எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 30 செப்டம்பர், 2021

"வாங்க, 'கடவுள்'ஐக் 'கூறு' போடலாம்"!!![படு அறுவைப் பதிவு]


கடவுளின் ‘இருப்பு’ குறித்து நான் எழுதியதொரு பதிவைப் படித்த என் உள்ளூர் நண்பர், “என்ன சொல்ல வர்றீங்க, கடவுள் இல்லேன்னுதானே?” என்று கேட்டார்.

“சொல்ல நினைப்பதை இன்னும் சொல்லல. கடவுள் உண்டு என்பதற்குத் தரப்பட்ட ஆதாரங்களை நான் மறுத்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றேன்.

“ஆதாரங்களை மறுக்கிறதுன்னா என்ன அர்த்தம்? இல்லேன்னு சொல்றதுதானே?” -மடக்கினார்.

“ஆதாரங்களை மறுக்கிறது வேறு; கடவுளே இல்லேன்னு சொல்றது வேறு.”

“சரியான ஆதாரங்கள் தந்தா நம்புவீங்கதானே?”

“தாராளமா.”

“கடவுள் இருக்கிறார்னு அவரை நம்புறவங்க சொல்றாங்க. நம்பாதவங்க இல்லேன்னு சொல்றாங்க. ரெண்டு பேருமே கடவுளை முன்நிறுத்தித்தான் விவாதிக்கிறாங்க. இதிலிருந்தே கடவுள் இருக்கார்ங்கிறது உறுதியாகுது. இல்லாத ஒன்றைக் கற்பனை செய்ய முடியாது.”

“இன்னும் விளக்கமா சொல்லுங்க.”

“நாம் பயன்படுத்துற ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறிக்குது. நிலம்கிற சொல் இருக்கு. ‘நிலம்’கிற பொருளும் இருக்கு. கடவுள்ங்கிற சொல் இருக்கு; கடவுளும் இருக்கார். இப்படி எல்லாமே. இல்லாத எந்தப் பொருளுக்கும் வார்த்தைகளால் வடிவம் கொடுக்க முடியாது. கடவுள்ங்கிற சொல் இருப்பதால் கடவுளும் இருக்கார்னு நம்பணும்.

சிறிது மவுனத்திற்குப் பிறகு நான் கேட்டேன். “ஆகாயத் தாமரைன்னு தமிழ் இலக்கணக்காரங்க ஒரு எடுத்துக்காட்டுத் தருவாங்க. தாமரைன்னு ஒரு பொருள் தண்ணீரில்தான் இருக்க முடியும். ஆகாயத்தில் தாமரை ஏது? இங்கே, இல்லாத ஒரு பொருள்தான் நினைக்கப்படுது. இன்னும், ஆகாயத்தில், ஆயிரம் தலைகளோட அறுபதாயிரம் கால்களால ஒரு யானை நடந்து போச்சுங்கிற மாதிரி நிறையச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அது உண்மை ஆயிடாது. கடவுளும் அப்படித்தான்.”

நண்பர் லேசாகப் புன்னகைத்துவிட்டுச் சொன்னார். “இங்கே ஒரு தனிச் சொல்லைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளணும். ஆகாயத் தாமரையில் ரெண்டு சொற்கள் இருக்கு. ஆகாயம் ஒரு சொல். அது குறிக்கிற பொருள் ‘வெளி’. வெளின்னு ஒன்னு இருக்கு[இல்லையென்று சொல்கிற மதங்கள் உள்ளன]. தாமரை ஒரு சொல். அது குறிக்கிற தாமரைங்கிற பொருளும் இருக்கு. நீங்க ரெண்டு சொற்களை இணைச்சி இல்லாத ஒரு பொருளைக் [ஆகாயத் தாமரை] கற்பனை பண்ணியிருக்கீங்க. இது சரியான அணுகுமுறை அல்ல. இது மாதிரிதான் யானை உதாரணமும். இம்மாதிரி உதாரணமெல்லாம் இங்கே பொருந்தி வராது” என்றார் நண்பர்.

நான் கேட்டேன். “எல்லாத் தனிச் சொல்லுமே ‘நிஜமான’ பொருளை உணர்த்துதா?”

“பொருளை மட்டுமல்ல, உணர்ச்சியைக் குறிக்கலாம்; ஒரு பண்பைக் குறிக்கலாம். ‘வெறுமை’, ‘பொய்’ போல நம்மால் உணரத்தக்க ஒன்றைக் குறிக்கலாம். இன்னும் சொல்ல நிறைய இருக்கு.” -நண்பர்.

“நீங்க சொல்றதைப் பார்த்தா, தனிச் சொற்கள் தரும் பொருள்கள்தான் உண்மை; ரெண்டுக்கும் மேற்பட்ட கூட்டுச் சொற்கள் தர்ற பொருள் எல்லாம் உண்மை இல்லைன்னு ஆகுதே?” -நான்.

“ஆகாயத்தாமரை மாதிரி, திட்டமிட்டுத் தொகுத்த சொற்களும் தொடர்களும்தான் அப்படி.”

“கடவுளும் அப்படித்தான்னு நான் சொல்றேன். இதுவும் திட்டமிட்டுத் தொகுத்த சொல்தான். அதைப் பிரிச்சா, கட+உள்.

‘கட’ன்னா கடத்தல். ‘உள்’னா உள்ளே. இந்த ரெண்டு சொற்களும் இணைந்து கடவுள்ங்கிற பொருளைத் தந்துவிடா. உள்ளே கடப்பதுன்னா எதனுள்ளே? கடப்பது எது? அது கடவுளானது எப்படி? இப்படி எழும் கேள்விகளுக்கு இந்தச் சொற்கள் மட்டும் விளக்கம் தந்துவிடா. நீண்ட விவாதம் தேவைப்படும். அதிருக்கட்டும், தனிச் சொல்லானது கடவுள்ங்கிற பொருள் தரும்னு சொன்னீங்களே, உதாரணத்துக்கு ஒரு சொல் சொல்லுங்களேன்.”

“இறை.”

“பொருள்?”

“தங்கியிருப்பது. அதாவது, ஒவ்வொரு பொருளிலும் தங்கியிருப்பது/இருப்பவர் கடவுள்.”

“இந்தத் தனிச்சொல்லும் நேரடியா கடவுளைக் குறிக்கல. ஒவ்வொரு அணுவிலும்[?] தங்கியிருக்கிற ஒன்னுன்னா, அந்த ஒன்னு கடவுள் ஆனது எப்படி? இதுவரை யாரும் புரியும்படியாகச் சொன்னதில்ல. கடவுள்ங்கிற வார்த்தை மனிதனால் உருவாக்கப்பட்டது. கடவுள் உண்டுன்னோ இல்லைன்னோ ஆதரிப்பவர், மறுப்பவர் என இரு தரப்பாரும் அதைச் சொல்றதால கடவுள்னு ஒருத்தர் இருப்பதை ஏற்க முடியாது" என்றேன் நான்.

“இலக்கணம், சொல்லாராய்ச்சின்னு இறங்கினா,  குழப்பம்தான் மிஞ்சும்.” -நண்பர் சலித்துக்கொண்டார்.

"நானும் அதைத்தான் சொல்றேன். வார்த்தைகளையும் அவை தர்ற பொருள்களையும் கொண்டு கடவுளை நிரூபிக்க முடியாது. விரும்பினா இன்னொரு நாள் வாங்க. கடவுளை ரெண்டுல ஒன்னு பார்த்துடுவோம்” என்று சொல்லிச் சிரித்தேன்.

நண்பரும் சிரித்தார், கொஞ்சம் அசடு வழிய!

புதன், 29 செப்டம்பர், 2021

பெருகிவரும் 'பிரமச்சாரினி'ப் பெண்கள்!!!


பாலியல் என்பதே கவர்ச்சியானதொரு உணர்வுதான். இது குறித்துப் பேசும்போதும், பேசக் கேட்கும்போதும், கவர்ச்சிப் படங்கள், காணொலிகள் போன்றவற்றைப் பார்க்கும்போதும் பரவசத்துக்கு உள்ளாவது இயல்பு.

ஆனால், பாலுறவு என்றாலே எரிச்சலுக்கும் வெறுப்புக்கும் உள்ளாகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். 

பாலுறவு கொள்ளாமல் இருக்கும் பிரம்மச்சரிய நிலைக்கு ஆங்கிலத்தில் ‘செலிபசி’[Celibacy] என்று பெயர். இன்றைய இளைஞர்கள் மிகவும் குறைவாகப் பாலுறவு கொள்வதாக அறிக்கைகள் வெளியாகும் நிலையில் இந்தச் செலிபசி, அதாவது 'பிரம்மச்சரிய விருப்பம்', அதிக விவாதப் பொருளாகி உள்ளது.

'தி ஜெனரல் சொசைட்டி சர்வே' என்ற ஆய்வு நிறுவனம் ஆயிரக்கணக்கானோரிடம் இந்த ஆண்டு நடத்திய கணிப்பு, கடந்த ஆண்டு அமெரிக்காவில் வயதுவந்தோரில் 23 சதவீதம் பேர் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்கிறது. இது கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இரட்டிப்பாகி உள்ளது அதிர்ச்சி அளிப்பதும்,  ஆச்சரியமூட்டுவதும் ஆன விசயம்.  

இதன் மூலம், பாலியல் அனுபவங்களை விரும்பாத 30 வயதுக்கு உட்பட்டோர் எண்ணிக்கை நாளும்  அதிகரித்துவருகிறது என்பதை அறிய இயலுகிறது.

'2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்து 28 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது'  என்று 'பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்' என்ற இதழின் சார்பில், 34 ஆயிரம் வயதுவந்தோரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கணிப்புகள் 1972இல் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் இங்கிலாந்து நாட்டவர் குறைவான அளவே உடலுறவு வைத்துக்கொள்வதாக இது சுட்டிக்காட்டியிருக்கிறது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 16 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில், சரிபாதிக்கும் குறைவான ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பாலியலை வெறுப்பது ஏன் என்பது குறித்தும் சிலர் மனந்திறந்து பேசியிருக்கிறார்கள்.

பெண்சாரா[வயது 23]

பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியவுடன், சுமார் இரண்டரை ஆண்டுகளாகப் பாலுறவை விட்டு ஒதுங்கியிருப்பதாகக் கூறும்  இவர், மனோ ரீதியான பிரச்சினைகள் காரணம் என்கிறார். சில நேரங்களில் 'சுய இன்ப'ப் பழக்கம் மட்டுமே இருந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

தற்போது, தனது வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும், எந்த ஒரு விஷயத்திலும் சிந்தனையை ஒருநிலைப்படுத்த முடிவதாகவும், இதனால் தனது வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை என்றும் இவர் உறுதிபடக் கூறியிருப்பது பலரையும் பாலுறவு பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

அனைஸ்[30]

மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்று தான் சிறுவயதிலேயே முடிவு செய்துவிட்டதாகக் கூறுகிறார், 31 வயதாகும் அனைஸ். இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு முழுமையான, நீடித்திருக்கக்கூடிய உறவு தனக்கு வாய்க்கவில்லை என்கிறார்.

‘‘நான் 30 வயதை எட்டியபோது என் நண்பர்கள் பலர் திருமணம் செய்துள்ளதைப் பார்த்து, பாலுறவு வைத்துக் கொள்ளாததாலோ திருமணம் செய்யாததாலோ என்னுடைய வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டுள்ளேனா என யோசித்துப் பார்த்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு தேவையில்லை என்று நான் முடிவெடுத்ததை நினைவூட்டிக்கொண்டபோது, அது குறித்த சஞ்சலம் சில நாட்களே நீடித்தது.

எனக்குத் தெரிந்த பலர், தங்களுடைய படுக்கையில் தங்கள் இன்னாள் மற்றும் முன்னாள் காதலர்கள் எப்படி என்பதைத் தொடர்ந்து ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால், நான் இதுபோன்று பேச வேண்டிய தேவையில்லை. எதிர்காலத்தில்கூட ஓர் உறவில் நுழையும்போது இந்தச் சுமையை நான் தூக்கிக்கொண்டு செல்லத் தேவையில்லை’’ என்கிறார் அனைஸ்.

பாலியல் என்பது தனிச்சிறப்புமிக்கது என்று கூறும் அனைஸ், அதைக் கொண்டாட வேண்டும் என்றும், அது வெறும் உடல் சார்ந்த செயலல்ல, இருவருடைய மனம் சார்ந்தது என்கிறார்.

டேன்[29]

பாலுறவு வேண்டாம் என்று முடிவெடுப்பதற்கு முன், சிறுவயதில் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை உணராமல் பெண்களுடன் பாலுறவு கொள்வதற்காகப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார், 29 வயதாகும் 'டேன்'.

"சுமார் ஐந்து ஆண்டுகளாக நான் உடலுறவு கொள்ளாமல் இருக்கிறேன். இதுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகச்சிறந்த முடிவு. தற்போது, நான் என்னை முழுமையான மனிதனாக, ஒரு நோக்கத்துடனும், திட்டத்துடனும் இருப்பவனாக உணர்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்தச் சக்தியையும் வேலை மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார்.

தற்போது ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகி வருவதாகக் கூறும் டேன், அவரைத் திருமணம் செய்யப்போவதாகவும், ஆனால் இதுவரை அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டதில்லை என்றும் சொல்கிறார்.

எலினா[21]

17 வயதானபோது தான் பாலுறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்ததாகக் கூறும் 21 வயது 'எலினா', அப்போதெல்லாம் பிறர் தன்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று உணர்ந்ததாகக் கூறுகிறார்.

‘‘பிறரோடு பேசும்போது திடீரென ஓர் எண்ணம் எழும், அவர்கள் நம்முடன் பாலுறவு வைத்துகொள்வதற்காகத்தான் நம்முடன் பேசுகிறார்களோ என்ற சந்தேகம் வரும். அதுகுறித்து அளவுக்கு அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். என்னை விரும்பிப் பேசுகிறார்களா அல்லது என் உடலுக்காகப் பேசுகிறார்களா என்ற அச்சம் எனக்கு எழுந்தது. இந்த எண்ண ஓட்டங்கள் என் தலையைச் சுற்றிச் சுற்றி வந்ததால், பிறரோடு நெருங்கிப் பழகுவதையே நிறுத்திக்கொண்டேன்’’ என்கிறார் இவர்.

தான் சிலரோடு கொண்ட உடலுறவுக்காக இப்போது வருந்துவதாகக் கூறும் எலினா, சிலரைத் திருப்திபடுத்துவதற்காக அவர்களுடன் பாலுறவு வைத்துக்கொண்டது தவறு என்று உணர்ந்ததாகவும், தொடர்ந்து பலருடைய பாலியல் விருப்பங்களைப் புறக்கணித்து ஒட்டுமொத்தமாக பாலுறவை விட்டே ஒதுங்கிவிட்டதாகவும் சொல்கிறார்.

‘‘தற்போது என்னுடைய வாழ்க்கையில் பாலுறவு இல்லாமல் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நான் அதிகக் கவனம் செலுத்துகிறேன். எனக்குப் பிடித்தவர்களுடன் நான் பேசும்போது, அந்த நட்புறவைச் சுலபமாக வளர்க்க முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது’’ என்கிறார் எலினா.

எதிலும் ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் என்பதே இவர்கள் கூறும் கருத்துகளில் இருந்து புரிகிறது.

                                          *  *  *

நம் கேள்வி:

நம்ம ஊர் இளசுகளால் இவர்களைப் போல் மனம் திறந்து இவ்வாறான அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள முடியுமா?

முடியும். ஆனால், பகிர்ந்துகொண்டால்.....

'இதுகளெல்லாம் கெட்டுச் சீரழிஞ்சதுகள். குடும்ப வாழ்க்கைக்குச் சரிப்பட்டுவராது' என்று முத்திரை குத்திவிடுவார்கள் நம்மவர்கள்!

ஆகவே, இளசுகளே... குறிப்பாக, இளம் பெண்களே, 'பேட்டி' அளிக்க நேர்ந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுங்கள்! 

=======================================================================================

https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/06/16112522/Sexual-DesireWhat-is-the-reason-to-be-affected.vpf   

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

எளிதில் கிடைக்கும் இயற்கை 'வலி நீக்கி'கள்!


வலி நிவாரணி என்றால் வலியை நீக்குவது அல்லது குறைப்பது என்று பொருள்.

நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு, அவற்றைப் போக்கிக் கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

நம் உடலில் தோன்றும் வலிகளுக்கு இயற்கையே சில பொருட்களை வலி நிவாரணப் பொருட்களாக அளித்துள்ளது. அவையே இயற்கை வலி நிவாரணிகள்.

அதுவும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களே இயற்கை வலி நிவாரணிகள் என்பது ஆச்சரியமான விசயம். அவற்றைப் பற்றியே இக்கட்டுரை.

பல் வலி:

பல் வலி என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் வாட்டி வதைக்கும் உடல் உபாதை. அதற்குக் கிராம்பு சிறந்த நிவாரணியாகும்.

பற்களில் வலி உள்ள இடத்தில் கிராம்பைப் பொடி செய்து தடவ வலி குறைவதை உணரலாம். கிராம்பிற்குப் பதில் கிராம்பு எண்ணெயையும் வலி உள்ள இடத்தில் தடவலாம்.

காது வலி:

காது வலி ஏற்பட்டால் வெள்ளைப் பூண்டினைப் பயன்படுத்தலாம். வெள்ளைப் பூண்டு நுண்ணுயிர்களின் செயல்பாடுகளைக் குறைப்பதோடு அவற்றை அழிக்கவும் செய்யும்.

பூண்டை நசுக்கிப் பிழிந்த சாறு 2 துளி அளவு காதில் விடவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் 3 நாள்கள்வரை செய்தால் காதுவலி குணமாகும்.

இரத்தக் காயம்:

இரத்தக் காயம் மற்றும் நாள்பட்ட வலிக்கு மஞ்சள் சிறந்த நிவாரணியாகும். சிறிய மற்றும் நடுத்தர இரத்தக் காயம் ஏற்பட்டதும், சுத்தமான மஞ்சளைப் பொடி செய்து காயத்தில் தடவும்போது காயம் சீழ் வைக்காமல் இருக்கும்.

செரிமானம்:

நல்ல செரிமானத்திற்கு அன்னாசிப் பழம்(பைனாப்பிள்) மற்றும் பப்பாளிப்பழம் உதவும்.

உணவு உண்ட பின்பு கிராம்பினை வாயில் போட்டுச் சுவைத்தால், அமிலத்தன்மை அதிகரிப்பால் உண்டாகும் நெஞ்செரிச்சலைத் தவிர்க்கலாம். எனவேதான், சாப்பிட்டிற்கு பின்பு உண்ணும் பீடாக்களில் கிராம்பினை வெற்றிலையில் குத்தி வைத்திருப்பார்கள்.

மலச்சிக்கல்:

நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் செரிமானமின்மை ஆகியவற்றிற்குக் காலை உணவிற்கு முன்பு பாதி கப் அளவிற்கு வேக வைத்த பீட்ரூட்டை உண்டு நிவாரணம் பெறலாம்.

இஞ்சி வயிற்றுக்குச் சிறந்த உணவுப் பொருளாகும். அசௌரியமான வயிற்று வலிக்கு இஞ்சியையே நிவாரணப் பொருளாக நம் முன்னோர்கள் பராம்பரியமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

சளி, இருமல், தலைவலி:

கோடை வெப்பத்தினால் உண்டாகும் தலைவலிக்குத் தர்பூசணி சிறந்த தீர்வாகும். கோடையில் தினமும் தர்பூசணி உண்டால் நீர் இழப்பையும் தவிர்க்கலாம்.

சாதாரண சளி, இருமல், தொண்டைப் புண், தொண்டைக் கரகரப்பு ஆகியவற்றிற்கு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றினைச் கலந்து பருக வேண்டும். இது கோழையை அகற்றுவதோடு சளியினால் ஏற்படும் தொந்தரவுகளையும் நீக்கும்.

அன்னாசிப் பழச்சாறு இருமலுக்கு உண்ணும் சிரப்பினைப் போன்று ஐந்து மடங்கு சக்தி வாய்ந்தது. மேலும் அன்னாசிச் சாறு சளி மற்றும் காய்ச்சல் உண்டாவதைத் தடுக்கும்.

கட்டுப்படுத்த முடியாத அளவிற்குத் தொடர் இருமல் ஏற்படும்போது, உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேல் உயர்த்தினால் இருமல் கட்டுப்படும்.

உடல் உள் உறுப்புக்கள்:

தினமும் மாதுளைச் சாற்றினை அருந்தினால் இதயம் பலப்படும். மேலும் இச்சாறு குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் சிறந்த தீர்வாக அமையும்.

இதயம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வெள்ளைப் பூண்டு சிறந்த நிவாரணியாகும். உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம், கரோனரி இதய நோய், தமனிகளின் தடிப்பு ஆகிய இதயம் சம்பந்தமான நோய்களைத் தவிர்க்க வெள்ளைப் பூண்டினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நுரையீரல்:

திராட்சையின் பெரும்பான்மையான சத்துக்கள் அதனுடைய தோலில் குவிந்துள்ளன‌. நுரையீலை வலுப்படுத்தவும், நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு காணவும் இது மிகவும் உதவுகிறது.

கணையம்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. அதே சமயம் கணையத்தில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பினை 50 சதவீதம் குறைக்கிறது.

செல்கள்:

வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் விட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான புதிய செல்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன.

நுண்ணியிர்க் கொல்லிகள்:

மஞ்சள், இஞ்சி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தேன் ஆகியவை இயற்கை நமக்கு வழங்கியுள்ள இயற்கை நுண்ணுயிர்க் கொல்லிகள் (Anti-Biotic) ஆகும்.

கல்லீரல்:

பீட்ரூட், காரட், கிரீன் டீ, ஆப்பிள், ப்ரொக்கோலி, எலுமிச்சை, வால்நட், முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவகோடா, கீரைகள், வெள்ளைப் பூண்டு, மஞ்சள் ஆகியவை கல்லீரலைச் சுத்தம் செய்யும் இயற்கை உணவுப் பொருட்கள் ஆகும்.

உணவே மருந்தென உணர்வோம்! நலமுடன் வாழ்வோம்!!

=======================================================================================

நன்றி: எழுத்தாளர் வ.முனீஸ்வரன் அவர்கள் ['இனிது' இணைய இதழ்]

https://www.inidhu.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#more-25596  -செப்டம்பர் 26, 2021 


திங்கள், 27 செப்டம்பர், 2021

தமிழ் வளர்க்கும் சீன அரசு!!!


இந்தியாவில் பல மொழிகள் இருக்கையில், சீனர்களில் கணிசமானவர்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதும், தமிழ் கற்பதற்குச் சீன அரசு உதவித்தொகை வழங்குகிறது என்பதும் தமிழர்களாகிய நம்மைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற செய்தியாகும்.

சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழ் பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்திகொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதும் அறியத்தக்கது.

ஆர்வத்தால் தமிழ் கற்றதோடு, தமிழ் வளர்க்கும் பணியையும் சீனாவில் மேற்கொண்டுள்ள் சீன தேசத்துப் பெண்களைப் பேட்டி கண்டு, சுவையானதொரு பதிவைத் தமிழார்வலர்களுக்கு வழங்கியிருக்கிறார் சாராம் ஜெயராமன்[பிபிசி தமிழ்].

அவர், சீனாவின் 'யுன்னான் மின்சு' பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த் துறையைத் தொடர்புகொண்டு இது குறித்த தகவல்களைச் சேகரித்தார்.

அப்பல்கலைக்கழகத்தில் 2017ஆம் ஆண்டில் தமிழ்த்துறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

'யுன்னான் மின்சு' பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதி[சீனப் பெயர் கிகி ஜாங்), "நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலைப் பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்" என்று கூறுகிறார்.

"இந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன? உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா?" என்று கேட்டபோது, "இந்தப் படிப்பிற்குச் சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்குப் பிறகு தமிழை விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களைக் கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்கிறோம். தமிழைப் படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது" என்றார் நிறைமதி.

ஈஸ்வரி என்றழைக்கப்படும் Zhou xin 'பெய்ஜிங்' பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்க் கலாச்சாரத்தைச் சீன மக்களிடம் கொண்டு செல்வதே தனது நோக்கம் என்றும், உலகின் பழமையான தமிழ் மொழியைச் சீன மாணவர்கள் கற்க ஆர்வம் கொள்வது மகிழ்ச்சிகரமான செய்தியாகும் என்றும் பெருமிதப்படுகிறார் அவர்.

தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் தன் பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டுள்ளார் Zhou Xin. பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் ஈஸ்வரி மற்றும் வீராசாமி ஆகியோர் தமிழ்ப் பேராசிரியர்களாக உள்ளனர். 

Zhou Xin என்னும் கொஞ்சும் தமிழ் பேசும் இந்தச் சீனப் பெண், தமிழ் நாட்டில் இன்றளவும் சிலரால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் பேசும் தூய தமிழை நன்றாக உச்சரிக்கின்றார். இதன் மூலம்,  மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

ஈஸ்வரி சீனாவின் தேசிய ரேடியோவில் (CRI) தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியுள்ளார். Communication university of china-வில் தமிழைச் சிறப்புக் கவனமாகக்கொண்ட mass communicationஇல் பட்டம் பெற்ற பிறகு தன் பெயரை ஈஸ்வரி என மாற்றியுள்ளார்.

பாண்டிச்சேரியில் உள்ள 'puduchery institute of linguistic and culture'இல் நடைமுறைத் தமிழ் மொழியைக் கற்க, சீன உதவித்தொகை ஆறு மாதங்களுக்கு( 2013-2014 ) ஈஸ்வரிக்கு வழங்கப்பட்டது. நடைமுறையில் பேசப்படும் தமிழுக்கும் தாம் பேசிய தமிழுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் பெய்ஜிங் வரும் தமிழ்ப் பிரபலங்களைப் பேட்டி எடுக்கச் சிரமப்பட்டதாக ஈஸ்வரி தெரிவித்து இருந்தார். 

சீனாவில் உள்ள பெய்ஜிங் வெளிநாட்டு மொழி ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில், பெய்ஜிங், யூனான், ஷேன்டாங் உள்ளிட்ட பகுதியில் இருந்து 10 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் முனைவர் கலாதி வீராசாமி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழர்களின் பண்பாட்டையும்  கலாச்சாரத்தையும் கற்பிப்பதோடு, தமிழ் மொழியை எழுதுவது, உச்சரிப்பது, மொழிபெயர்ப்புச் செய்வது போன்றவையும் கற்பிக்கப்படும். நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு மாணவர்களுக்குத் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான பட்டம் வழங்கப்படும்.

2018-ல் லண்டனில் நடைபெற்ற சர்வதேச திருக்குறள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியர் ஈஸ்வரி தமிழில் தன் சொற்பொழிவை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .


=======================================================================================

ஆதாரம்: https://www.bbc.com/tamil/global-46945186

சனி, 25 செப்டம்பர், 2021

இது இயற்கை நிகழ்வா, இறைவனின் திருவிளையாடலா?!?!


இந்தப் பூச்சி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதன் பெயர், 'தயிர்கடைப் பூச்சி'; 'கும்பிடு பூச்சி' என்றும் சொல்வார்கள்[ஆங்கிலத்தில் பிரேயிங் மேன்டிஸ் (Praying mantis). 

பெரும்பாலும் கூட்டமாகத் திரியாமல் தனியாக இரையைத் தேடி அலையும் குணம் கொண்டது இது. இது ஏனைய பூச்சிகளை உணவாக்கி வாழ்வது. 

பார்வைக்கு 'அப்பிராணி'யாகக் காட்சியளிக்கும் இந்த இனப் பெண் பூச்சி, பருவ வயதை அடைந்தவுடன், இனப்பெருக்கத்திற்காக ஆண் பூச்சியைத் தேடி அலையும். தனக்கேற்ற ஆண் கிடைத்தவுடன் அந்த ஆணிடம் மிகவும் சாதுவாகப் பழகும். தன் அழகால் அதற்குப் புணர்ச்சி வேட்கையைத் தூண்டும். இரண்டும் உடலுறவு கொள்ளும்.

உடலுறவு நிகழும்போதுதான் அந்தக் கொடூரமும் அரங்கேறுகிறது.

ஆண் பூச்சி பேரின்ப மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த அற்புதமான நேரத்தில், பெண் 'தயிர்கடைப் பூச்சி' தன் வாயை ஆணின் கழுத்தருகே கொண்டுசென்று, தனது கூரிய பற்களைப் பயன்படுத்தி ஆணின் தலையைக் கொய்துவிடும்; முழுமையாக உண்டுவிடும்.

கருவுற்று, வாரிசைப் பெற்றெடுக்கும்வரை இதற்கு உடலுறவு கொள்வதில் நாட்டம் இருப்பதில்லை.

மீண்டும் உடலுறவு வேட்கை தோன்றும்போது அடுத்தவொரு ஆண் தயிர்கடைப் பூச்சியைத் தேடிக்கொள்ளும். உடலுறவு முடிந்ததும் அந்த ஆண் பூச்சியின் கதியும் அதோகதிதான்.

இது, இந்தப் பூச்சி இனத்தைப் பொருத்தவரை ஓர் இயற்கை நிகழ்வு.

இந்த இயற்கை நிகழ்வுக்குள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிற ஒரு விசித்திரம் மறைந்திருக்கிறது. அது.....

தலை துண்டிக்கப்படுவதால், அந்தரங்க உறுப்பை வெளியேற்றுவதற்கு ஆணை பிறப்பிக்கும் அதன் மூளை செயலற்றுப்போகிறது. அதனால், அதன் உறுப்பு வெளியேற்றப்படாமலே இருக்கும். இதன் விளைவாக, பெண் பூச்சி நீண்ட நேர அந்தரங்க சுகத்தைப் பெறுகிறதாம்!

இந்தப் பெண் தயிர்கடைப் பூச்சிக்கு இப்படியொரு கொடூர குணம் வாய்த்தது இயற்கையானதொரு நிகழ்வுதான் என்றால் பக்தகோடிகள் ஏற்கமாட்டார்கள். அதற்கு அந்தக் குணத்தைத் தந்தருளியவர் கடவுளே என்பார்கள், அனைத்தையும் படைப்பவனும் இயக்குபவனும் அவனே என்பதால்.

உடன்படுவதைத் தவிர நம்மைப் போன்றவர்களுக்கு வேறு வழியில்லை. ஹி... ஹி... ஹி!!!


====================================================================================

மூலம்:🦗🐝

ரவீந்தர் 'பதில்'[https://ta.quora.com/ ]


வெள்ளி, 24 செப்டம்பர், 2021

கட்டிய மனைவியும் கட்டாய உடலுறவும்!!


ஓர் ஆணும் பெண்ணும் மணம் புரிந்து இணைந்து வாழ்வது உடலுறவுக்கு மட்டுமே அல்ல. எனினும், இருவரும் மனம் ஒன்றி மகிழ்வுடன் வாழ்வதற்கு அதன் பங்கு மகத்தானதாகும்.

உடலுறவின் பயனை முழுமையாகப் பெறுவதற்கு, உடலுறவு கொள்வதற்கு முன்பு ஒருவரின் இசைவை மற்றவர் பெறுவது, அல்லது, குறிப்பால் உணர்வது/உணர்த்துவது மிக மிக முக்கியம்.

ஆனால், இது விசயத்தில் இன்றளவும் பெண்களுக்கு இதற்கான உரிமை வழங்கப்படவில்லை. 

காமம் கிளர்ந்தெழும்போது, கணவன் மனைவியின் விருப்பத்தைக் கருத்தில் கொள்வதில்லை. உறவு கொள்ளும்போது மனைவியின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு நடந்து கொள்வதும் இல்லை.

இது விசயத்தில் மனைவி தன் இசைவின்மையை வெளிப்படுத்துவதில்லை. அதற்கான துணிவு அவளுக்கு இல்லை; உரிமையும் வழங்கப்படவில்லை.

தன் சம்மதம் இல்லாமல், தன் கணவன் உடலுறவு வைத்துக் கொள்வதைக்கூட அவனின் உரிமை என்றே பெரும்பாலான பெண்கள் நம்புகின்றனர். இதற்கு அவர்கள் பெற்றோரால் வளர்க்கப்படும் முறையும் காரணமாக அமைகிறது.

உடலுறவு விசயத்தில் பெண்களைக் கொத்தடிமைகளாக ஆக்கியதில் முக்கியப் பங்காற்றியவை மதங்கள் எனலாம். 

எல்லா மதங்களும் ஆண்களை மையப்படுத்தியே உள்ளதால், அவற்றின் சிந்தனைகளும் ஆண்களுக்கு ஏற்றதாகவே உள்ளன. கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து என அனைத்து மதங்களும், தம் விருப்பு வெறுப்பைப் புறம் தள்ளி ஆண்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களின் இச்சையைத் தணிக்கக் கடமைப்பட்டவர்கள் பெண்கள் என்றே வலியுறுத்துகின்றன.

பெண் தனது பாலியல் ஆசைகளை வெளிப்படுத்தினாலோ ஆண் அவளது நடத்தையைச் சந்தேகப்படுகிறான். அவளின் அந்தரங்க ஆசைகளைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகூட மிக மிகப் பெரும்பானாலான ஆண்களிடம் இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை.

பெண் தன் விருப்பமின்மையை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ உணர்த்தினால்கூட, அதை அலட்சியப்படுத்தி, அவளை வன்புணர்வு செய்யும் போக்கு ஆடவரிடத்தில் தொடர்கிறது.

'கணவனுக்குத் தேவைப்படும்போதெல்லாம் மனைவி பாலியல் உறவுக்குத் தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' என்று டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கொன்றில் கூறியிருக்கையில், “ஓர் ஆணுக்கும் அவரது சட்டப்பூர்வத் திருமணமான மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவு, வலுக்கட்டாயமானதாகவோ, அவளுடைய விருப்பத்திற்கு எதிராகவோ இருந்தாலும், அது பலாத்காரம் அல்ல” என்று வேறொரு வழக்கில் வேறொரு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது விநோதமாக உள்ளது[அண்மையில் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். குறிப்பாகச் சமூக வலைதளங்களில் இது குறித்த எதிர்ப்பை அதிகம் காண முடிகிறது].

2016ஆம் ஆண்டு திருமண வன்புணர்வு பற்றிப் பேசிய மேனகா காந்தி, "திருமண உறவில் வன்புணர்வு என்பது பற்றி மேற்கத்திய நாடுகளில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்தியாவில் கல்வியின்மை, வறுமை, சமூகப் பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள், திருமணத்தின் புனிதம் ஆகிய காரணங்களால் திருமண உறவில் வன்புணர்வு செய்வதைக் குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருவது கடினம்" என்று கூறியிருப்பது, நினைவுகூர்ந்து சிந்திக்கத்தக்கது

சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 32 நாடுகளில், 'சட்டப்படி திருமணம் செய்த மனைவியுடன், வலுக்கட்டாயமாகக் கணவன் உடலுறவு கொண்டால், அது குற்றமாகாது' என்ற சட்டம் உள்ளது என்பதும் அறியத்தக்கது.

கணவனின் கட்டாய உறவினால் பெண்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, ஹார்மோன் தொடர்புடைய நோய்கள், மனநலம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மனைவியின் பாலியல் ஆசைகளும் கடுமையாகப் பாதிக்கின்றன. இதனால் தனது கணவன் மீதான பாசமும் பற்றும் குறைகின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வு:

*34 வயதான சஃபா திருமணம் நடந்த அன்று இரவே, அவரது கணவரால் வன்புணரப்பட்டார். அதில் அவருக்குத் தொடைப் பகுதியிலும், மணிக்கட்டிலும், வாய்ப் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டன.

அவர் சொன்னார்: "எனக்கு அப்போது மாதவிடாய். நான் உடலுறவுக்கு அன்று இரவு தயாராகவில்லை. என் கணவரோ, நான் உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பதாகக் கருதினார்; அவர் என்னை அடித்தார்; கையில் விலங்கிட்டார்; என் குரல்வளையை நெரித்தார்; என்னை வன்புணர்ந்தார்."

இத்தனை நடந்த பிறகும், சமூக விழுமியங்களைக் கருதி சஃபா தன் கணவருக்கு எதிராக இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

ஆக.....

மனைவியின் விருப்பம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்யும் கணவனைத் தண்டிப்பது இப்போதைக்குச் சாத்தியம் இல்லை. பாலினச் சமத்துவத்தைப் பரவலாக்காமல் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது கடினமே. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மட்டுமே காலத்தின் தேவை.

====================================================================================

நன்றி:

https://www.bbc.com/tamil/india-44902711

https://www.bbc.com/tamil/global-57857722

https://tamil.samayam.com/latest-news/india-news/the-verdict-by-chhattisgarh-court-on-marital-rape-has-created-furor/articleshow/86032074.cms

https://www.seithisolai.com/will-forced-intercourse-affect-womens-mental-health.php

https://www.dinamalar.com/news_detail.asp?id=2831086&Print=1


வியாழன், 23 செப்டம்பர், 2021

'விலை' இல்லாத விலைமகள்!!!

இது நடந்த நிகழ்வு அல்ல; 'நடந்தால் நல்லதுதானே' என்னும் என் எண்ணத்தால் உருவான 100% கற்பனைக் கதை! விரும்புகிறீர்களோ இல்லையோ, சற்றேனும் மனம் நெகிழ்வீர்கள் என்பது என் நம்பிக்கை!

============================================================================     
வாடிக்கையாளர்களை எதிர்கொண்டு வரவேற்கும் வழக்கமுள்ள மாலா, அன்று படுக்கையில் கிடந்தவாறே, “வாங்க மணி” என்று  இதமான குரலில் மணிமொழியனை வரவேற்றாள்.

“உடம்புக்கு என்னம்மா?” என்றான்  மணிமொழியன்.

“ரெகுலர் செக்கப் போயிடுறேன்; நாள் தவறாம உடற்பயிற்சி செய்யுறேன். உடம்புக்கு ஒன்னும் இல்ல. மாடிப்படியில் தடுக்கி விழுந்ததில் இடுப்பில் அடி பட்டுடிச்சி. பத்து நாள் போல ஓய்வில் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார்” என்றாள் மாலா. 

“ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கணும். பரவாயில்லை. ரெண்டு வாரம் கழிச்சி வர்றேன். உடம்பைப் பார்த்துக்கோ.” -நகர முற்பட்டான் மணிமொழியன்.

“கொஞ்சம் இருங்க. என் ஃபிரண்டு அபிராமியை வரச்சொல்றேன். என்னைவிட ஆள் நல்லா இருப்பா” என்றாள் மாலா.

“வேண்டாம்.”

“ஏங்க?”

“மாலா, எனக்கு எப்பவும் ‘அது’ உன்னோடு மட்டும்தான்.”

அழகிய புருவங்கள் வளைந்து நெளிய, “அப்படியா?” என்றாள் அவநம்பிக்கை நிறைந்த தொனியில்.

“அது விஷயத்தில் கட்டுப்பாடில்லாமல் விளையாடினதில், என் அப்பா எயிட்ஸ் நோயாளி ஆனார்; அம்மாவுக்கும் தானம் பண்ணினார். அந்த நோய்க்கு ரெண்டு பேருமே பலியானாங்க.....”

“அடடா, அப்புறம்?”

எப்பவும் மனைவியோடு  மட்டும்தான் உடலுறவு கொள்வேன்னு சபதம் எடுத்தேன். என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ‘அந்த’ நோய்க்கு ஆளானதால, மருத்துவமனையில் செக்கப் செய்துகிட்டேன். எனக்கு அந்த நோய் இல்லேங்கிறது தெரிஞ்சிது. ஆனா, அதை யாரும் நம்பல;  பெண் தரவும் முன்வரல.  பிரமச்சாரியாவே காலம் கடத்திட நினைச்சேன். அது அவ்வளவு சுலபமில்லைன்னு  புரிஞ்சபோது, ஒரு புரோக்கர் மூலமா உன்னைச் சந்திச்சேன்; நிரந்தர வாடிக்கையாளனாகவும் ஆனேன்.....”

இடைவெளி கொடுத்துச் சொன்னான் மணிமொழியன்: “இப்பவும் நான் ஏக பத்தினி விரதன்தான் மாலா. உன்னைத் தவிர வேறொருத்தியை நான் மனசாலும் நினைக்கிறதில்ல.” 

கண்கள் குளமாக அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மாலா. “நானும் இனி உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருக்க விரும்புறேன். இதுவரை விலைமகளா இருந்தாலும், இனி உங்களுக்குத் துரோகம் செய்யாம நல்ல குடும்பப் பெண்ணா என்னால் வாழ்ந்துகாட்ட முடியும். என்னை ஏற்பீங்களா” என்றாள் தழுதழுத்த  குரலில்.

முகத்தில் பரவசம் பொங்கி வழிய, அவள் கன்னங்களில் மிருதுவாய்ச் சில முத்தங்கள் பதித்து, “நான் இனி உன் வாடிக்கையாளன் அல்ல; வாழ்க்கைத் துணைவன்” என்றான் மணிமொழியன்.
====================================================================================

புதன், 22 செப்டம்பர், 2021

கல்யாணத்துக்கு 'ஜாதகப் பொருத்தம்'! கள்ள உறவுக்கு?!


//'அவிஷேக் மித்ரா' மும்பை நகரவாசி.

இந்த ஆள் தன்னுடன் பணிபுரிகிற ஒரு பெண்ணை, பின்னர் திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி, நம்பவைத்துப் பலமுறை அவளுடன் கலவி சுகம் அனுபவிக்கிறான்.

அந்தப் பெண் கருவுறுகிறாள். இவனுடைய வற்புறுத்தலில் கருக்கலைப்பும் செய்துகொள்கிறாள். இனியும் தாமதிப்பது தவறு என்பதை உணர்ந்த அவள், தன்னைத் திருமணம் புரியும்படி இவனை வற்புறுத்துகிறாள். விளைவு.....

அவளை மணந்துகொள்ள மறுத்ததோடு, அவளுடனான உறவையும் துண்டிக்கிறான் அவிஷேக் மித்ரா.

பாதிக்கப்பட்ட பெண், மும்பை உயர் நீதிமன்றத்தில் இவன் மீது வழக்குத் தொடுக்கிறாள்.

நீதி விசாரணையில், "தான் உறவுகொண்ட பெண்ணுக்குத் துரோகம் செய்வது என் கட்சிக்காரரின் நோக்கமல்ல. மணம் புரிய மறுத்ததற்கான காரணம், இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லாததே. எனவே, என் கட்சிக்காரர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதாடுகிறார் இந்த ஆளின் வழக்குரைஞர்.

வழக்கை விசாரித்த நீதியரசர், "பெண்ணுடன் கூடிக் களித்துவிட்டு, திருமணம் செய்வதற்கு 'ஜாதகப் பொருத்தம்' இல்லையென்று சொல்வதை ஏற்க இயலாது. வழக்கைத் தள்ளுபடி செய்ய முடியாது" என்று தீர்ப்பளித்திருக்கிறார்//

இது, இன்றைய[22'09.2021] நாளிதழ்[காலைக்கதிர்]ச் செய்தி.

                                             *  *  *

மூடர்களின் குருதியில் இரண்டறக் கலந்துவிட்ட ஜோதிட நம்பிக்கையைப் புறம் தள்ளி நீதியரசர் வழங்கிய அதிரடித் தீர்ப்பு பெருமகிழ்ச்சி தருகிறது.

"கல்யாணம்னா ஜாதகப் பொருத்தம் பார்க்கிற மாதிரி, ஒரு பொண்ணை நம்ப வைத்துக் கள்ள உறவு கொள்வதற்கு முன்னாடியும் பொருத்தம் பார்த்துட்டா, உறவைத் துண்டிக்கும்போது அவள் தைரியமா நீதிமன்றத்தில் வழக்குப் போடுவாளா,  அப்பாவியா தூக்கில் தொங்கிடுவாளான்னு தெரிஞ்சிடுமே, ஏன் உங்க கட்சிக்காரர் பார்க்கலையா?' என்று நீதியரசர் 'சுளீர்' கேள்வியொன்றையும் எழுப்பியிருப்பாரேயானால் அது நம் மகிழ்ச்சியை இருமடங்காக ஆக்கியிருக்கும்!

நீதியரசருக்கு நம் நன்றி.

====================================================================================

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

கொலையில் முடிந்த முகநூல் காமம்!!!


விளாத்திகுளத்தைச் சேர்ந்த முருகன் என்பவன்[வயது 28] 'அமுதா' என்ற பெண் பெயரில் முகநூல் கணக்கு ஒன்று உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளான்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு முருகன்[24], இந்த 'அமுதா' முருகனிடம் முகநூல் வழியாகத் தொடர்பு கொண்டிருந்தான்.

காஞ்சி முருகனிடம் விளாத்தி முருகன் அலைபேசியில், தன் பெயருக்கேற்பப் பெண் குரலில் பேசியுள்ளான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். நட்பு காதலாக மாறியது.

இருவரும் சந்தித்து அளவளாவத் திட்டமிட்டார்கள். அதன்படி,  காஞ்சி முருகன் எட்டையாபுரம் வந்துள்ளான். நேரில் சந்தித்தபோது, தான் பேசிப் பழகிய நபர் பெண்ணல்ல, ஆண் என்பது அவனுக்குத் தெரிந்தது.

ஏமாற்றத்துடன் அவன் தன் ஊர் திரும்ப முடிவெடுத்தபோது, விளாத்தி முருகன் அவனுடன் இணக்கமாகப் பேசி, தன்னுடன் அழைத்துச் சென்றான். 

'அது'க்குத் தோதானதோர் இடத்தில் இருவரும்  ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அடுத்த ரவுண்டுக்கு[இரண்டுக்குமான இடைவெளி?] விளாத்தி காஞ்சியை வற்புறுத்த, அவன் மறுக்க, இருவரும் புணர்ந்து களித்த காட்சியைப் படம் எடுத்து வைத்திருப்பதாகவும், காஞ்சி முருகனின் பெற்றோருக்கு அதை அனுப்பிவிடுவதாகவும்  விளாத்தியான் மிரட்டினானாம்.

சினம் கொண்ட காஞ்சியான், விளாத்தியானைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டான்; மீண்டும் ஒரு தடவை ஓரினக் கலவிக்குச் சம்மதிப்பதாகச் சொன்னான்.

சரக்கும் குளிர்பானமும் வாங்கிக்கொண்டு இருவரும் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தைச் சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்றார்கள்[களவு, கொலை என இரண்டுக்குமே ஏற்ற இடம்தான்!!]

திட்டமிட்டபடி, விஷம் கலந்த குளிர்பானத்தைக் காஞ்சி முருகன் விளாத்தி முருகனுக்கு கொடுத்துள்ளான். அதைக் குடித்த விளாத்தி முருகன் மயக்கமடைந்தான்.

காஞ்சியான், அருகில் கிடந்த கல்லை விளாத்தியான் தலையில் போட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினான். அவனின் கெட்ட நேரமோ என்னவோ, கொலை செய்த இடத்தில் தன் மணிப்பர்ஸ்ஸைத் தவற விட்டுச் சென்றுள்ளான்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தைச் சுடுகாட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து மாசார்பட்டிக் காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிச் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தார்கள். அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராப் பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர்.

அதில் இறந்தவர் விளாத்திகுளம் அருகே உள்ள மேலஈரால் பகுதியைச் சேர்ந்த முருகன்(28) என்பதும், அவனைக் கொலை செய்தவன் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியைச் சேர்ந்த இன்னொரு முருகன்[24] என்பதும் தெரியவந்தது.

காஞ்சி முருகன் தனது வீட்டிற்குச் சென்றபோது தன்னுடைய மணிபர்ஸ்சைத் தவறவிட்டு வந்ததை அறிந்து, அதை எடுப்பதற்காக மறுநாள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சென்றபோது அவனைத் தனிப்படைப் போலீசார் கைது செய்தனர்.

முகநூல் நட்பு காதலாகி, காமமும் ஆகி, ஓரினச் சேர்க்கைக்கு உந்தித் தள்ள, அந்த அசிங்கம் அரங்கேறியிருக்கிறது. அப்புறம் அதுவே ஒரு கொலைக்கும் காரணமாகிவிட்டது.

எவரேனும், இதைப் போன்ற பரபர முகநூல் காமக் கதைகளைக் குறும்படமாகத் தயாரித்து 'யூடியூப்'இல் வெளியிட்டால்[முகநூலில் தொடராகவும் எழுதலாம்], காதல் கத்தரிக்காய் என்று புத்திகெட்டு அலையும் இளவட்டங்கள் கொஞ்சமேனும் பாடம் கற்பார்கள் என்பது உறுதி.

====================================================================================

நன்றி: https://www.bbc.com/tamil/topics/c9wpm0exkdpt  -20 செப்டெம்பர் 2021

திங்கள், 20 செப்டம்பர், 2021

புனிதமும் அபுனிதமும்!!!

//உத்தரப் பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர்[இதுவும் புனிதமானதா?!?!] கொண்டுவரப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜய் ஜாலி நடத்தும் டெல்லி 'கல்வி வட்டம்' என்ற அரசு சாரா அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

சிறிய குடுவைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த நீர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டெல்லியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது// 

19.10.2021இல் மாலைமலரில் வெளியான செய்தி இது[https://www.maalaimalar.com/news/topnews/2021/09/19032510/3026911/Tamil-News-Holy-water-came-from-115-countries-of-the.vpf ]

நீரைப் பொருத்தவரை, 'சுத்த நீர்', 'அசுத்த நீர்', 'குளிர்ந்த நீர்', 'சுடு நீர்' என்றெல்லாம் பாகுபாடு செய்யலாம்.

இவை தவிர, ஒட்டுமொத்த உலகிலும் 'புனித நீர்', 'அபுனித நீர்' என்று  எதுவும் கிடையாது. அறிவியலால் ஆராய்ந்து அறியப்பட்ட உண்மை இது.

'புனிதம்' என்றால் என்ன?

புரியக்கூடிய வகையில் இதற்கு விளக்கம் தந்தவர் எவருமில்லை.

அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களுமே கடவுளால் படைக்கப்பட்டவை என்கிறார்கள். இவற்றில் நீருக்குள் மட்டும் கடவுள் புனிதத்தை ஏற்றினாரா? 

காற்றும், நெருப்பும், மண்ணும் பிறவும் புனிதமற்றவையா?

புனிதமானது என்று சொல்லப்பட்டுவரும் 'கங்கை', சாக்கடை நீரும், சாயக்கலவைகளும், பிணங்களும், மனிதக் கழிவுகளும் கலந்து கலந்து கலந்து நாறிக் கிடக்கிறது.

இதில்தான், பக்தகோடிகள் பாவம் தீரக் குளித்தார்கள்; குளிக்கிறார்கள். இதனால் புதுப் புது நோய்கள் பரவுவது அயோத்தி தாசர்களுக்கு ஏனோ தெரியாமல் போனது; அல்லது, அறியாதது போல் நடிக்கிறார்கள்.

கும்பாபிஷேகம், கோபுர அபிஷேகம் என்று இந்த அசுத்த நீரைத்தான் இத்தனை காலமும் பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள். இது போதாதென்று 115 நாடுகளிலிருந்து புனித நீர் கொண்டுவந்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறார்களாம்.

ராமர் குடியேற்றப்பட இருக்கிறார் என்பது அறிவிக்கப்பட்டவுடனே, அங்கே சூழ்ந்துகொண்டிருக்கும் அத்தனைத் தீய சக்திகளும் கொடிய நுண்கிருமிகளும் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடுமே, அப்புறம் எதற்குப் புனித நீர்ப் பயன்பாடு?

115 ஆறுகளிலிருந்து புனிதநீர் கொண்டுவந்தார்களாம். அதென்ன 115?  உலகளவில் இதற்குமேலும் ஆறுகள் இல்லையா?

ஆற்று நீரில் மட்டும்தான் 'புனிதம்' கலந்துள்ளதா? சிறு சிறு ஓடை நீரிலும் வாய்க்கால் நீரிலும் புனிதம் கலக்கவில்லையா? இந்தக் கலப்படத்தை ஆறுகளில் மட்டுமே கடவுள் எனப்படுபவர் செய்தது ஏன்?

'புனிதம்' என்று ஒன்று இருப்பது உண்மையானால், அது நிச்சயமாக நீரில் இல்லை; சூதுவாதற்ற மனித நெஞ்சங்களில் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. எனவே.....

கட்டப்படுகிற ராமர் கோயிலில் ராமர் குடியேறுவதும், கட்டடத்தில் புனிதம் கலப்பதும்.....

'ஆற்று நீரோ குளத்து நீரோ, சுத்த நீரோ அசுத்த நீரோ அதில் மனிதாபிமானத்தைக் கலந்து கட்டினால் மட்டுமே சாத்தியமாகக்கூடும்' என்பதை ராமர் தாசர்கள் புரிந்துகொள்வது நல்லது.

இது, இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே நன்மை பயப்பதாகும்!

https://kadavulinkadavul.blogspot.com/2021/09/blog-post_20.html

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

ஓர் 'இந்தி'யரால் புகழ்ந்து போற்றப்படும் தமிழ்மொழி!!!


தமிழ்நாட்டில் வாழும், 'இந்தி'யைத் தாய்மொழியாகக் கொண்ட 'தன்ராஜ் ஜயச்சந்திரன்', தன் தாய்மொழியான இந்திக்குச் சமமாகத் தமிழையும் விரும்புவதாகச் சொல்பவர். Quoraவின், 'எவ்வகையிலெல்லாம் இந்தியைக் காட்டிலும் தமிழ் மொழி மேம்பட்டது?['கேள்வி-பதில்' பகுதி] என்னும் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

*தமிழர்கள் தங்கள் மொழியைத் தங்களின் உயிரைப் போல் பாதுகாப்பவர்கள். 

*தாய்மொழியில் பெயரிடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு மட்டுமே, 

*அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைப்பவர்கள்[பெயர் சூட்டல் விசயத்தில் நிலைமை முற்றிலுமாய் மாறிவிட்டது].

*எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நமது சொந்தப் பிரதமரால் ஹிந்தியில் ஒரு கவிதைகூட ஓத முடியாது என்று நான் பந்தயம் கட்டுவேன். அதே வேளையில்,  தமிழ்நாட்டில் 5 வயதுக் குழந்தைகூட எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறைந்தபட்சம் இரணடு பாடல்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும்.

*இந்தியின் வரலாறு சமஸ்கிருதத்தில் உள்ளது. ஆனால், தமிழர்களின் வரலாறு தமிழிலேயே உள்ளது.

*மேற்கண்ட இந்தச் சிறப்பம்சகளால், மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது தமிழ் மிக மேம்பட்டதும், ஆற்றல் மிக்கதுமான மொழியாக உள்ளது.

                                         *  *  *

All the people please understand that , Tamil is as old as Sanskrit but still a 5 years old kid can easily recite a poem written almost 2000 years before.

How it is possible? Tamils preserved their language like their life,Only state named after their Language, Only state where they used to have their kids name after Tamil.

I bet you that our own Prime Minister cannot recite a poem in Hindi at any given instance but in Tamil Nadu even a 5 year old kid will easily recite at least a Tamil couplet at any instance.

Hindi’s history is in Sanskrit but Tamils history is still Tamil only.

This aspect makes Tamil stand tall and strong compared to any other known language.( My Mother tongue is Hindi but i”m from Tamil Nadu, I love my mother tongue and Tamil equally )

சனி, 18 செப்டம்பர், 2021

மூடநம்பிக்கை வளர்ப்பில் 'முன்னணி' வகிக்கும் இந்தியா!!!


லகளவில் 36% மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகள் உள்ளனர். இவர்கள் மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் முரண்பாடுகளை எதிர்க்கின்றனர். இவை அனைத்தையும் அறிவியல் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்கின்றனர். 

வளர்ச்சியடைந்த நாடுகளில் நாத்திகவாதிகளே அதிகளவில் உள்ளனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் அறிவியல் வளர்ந்திருப்பதால் அனைத்தையும் அறிவியல் நோக்குடன் ஆராய்கிறார்கள். இதனால் அங்கு மூடநம்பிக்கைகள் குறைந்துள்ளன.

வளர்ச்சி அடையாத நாடுகளில்  மூடநம்பிக்கைகள் அதிகம் உள்ளன. காரணம், அறிவியல் பார்வை மிகவும் குறைவாகவே இருப்பதுதான். இதனால், மதமறுப்பு மற்றும் நாத்திகவாதிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

"ஆழ்ந்து சிந்திக்கும் ஆர்வமோ அதற்குரிய மனப்பக்குவமோ இல்லாத காரணத்தால்,  மனிதன் மதத்தை நாடுகிறான்; அறிவியலுடன் முரண்படுகிற அமானுஷ்யங்கள் மீது அதிக நாட்டம் கொள்கிறான்" என்கிறார் மதங்கள் பற்றிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த ரடல்ப் ஓட்டோ ( Rudolf Otto 1869 – 1937) என்பவர். 

"மதம் இல்லாமல் வாழ முடியாத சூழ்நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான். மதம் ஒரு போதையூட்டும் பொருள். மனிதனுடைய பண்பாட்டு வளர்ச்சிக்கு மதம் ஒருபொழுதும் பயன்படுவதாக இருக்காது. இது தேவையற்ற ஒன்றாகவே உள்ளது" -கார்ல் மார்க்ஸ்.

உலகளவில்.....

மத நம்பிக்கை உடையவர்கள் - 59 %

மத நம்பிக்கை இல்லாதவர்கள் - 23%

உலகளவில் படிப்பாளிகளிடம் மத நம்பிக்கை குறைவாக உள்ளது. கல்வியறிவு இல்லாதவரிடம் மத நம்பிக்கை அதிகம் உள்ளது. வறுமையில் வாடுபவர்களே மதத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். 

மத நம்பிக்கையற்றவர்கள் தங்களுக்கு மதத்தின்மீது நாட்டமில்லை என்றாலும் அனைத்து மதம் சார்ந்த மக்களை மாண்போடு நடத்துகிறார்கள். இந்த மாண்பு, மிக மிகப் பெரும்பாலான மதவாதிகளிடம் இல்லை.

மதப் பற்றாளர்களுக்குப் பிற மதங்கள் போதிக்கும் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது புரிதல் இல்லை. பிறமதத்தினரை இழிவாக நினைப்பதும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆனால், மதமறுப்புக் கொள்கையுடையவர்கள் மத மோதல்களைத் தடுப்பதற்குப் பெரிதும் பாடுபடுகிறார்கள்.

மதங்களே இல்லை என்றாலும் மக்கள் வாழ்க்கையில் எந்தவொரு பாதிப்பும் நிகழாது.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கடவுளால் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்கென்று தனித் தனி ஆன்மாக்கள் உள்ளன என மத நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர். 

உண்மையில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும், பரிணாம வளர்ச்சியின் காரணமாக உருவானவை. இவற்றிற்கு ஆன்மாக்கள் உள்ளன என்பது அப்பட்டமான கற்பனை.

உலக அளவில் நாத்திகவாதிகள் & எந்த நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கான ஒரு பட்டியல்:

1. சீனா 1430479

2. ஜப்பான் 16 31 31 22

3. கிரீஸ் குடியரசு 20 48 30 2

4. பிரான்ஸ் 37 34 290

5. தென் கொரியா 52 31 152

6. ஜெர்மனி 51 33 15 1

7. நெதர்லாந்து 43 42 14 1

8. ஆஸ்ட்ரியா 42 43 10 5

9. ஐஸ்லாண்டு 57 31 10 2

10. ஆஸ்திரேலியா 37 48 105

11. அயர்லாந்து 30 44 10 16

இந்தியா ?!?!?!

இந்தியாவில் மதவெறியர்களின் ஆதிக்கம் நாளும் அதிகரிப்பதால், மூடநம்பிக்கைகளின் அளவு கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. இந்நிலை நீடிக்கும்வரை இங்கு 'வளர்ச்சி' என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே.

நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் ஒருங்கிணைந்து அதிதீவிரமாகச் செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்!

====================================================================================

ஆதார நூல்: 'மதங்களின் பெண்கள்'  -B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்

ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி - george1sasy@gmail.co


வியாழன், 16 செப்டம்பர், 2021

'அரைநிர்வாணம்' எல்லாமே ஆபாசம் அல்ல!!!


அந்தக் கடற்கரை முழுக்க அரைநிர்வாண மனிதர்கள்.

உடை உடுத்துவதில் கட்டுப்பாடு இல்லை. ஆண்கள் குட்டைக் கால்சட்டையுடனும்,  பெண்கள்  உடலோடு ஒட்டிய குட்டிக் குட்டி மார்புக் கச்சை & ஜட்டியுடன் நடமாடுகிறார்கள்.

படுத்துக் கிடக்கிறார்கள்; பார்வையை அந்தரத்தில் ஊடுருவவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். 

காற்று வாங்க வரும் இடத்தில் இந்த அரை நிர்வாணக் கோலம் எதற்கு?

சூரிய பகவானின் தரிசனம் வாழும் இடங்களில் எளிதில் வாய்க்காததால், வைட்டமின்[D] பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக இருக்கலாம்.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தோதான இடம் கடற்கரைதான் என்பதாகவும் இருக்கக்கூடும்.

கடற்கரைக் காற்று மாசு கலவாதது; சுவாசித்தால் மூச்சுத் திணறல், சளித் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபடுவது சாத்தியம் என்பதாகவும் இருக்கலாம்.

கண் மூடி, மௌனித்துக் கிடந்து தியானம் செய்யவும், ஆழ்ந்து சிந்திக்கவும் ஏற்ற இடம் இது என்னும் நம்பிக்கையும் ஏற்கத்தக்க காரணம்தான்.

ஆக, காரணம் எதுவாயினும்.....

நீண்ட பெரிய கடற்கரையெங்கும் காணக் கிடக்கும் அவர்களில் எவருடைய பார்வையிலும் கள்ளத்தனம் இல்லை; காமம் கசியும் விரசம் கலந்திருக்கவில்லை

அங்க லாவண்யங்களைக் காட்சிப் பொருளாக்கவோ, அதை எதிர்பார்த்தோ வந்தவர்கள் அல்ல அவர்கள். வந்த இடத்தில் சிறு சிறு தவறுகளுக்குக்கூட இடம் தராமல், பிறரை மதித்து, பிறர் மதிக்க நடந்துகொள்கிறார்கள்.

புகைப்படம் எடுப்பவர்கூட மதிக்கத்தக்கவராகவே தெரிகிறார். 'எவளுடைய மார்புக் கச்சையேனும் நெகிழ்ந்து சரிந்தால் படம் பிடிக்கலாம்' என்றெண்ணும் கழிசடையாக இல்லாமல், எதிர்ப்படுவோரையெல்லாம் எதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார். 

அயல்நாட்டவர்  என்றாலே 'கடற்கரைகளைத் தேடிப் போய் அம்மணக் கோலத்தில் ஆபாசம் காட்டுபவர்கள்; அசிங்கம் பண்ணுகிறவர்கள்' என்ற நம் தப்பான எண்ணத்தைத் தவிடுபொடி ஆக்குகிறது இந்தக் கடற்கரைக்  காட்சி. 

அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ந்திடக் கீழ்க்காணும் காணொலியைச் சொடுக்குங்கள்.

புதன், 15 செப்டம்பர், 2021

கன்னடனாக இருந்து 'ஒரிஜினல்' இந்தியன் ஆன அண்ணாமலை!!!


தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவது தொடர்பாக, சட்டப்பேரவையில் 13.09.2021 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது பற்றிப் பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சியினர் பதிவுசெய்து வருகிறார்கள். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காட்டமாக..... 

"திமுக தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும்" என்று கூறியுள்ளார்.

இது 'நக்கீரன்' செய்தி[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/annamalai-criticized-dmk-party].

'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வு செய்யப்படுவதால் நடுவணரசுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை.

அப்புறம் ஏன் அண்ணாமலை இத்தனை காட்டமாக அறிக்கை வெளியிடுகிறார்?

தமிழ் மாநிலத்திடமிருந்து பறித்துக்கொண்ட உரிமைகளில் ஒன்றை அது[மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு] இழக்க நேர்கிறது என்பதாலா?

கர்னாடகத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவரை, 'கன்னடன்'["கடைசி மூச்சு வரை.. உயிர் இருக்கும்வரை.. நான் பெருமைமிக்க கன்னடன்.."] ஆக இருந்த அண்ணாமலை தமிழ்நாடு வந்த பிறகு 'தமிழன்' ஆகவில்லை. மாறாக.....

தமிழ் மொழிப் பற்றோ, தமிழினப் பற்றோ இல்லாத 'ஒரிஜினல்' இந்தியனாகவே இருக்கிறார். 

ஒரிஜினல் இந்தியனான அண்ணாமலை, தமிழ்நாடு 'பாஜக' தலைவராக இருப்பதால் தமிழன் ஆகிவிட மாட்டார். இன்றும் என்றும் அவர்  இந்தியனே.

இந்திய அரசு தமிழ்நாட்டிடமிருந்து பறித்த ஓர் அதிகாரத்தை அதனிடமே திரும்ப ஒப்படைப்பதை 'ஒரிஜினல் இந்தியன்' அண்ணாமலை விரும்பவில்லை.

ஒரு நாட்டிற்கான 'ஆட்சியமைப்பு', நீதி மன்றங்கள் என்று எல்லாமே அந்த நாட்டு மக்களுக்காகத்தான்.

மக்களின் விருப்பத்திற்கேற்ப சட்டங்கள் திருத்தப்படுவதும், நீதி மன்றங்கள் தாம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்வதும் நடப்பில் உள்ள ஒன்றுதான்.

உண்மை இதுவாக இருக்கையில், 'தலைகீழாக நின்றாலும்' என்று காழ்ப்புணர்வுடனும் வன்மத்துடனும் அண்ணாமலையார் அதிரடியாய் அறிக்கை விட்டது ஏன்?

தான் ஓர் அநாகரிக அரசியல் செய்யும் 'முரடன்' என்றும், இந்த முரடனைக் கண்டு அரசியல் எதிரிகள் அஞ்சி நடுங்க வேண்டும் என்று எண்ணுகிறாரா?

இந்த முரடனைரை 'பாஜக' தலைமை தமிழ்நாட்டின் 'பாஜக' கட்சித் தலைவர் ஆக்கியதன் உள்நோக்கம் என்ன?

ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தக்கவைப்பதற்கும், பெரும் எண்ணிக்கையிலான மூடநம்பிக்கைகளை மக்கள் மீது திணிப்பது மட்டும் போதாது, அண்ணாமலை போன்ற முரடர்களும் தேவை என்று நம்புகிறதோ?!?!

====================================================================================


செவ்வாய், 14 செப்டம்பர், 2021

"இந்தி படித்தால் இந்தியா முன்னேறும்!"... அமித்ஷாவின் அதிசயக் கண்டுபிடிப்பு!!!!!


"இந்தியுடன் தாய்மொழியைக் கற்றால் இந்தியா முன்னேறும்" என்ற நடுவணமைச்சர் அமித்ஷா பேசியதாகச் சொல்லி, "இது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சி; அமித்ஷாவின் பேச்சில் வேறு அர்த்தங்களும் அடங்கியுள்ளன" என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிவித்திருப்பதாக, 'சன் தொலைக்காட்சி, சற்று முன்னர்[பிற்பகல் 03.15 மணி] செய்தி சொல்லிக்கொண்டிருந்தது.

"அமித்ஷா பேச்சில் வேறு அர்த்தங்களும் உள்ளதாக ராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

"இந்தியோடு தாய்மொழியையும் படி" என்று சொல்லிவிட்டு, பின்னர் "இந்தியை மட்டுமே படித்தால் போதும். இந்தியாவில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து இந்தியர்களாக வாழச் செய்ய இந்தியால் மட்டுமே முடியும்" என்று சொல்லப்போகிறார் என்பதை 'பாமக' நிறுவனர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; இந்தி தாய்மொழி அல்லாதவர்கள் மீதும் அதைத் திணி திணி திணி என்று திணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; கோடி கோடியாய்ச் செலவு செய்திருக்கிறார்கள்; செய்கிறார்கள். இந்தியா எந்தெந்தத் துறையிலெல்லாம் உலகோர் வியக்கும் வகையில் முன்னேறியிருக்கிறது என்பதற்கு நடுவணமைச்சர் ஒரு பட்டியல் தருதல் வேண்டும்.

தருவாரா?

சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழியறிவு முக்கியம். ஆங்கிலம் போன்ற  அறிவியல் துறையில் வளர்ச்சி பெற்ற மொழிகள் கற்பதும் உதவிகரமாக அமையக்கூடும். இந்தி எதற்கு? 

அதைக் கற்பதால் வட இந்தியாவில் வேலை வாய்ப்பு உள்ளது என்று சொன்னவர்களெல்லாம் வாய் பொத்தி மவுனம் சாதிக்கிறார்கள். காரணம்.....

பிழைப்புக்காகச் சாரி சாரியாக வடபுலத்து மக்கள் தென் இந்தியப் பகுதிகளுக்கு வந்துகொண்டிருப்பதுதான்.

ஆக, "இந்தி படி" என்று அமித்ஷா சொல்வது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் வாக்குகளை[தேர்தல்களில்] அள்ளுவதற்காக மட்டுமே.

இனியும், "இந்தி படி... இந்தி படி... இந்தி படி" என்று சொல்லிக்கொண்டிராமல், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தேவையான வழிமுறைகளை அமைச்சர் ஆராய்ந்து பேசுவாரேயானால், அது இந்தத் தேசத்துக்குப் பெரிதும் நன்மை பயப்பதாக அமையும் என்பது நம் போன்றோர் நம்பிக்கையாகும்!

====================================================================================