புதன், 4 டிசம்பர், 2024

‘அது’ இப்போது வேண்டாம்! அப்போது பார்த்துக்கொள்ளலாம்!!

நமக்கு வாய்த்திருப்பது வெகு அற்ப வாழ்நாள். இப்போதோ வேறு எப்போதுமோ மரணம் நம்மை ஆரத்தழுவக் காத்திருக்கிறது.

கடவுளைத் தொழுவதால் தீராத துன்பங்கள் தீரும் என்பது நிரூபிக்கப்படாத நிலையில் வினாடிப் பொழுதையும் வீணாக்காமல் கடமையைச் செய்வோம்.


செத்தொழிந்த பிறகு நம் ஆன்மா வேலைவெட்டி எதுவும் இல்லாமல் எங்கெல்லாமோ அலைந்து திரிவது உண்மையானால், அப்போது அந்தக் கருணை வள்ளலாம் கடவுளை ஆசை தீர வழிபடலாம்[அதற்குச் சிந்திக்கும் திறன் இருந்தால்]; அவனின் திருவடி நிழலில் கிடந்தோ, அவனால் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சொர்க்கத்தில் இடம்பிடித்தோ சுகபோகத்தில் மூழ்கித் திளைக்கலாம் அவன் உள்ளளவும்!


வாழ்க மனித இனம்! வளமுடன் வாழ்க கடவுள்[இருந்தால்]!!


யூடியூப் காணொலி:

https://youtube.com/shorts/wH6i3QW8AEY?si=jP3mlXogh0S4AFOp -சொடுக்குக!

செவ்வாய், 3 டிசம்பர், 2024

அடர்மழையும் கடவுள் அண்ணாமலையாருக்கு நேர்ந்த அவமானமும்!!!

கண்ணால் கண்டாலே முக்தி கிடைக்கும் என்று கதைக்கப்படுகிற திருவண்ணாமலை[சிவபெருமானே மலையாகி அருள்பாலிக்கிறாராம்] மண்ணும், கற்களும் நிறைந்த மலை என்பதால், இடைவிடாது பெய்த கனமழை காரணமாக அதில் மண் சரிவு[கடவுளின் உருவத்திற்கு ஏற்பட்ட சிதைவு!] ஏற்பட்டுள்ளது[பாறைகள் உருண்டு விழுந்ததில் ஒரு வீடு மண்ணில் புதைந்து ஏழு பேர் உயிரிழந்தது மனதை வெகுவாக வருத்தும் நிகழ்வு]

இது இயல்பான ஓர் இயற்கை நிகழ்வுதான்.

மலை அடிவாரங்களில் வீடு கட்டியவர்கள் இது குறித்துச் சிந்தித்துச் செயல்பட்டிருத்தல் வேண்டும்.

தவறு நேர்ந்துவிட்டது. 

இனி இங்குள்ள கற்களையும், மண்ணையும் ஆய்வு செய்து இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஐஐடி பேராசிரியர்கள் மோகன், பூமிநாதன் உள்ளிட்ட வல்லுநர் குழுவினர் அறிவித்திருப்பது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

சிவபெருமானே இங்கு[ஊரில்] மலையாக வீற்றிருக்கிறார்[பிரமனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையேயான, ‘யார் உயர்ந்தவர் என்னும் போட்டியின்போது சிவனானவர் தன் அடியும் முடியும் காண இயலாத வகையில் நெருப்பு மலையாக நின்றார். அது  காலப்போக்கில் வெப்பம் தணிந்து இன்றைய உருவைப் பெற்றது. இது புராணக் கதை] என்பது பெரும்பாலான மக்கள் நம்பும் கற்பனைக் கதைகளில் ஒன்று.

இந்த மலை குறித்த குறிப்பிடத்தக்க பிற கதைகள்;

*சிவபெருமானின் வசிப்பிடமான கயிலை மலைக்கு இணையானது இது.

*திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிட்டும்.

*ஆண்டுதோறும் ஏற்றப்படும் தீபத்தைத் தரிசித்தால் 21 தலைமுறைகளுக்குப் புண்ணியம் சேரும்.

*இன்றளவும் பண்டைய முனிவர்களும் ரிஷிகளும் ஆவி வடிவில் உலா வரும் இடம் இது.

*முருகப்பெருமான் பக்தர்களுக்கு நேரில் இங்குத் தரிசனம் தந்தருளினார்.

*மலையை வலம் வந்தால்[கிரிவலம்] பாவம் விலக, புண்ணியம் சேரும்; நினைத்தவை நிறைவேறும்.

திருவண்ணாமலையில் அடர்மழையால் நேர்ந்த அவலம் நீடிக்கும் நிலையில், நம் மக்களிடம் நாம் முன்வைக்கும் பணிந்துரை:

“இம்மாதிரியான மூடநம்பிக்கைகளைப் பரப்பிப் பிழைப்பு நடத்திய/நடத்தும் அயோக்கியர்கள் கட்டிவிட்ட பொய்க் கதைகளை நம்பாமல், இனியேனும் ஆறறிவு மனிதராக வாழ்ந்திடுவீர்.”


திருவண்ணாமலையில் பெய்த கனமழையால், மலையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் மற்றொரு இடத்தில் மிகப்பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வீடுகள் ஏதும் இல்லாததால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ெதாடர்ந்து மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த பெரும்பாலானவர்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் பெய்த கனமழையால், மலையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் மற்றொரு இடத்தில் மிகப்பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வீடுகள் ஏதும் இல்லாததால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ெதாடர்ந்து மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த பெரும்பாலானவர்கள் ஆபத்தான பகுதிகளில் இருந்து வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி வருகின்றனர்.

திங்கள், 2 டிசம்பர், 2024

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில்! தேசியக்கீதம் அப்புறம்!!

ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்துச் சென்ற நிலையில், ‘ஒன்றாக வாழ்தல்’ என்னும் எழுதப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான் ‘இந்தியா’ என்னும் இந்த நாடு.

என்றேனும் ஒரு நாளில், ஏதேனுமொரு விரும்பத்தகாத சூழலில்[ஆதிக்க வெறியர்களால் உருவாகிக்கொண்டிருக்கிறது] அனைத்து மாநிலங்களும் தனித்தனி நாடாக ஆகுமேயானால் ‘இந்தியா’ என்றொரு நாடே இல்லை[இந்திய வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் கத்தரித்து எடுத்துவிட்டால் மிஞ்சியிருப்பது எதுவும் இல்லை] என்றாகும்.

முன்பு இங்கே தனித்தனி நாடுகள் பல[இன்று மாநிலங்கள்] இருந்தமை இயற்கை நிகழ்வு. இந்தியா உருவாக்கப்பட்டது ஒரு செயற்கை நிகழ்வு.

செயற்கையாக உருவாக்கப்பட்டதைச் சிதைப்பது சாத்தியம். இயற்கை தானாக அழிந்தால்தான் உண்டு.

எனவே, முதலில் மரியாதை செலுத்த வேண்டியது மாநிலங்களுக்கு; அங்கெல்லாம் வாழும் இனங்களுக்கு; அவர்கள் பேசும் மொழிகளுக்கு.

இந்தவொரு கோணத்தில் சிந்தித்தால், மாநில அரசின் விழாக்களின் தொடக்க நிகழ்வுகளில் பாடப்பட வேண்டியவை அந்தந்த மாநிலங்களுக்குரிய வாழ்த்துப் பாடல்களே.

தமிழ்நாட்டுக்குரிய வாழ்த்துப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்து.

எனவே, தமிழ்நாடு அரசு நிகழ்வுகளில் முதலில் பாடப்பட வேண்டியது தமிழ்த்தாய் வாழ்த்துதான். தேசியக் கீதம் இதற்கு அடுத்ததாகவோ, நிகழ்வின் முடிவிலோ பாடப்படலாம்[முடிவில் பாடுவது முன்பு வழக்கத்தில் இருந்தது].

இது குறித்து, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசி முடிவெடுப்பது உடனடித் தேவையாகும்.

* * * * *

தொடர்புடைய ஊடகச் செய்தி:

மதுரையில் தனியார் அமைப்பின் சார்பில் இளம் தொழில் முனைவோருடனான ஆர்.என்.ரவியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒரு நட்சத்திர விடுதி[த.நா.அரசுக்குக் கூடுதல் செலவு.தேவையா?]யில் நேற்று நடைபெற்றது.

ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியின் தொடக்கமாக, தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படும் என்று அறிவித்தார்கள்.

தனியார் கல்லூரி மாணவிகள் ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தை..’[தமிழ்த்தாய் வாழ்த்து] என்று பாடத் தொடங்கினர். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘தேசிய கீதம்… தேசிய கீதம்…’ என்று சத்தம் எழுப்பினர்.

இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதல் வரியுடன் அப்படியே நிறுத்திவிட்டுத் தேசியக் கீதத்தை மாணவிகள் முழுமையாக பாடினர்[தேசியக்கீதத்தை இரண்டாவதாகப் பாடினால் அதன் மதிப்பு குறந்துவிடுமா?]. இதன்பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட ஆரம்பித்து, உடனடியாக முதல் வரியுடன் நிறுத்தப்பட்ட சம்பவம் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

[எவரோ ஒருவரின் பார்வையை இந்த நரி காட்சிப்படுத்துகிறது!?]
இது, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் செயல் என அங்கிருந்தவர்கள் கடுமையான அதிருப்தி தெரிவித்தனர்.

ஏற்கனவே, ஆளுநன் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது. மதுரையில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் துவங்கிப் பாதியில் நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குத் தமிழ் ஆர்வலர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்//

https://www.dinakaran.com/governor_tamil_mother_greetings_stop/

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

"ஒன்று... ஒன்று... ஒன்று...” -ஒன்றிய அரசின் ஓயாத ஒப்பாரி!!!

இந்திய ரயில்வேயின் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’(OSOP >உள்ளூர்களுக்கான குரல்) என்னும் திட்டம் நாடு முழுவதும் உள்ள 535 ரயில் நிலையங்களை உள்ளடக்கியது.

2022-23 மத்தியப் பட்ஜெட்டில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ என்பது இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

நிலையம் என்பது ரயில்நிலையத்தைக் குறிக்கும்.

ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் ஒரு விளம்பர மையமாக உருவாக்குவதும், உள்ளூர் மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களை அங்குக் காட்சிப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் விளம்பர மையமாக்குவது ஏனையத் திட்டங்களைப் போன்றதொரு திட்டம் என்பதால் வரவேற்கத்தக்கதே.

ஆனால், ரயில் நிலையங்களில் இடம்பெறும் விளம்பரங்களுக்கு, ‘ஒரு ரயில் நிலையம் ஒரு தயாரிப்பு’ என்னும் தலைப்பு எதற்கு?

இந்தியா ஒரே நாடு[ஒரே நாடு ஒரே தேர்தல்] என்று தொடர்ந்து மேடகளில் பேசுகிறார்கள்;  கண்ட கண்ட இடங்களில்[ரயில் நிலையங்களில் போல] எழுதுகிறார்கள்.

நமக்கான சந்தேகம்: 

இந்தியா ஒரே நாடாகத்தானே இருக்கிறது. அப்புறம் எதற்கு, “இது ஒரே நாடு... ஒரே நாடு... ஒரே நாடு” என்னும் ஒப்பாரி?

மிக மோசமானதும் பாரபட்சமானதுமான அவர்களின்[பாஜக] ஆட்சி காரணமாக[எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதும் அத்தனை எளிதல்ல] இந்த நாடு உடைந்து சிதறும் என்று அஞ்சுவதுதான்.

தங்களைத் திருத்திக்கொள்வதில் சிறிதும் அக்கறை காட்டாமல், ‘ஒன்று... ஒன்று... ஒன்று...’ என்று ஓய்வில்லாமல் ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பதால் இனியும் இந்த நாடு ‘ஒன்று’ ஆக இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது!

                                    *   *   *   *   *

OSOP திட்டம்>‘உள்ளூர்களுக்கான குரல்’[ஊடகச் செய்தி]:

இது உள்ளூர் உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை விற்க உதவுவதோடு, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்குக் கூடுதல் வருமான வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் முன்னோடித் திட்டம் மார்ச் 25, 2022 அன்று தொடங்கப்பட்டது.

https://www.financialexpress.com/business/railways-what-is-one-station-one-product-scheme-how-many-stations-are-covered-all-details-inside-2936009/