எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 6 டிசம்பர், 2025

”சாமியே சரணம் ஐயப்பா”... அவனின் ஆபாசக் கதை அறியாத அப்பாவிப் பக்தர்களுக்கு...

லை அலையாய்ச் சபரிமலை நோக்கிப் பக்தர்கள் பயணிப்பதும், அவ்வப்போது[அடிக்கடி?] வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, சிலரோ பலரோ மரணத்தைத் தழுவுவதும் வழக்கமாகிவிட்ட நிகழ்வாகும்.

காரணம், அவர்கள் ஐயப்பனின் பிறப்பு குறித்து அறிந்துகொள்ளாமலோ, அது குறித்துச் சிந்திக்காமலோ இருப்பதுதான். 

கதை தெரிந்தால் அவர்களில் சிலரேனும் திருந்துவார்கள் என்னும் நப்பாசையில் அது இங்குப் பதிவு செய்யப்படுகிறது[கதை தெரிந்தும் சிந்தித்துத் திருந்தாத செம்மறிக் கூட்டம் நமக்கு ஒரு பொருட்டல்ல].

கதை:

ரக்கன் ஒருவன்[பஸ்மாசுரன்] சிவபெருமானை வழிபட்டு ஆண்டுக்கணக்கில் தவம் இருந்தான்.

தவத்தை மெச்சிய அப்பாவிப் பரமசிவன், “நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்று சொல்ல, “நான் யார் தலையில் கை வைத்தாலும் அது வெடித்துச் சிதற வேண்டும்” என்று அவன் கோரிக்கை வைக்க, இந்தச் சாமியும் அந்த வரத்தைக் கொடுக்க, சோதித்துப் பார்க்கிறேன்” என்று சொல்லி, இவரின் தலையில் கைவைக்க முயன்றான் அரக்கன்.

தன் தவற்றைத் தாமதமாகப் புரிந்துகொண்ட இவர் தன் உயிரைக் காத்துக்கொள்ள அண்டவெளியில் ஓடுகிறார். அரக்கன் விரட்டுகிறான். அவர் அயராமல் ஓடுகிறார். அரக்கன் விடாமல் துரத்துகிறான்.

இந்த இருவரின் ஓட்டத்தால் அண்டவெளியே அதிருகிறது.

இந்த அவல நிகழ்வைத் தேவலோகத்திலிருந்து வேடிக்கை பார்த்த முப்பத்து முக்கோடித் தேவர்களும் கின்னரர்களும் கிம்புருடர்களும் விஷ்ணு பகவானைத்  தேடிப்போய் சிவனைக் காப்பாற்றுமாறு முறையிடுகிறார்கள்.

காக்கும் கடவுளான விஷ்ணுக் கடவுள் பேரழகியாக[மோகினி] வடிவெடுத்து, சிவனை விரட்டிச் செல்லும் அரக்கன் முன் தோன்றி, கவர்ச்சி காட்டி நடனமாடினார்[ள்]

மோகினியை மோகித்த அரக்கன் கட்டுக்கடங்காத காம வெறியுடன் அவளைத் தழுவிச் சுகம் காண முற்பட்டபோது, “உன் உடம்பு நாறுகிறது, அழுக்குப்போக நீராடிவிட்டு என்னுடன் சல்லாபிக்க வா” என்று மோகினி சொல்ல, புத்தி கெட்ட அந்தப் பொல்லாத அரக்கன் நீர்நிலையைத் தேடுகிறான்; எதுவும் தென்படவில்லை[மாயவன் விஷ்ணு நிகழ்த்திய மாயாஜாலம் அது].

அரக்கன் அது குறித்து மோகினியிடம் முறையிட, அவளு[ரு]ம், “குளிக்காவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் தலையில் தடவி வா என்று சொன்னதோடு, சிறிது தொலைவில் கையளவுக் குழியில் கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரைத் தேக்கிவைத்தாள்[ர்]. 

மாயவன் செய்த சூது அறியாத அந்தக் காமுகன் கையளவு நீரை அள்ளித் தன் தலையில் தேய்க்க அவன் தலை வெடித்துச் சிதறியது[மாறுபட்ட நிகழ்வுகளுடனான கதைகளும் உள்ளன].

இதற்குப் பிறகுதான் அந்த அசிங்கம் அரங்கேறியது.

விஷ்ணு நடத்திய லீலையை, மறைந்திருந்து மனம் பதறப் பார்த்துக்கொண்டிருந்த பரமேஸ்வரக் கடவுள், அழகி மோகினி உருவில் இருப்பவர் சக கடவுளான விஷ்ணு என்பதை மறந்து அவரைக் கட்டித்தழுவி உடலுறவு கொண்டார்[ஆனானப்பட்ட முழுமுதல் கடவுளாலேயே காமத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அடக்கடவுளே!]; அய்யப்பன் பிறந்தார்[//மோகினி அவதாரத்தினை விஷ்ணு மீண்டும் எடுத்தார். அத்துடன் ஒரு வனத்தில் சென்று மறைந்தார். மோகினியைக் காணச் சென்ற சிவபெருமான் வனத்தின் ஒரு மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த மோகினியைக் கண்டார். அவருக்கு மோகம் வந்தது. உடனிருக்கும் பார்வதியை மறந்து மோகினியை அடைய எண்ணினார்; மோகினியுடன் அவர்[சிவன்] உடலுறவு கொண்டார். அவர்களுக்குப் பிறந்தவரே ஐயப்பன் ஆவார்//[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF]

வெள்ளி, 5 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... தீர்ப்பளித்த சுவாமிநாதனும் தமிமுன் அன்சாரியின் 'அடடா' விமர்சனமும்!

//திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில், ‘விசிக எம்எல்ஏ’ தமிமுன் அன்சாரி, மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்; காவி இருக்கக் கூடாது என்றும் ‘கடுமையாக’ விமர்சித்துள்ளார்// என்கிறது ஊடகச் செய்தி*

இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு 'நீதிப் பேரரசர்' ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆற்றவுள்ள எதிர்வினை என்னவாக இருக்கும்?

என்னவாகவோ இருக்கட்டும். அதை அறியும் ஆர்வம் அடியேனுக்கு உள்ளது எனினும், தமிமுன் அன்சாரியின் அற்புதமான கவிநயம் மிளிரும் அந்தக் கற்கண்டு நடைத் தமிழை வெகுவாக ரசித்தேன்; மகிழ்ந்தேன்.


மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத் தூண்டும் அந்த வாசகம்;


“மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது. எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது.”

                                         *   *   *   *   *

*https://tamil.oneindia.com/news/madurai/tamimun-ansari-attacks-judge-gr-swaminathan-over-lamp-at-the-thiruparankundram-temple-755755.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links

‘தீ’யைத் ‘தீபம்’ ஆக்கிய அந்த அயோக்கியர்கள் யார்?!

ற்கள் ஒன்றோடொன்று உரசும்போது ‘தீ’ப்பொறி சிதறுவதையும், காய்ந்த மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காடுகள் தீப்பற்றி எரிவதையும் ஊன்றிக் கவனித்த காட்டுமிராண்டிகளாக இருந்த நம் மூதாதையர்கள், கற்களை உரசி, சருகுகளிலும் காய்ந்த மரத் துண்டுகளிலும் தீயைப் பற்றவைத்து, பச்சையான இறைச்சியை அதில் சுட்டுச் சுவைகூட்டி உண்ணப் பழகினார்கள்.

அப்போதெல்லாம் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.

காலப்போக்கில் அதை உருவாக்குவதில் புதிய புதிய வழிமுறைகள் கையாளப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருப்பிடத்தில் சூழ்ந்துள்ள இருளை அகற்ற விளக்குகளைக் கண்டுபிடித்தார்கள்[சிம்னி விளக்கு, மண் விளக்கு, லாந்தர் என்றிப்படி...]. அப்போதும் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.

இரவு நேர இருட்டில் வெளியே செல்லும்போது, தடிமனான நீண்ட குச்சிகளில் துணியைச் சுற்றி, தீயைப் பற்றவைத்துத் தீப்பந்தம்[தீவட்டி] ஆக்கிப் பயன்படுத்தினார்கள். அந்தக் காலக்கட்டத்திலும் ‘தீ’ தீ என்றே கருதப்பட்டது.

சமையலுக்காக அதைப் பயன்படுத்திய நிலையிலும் ‘தீ’ தீதான்.

குவிந்துகிடக்கும் குப்பைகளை அள்ளி எடுத்து அப்புறப் படுத்துவதைத் தவிர்க்க, அவற்றில் தீயிட்டார்கள். பற்றிப் பரவி, பெரு நெருப்பாக அது கொழுந்துவிட்டு எரிந்தபோதும் அது சாதாரணத் ‘தீ’தான். மனிதர்கள் பகை காரணமாக ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் உடமைகளுக்குத் தீயிட்டு அழித்தபோதும் ‘தீ’ தீயாகவே இருந்தது.

இவ்வாறு, பலவகையிலும் பயன்படுத்தப்பட்ட அதே ‘தீ’தான் கோயில்களில் விளக்கு ஏற்றும்போது ‘தீபம்’ ஆன பேரதிசயம் நிகழ்ந்தது.

அது தானாக நிகழவில்லை; கட்டப்பட்ட கோயில் கலசங்களில், வேத மந்திரங்கள் சொல்லி அவற்றைப் புனிதமாக்குவதாகவும், உள்ளே வைக்கப்படும் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதி, அபிஷேகம் செய்து, அவற்றில் கடவுளைக் குடியேற்றுவதாகவும் கதையளந்து மக்களை நம்ப வைத்த ‘அவர்கள்’தான் ‘தீ’யைப் புனிதமான ‘தீபம்’ ஆக்கினார்கள்.

மக்களும் அதை நம்பினார்கள்.

கோயில்களில், உலோகங்களால் ஆன விளக்குகளில் தீபம் ஏற்றும் வழக்கம், காலப்போக்கில் கடவுள்கள் குடியிருப்பதாகச் சொல்லப்படும் மலை உச்சிகளில், அகன்ற பெரிய குண்டாக்களிலும் அண்டாக்களிலும்[கொப்பரை] பிரமாண்டமான திரிகள் வைத்து தீயைப் பற்றவைத்து ‘மகா தீபம்’ ஏற்றுவது வழக்கத்திற்கு வந்தது.

வெறும் ‘தீ’, இன்று மக்களுக்கிடையேயான மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் காரணமாகவுள்ள ‘மகா தீபம்’ ஆன கதை இதுதான்!

வியாழன், 4 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் பிரச்சினை... நயினார் பக்தியை மெச்சி ஓடோடி வந்து உதவிய இறைவன்!!!

"திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று வந்திருப்பது இறைவனின் தீர்ப்பு” என்று சற்று முன்னர், ஊடகவியலாளர் பேட்டியில் நயினார் நாகேந்திரன் கூறினார்[ராஜ் தொ.கா].

மனிதர்களுக்கு இடையேயான வழக்கில்[தி.ப.குன்றம் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது] இறைவனே முன்வந்து தீர்ப்பளித்தது இதுவரை உலகம் கண்டிராத அதிசய நிகழ்வாகும்.

குறிப்பாக, தமிழர்களுக்கிடையேயான வழக்கில் இறைவன் தீர்ப்பளித்தது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது.

ஒரு தமிழனாக நாமும் பரவசப்படுகிறோம். நயினார் நாகேந்திரன் அவர்களிடம் ஒரு கோரிக்கையையும் சமர்ப்பிக்கிறோம்.

நயினார் அவர்களே, 

நீங்கள் 100% உண்மையான பக்தர் என்பதால்தான் இறைவனே தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்.

ஆகவே, இனியும் இந்தியாவெங்கும் உள்ள இது மாதிரியான வழக்குகளில் உதவுமாறு, பரிசுத்தப் பக்திமானான நீங்கள் வேண்டிக்கொண்டால், சந்தேகத்திற்கு இடமின்றி இறைவன் மனமுவந்து உதவி செய்வார்.

வேண்டிக்கொள்ளுங்கள் நயினார்.

உங்கள் வேண்டுதலுக்குப் பிறகு இந்த மண்ணில் நீதிமன்றங்களின் தேவையே இல்லாமல்போகும். இவற்றிற்காக அரசு கோடிக்கணக்கிலான ரூபாய் செலவிடுவது தவிர்க்கப்படும்.

இனியும் தங்களின் மக்கள் பணி சிறக்க மனமுவந்த வாழ்த்துகள்!

‘ஏவிஎம்’ சரவணன்> நேற்று பிறந்த நாள் கொண்டாட்டம்> இன்று உயிரிழப்பு... நல்ல சாவு!

பெரும் செல்வந்தராயினும் தன்னடக்கம் என்னும் உயரிய பண்பினராக வாழ்ந்தவர் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்கள். இரு கைகட்டி, சற்றே தலை தாழ்த்தி, அடங்கி ஒடுங்கிய கோலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக்கிக்கொண்ட பெருந்தன்மையாளர் அவர்.

அவரின் இறப்பு வருந்தத்தக்கது என்றாலும் இது இயற்கை நிகழ்வுதான் என்பதை நினைவுகூர்ந்து ஆறுதல் பெறலாம்.

“அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்போம்? சொர்க்கமா நரகமா செத்த பிறகு நமக்கு வாய்க்கவிருப்பது எது?” என்றெல்லாம் புலம்பிக்கொண்டிராமல், ஆயுள் முழுவதும் இயன்றவரை நல்லவராக வாழ்ந்து, நோய்நொடிகளின் தாக்குதல் இல்லாமல், அமைதியான மனநிலையில் மரணத்தைத் தழுவுவதே விரும்பத்தக்கதாகும்.

அத்தகையதொரு நல்ல மரணம் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்களுக்கு வாய்த்துள்ளது.

இன்று அதிகாலை ‘மரணம்’ தழுவிய அவர், நேற்று ‘பிறந்த நாள்’ விழா கொண்டாடினார்* என்னும் ஊடகச் செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.

*https://cinema.vikatan.com/kollywood/tamil-cinema-producr-avm-saravanan-passed-away

புதன், 3 டிசம்பர், 2025

காலங்காலமாய்ச் 'சொர்க்க வாசல்' காட்டுகிறார்கள்! 'சொர்க்கம்' காட்டுவது எப்போது?!

திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி திருமலையில் நேற்று அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கூறியதாவது:

//ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்குச் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது// https://temple.dinamalar.com].

அடியேனும்[போலி நாத்திகன்] திருமலை வெங்கடேசப் பெருமாளின் ஆயுட்காலப் பக்தன் என்பதால், மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போதே ஆனந்தப் பரவசத்துக்கு உள்ளானேன்.

ஆனாலும், அடுத்த சில நொடிகளில் என்னுள் அளப்பரிய பெரும் சோகம் பரவியது. காரணம்.....

கடந்த கொஞ்சம் ஆண்டுகளாக, “சொர்க்கத்தின் வாசலை மட்டும் காட்டுகிற திருப்பதி தேவஸ்தானத்தார் சொர்க்கத்தை எப்போது காட்டப்போகிறார்கள்?” என்று கேட்டுக் கேட்டுக் கேட்டு என் மனம் வெகுவாக ஏங்கியதுதான்.

கோரிக்கை வைத்தாலும் அதை அவர்கள் ஏற்பது சந்தேகமே என்பதால், இந்த இருள் மனத்தவனின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு அருள் வடிவான திருவேங்கடவனின் திருவடிகளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன்[மானசீகமாக].

போற்றி போற்றி திருப்பதி வெங்கடாசலபதி போற்றி! அவரின் திருவடிகள் போற்றி!!

செவ்வாய், 2 டிசம்பர், 2025

திரு அண்ணாமலையாரும் திரு காடாத் துணியும்!!

கார்த்திகைத் திங்களில் திருவண்ணாமலையின் மலையின் உச்சியில், பிரமாண்டமான கொப்பரையில் எண்ணை ஊற்றி, காடாத் துணியில் திரி செய்து தீ பற்றவைத்துத் ‘கார்த்திகை மகா தீபம்’ என்று சொல்லி வழிபடுவதை வழக்கமாக்கியுள்ளார்கள் நம் மக்கள்.

மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத் துணிக்கு, கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் சிறப்புப் பூஜை செய்வது வழக்கமாகிவிட்டதொரு பழக்கம்.

மனிதரைப் போலவே பிற உயிர்களுக்கும் உணர்ச்சி உண்டு; அறிதல் அறிவும் உண்டு.

உணர்தலும் அறிதலும் இல்லாத சடப்பொருள்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட துணியும் ஒன்று. காடாத்துணி துணிகளில் ஒரு வகை. இதைத் தேவைக்கேற்ற வகைகளில் வடிவமைத்து மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.

தீபம் ஏற்றப் பயன்படும் இந்தச் சடப்பொருளான காடாத் துணி, சிறப்புப் பூஜை செய்யாவிட்டால், கோபித்துக்கொண்டு தன்னில் தீ பற்ற அனுமதிக்காதா?

நம்மவர்களில் பெரும்பாலானதொரு கூமுட்டைக் கூட்டம் ஆடு, மாடு, குரங்கு, கழுகு, பாம்பு, மூஞ்சூறு, நாய், பேய் போன்றவற்றைக் கடவுள்களாக்கிக் கொண்டாடி,  தங்களைப் படு படு முட்டாள்களாக உலகுக்கு அடையாளப்படுத்துவது போதாதா?  

உலகில் வெகு வேகமாக அறிவியல் வளரும் நிலையில், இதைப் போன்ற செயல்களின் மூலம், தங்களை முட்டாள்களாகவே நிலைநிறுத்திக்கொள்வதில் முனைப்புக் காட்டுகிறது இக்கூட்டம்.

அண்ணாமலையாரால்[இருந்தால்] மட்டுமே இவர்களைத் திருத்த இயலும்.

திங்கள், 1 டிசம்பர், 2025

அண்டவெளியில் உள்ள அனைத்தும் உருவாகக் காரணம் அணுக்களே; ஆண்டவன் அல்ல!

*** //அணுக்கள் என்பவை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உருவாக்கும் சிறிய அலகுகள்// -https://education.nationalgeographic.org/resource/nuclear-energy/

***//atoms are now understood to be fundamental building blocks of matter…..// -https://medium.com/starts-with-a-bang/the-atom-lost-its-original-me aning-and-thats-good-for-science-bc39e828e75b

முக்கிய அறிவிப்பு:
கடவுளின் ‘இருப்பு’ நிரூபிக்கப்படாத நிலையில், அணுக்களே அனைத்துப் பொருள்களும் உயிர்களும் உருவாகக் காரணமாக உள்ளன’ என்னும் நம்பிக்கையில்[நம்பிக்கைதான்], தேடி எடுத்த ஆதாரங்களை இணைத்து எழுதப்பட்டது இந்தப் பதிவு[என் அமேசான் கிண்டில் நூலொன்றில் இடம்பெற்றுள்ளது]. தவறுகள் இருக்கக்கூடும்.

வாசிப்போரின் 'படைப்பு’ குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதே இதன் உள்நோக்கமாகும்.