புதன், 1 ஏப்ரல், 2026

சாகா வரமும் ‘சலிக்கச் சலிக்க’ இன்பம் துய்த்தலும்!!!

றப்பு இயற்கையானது என்றாலும், இறவாமல் என்றென்றும் இருந்துகொண்டிருப்பதே மனிதராய்ப் பிறந்த அத்தனைப் பேருடைய விருப்பமும் ஆகும்.

வறுமை, பிணி, இயற்கைப் பேரிடர் போன்றவற்றின் தாக்குதல் இல்லாமல் வாழ்ந்துகொண்டே இருப்பதற்கான வரத்தை[‘இனியொரு வரம் கேட்கக்கூடாது’ என்னும் நிபந்தனையுடன்], ஒரு நல்ல நாளில் மனிதர்களுக்குக் கடவுள் வழங்கிவிட்டதாகக் கற்பனை செய்யுங்கள். 

அவரின் அளப்பரிய கருணையால் முதியவர்கள் இறக்காமலும் புதியவர்கள் பிறக்காமலும், இருப்பவர்கள் உடலில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்துகொண்டே இருப்பார்கள்.

இந்தப் பூமியே தேவர்கள் வாழும் சொர்க்கலோகமாக மாறும். தாம் அறிந்த அத்தனைத் தினுசு தினுசான இன்பங்களையெல்லாம், யுக யுக யுகாந்தரங்கள் கடந்து வரன்முறையில்லாமல் அனுபவிப்பார்கள் மனிதர்கள்; அனுபவித்துக்கொண்டே இருப்பார்கள்.

அப்புறம்.....

பார்த்த மனிதர்களையே பார்த்துக்கொண்டு, அனுபவித்த இன்பங்களையே  மீண்டும் மீண்டும் மீண்டும் அனுபவித்ததில், அவர்களின் உணர்வு சலித்திருக்கும்[Emotional Fatigue]; அதனால், அவற்றை[அனுபவித்த இன்பங்கள்] முற்றிலுமாய் வெறுத்து ஒதுக்குவார்கள்.

அப்புறம்.....

புத்தம்புதிய இன்பங்களைத் தேடித் தேடித் தேடி அலைவார்கள்.

எவ்வளவுதான் அலைந்தும் அவை கிடைக்காத நிலையில் பைத்தியம் பிடித்துத் திரிவார்கள்!

கடவுள் ஏளனப் புன்னகையுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்!!

+ + + + +

***“இதெல்லாம் நடக்கிற கதையா?” என்று நீங்கள் கேட்பதை அனுமானிக்கிறேன். “கடவுள்[இருந்தால்] விரும்பினால் இதுவும் நடக்கும்; இன்னும் எதுவெல்லாமும் நடக்கும்” என்பதே என் பதில். ஹி... ஹி... ஹி!!!