூல்களை வாசிக்கலாம்.
அமேசானின் இந்திய இணைய தளத்தில், இதுவரை இந்த மொழிகளில் விற்பனைக்கு வந்துள்ள நூல்களைக் காணலாம். மொத்தமுள்ள 3,896 இந்திய மொழி நூல்களில், தமிழில் 1374 நூல்கள் உள்ளன. மிகவும் நெருங்கிய இரண்டாம் நிலையில் இந்தி 1315 நூல்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த ஒருசில மாதங்களில் சேர்க்கப்பட்ட நூல்கள்.

அதிகம் விற்கப்படுபவை:

அதிகம் விற்கப்படும் நூல்களின் தலைப்புகளை மணிக்கொருமுறை புதுப்பித்துப் பட்டியலிடுகின்றது இந்தத் தளம்.  எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “மறைக்கப்பட்ட இந்தியா”, கிரேசி மோகன் எழுதிய “அமெரிக்காவில் கிச்சா”, ச. ந. கண்ணனின் “ராஜராஜ சோழன்” முதலிய தலைப்புகள் இந்தப் பகுதியில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் மொத்தம் எத்தனை தமிழ் நூல்கள் இதுவரை கிண்டிலில் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு விரைவாக விற்பனை நடந்து கொண்டிருக்கிறது போன்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அமேசான் நிறுவனமே இதுபோன்ற விவரங்களை வெளியிட வாய்ப்பில்லை. இருந்தாலும், விற்கப்படும் நூல்களின் பட்டியல் எவ்வளவு வேகமாக மேம்பட்டு வருகிறது, ஒரு நூலை வாங்கும் போது, அந்த நூலை வாங்கியோர் வேறெந்த நூல்களை வாங்கியுள்ளனர், போன்ற விவரங்கள் தளத்திலேயே கிடைக்கின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, ஏதோ ஒரு எண்ணிக்கையில் தமிழ் மின்னூல்களை வாங்கத் தொடங்கி உள்ளனர் என்பது மட்டும் நமக்கு நன்றாகத் தெரிகிறது.
இந்த முன்னேற்றம் தமிழ் நூல்களுக்குத் தேவைப்படும் ஒரு மாற்றம் என்றே கருதுகிறோம். நூல்களை அச்சுவடிவில் வெளியிடத் தேவைப்படும் பொருட்செலவு குறைகின்றது – எனவே நூல்களின் விலையும் குறைகிறது. செலவு குறைவது மட்டுமின்றி வேறு பல பயன்களும் நூல்களை மின்னூல்களாக வெளியிடுவதில் நமக்குக் கிடைக்கின்றன.
அமேசானில் தற்போதுள்ள நூல்கள், ஏற்கனெவே அச்சு வடிவில் வெளிவந்த நூல்களே.
மின்னூல்களையே முதன்மைத் தேர்வாக விரும்பும் போக்கு உலகளாவிய நிலையில் தோன்றி வருகிறது. அதிகமான தமிழ் வாசகர்களும் இதில் இழுக்கப்படுவர் என்பதில் ஐயமில்லை. அப்போது, புதிய நூல்களை மின்னூலகவும், அல்லது மின்னூலாக மட்டும், பதிப்பிப்பதற்கான நம்பிக்கையைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊட்டும். இந்த மாற்றம், தமிழில் அதிகமான நூல்களை நமக்குத் தரும் என்றே எதிர்பார்ப்போம்!

அமேசான் இந்தியாவில் மட்டுமே!

அமேசானின் இந்தியத் தளத்தில் மட்டுமே இந்த நூல்கள் தற்போது விற்கப்படுகின்றன. மற்ற நாடுகளில் அமேசான் கணக்கை வைத்திருப்போர் இந்தப் பக்கத்திற்குச் சென்று நூல்களின் அட்டைகளைக் காணமுடிந்தாலும், நூல்களை வாங்க வாய்ப்பில்லை. “இந்தத் தலைப்பு உங்கள் நாட்டில் இல்லை” என்னும் செய்திகள் மட்டுமே தலைப்புகளின் கீழ் வருகின்றன. தமிழ் மின்னூல்கள் கிண்டிலுக்கு இன்னும் புதியவையே. அதிகமானோர் மின்னூல்களை வாங்கி, வாசித்து வந்தால், நூல்களின் எண்ணிக்கையும், அவை கிடைக்கும் நாடுகளின் எண்ணிக்கையும் கூடும் என்று எதிர்ப்பார்க்கலாம்!#

[இது 2017ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை. இப்போதைய நிலவரம் வேறாக இருக்கலாம்].
-----------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
ஒரு மின்னூல் வெளியிட வேண்டும் என்னும் ஆசை கொஞ்ச நாட்களாகவே என்னுள் தேங்கிக் கிடக்கிறது. அச்சேறாத தமிழ் நூல்களை மின்னூல்களாக வெளியிட்டு, விற்பனைப் பொறுப்பையும் மேற்கொள்ளும் நிறுவனங்கள் குறித்துக் கூகுளில் தேடியபோது, மேற்கண்ட ஒரு பதிவை வாசிக்க நேர்ந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'செல்லினம்' sellinam.com/archives/1391

வியாழன், 19 ஜூலை, 2018

'மோகினி' தோசம்!!!

'10லிருந்து 50 வயது வரையிலான பெண்களை அனுமதித்தால் சபரிமலைக் கோயிலின் புனிதம் கெட்டுவிடும்' என்று அறிவிப்புச் செய்திருக்கிறது சபரிமலை நிர்வாகக் குழு[தேவம்சம் போர்டு] இது இன்றைய ஊடகச் செய்தி[பாலிமர் தொலைக்காட்சியில் நண்பகல் 02.00 மணிச்செய்தி].
2016 ஆம் ஆண்டிலேயே, சபரிமலைக் கோயிலில் வயது வேறுபாடின்றி அனைத்துப் பெண்களும் நுழைந்து வழிபடுவதற்கு அனுமதிக்க உத்தரவிடுமாறு இளம் வழக்கறிஞர் மன்றம் ஒன்று வழக்குத் தொடுத்தது.

அது குறித்த விசாரணையில், எல்லாத் தரப்புப் பெண்களும் அங்கு சென்று வழபடலாம் என்று கேரள அரசு அறிவித்தது.

நீதிமன்றமும், கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமை ஆண்களைப் போலவே அனைத்து வயதுப் பெண்களுக்கும் உண்டு என்று அண்மையில் அறிவித்துள்ளது. ஆனாலும். தேவசம் போர்டு பிடிவாதமாக, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களின் நுழைவால் கோயிலின் புனிதம் கெடும் என்று அறிவித்திருக்கிறது.

புனிதம் என்றால் தூய்மை, தெய்வீகத்தன்மை என்று அகராதிகள் பொருள் தருகின்றன.

கோயிலில் நிலவும் புனிதத்தன்மையை, அதாவது, தெய்வீகத்தன்மையை அற்ப மனித ஜாதிப் பெண்களின் நுழைவு முற்றிலுமாய்ப் போக்கிடும் என்றால், அது கோயிலும் அல்ல; அங்கு குடியிருப்பவர் கடவுளும் அல்ல.

குறிப்பிட்ட வயதுப் பெண்களின் நுழைவால் கோயிலின் புனிதத்தன்மை கெடும் என்பது உண்மையானால்.....

ஐயப்பனைக் காட்டிலும் மூத்த கடவுளான ஏழுமலையானின் திருப்பதிக் கோயிலின் புனிதத்தன்மை முற்றிலுமாய்க் கெட்டழிந்திருக்க வேண்டும்.

ஐயப்பனின் சகோதரக் கடவுளான[வேறு வேறு அவதாரங்கள் என்றும் சொல்கிறார்கள்] பழனி முருகனின் கோயிலும் புனிதத்தை இழந்திருக்க வேண்டும்.

இது குறித்துச் சபரிமலைக் கோயில் குழுவினர்[தேவசம் போர்டு...தமிழில்?] ஏன் சிந்திக்கவில்லை? சிந்திக்கத் தவறிய அவர்களுக்குப் பிற கோயில்களின் பூசாரிகள்[?] ஏன் அறிவுறுத்தவில்லை?

பெண்கள் நுழைந்தால்தான் புனிதம் கெடுமா? அவர்கள் கோயிலின் எல்லைக்கு அப்பால் நின்று வழிபட்டால் கெடாதா? கடவுள் என்பவரால் அருளப்பட்ட புனிதத்தன்மை பிரபஞ்ச வெளியெங்கும் பரவிக் கிடக்கிற ஒன்றல்லவா? அதற்கு எப்படி இவர்கள் வரம்பு கட்டுகிறார்கள்?

பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் மட்டும்தான் புனிதம் கெடுமா? அவர்கள் மீது உராய்ந்த காற்று பட்டால்கூட அது கெட்டுவிடுமே. என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

மாதவிடாய்ச் சுழற்சியை[இயல்பானது] அவர்கள் சுட்டிக்காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. அது உண்மையாயின், அவர்கள் அறியாமையின் உச்சத்தைத் தொட்டவர்கள் ஆவார்கள்.

கோயிலுக்குள் செல்பவர்கள் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள அவரின் அனைத்துப் பக்தர்களுக்கும்[பெண்கள் உட்பட] சொந்தமானவர்தானே ஐயப்பன்? அப்புறம் ஏன் கோயில் என்னும் ஒரு குறுகிய எல்லைக்குள் அவரை அடைத்து வைத்துப் பெண்கள் நெருங்கினால் புனிதம் கெடும் என்கிறார்கள்?

ஐயப்பனை ஈன்றெடுத்தவர் மோகினி[திருமாலின் அவதாரம்] என்னும் பெண்தான். கடவுளாயினும் அவரும் பெண்தானே? அந்தப் பெண்ணுக்குப் பிறந்த ஐயப்பன், ஏதேனும் ஒரு தோசத்துடன் பிறக்காமல் புனிதத்தின் மறு வடிவமாய்ப் பிறந்தது எப்படி? அவருக்குரிய கோயிலின் புனிதத்தன்மை பெண்களால் பறிபோகும் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்?

இந்த அறிவியல் யுகத்திலும், மாதவிடாய்ச் சுழற்சியைக் காரணம் காட்டியும், கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று புலம்பியும் குறிப்பிட்ட வயதுப் பெண்களைத் தேவசம் போர்டு அனுமதிக்க மறுப்பது ஏற்புடையதல்ல.
------------------------------------------------------------------------------------------------------------------






செவ்வாய், 17 ஜூலை, 2018

நிர்வாண ஓவியக் கண்காட்சி!!![உளவியல் & பொழுதுபோக்குக் கதை]

மாலினிக்கு ரொம்பவே ஏமாற்றம்; அழுகை அழுகையாய் வந்தது; கோபமாகவும் இருந்தது.

காரணம் வேறொன்றுமில்லை. அவள், தான் வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தினாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாய் இருந்தும் எண்ணிப் பத்துபேர் மட்டுமே வந்தார்கள்.

“சே...ரசனை கெட்ட ஜென்மங்கள்...உணர்ச்சியில்லாத பிண்டங்கள்...” ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் மனிதராய்ப் பிறந்த அத்தனை பேரையும் திட்டிக்கொண்டிருந்தாள் மாலினி.

“இதோ பார் மாலு, இந்த மாதிரி கண்காட்சிக்கெல்லாம் இவ்வளவுதான் கூட்டம் வரும். ஒரு நிர்வாணக் கண்காட்சி நடத்திப்பார். மக்கள் வெள்ளம் அலைமோதும். பத்திரிகை நிருபர்கள் பேட்டி காணப் போட்டி போடுவார்கள். டிக்கெட் போட்டால் ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிடலாம்” என்றாள் அவள் தோழி சிநேகா.

“நடத்திடறேன்” என்றாள் மாலினி, திடமான குரலில்.

“அடியே, நான் விளையாட்டுக்குச் சொன்னேன். அப்படிச் செய்துடாதே” என்று பதறினாள் சிநேகா.

“ரொம்ப நன்றிடி” என்று மட்டும் சொன்னாள் மாலினி.

ன்று, நிர்வாண ஓவியக் கண்காட்சியின் தொடக்க நாள்.

பத்து மணிக்குக் கண்காட்சி தொடக்கம். எட்டு மணியிலிருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

'இது, நிர்வாண ஓவியக் கண்காட்சி. ஓவியங்களுக்கான மாடல்கள் மேடையில் காட்சி தருவார்கள்’ என்று விளம்பரப்படுத்தியிருந்தாள் மாலினி.

அலை மோதிய ஜனத்திரளைப் போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தி, வரிசையில் நிற்க வைத்தது.

தோள்களில் கேமராக்களுடன் ஏகப்பட்ட பத்திரிகை நிருபர்கள்.

மணி பத்தாயிற்று.

ஓவியக்கூடம் திறக்கப்பட்டது.

'நான் முந்தி, நீ முந்தி’ என்று காத்திருந்தவர்கள் உள்ளே பாய்ந்தார்கள்.

அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அசடு வழிந்தார்கள். அவர்களின் முகங்களில் கோபமும் வெறுப்பும் தாண்டவமாடின.

காரணம்..........

நிர்வாண ஓவியங்களுக்கு ‘போஸ்’ கொடுத்தவர்கள்...........

சுமதி, பத்மா, மது ஆகியோர். எல்லோருமே மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்! மில்க் சாக்லேட் சுவைத்தவாறு மேடையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்தார்கள்!

அன்று, தான் அடைந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பை, இன்று, அந்த ரசிகர்கள் முகத்தில் கண்டு ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தாள் மாலினி.

**************************************************************************************************ஜெயரூபன்' என்பவரின் கற்பனையில், 14.02.1985 குமுதம் இதழில் வெளியானது. எழுத்தாளருக்கும் குமுதம் இதழுக்கும் என் நன்றி.

ஞாயிறு, 15 ஜூலை, 2018

அறுபதிலும் ஆசை வரும்.....கிழவிகளுக்கு!! [நகைச்சுவை 50% & புதிர் 50%]

எச்சரிக்கை!..... நீங்கள் எதிர்பார்ப்பது உள்ளே இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். ''தலைப்பை நம்பி மோசம் போனோமே'' என்று எவரும் என்னை ஏசாதீர்!

யணிகளின் பயணச்சீட்டைச் சரிபார்த்து முடித்த நடத்துனர் நடராசன், ஓட்டுநர் பாட்சாவுக்குக் கேட்கும்படியாக, ''வாங்கின சீட்டுல ஒன்னு குறையுது. கேட்டைக் கடக்கிறவரைக்கும் மெதுவா உருட்டுங்க பாய்'' என்றான்.

''யார்கிட்டேயும் சொல்லிட்டுப் போனாங்களான்னு கேளுப்பா'' என்றார் பாட்சா.

ஒருமுறை முன்னிருந்து பின்னாகப் பார்வையை ஓடவிட்டான் நடராசன். கேட்கவும் செய்தான். எவரும் வாய் திறக்கவில்லை.

பின்னிருக்கை ஒன்றில் ஓரமாக அமர்ந்திருந்த அருக்காணிக் கிழவி மட்டும் ஏதோ சொல்ல மெல்ல வாய் திறந்து மூடினாள். அவளருகில் நடைபாதையை அடைத்துக்கொண்டிருந்த எவர்சில்வர் அண்டா அவளின் வாயை அடைத்தது.
'இந்த அண்டாவை வெச்சிட்டுப் போனவன் வராமலே இருந்துட்டா.....' நினைக்கவே இனித்தது கிழவிக்கு.

'அண்டா ஐநூறு அறுநூறு ரூபாய் தேறும். மேற்கொண்டு கொஞ்சம் பித்தளைப் பாத்திரம் வாங்கினா வர்ற மாசியிலேயே மகள் பங்குசத்துக்குத் தனிக் குடித்தனம் வெச்சிடலாம்' -கிழவியின் மனதில் இப்படியொரு தப்பான ஆசை முகிழ்த்து மறைந்தது.

பேருந்து வந்து நின்றவுடனே சீட்டு வாங்கிக்கொண்டு வண்டியில் அமர்ந்துவிட்டிருந்தாள் அருக்காணிக் கிழவி. கிழவிக்கு வயது அறுபது[இந்தக் கதை நிகழ்ந்தது இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் அறுபது வயதுக்காரிகள் கிழவிகளாகத்தான் தெரிந்தார்கள். அறுபதைத் தாண்டிய இக்காலக் குமரிகள் கோபிக்கக்கூடாது].

தன்னந்தனியளாக அவள் மட்டுமே வண்டியில் இருந்த நிலையில், ஒரு கொடுவாள் மீசைக்காரன் வெகு சிரமப்பட்டுத் தூக்கிவந்த அந்த எவர்சில்வர் அண்டாவை அவளருகே வைத்துவிட்டு, ''ஆயா, இதைக் கொஞ்சநேரம் பார்த்துக்கோ. ஒரு சிங்கிள் டீ குடிச்சிட்டு வந்துடுறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனான்.

போனவன் போனவன்தான்.

பேருந்து, நிலையத்திலிருந்து வெளிப்பட்டு, எதிரும் புதிருமாய் வந்துபோகும் வாகனங்களை ஊடுருவி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. பத்துப் பதினைந்து நிமிடம் போல அதன் இருபக்க வாசல்படிகளையே மாறி மாறி நோட்டமிட்டாள் கிழவி. அண்டாக்காரனின் கொடுவாள் மீசையோ காதுகளில் பளிச்சிட்ட சிவப்புக்கல் கடுக்கண்களோ தென்படவே இல்லை.

கிழவியின் வதனத்தில் வெகு சன்னமாய் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்தன. கண் மூடி மானசீகமாய் அவளின் குலதெய்வமான கருப்பண்ணசாமியைக் கும்பிட்டாள்; பழனி முருகனுக்குத் தலைமுடி காணிக்கை செலுத்துவதாகவும் நேர்ந்துகொண்டாள்.

கருப்பண்ணசாமியும் கந்தவேளும் அவளின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்திருக்க வேண்டும். அடுத்த சில நிறுத்தங்களில் வண்டி நின்றபோதுகூட மீசைக்காரன் அதில் ஏறவேயில்லை.

நீண்டதொரு நிம்மதிப் பெருமூச்சு கிழவியிடமிருந்து வெளிப்பட்டது. அருகிலிருந்தவர்களை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு, அண்டாவை இழுத்துத் தனக்கும் அதற்குமான இடவெளியைக் குறைத்தாள்.

''ஆயா, அண்டா உன்னோடதுதானா?'' -சற்றும் எதிர்பாராத நிலையில் ஓங்கி ஒலித்த நடத்துநரின் கேள்வி கிழவியைச் சற்றே நிலைதடுமாற வைத்தது.

'இவனுக்கு உண்மை தெரிஞ்சிருக்குமோ?' என்று சந்தேகப்பட்டாள். ஆனாலும் அண்டாவை விட்டுக்கொடுக்க மனமில்லை. ''என்ன இப்படிக் கேட்டுட்டே? அண்டா என்னோடது இல்லேங்கிறியா?'' என்று எதிர்க்கேள்வி தொடுத்தாள்.

''சும்மா கேட்டேன். கோவிச்சுக்காதே. ஆமா, அண்டாவுக்குள்ள என்ன இருக்கு?'' எனறான் நடராசன்.

அண்டாவின் மேல் பகுதி தடித்த துணியால் சுற்றப்பட்டிருப்பதை அப்போதுதான் கவனித்தாள் கிழவி; சமாளிப்பது என்று முடிவெடுத்தாள். ''என்னவோ இருக்கு. தெரிஞ்சி என்ன பண்ணப்போறே?'' என்றாள்.

''பத்து ரூபா லக்கேஜ் சார்ஜ் குடு'' என்ற நடராசு, அவளுக்கான பயணச் சீட்டுடன் லக்கேஜுக்கான சீட்டையும் தந்தான். 

வேறொரு சமயமாக இருந்திருந்தால் அவனுடன் ஒரு பட்டிமன்றமே நடத்தியிருப்பாள் அருக்காணிக் கிழவி. பல நூறு ரூபா மதிப்புள்ள அண்டாவை வெறும் பத்து ரூபா தனக்குச் சொந்தம் ஆக்குவதால், மறு பேச்சுப் பேசாமல் பணத்தை நீட்டினாள்.

திர்பாராத வகையில், வழியில் காவல் துறையினரால் பேருந்து நிறுத்தப்பட்டது.

காவலர்கள் சிலர் பயணிகளிடமிருந்த பெட்டிகள், கைப்பைகள் போன்றவற்றைச் சோதித்துக்கொண்டிருக்க, கிழவியின் அருகிலிருந்த எவர்சில்வர் அண்டாவைத் தன்னிடமிருந்த பிரம்பால் 'தட் தட்' என்று தட்டினார் ஆய்வாளர்.

''அண்டா யாருது?'' -கேட்டார்.

கிழவியின் மனதில் இப்போது திகில் பரவியது. 'மீசைக்காரன் கஞ்சா அபினின்னு கடத்தல் பண்டம் எதையும் வெச்சிருப்பானோ?' என்று சந்தேகித்தாள்.

''இது யாரோடது?'' ஆய்வாளரின் அதட்டல் அருக்காணியை வாய் திறக்க வைத்தது. ''என்னோடதுதாங்க'' என்றாள்.

''உள்ளே என்ன இருக்கு?'' என்று கேட்ட ஆய்வாளர் கிழவியின் பதிலை எதிர்பாராமல் அண்டாவைச் சுற்றியிருந்த துணியை அகற்றினார்.

அடுத்து, அழுத்தமாகத் திணிக்கப்பட்டிருந்த கம்பளிப் போர்வையையும் அப்புறப்படுத்தினார். சில உல்லன் சால்வைகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன.  உள்ளே என்ன இருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் அவற்றையும் நீக்கியபோது, அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பயணிகள், ''ஐயோ... பொணம்...பொணம்..... துண்டு துண்டாப் பொம்மணாட்டி பொணம்...'' என்று வாய்விட்டு அலறினார்கள்.

அருக்காணிக் கிழவி? 

அவள் மயங்கிய நிலையில் இருக்கையில் சாய்ந்து கிடந்தாள்.
------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 13 ஜூலை, 2018

சிரிக்கச் சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!!!

'உலகிற்கே படியளக்கும் பெருமாளை 25 நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள்' என்று மனம் கலங்கியிருக்கிறார் ஒரு தீட்சிதர். வயது முதிர்ந்த ஒரு மனிதருக்குள் இப்படியும் ஒரு குழந்தை மனமா? மாறாக, குழந்தை மனம் கொண்டவர் போல் நடிக்கிறாரா?
'திருப்பதி கோயில் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிக்கவில்லை. இதனால் மூலவருக்கு எந்தவித நைவேத்தியமும் படைக்கவில்லை. உலகிற்கே படியளக்கும் பெருமாளை 25 நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள்'['காமதேனு' வார இதழ், 08.07.2018] என்று, அந்தக் கோயிலில் 24 ஆண்டுகள் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராகப் பணியாற்றிப் பணீநீக்கம் செய்யப்பட்ட 'ரமண தீட்சிதர்' வருந்தியிருக்கிறார்.

ஆம். ஏழுமலையான் 'உலகத்துக்கே படியளப்பவர்'தான். 

உயிர்களைப் படைத்தவர் ஏழுமலையான்[கடவுள்]. அவை வாழ்ந்து முடிக்கும்வரை உணவூட்டுபவரும் அவரே..... சரி. 

இங்கே ஞானசூன்யனான நான் மட்டுமல்ல, ஆறறிவு படைத்த அனைவருமே எழுப்புகிற ஒரு கேள்வி..... அனைத்தையும் படைத்துக் காத்து வாழவைக்கிற அந்த ஏழுமலையான் கடவுளுக்கும்கூடப் பசி எடுக்குமா? 

பசிக்குமாயின் அவர் கடவுள் அல்ல. அல்லவே அல்ல. 

கடவுள் பட்டினி கிடந்தார்[25 நாட்கள்... கொலைப்பட்டினி!] என்று சொன்ன தீட்சிதரின் வருத்தவுரையும், இவரைக் கண்டிக்காமல் வாய்மூடி மவுனம் காப்போரின் கோழைத்தனமும் என்னுள் கோபத்தைக் கிளறின.  

என்னளவில் நான் கோபப்படலாம்; குமைந்து குமுறலாம். பிறர் அறியக் கடின வார்த்தைகளால் திட்டவும் செய்யலாம். ஆனால், திட்டுவது சாத்தியமா?

சாத்தியம்தான். ஆனால், அதை ஏழுமலையானின் பக்தர் கூட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வம்பிழுப்பார்கள்; வழக்குப் போடுவார்கள்[''அப்போ, மூடிகிட்டுச் சும்மா கிட'' என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது!] ஆகையினால்.....

சீற்றத்தை வெளிப்படுத்தாமல், சிரித்துச் சிரித்துச் சிரித்து என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்வதென முடிவெடுத்தேன்; நேற்று ஒரு நாள் முழுக்கச் சிரித்தேன்; இப்போதும்கூடச் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

கோயிலின் அண்மைக்காலச் சர்ச்சைகள் குறித்து ஊடகங்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளன. பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஒரு கட்டத்தில், ''திருப்பதி கோயிலில், கருவறை, மடப்பள்ளி போன்ற இடங்களில் மன்னர்கள் காலத்து நகைகள் பாதுகாப்பாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. கருவறையிலிருந்து ரகசிய சுரங்கப் பாதையும் உள்ளது. இதற்கு, ஓலைச்சுவடி, கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. இதெல்லாம் தெரிந்துதான், மடப்பள்ளியை நவீனம் ஆக்குவதாகச் சொல்லி தோண்டினார்கள். நைவேத்தியம் தயாரிக்க இயலாமல் போனது. ஏழுமலையான் பட்டினி கிடக்க நேர்ந்தது'' என்று கோயில் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டினார் ரமண தீட்சிதர்.

கோயில் நிர்வாகமும், 'பெங்களூர் சென்று தனியார் நிகழ்ச்சியில் பூஜை செய்தது; முகப்புக் கோபுர வாசல் வழியாகத் தன் குடும்பத்தினரைக் கோவிலுக்குள் அனுமதித்தது; கோயிலுக்குக் களங்கம் கற்பித்தது' என்று தீட்சிதர் மீது பல குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டிருக்கிறது.

'கோயிலில், தீட்சிதர் சொல்வதுபோல் தவறு ஏதும் நடைபெறவில்லை. சுவாமியைப் பட்டினி போட்டதாக அவர் கூறியிருப்பது பொய். மராமத்துப் பணிகள் நடபெறுவதால், மாற்று இடத்தில் நைவேத்தியங்கள் தயாரிக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டது. அவர் பட்டினி கிடக்கவில்லை'[நைவேத்தியம் படைக்காவிட்டால் சுவாமி பட்டினி கிடக்கும் என்று நம்புகிறார்களோ?] என்றும் அறிக்கை தந்திருக்கிறது நிர்வாகம்.

உண்டியல் காணிக்கையைத் தனியார் வங்கியில் சேமித்தது; வேற்று மதத்தவரைப் பணியாற்ற அனுமதித்தது. பிற மதத்தவரை அறங்காவலர் குழுவில் சேர்த்தது; வடகலை, தென்கலை குறித்த ஜீயர்களுக்கிடையிலான வாக்குவாதங்கள் என்றிப்படிப் பல சர்ச்சைகளுக்கும் இடமாகியிருக்கிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

இம்மண்ணில் வாழும் மனிதர்களில் கணிசமான தொகையினர் பட்டினியால் வாடுபவர்கள். இவர்களைப் புறக்கணித்து, ஏழுமலையானைப் பல நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள் என்று தலைமைத் தீட்சிதராய் இருந்த ஒருவர் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சாட்டுகிறார்.  கோயில் நிர்வாகத்தினர் அவரையே குற்றவாளியாக்கியதோடு, ஏழுமலையான் ஒருநாளும் பட்டினி கிடந்ததில்லை என்று சொல்லிப் பதிலடி கொடுக்கிறார்கள்.

இவர் அவர்களுக்கு அடி கொடுக்கிறார். அவர்கள் இவருக்குப் பதிலடி கொடுக்கிறார்கள். இந்த இருதரப்பாரும் ஒருங்கிணைந்து பக்தகோடிகளுக்கு அடிமேல் அடி கொடுக்கிறார்கள்; மூளையை மழுங்கடிக்கிறார்கள். 

இந்த இவர்களின் திருவிளையாடலை..... இல்லையில்லை, ஏழுமலையானின் இந்தத் திருவிளையாடலை நினைந்துதான் நாளெல்லாம் சிரித்தேன்... இப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்!
------------------------------------------------------------------------------------------------------------------



புதன், 11 ஜூலை, 2018

குமுதம்[வார இதழ்] திருந்தவே திருந்தாதா?!

குமுதம், 'அவரை'க் கடவுளாக்கிக் கதைகள் எழுதுவது பற்றி நமக்குக் கவலையில்லை. இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டுவரும் இந்த நம்பர்1[???] வார இதழின் 'உள்நோக்கம்' பற்றியும் நாம் ஆராயவில்லை. வாசகனின் சிந்திக்கும் அறிவை இவை முடமாக்குகின்றன என்பதே நம் குற்றச்சாட்டு.

குமுதம், தொடர்ந்து எழுதிவரும் 'மகா பெரியவா' குறித்த 'மிகைக் கற்பனை'க் கதைகளுள் கீழ்வருவதும்[குமுதம், 18.07.2018]  ஒன்று.

திருவானைக்காவுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் தலைவர் 'மகா பெரியவா'வைச் சந்திக்கிறார். ''எங்க ஊரில் மாரியம்மன் கோயில் கட்டியிருக்கோம். கும்பாபிசேகம் நடத்தப் போதுமான வசதியில்லை. பெரியவா உதவணும்''னு கோரிக்கை வைக்கிறார்.

ஒரு வேதியரை அழைத்து, ''நீ போய்க்  கும்பாபிஷேகம் செய். அவங்க கொடுக்கிறதை வாங்கிக்கோ''ன்னு சொல்றா பெரியவா.

கிராமம் சென்று அதை நடத்தி முடித்த வேதியர், பெரியவாவின் உத்தரவை அலட்சியப்படுத்தி, அதிகமாகப் பணம் கேட்கிறார். தலைவர் தன் மனைவியின் கழுத்து நகையை அடமானம் வைத்துப் பணம் கொடுக்கிறார். 

வேதியர் வீடு திரும்புகிறார். அன்றைய தினத்திலிருந்தே, அவர் மனைவியின் கனவில் அம்பாள் சூலாயுதத்தோடு தோன்றிப் பயமுறுத்தவே, அந்த அம்மாவின் பல நாள் தூக்கம் பறிபோகிறது.

செய்வதறியாது கலக்கமுற்ற வேதியர், மனைவியை அழைத்துக்கொண்டு மகா பெரியவாவைத் தரிசனம் பண்ணுகிறார்.

இவர்[வேதியர்] ஏதும் சொல்லாத நிலையில்[!!!], ''அம்பாள் சூலத்தோடு தொறத்திண்டு வராளா? வழிப்பறிக்காரன் மாதிரி நீ கழுத்துச் சங்கிலியைப் பறிச்சுண்டு வந்தா அம்பாள் சும்மா இருப்பாளா? போயி, யார் உனக்குச் சங்கிலியை அடகு வெச்சிப் பணம் தந்தாரோ, அந்தச் சங்கிலியை அவர் மீட்டெடுக்க வழி பண்ணு''ன்னு பெரியவா கட்டளை பிறப்பிக்கிறார்.

வேதியர், கிராமத் தலைவரிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறார். தலைவரும் நகையை மீட்கிறார்.

வேதியர் மீண்டும் பெரியவாவைச் சந்திக்கிறார். ஒரு தாம்பாளத்தில் பட்டு வஸ்திரம் கனி வர்க்கம் எல்லாம் வைத்து, பணமும் வைத்து வேதியருக்குக் கொடுக்கச் சொல்றா பெரியவா.

வேதியர் பணத்தை எண்ணிப் பார்த்தபோது. கிராமத் தலைவரிடம் எவ்வளவு வாங்கித் திருப்பிக் கொடுத்தாரோ அவ்வளவு பணமும்[இதுவும் வேதியர் சொல்லாமலே பெரியவாவுக்குத் தெரிந்திருக்கிறது!!!] இருந்ததாம். அதற்கப்புறம் வேதியரின் மனைவிக்கு வழக்கம்போல நல்ல தூக்கம் வாய்த்ததாம்.

பெரியவாவின் கட்டளையை மீறியவர் வேதியர். அம்பாள் அவருடைய கனவில் தோன்றி அச்சுறுத்துவதாகக் கதையமைப்பதே முறையாகும்[இரண்டு கண்களையும் குத்துவதாகக்கூடக் கற்பனை செய்திருக்கலாம்]. அவர் மனைவியைத் துன்புறுத்தியது நியாயம் அல்லவே. கருணைக் கடலான அம்பாளுக்கு இது தெரியாமல் போனது எப்படி? இன்னும் சில குறைகளைச் சுட்டிக்காட்டலாம். இது போதும்.

கல்கி, 'தமிழ் இந்து' போன்ற இதழ்கள், மகா பெரியவாவின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில், அவர் சொல்லிச் சென்ற அறவுரைகளைப் பதிவு செய்கின்றன. குமுதம் போல் புதிது புதிதாய்ப் பொய்க் கதைகள் கற்பித்து, அமைதியாய் வாழ்ந்து முடித்த அந்த  ஆன்மிகப் பெரியவருக்கு அவமரியாதை ஏதும் செய்வதில்லை.

ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களே முகம் சுழிக்கும் வகையில் தொடர்ந்து இட்டுக்கட்டிய கதைகளைக் குமுதம் வெளியிட்டு வருவது வருந்தத்தக்கது.

குமுதம் திருந்த வேண்டும். தவறினால், பெரியவாவைப் பெரிதும் மதித்துப் போற்றுபவர்களால் அது திருத்தப்பட வேண்டும்.

 காத்திருப்போம்; நல்லது நடந்தால் வரவேற்போம்.

திங்கள், 9 ஜூலை, 2018

அவனுக்கு ஐந்து நிமிடம் போதும்! அவளுக்கு?!

மிகப் பழைய[20 ஆண்டுகள் இருக்கலாம்] 'மாலைமதி' இதழில் வாசித்த ஒரு சிறுகதையின் 'கரு'வுக்கு இங்கு 'புது வடிவம்' தந்துள்ளேன். குமுதம் குழுமம் அதிபர் வரதராசன் அவர்கள் என்னை மன்னிப்பாராக!
வன் வருவதற்கு முன்பு அந்த அறையில் அவளுக்குத் துணையாக இருள் மட்டுமே இருந்தது.

அவன் வரும்வரை 'குளுகுளு' என்றிருந்த அவளின் தந்தக் கடைசல் மேனி இப்போது 'திகுதிகு' என்று எரிந்துகொண்டிருக்கிறது. 

ஒரு மருந்துக் கம்பெனியின் பிரதிநிதியாய் ஒரு மாதம் போல ஊர் சுற்றியவன், எதையெல்லாம் பார்த்தானோ, எவளையெல்லாம் உரசினானோ கட்டுக்கடங்காத காமம் சுமந்து நள்ளிரவில் வீடு திரும்பினான்.

கதவு திறந்ததும் கலைந்து கிடந்த ஆடையைச் சரிசெய்யக்கூட அவளை அனுமதிக்கவில்லை. கட்டிலுக்கு இட்டுச் சென்றான். கட்டியணைத்து இறுக்கினான். 

கவிழ்த்தான்; உருட்டினான்; புரட்டினான். உதட்டோடு உதடு சேர்த்துக் கொஞ்சமாய் அவளின் உமிழ்நீர் சுவைத்தான். எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் நேரம்தான். அத்தனை அவசரம்...அதி வேகம்.

இன்னும் சுவைப்பான், உரசுவான், தொட்டுத் தடவுவான், விடியும்வரை கதை படிப்பான் என்று  அவள் உடம்பு சிலிர்த்துக் காத்திருக்க.....

எதிர்பாராத வகையில், உத்வேகத்துடன் இயங்கி அவன் உச்சத்தைத் தொட்டான், 

அவன் உதடுகள் 'உச்' கொட்டின. சட்டென 'அது' முடிந்துவிட்டதால் உண்டான சலிப்பு அதில் தெரிந்தது. அப்புறம்.....

அப்புறமென்ன, சரிந்து ஒருக்களித்துப் படுத்தான்; கால் வினாடியில் குப்புறக் கவிழ்ந்தான். நாள் முழுக்க மூட்டை சுமந்து ஓய்ந்தவன் போல் உறங்கிப்போனான்.

தெரு நாயின் ஊளைச் சத்தத்தையும் மீறி ஒலித்த அவனின் குறட்டை அவளை முகம் சுழிக்க வைத்தது.

அவளின்  கண்களில் கண்ணீர் பெருகியது; உதடுகளில் உப்புக் கரித்தது.

தன் தேவையை நிறைவேற்றுவதில் காட்டும் வேகத்தை, அவளின் தேவை அறிந்து அதை நிறைவேற்றுவதில் அவன் ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லை. அதற்கான முயற்சியிலும் அவன் ஈடுபட்டதில்லை.

சுவிட்சைத் தட்டியதும் எரிவது ஆணின் காமம். மறு தட்டுதலில் அது அடங்கிவிடும். சூடு பிடிக்கத் தாமதமாகும் இஸ்திரிப் பெட்டி போன்றது பெண்ணின் காமம். சூடு தணிவதற்கும் நீண்ட நேரம் ஆகும்.

அவள் கவிழ்ந்து கிடக்கும் அவனின் உடம்பை மெலிதாய்த் தொட்டுப் பார்த்தாள். சூடு தணிந்திருந்தது. தன் உடம்பு இன்னமும் கொதித்துக்கொண்டிருப்பதை,  தொட்டுப் பார்க்காமலே அவளால் உணர முடிந்தது!
------------------------------------------------------------------------------------------------------------------


சனி, 7 ஜூலை, 2018

பகுத்தறிவுப் பாதையில் 'குங்குமம்' வார இதழ்!

இட்டுக்கட்டிய கதைகளின் மூலம், மூலையில் முடங்கிக் கிடந்த சாதாரண மனிதர்களையெல்லாம் அசாதாரண அவதாரங்கள் ஆக்கிப் போலி ஆன்மிகம் வளர்க்கும் வார இதழ்களுக்கிடையே, பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கும் குங்குமம் வார இதழ் நம்  பாராட்டுக்குரியது.

ஆன்மிகவாதிகளால் கற்பிக்கப்பட்ட ஆன்மா, சொர்க்கம், நரகம் போன்றவை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது இந்த வாரக் குங்குமத்தில் வெளியாகியுள்ள 'யுவகிருஷ்ணா' அவர்களின் கட்டுரை[குங்குமம், 13.07.2018]. வாசித்துப் பயனடையுங்கள்.

“இங்கு யாருமே மரணிப்பதில்லை. ‘மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்வுக்குப் பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் மிகச்சிறந்த  இடத்தை அடைகிறார்கள்...” சட்டென்று வாசித்தால் ஏதோ உயரிய தத்துவம் மாதிரி தெரியும்.

தில்லியில் 11 பேர் கொண்ட குடும்பம் செய்துகொண்ட கூட்டுத் தற்கொலைக்குக்  காரணமாக எழுதி வைத்த கடிதத்தில் காணப்படும் வரிகள் இவை.  ‘முக்தி’ அடைய, ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்வது என்பது புதிதல்ல. ஜிம் ஜோன்ஸ் என்கிற அமெரிக்க  சாமியாரை நம்பி 900க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் 1978ல் நடந்து அமெரிக்காவையே சோகத்தில் ஆழ்த்தியது. ‘மக்கள்  ஆலயம்’ என்கிற அமைப்பை நிறுவி, ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரை நம்பி பல நூறு அமெரிக்கர்கள் குடும்பம்  குடும்பமாகத் திரண்டனர்.

இவர்களுக்காக கயானா என்கிற நாட்டில் ஜோன்ஸ் டவுன் என்கிற ஊரையே நிர்மாணித்தார் ஜோன்ஸ். தொடர்ச்சியாக ஜோன்ஸ் மீது மனித உரிமை  மீறல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அமெரிக்கா இவர் மீது விசாரணையை முடுக்கி  விட்டது. இனி தப்பிக்கவே இயலாது என்கிற நிலையில், ‘சொர்க்கத்துக்கு போவோம்’ என்று ஜோன்ஸ் டவுனில் வசித்துக் கொண்டிருந்த தன்  பக்தர்களை அழைத்துக் கொண்டு கூட்டாக தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட 909 பேரில் 304 பேர் குழந்தைகள்!

பெரும்பாலானோர் சயனைடு விஷம் அருந்தியும், துப்பாக்கியால் தங்களைத் தாங்களே சுட்டுகொண்டும் ‘சொர்க்கத்துக்கு’ப் போனார்கள்.  கைக்குழந்தைகளுக்குக் கூட ஃபீடிங் பாட்டிலில் பாலில் சயனைடு கலந்து புகட்டப்பட்டது என்பதுதான் கொடுமை. உலகையே உலுக்கிய கூட்டுத்  தற்கொலைச் சம்பவம் அது. அதே அமெரிக்காவில் 1997ல் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ என்கிற அமைப்பு சார்பாக 39 பேர் கூட்டுத் தற்கொலை செய்து  கொண்ட சோகமும் நடந்தது. மாசடைந்த உலகம் சுத்திகரிக்கப்படப் போகிறது. அப்போது இங்கிருப்பவர்கள் மரணிப்பார்கள்.

இந்த மரணத்தில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். வேறு உலகில் இருந்து (அதாவது  சொர்க்கத்தில் இருந்து) விண்வெளிக் கலம் வரும். அதில் ஏறிச்சென்று வாழ்வதற்காக ‘தற்கொலை’ செய்து கொள்ள வேண்டும் என்கிற  பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையில் கூட்டாக மரணித்த கும்பல் அது. ‘உடல் என்பது ஆத்மா பயணிக்கும் வாகனம். இந்த வாகனத்தை விட்டு  வேறு வாகனத்தை ஓட்டப் போகிறோம்’ என்றெல்லாம் தன்னுடைய பக்தர்களுக்கு மூளைச்சலவை செய்திருந்தார் ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’  அமைப்பை நடத்தி வந்த மார்ஷல் ஆப்பிள்வொயிட் என்கிற சாமியார்.

கொடுமை என்னவென்றால், அந்த கூட்டுத் தற்கொலை நடந்து இருபது ஆண்டுகள் கழித்து இன்னமும் கூட ‘சொர்க்கத்தின் நுழைவாயில்’ இயங்கிக்  கொண்டிருக்கிறது. விண்வெளிக் கலம் வரும், அதில் ஏறி மனித உடல் என்கிற வாகனத்தை விட்டு விட்டு வேறு வாகனத்தில் பயணிக்கலாம் என்று  நம்பக்கூடிய பைத்தியக்காரர்கள் இன்னமும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெப்சைட் எல்லாம் கூட இருக்கிறது. மனிதன்,  நாகரிகமடைந்த காலக்கட்டத்தில் சமுதாயமாகச் சேர்ந்து வாழ சில வரையறைகளை உருவாக்கிக் கொண்டான். அதில் ஒன்றுதான் மதம்.

அந்த மதத்தை வலுப்படுத்த சில சித்தாந்தங்களை உருவாக்கினான். மரணமே கூடாது என்பது மனிதனின் பேராசை. ஆனால், இயற்கை அதற்கு  அனுமதிப்பதில்லை. எனவேதான், மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று கனவு காண ஆரம்பித்தான். இந்தக் கனவுக்குத் தீர்வாக ஏறக்குறைய எல்லா  மதங்களுமே ‘சொர்க்கம்’ என்கிற கற்பனை உலகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. சில மதங்கள், மரணித்தாலும் மறுபிறப்பு உண்டு என்கிற  நம்பிக்கையை ஏற்படுத்தின. தானே உருவாக்கிய சொர்க்கத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதி வைத்திருக்கிறான் மனிதன்.

அந்த சொர்க்கத்தில்தான் கடவுளர்களும், தேவதைகளும் வாழ்கிறார்கள். நல்லவர்கள் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்றெல்லாம் ‘கதை’ கட்டப்பட்டது.  அப்படியென்றால் தீயவர்கள்? அவர்களுக்கென்று ‘நரகம்’ என்கிற உலகத்தை கற்பனையால் சிருஷ்டித்தான். மரணத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களுக்கு  சொர்க்கம் இருக்கிறது என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம். சமூகத்தின் கட்டுப்பாடு, வரையறையை உடைக்கும்  குற்றவாளிகளுக்கு நரகம் என்கிற அச்சம் காட்டப்பட்டிருக்கலாம். அதெல்லாம் அந்தந்த காலக்கட்டத்தின் தேவை.

அப்போது மக்களைக் கட்டுப்படுத்தி முறையாக வாழவைக்கவே மந்திரங்களும், ஸ்லோகங்களும் உருவாக்கப்பட்டன. உலகம், இன்று அறிவியல்  மயமாகி விட்டது. சூரிய மண்டலம், பிரபஞ்சம் என்பதைப் பற்றியெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துருவாக்கங்களை அறிவியல் நமக்கு சொல்லிக்  கொடுத்திருக்கிறது. மற்ற கிரகங்களை தொலைநோக்கி மூலமாக ஆய்வு செய்ய முடிகிறது. சில கிரகங்களுக்கு விண்வெளிக் கலங்களை நேரடியாகவே  அனுப்ப முடிகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு மனிதர்களே சென்று பார்த்துவிட்டு வந்து விட்டார்கள்.

மனிதன் என்பவன் பல கோடி உயிரணுக்களால் ஆனவன். அவன் பிறப்பதற்கு முன் அவனுடைய இடம் என்பது இந்த உலகில் எப்படி வெற்றிடமோ,  அவனுடைய மரணத்துக்குப் பிறகும் அதே வெற்றிடம்தான். சில நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவனுடைய நினைவு மட்டும் சில காலத்துக்கு  வாழும். சில வியத்தகு சாதனைகளைத் தம் வாழ்வில் நிகழ்த்தியவர்கள் மட்டும் சற்று கூடுதல் காலத்துக்கு மக்களால் நினைவுகூரப்படுவார்கள்.  இதுதான் யதார்த்தம். பிறப்பைப் போலவே மரணமும் வெறும் சம்பவம் மட்டுமே.

பிறப்புக்கும், இறப்புக்குமிடையில் நாம் வாழ்வது மட்டுமே வாழ்க்கை. அதற்கு முன்போ, பின்போ வெறும் சூனியம் மட்டுமே. சொர்க்கத்துக்கு அழைத்துச்  செல்கிறேன் என்றோ, கடவுளைக் காட்டுகிறேன் என்றோ எவரேனும் உங்களிடம் சொன்னால், அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச்  செல்லுங்கள். குருவாக்கி, ஆசிரம் கட்டி, சூடமேற்றி வழிபடுவதெல்லாம் அர்த்தமற்ற நேர விரயம். அறிவியல்தான் கடவுள். அது ஆதாரத்தோடு எதைத்  சொல்கிறதோ, அதை நம்புவதே அறிவுடைமை. 
==============================================================================
குங்குமத்தின் அனுமதி பெறாமல் கட்டுரையை நகல் எடுத்துப் பதிவு செய்துள்ளேன்.
குங்குமம் இதழுக்கும் யுவகிருஷ்ணா அவர்களுக்கும் என் நன்றி.