வெள்ளி, 31 மே, 2019

'கள்ள உடலுறவு'க்குக் 'கால நேரம்' கிடையாதா?!



ள்ள உடலுறவுக்கு  இடையூறாக உள்ளது என்று தான் பெற்ற குழந்தையைத் தாயே கொன்றுவிடுவதும், கள்ளத்தனமாய்க் காம சுகம் தருபவன் மூலம் அதைச் செய்துமுடிப்பதும் நம் புனித மண்ணில் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருப்பதை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இதற்கு மேற்கண்ட அண்மை நிகழ்வும் ஒரு சான்றாகும்.

ஒத்த மனமும், ஒத்த உடலமைப்பும் ஒத்த புரிந்துணர்வும் இருபாலருக்கும் ஏற்ற வகையில் அமையாதபோது, கணவன் மனைவி என்னும் இருவரில் ஒருவரோ இருவருமோ திருட்டுத்தனமாகப் புணர்ச்சி சுகத்தை நாடுவது உலக வழக்கமாக உள்ளது.

இந்த ஒழுக்கக்கேட்டைத்[?] தவிர்ப்பதற்காக அறிஞர்கள் வகுத்துத்தந்த எந்தவொரு நெறிமுறையும் உரிய அளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை.
இம்மாதிரி நிகழ்வுகளை அறிய நேரும்போது என்னை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பெரிய ஐயம் என்னவென்றால்.....

கள்ளத்தனமாய்க் காம இன்பம் அனுபவிப்பவர்கள், உண்ணும் நேரம் உறங்கும் நேரம் நீங்கலாக நாள்முழுக்கக் கட்டிப் பிடித்துக்கொண்டே படுத்திருப்பார்களா? குழந்தை அழுகிற கொஞ்ச நேரம்கூட அந்த ஆசையைக் கட்டுப்படுத்த இயலாதா?

கார்காலம் வந்தால் உண்ணுதலைக்கூடப் புறக்கணித்துப் புணர்ச்சி வெறியுடன் அலையும் கடுவன் நாய்களுக்கும் இவர்களுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லையே!
=======================================================================

புதன், 29 மே, 2019

வாழ்க...வளர்க...வெல்க சிவசேனா!

இது இன்றைய[29.05.2019] நாளிதழ்ச் செய்தி.

'எங்கள் மண்ணின் மொழியான மராத்தியில் பதவியேற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். மராத்தி மொழியைக் காத்திடவும் மேம்படுத்தவும் சிவசேனா உறுதி பூண்டுள்ளது' என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

இம்மாதிரியானதொரு அறிவிப்பு  தி.மு.க.விடமிருந்தோ அ.தி.மு.க.விடமிருந்தோ வெளியானதாகத் தெரியவில்லை.

 சுணக்கம் ஏன்?!
=======================================================================

செவ்வாய், 28 மே, 2019

அதென்னடா 'அந்த்யோதயா'?!?!

#தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்குப் புதியதாக 'அந்த்யோதயா' விரைவு ரயில் சேவை ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்# -இது இன்றைய 'தமிழ் இந்து'[28.05.2019] நாளிதழ்ச் செய்தி.
தாம்பரம் தமிழ்நாட்டில் சென்னை நகரின் ஒரு பகுதி. செங்கோட்டை தமிழ்நாட்டின் ஓர் ஊர்.

தாம்பரத்திலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ள ஊர்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளவைதான்.

இவ்வூர்களில் வாழும் மக்கள் அனைவரும் தமிழ் மக்களே. இவர்களின் தாய்மொழி தமிழ். எனவே.....

தமிழ் மக்கள் வாழும் ஊர்களுக்கிடையே ஓடும் ர யிலுக்குத் தமிழில் பெயர் வைப்பதுதானே நியாயம்?

இந்த ரயிலுக்குப் பெயர் 'அந்த்யோதயா'வாம்!

இது என்ன அநியாயம்!

ரயில்களுக்குப் பெயர் சூட்டுதல் தொடர்பான துறையில் தமிழர் ஒருவர்கூட இல்லையா? இருந்தாலும், அவர் சூடுசொரணை அற்றவரா? அணுவளவுகூட மொழிப்பற்று இல்லாதவரா?

ஓ..... ஒன்று மறந்துவிட்டது!

இது 'இந்தி'ய தேசம்.

இங்கு இந்திக்காரர்கள் நினைப்பதுதான் நடக்கும்.

பித்துக்குளித்தனமாய் இப்படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டேன். 

இங்குள்ள தமிழர்கள் என்னை மன்னிப்பார்களாக!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

திங்கள், 27 மே, 2019

தமிழகத்தில் மோடியின் படுதோல்விக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சொல்லும் காரணங்கள்!

#தமிழகம் பற்றியும் இங்கு பா.ஜ.க.வை வளர்ப்பது பற்றியும் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இன்னும் அக்கறை காட்டியிருக்க வேண்டும். இந்நாள்வரை அவர்கள் நடந்துகொண்ட விதம், பா.ஜ.க.வை ஒரு வட இந்தியச் சார்புள்ள கட்சியாகவே தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக, எல்லாத் திட்டங்களுக்கும் இந்திப் பெயரையே வைக்கிறார்கள். இதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை. இதன் காரணமாகப் பா.ஜ.க.வை ஒரு அந்நியப்பட்ட[தங்களுக்குத் தேவையில்லாத] கட்சியாகவே எண்ணுகிறார்கள்.
உலகமே வியக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிய மோடியால் தமிழகத்த்இல் ஒரு இடத்தைக்கூடை கைப்பற்ற இயலாமைக்குக் காரணம் மேற்குறிப்பிடப்பட்டவைதான்.

மோடியும் அமித்ஷாவும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம்பெறவே இல்லை. காரணம்.....

காலை 10 மணிக்கு விமானத்தில் வந்திறங்கி, நட்சத்திர ஓட்டலில் தங்கி, ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு மாலையில் விமானம் மூலம் டெல்லிக்குப் பறந்துவிடுவதுதான்.

இவர்கள் முதலில், இந்தியை மட்டுமே போற்றும் போக்கிலிருந்து விடுபடுவதோடு, வடஇந்தியர் என்னும் மனப்பான்மையிலிருந்தும் கண்டிப்பாக விடுபடுதல் மிக மிக முக்கியம். 

அடுத்து, தமிழக மக்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கு இவர்கள் முயற்சி செய்தல் வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும் வேண்டும். தமிழகம் வந்து, சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து, மனம் திறந்து அவர்களுடன் உரையாடுதல் அவசியத் தேவை.

இவ்வகையில் செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களின் மனங்களை இவர்களால் கண்டிப்பாக வெல்ல முடியும்#

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி பி.எஸ்.ராகவன் அவர்கள் 'தமிழ் இந்து'[27.05.2019]வுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதியே மேற்கண்ட கருத்துத் தொகுப்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 26 மே, 2019

'சண்டி யாகம்' செய்த காங்கிரசாரும் 'சத்துரு சம்ஹார யாகம்' செய்த எச்.ராஜாவும் இனியேனும் திருந்துவார்களா?!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு, தேர்தலில் வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்காகத் தமிழகக் காங்கிரசாரும், தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவர்களைத் தோல்வியுறச் செய்வதற்காகச் 'சத்துரு சம்ஹார' யாகத்தை[சத்துரு - எதிரி; சம்ஹாரம் - அழிப்பது] 2019 மார்ச் மாதம் இறுதியில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜாவும செய்து முடித்தார்கள்.

மேற்கண்டவர்கள் செய்யும் யாகங்கள் மூடத்தனமானவை. அவற்றால் கிஞ்சித்தும் பயனில்லை என்று நான் வெவ்வேறு பதிவுகள் மூலம்  நம்பர் 1 பதிவரான நான்[ஹி...ஹி...ஹி!] சுட்டிக்காட்டினேன். 

தமிழகக் காங்கிரஸ் கட்சிக்காரர்களோ எச்.ராஜாவோ இதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடியே யாகங்களைச் செய்து முடித்தார்கள்.

செய்த யாகங்களால் பயன் ஏதும் விளைந்ததா என்றால் இல்லை என்பதே உரிய பதிலாக இருக்க முடியும்..

ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. நம்ம ராசாவுக்கு நேர்ந்ததும் அதுவே.

இம்மாதிரி யாகங்களால், மழை பெய்வித்தல், சுனாமி போன்றவற்றால் விளையும் சீரழிவுகளைத் தடுத்தல் என்று எந்தவொரு பயனும் விளைந்ததில்லை என்பது வரலாறு.[அரிதாக எப்போதாவது தற்செயலாக விளையும் பயன்களைக் கணக்கில் கொள்ளுதல் கூடாது]. 

மேற்கண்ட நிகழ்வுகளும் இக்கருத்துக்கு வலிமை சேர்ப்பவை ஆகும்.

எச்.ராஜா, காங்கிரசார் என்றில்லை, இனி யாகம் செய்து காரியம் சாதிக்க நினைப்போர் எவராயினும் அம்முயற்சியைக் கைவிடுதல் வேண்டும் என்பது என் பரிந்துரையாகும்.
==================================================================================


சனி, 25 மே, 2019

''தமிழ்நாடு சுடுகாடாகும்''.....ஹெச்.ராஜா!!!

தமிழநாட்டில் பா.ஜ.க. 100% தோல்வியைத் தழுவியதால், பாஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மேற்கண்டவாறு விஷம் கக்கியிருக்கிறார். கீழே காண்பது 'சமயம்'https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/tamil-nadu-people-need-to-support-bjp-h-raja/articleshow/69484775.cms இணையத்தில்  வெளியான செய்தி.
''பா.ஜ.க.வை விட்டுத் தமிழக மக்கள் விலகி இருந்தால் தமிழ்நாடு சுடுகாடாக  மாறிவிடும்.....''[சமயம் செய்திகள், 24.05.2019]

தமிழ் மக்கள் ஒரு தொகுதியில்கூட[குறிப்பாக ஹெச்.ராஜா] பா.ஜ.க.வைத் தேர்ந்தெடுக்காததை மனதில் கொண்டு ''தமிழ் மக்கள் விலகியிருந்தால்...' [விலகியிருப்பதால் என்று சொல்ல நினைத்ததை இப்படிச் சொல்லியிருக்கிறார்] என்கிறார் இந்த பா.ஜ.க.பக்தர்.

மோடி, தனக்கு ஆதரவளிக்காத மாநிலங்களைப் புறக்கணிப்பாரோ இல்லையோ, அவர் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நாறவாயர் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

எந்தவொரு நடுவணரசும், மாற்றுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை முற்றிலுமாய்ப் புறக்கணித்து ஆட்சி நடத்துவது சாத்தியமில்லை. தேர்ந்த அரசியல்வாதியான மோடியும் அத்தகையதொரு தவற்றைச் செய்திட மாட்டார் என்று நம்பலாம். எனவே.....

தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட மோடியின் ஆட்சியில் தமிழ்நாடு சுடுகாடாக மாறுவதற்கான வாய்ப்பில்லை என்று உறுதிபடச் சொல்லலாம்.. ஆனாலும், தான் சார்ந்த கட்சியையும் தன்னையும் ஆதரிக்காத தமிழகம் சுடுகாடாக மாற வேண்டும் என்று எச்.ராஜா ஆசைப்படுவாரேயானால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அது....

தன் எதிரிகளை அழிப்பதற்காகச் சிக்கல் சிங்கார வேலர் கோயிலில் 'சத்துரு சம்ஹார யாகம்'https://pasiparamasivam.blogspot.com/2019/03/blog-post.html  என்று ஒரு யாகம் செய்தாரே, அந்த யாகத்தை இப்போதும் செய்யலாம்.

செய்வாரா எச்சி.ராஜா?!

வெள்ளி, 24 மே, 2019

நாத்திகர் ஸ்டாலின்[?] வாழ்க!

ஸ்டாலின் நாத்திகரா ஆத்திகரா என்பது குறித்து நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை; அறியும் முயற்சியிலும் ஈடுபட்டதில்லை.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்..... 

கடவுள்/கடவுள்கள் குறித்துக் கணக்குவழக்கில்லாமல் கற்பனைக் கதைகள் சொல்லிப் பிழைப்பு நடத்திவரும் ஒரு கூட்டத்தார், ''ஸ்டாலின் ஒரு நாத்திகன். மதநம்பிக்கையாளர்களின் மனம் புண்படும் வகையில் பேசுபவர். மறந்தும் அவருக்கோ அவரின் கட்சியினருக்கோ தேர்தலில் வாக்களித்துவிடாதீர்கள்'' என்று கூட்டம் போட்டுத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
ஊடகங்களுக்குப் பேட்டி தந்து விதம் விதமாய்ச் சாடினார்கள்.

பத்திரிகைகளிலும்  எழுதினார்கள்.

இயன்ற வகைகளிலெல்லாம் ஓயாமல் ஒழியாமல் மனம் சலிக்காமல் பரப்புரை செய்தார்கள். இரவுபகலாய்க் கண்விழித்து இல்லாத கடவுள்களுக்கெல்லாம் யாகங்கள் செய்து வழிபட்டார்கள். என்ன செய்தும்.....

இவர்கள் எதிர்பார்த்தபடி தேர்தல் முடிவுகள் அமையவில்லை.

அரசியல்வாதிகளால் தமக்கு விளையும் நன்மைகள் குறித்து மட்டுமே சிந்தித்து வாக்களிக்கும் வழக்கமுள்ள நம் தமிழ் மக்கள், ஸ்டாலின் சார்ந்த கட்சிக்கும் ஏனைய தோழமைக் கட்சிகளுக்கும் வாக்களித்து மக்களவைத் தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட மிக மிக மிகப் பெருபாலான தொகுதிகளில் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்.

இனி நடக்கவிருக்கும் தேர்தல்களிலும் ஸ்டாலின் தலைமையிலான அணியை வெற்றிபெறச் செய்வார்கள்.

ஸ்டாலின் வாழ்க! 'நாத்திகர்' ஸ்டாலின் வாழ்கவே!!


புதன், 22 மே, 2019

உடலுறவில் மிகையான கட்டுப்பாடுகள் தேவையா?

#கிரேக்கர்கள், ரோமானியர்கள் போன்றோரின் தலைமுறையில் வந்த ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய நாட்டு மக்கள் இன்றளவும் 'போர்க்குணம்' மிக்கவர்களாக இருக்கிறார்கள். இந்த நாட்டு மக்களிடையே ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதில் மிகையான கட்டுப்பாடுகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்திய நாட்டில், வட இந்தியப் பஞ்சாபிகளும் தென்னிந்திய மலையாளிகளும்கூட உடலுறவு விசயத்தில் அதிக அளவிலான கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை; விதிக்கவும் இல்லை.

இக்காரணத்தால் இந்த இரு சமுதாய மக்களிடையே பெருமளவில் உடலுறவுக் குற்றங்கள் நிகழ்வதில்லை. இவர்கள் பொது வாழ்வில் பல துறைகளிலும் முன்னணி பெற்றிருப்பதும் அறியத்தக்கது,

தமிழகத்தைப் பொருத்தவரை உடலுறவு விசயத்திலும் இல்லற வாழ்க்கையிலும் கட்டுப்பாடுகள் மிக மிக அதிகம். 

பஞ்சாபியருடனும் மலையாளிகளுடனும் ஒப்பிடும்போது, தமிழர்கள் பல துறைகளில் பின்தங்கியிருப்பதற்கும், கோழைகளாய் வாழ்வதற்கும் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகள்தான் காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

தமிழர்கள் கோழைகளே என்பதற்கு, தமிழர் - சிங்களர் இடையேயான போரில் இவர்கள் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்ததே தலையாய சான்றாகும்#

கடும் விவாதத்திற்குரிய இக்கருத்து இடம்பெற்ற நூல்: 'தமிழர்', 'தமிழ்க் கோட்டம்' வெளியீடு; சென்னை; முதல் பதிப்பு: 2010.

செவ்வாய், 21 மே, 2019

தமிழகக் காங்கிரசின் கண்டிக்கத் தக்க 'சண்டியாகம்'!!!

'சண்டி' என்பது, தீய சக்திகளை அழிக்க வல்ல 'சண்டி தேவி' என்னும் பெண் தெய்வத்தைக் குறிக்கும். இந்த யாகத்தை ஏழு பிராமணர்கள் இணைந்து செய்வார்களாம். இந்தவொரு யாகம் இன்று தமிழகக் காங்கிரசுக் கமிட்டி['கட்சி'ன்னு மாத்துங்கய்யா] சார்பாக இன்று சென்னையில் தொடங்குகிறதாம்[இந்து தமிழ் 21.05.2019].

யாகம் செய்வது நினைத்த காரியம் கைகூடுவதற்காக. இந்தச் சண்டி யாகம் எதற்காகச் செய்யப்படுகிறதாம்?

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்காக என்கிறது நாளிதழ்ச் செய்தி.
யாகம் செய்து மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றால் தேர்தல் வரும்வரை காத்திருந்திருக்க வேண்டாமே?!  காங்கிரசார் தேர்தலை எதிர்கொண்டது ஏன்?

இது யாகத்தில் கலந்துகொள்ளவிருக்கும் பெரிய பெரிய தலைவர்களான கே.எஸ்.அழகிரி, க.திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ்இளங்கோவன், கே.வீ.தங்கபாலு போன்றோருக்குத் தெரியாமல் போனது  ஆச்சரியம்.

இதனினும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்.....

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் 'முடிவு'ம் இருப்பில் இருக்கிறது. எண்ணி முடித்தால் நாட்டை ஆளப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுவதால் எந்தவொரு கட்சியாலும் அறிவிக்கப்படவிருக்கும் முடிவை மாற்ற இயலாது...மாற்றவே இயலாது என்பது உறுதி.

உண்மை இதுவாக இருக்கையில், தமிழகக் காங்கிரஸ் கட்சி சண்டியாகம் நடத்துவது ஏன்?

இவர்களின் யாகத்தை மெச்சி சண்டி தேவியானவள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட  முடிவை மாற்றுவார் என்று நம்புகிறார்களா? அதாவது, எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்குப் போடப்பட்ட வாக்குகளையெல்லாம் காங்கிரசுக்கான வாக்குகளாகச் சண்டி தேவி மாற்றுவாரா?

ஆம். மாற்றுவார் என்பது தமிழகக் காங்கிரசாரின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கை அறிவுபூர்வமானதா, மூடநம்பிக்கை சார்ந்ததா?

மூடநம்பிக்கை சார்ந்ததே என்பதில் எள்முனையளவும் ஐயத்திற்கிடமில்லை.

ஒருவரல்ல, இருவரல்ல, தமிழகக் காங்கிரசின் முக்கியத் தலைவர்கள் அத்தனை பேருமே மிகப் பெரும் மூடநம்பிக்கையாளர்களாக இருப்பதை எண்ணி மிக மிக மிக வருந்துகிறோம்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வெள்ளி, 17 மே, 2019

பிரெஞ்சுக்காரன் சொன்ன நரிக்கதை!!

#காட்டு ராஜாவான சிங்கம் காட்டிலுள்ள மிருகங்களையெல்லாம் தன் குகை வாசலுக்கு வருமாறு கட்டளையிட்டது. அனைத்து விலங்குகளும் வந்து குழுமின.

சிங்கம் தின்றது போக மிஞ்சிய விலங்குகளின் தசைகளும் எலும்புகளும் வாசலில் சிதறிக் கிடந்தன. கெட்ட வாசனை எங்கும் பரவியிருந்தது.

குகையிலிருந்து வெளிப்பட்ட சிங்கம், ''என் குகை வாசல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று விலங்குக் கூட்டத்திடம் கேட்டது.

பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அத்தனை விலங்குகளும் மௌனம் காக்கவே, யானையின் பக்கம் திரும்பி, ''பதில் சொல்'' என்று ஆணை பிறப்பித்தது சிங்கம்.

சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு, ''கெட்ட நாற்றம் வீசுது. வாசலில் நிற்கவே முடியவில்லை'' என்றது யானை.

''என் குகை வாசலையா நீ பழிக்கிறாய்?'' என்று சினந்து சீறிய சிங்கம் யானையின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டது. யானை அலறியது. அதன் கன்னத்திலிருந்து பெருக்கெடுத்து வழிந்தது குருதி.

குரங்கு இருந்த திசையில் பார்வையை ஓட்டிய சிங்கம், ''நீ சொல். என் குகை வாசல் பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றது.

வெலவெலத்து நடுங்கிக்கொண்டிருந்த குரங்கு, ''வாசலெங்கும் நறுமணம் கமழ்கிறது. காட்டிலுள்ள அவ்வளவு மலர்களையும் கொண்டுவந்து இங்கே கொட்டியது போல வாசம் கமகமக்கிறது'' என்றது.

''அநியாயத்துக்குப் புளுகுகிறாய். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்'' என்ற சிங்கம் மிகப் பலமாகக் குரங்கை எட்டி உதைத்தது.

அரண்டுபோன குரங்கு உருண்டு புரண்டு ஒரு புதரின் மீது விழுந்தது.

சுற்றுமுற்றும் பார்வையை நகரவிட்ட சிங்க ராஜா மற்ற விலங்குகளுக்கிடையே பதுங்கியிருந்த நரியிடம், ''நீ சொல்'' என்றது.

கொஞ்சமும் தயங்காமல், சமயோசிதமாக, ''கடந்த நான்கு நாட்களாக எனக்கு ஜலதோசம் பிடித்திருக்கிறது'' என்றது.

நரியின் புத்திசாலித்தனத்தை மெச்சிய சிங்கம் அந்தக் கணம் முதல் நரியைத் தன் அந்தரங்க ஆலோசகராக நியமனம் செய்தது#
-இது பிரெஞ்சு மொழியில் வெளியான கதை. சூழ்நிலைக்கேற்பப் பொய் பேசிக் காரியம் சாதிக்கும் பிரெஞ்சு நாட்டு அரசியல்வாதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக எழுதப்பட்டது இது[நன்றி: அறிஞர் க.ப.அறவாணன். நூல்: 'தமிழர்...சமுதாயம், கல்வி, அரசியல்'

இந்தப் பிரெஞ்சு நாட்டுக் கதை நம் நாட்டுக்கும் பொருந்துகிறதா?
=================================================================================

புதன், 15 மே, 2019

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை!?!?!?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள ஹபூரைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி. 14 வயதில்[2009ஆம் ஆண்டு] அவளுக்குத் திருமணம் செய்வித்தார் அவளின் தந்தை.

கணவன் ஒரு நாள் காணாமல் போனான்; திரும்பி வரவேயில்லை.

தந்தையிடமே அடைக்கலம் தேடி வந்த அச்சிறுமியை ஒரு நபரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றார் விற்றான் அந்த ஆள். வாங்கியவன் அவளை வீட்டு வேலைகளுக்கு அனுப்பினான்.

வீட்டு உரிமையாளர்களும் அவர்களின் நண்பர்களும் அந்தப் பாவப்பட்ட பெண்ணைத் தொடர்ந்து வன்புணர்வு செய்தார்கள்.

நிராதரவான நிலையில் இப்படிப் பல ஆண்டுகள்[24 வயதுவரை] சீரழிக்கப்பட்டு, உடம்பும் மனமும் சிதைந்து உருக்குலைந்துபோன நிலையில், தெரிந்த ஒருவரின் வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள் அவள். ஆனால், உயிர் பிரியவில்லை. அருகில் உள்ளவர்கள் அந்த அனாதையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை தொடர்கிறது[ஊடகச் செய்தி 15.05.2019].
முகம் தவிர உடலின் தோல் முழுதும் உரிந்து தாங்கொணாத மரண வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பாவப்பட்ட பெண் சொல்கிறாள்.....

''நான் இறக்கவே விரும்புகிறேன். வேறு எந்தவொரு பெண்ணும் என்னைப்போல் வாழ்நாளெல்லாம் வதைபடக் கூடாது.'' 

அவள் கடந்த காலத்தில் ஆடவர்களால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விவரித்தாள். இறுதியில், அவள் சொன்ன சில வார்த்தைகள் காலமெல்லாம் நம் நெஞ்சை வதைத்துச் சிதைக்க வல்லவை. அவள் சொன்னாள்.....

''நான் முற்றிலுமாய்க் கருகிவிட்டேன். இனி யாரும் என்னைப் பலாத்காரம் செய்ய முடியாது.''

'திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை' என்பது நம் முன்னோர் வாக்கு. நம் மக்கள், காலங்காலமாய்க் கணக்கு வழக்கில்லாமல் பல தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். அவற்றில் எந்தத் தெய்வம் இம்மாதிரி திக்கற்ற பெண்களுக்குத் துணை புரிந்தது? புரிகிறது?

யாருக்குக்கேனும் தெரியுமா?

வாரம் தவறாமல் பக்கம் ஒதுக்கி ஆன்மிக நெறி பரப்பும் இதழாளர்களுக்குத் தெரிந்திருக்குமே, சொல்வார்களா??

சாதாரண ஒரு மனிதர் சாட்சாத் முழுமுதல் கடவுளாகவே இந்த மண்ணில் நடமாடினார் என்று  ஓயாமல் கதை திரிக்கும் அந்த நம்பர் 1 பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிந்திருக்குமே, சொல்வார்களா?

மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே மனிதகுலம் வாழும் என்பதை மறந்து, நாளும் சாமி தரிசனம், அபிஷேகம், ஆராதனை என்று அலையும் கோடானுகோடி பக்தர்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமே, சொல்வார்களா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 14 மே, 2019

கொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு?!

''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்னும் இந்துதான்'' என்று 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல்ஹாசன் ஒரு கருத்து வெடியைக் கொளுத்திப் போட, காரசாரமான கருத்து மோதல் இங்கு நடைபெறுகிறது.
''கோட்சே, ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பில் பயிற்சி பெற்றவர். ஓர் அமைப்பின் தூண்டுதலால் நடைபெற்றது காந்தி கொலை என்பதால், கோட்சே திவிரவாதிதான்'' என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி['இந்து தமிழ்' 14.05.2019].

தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் ''ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கம். அதனோடு தொடர்புகொண்டிருந்த கோட்சேயும் ஒரு தீவிரவாதிதான்'' என்னும் பொருள்பட அறிக்கை தந்திருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, ''கோட்சேவால் காந்தி கொலை செய்யப்பட்டது உண்மைதான். இது ஒரு கொலை மட்டுமே''[கொலைக்கும் தீவிரவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை] என்கிறார்.

பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கமல்ஹாசனைக் கடுமையாகத் தாக்கி அறிக்கை விட்டிருக்கிறாரே அன்றி, கொலைக்கும் தீவிரவாதத்துக்குமான வேறுபாடு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தமிழிசையின் கருத்துப்படி, கோட்சே காந்தியைக் கொன்றது ஒரு கொலைச் செயல் மட்டுமே. ஒரு இஸ்லாமியன் காந்தியைக் கொன்றிருந்தால், அது.....???
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


திங்கள், 13 மே, 2019

'குமுதம்' வார இதழ் அதிபரின் கனிவான கவனத்திற்கு.....!

அதிபர் அவர்களே,
அமரர்களான தங்களின் தந்தையாரும்[பி.வி.பார்த்தசாரதி], அன்றைய இதழின் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களும், துன்புற்றோரின் துயர் தணிப்பதற்காகத்[இது அவர்களின் நம்பிக்கை] உருவாக்கி இயக்கியது 'குமுதம் பிரார்த்தனைக் கிளப்' என்னும் கூட்டு வழிபாட்டுக் குழு அமைப்பு.

என்ன காரணத்தாலோ இதன் இயக்கம் மிகப் பல ஆண்டுகளாகத் தடைபட்டுப்போனது.

பயன் விளைகிறதோ இல்லையோ, மீண்டும் இந்தக் கூட்டு வழிபாட்டு முறையைத் தாங்கள் நடமுறைப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

அதென்ன 'கிளப்'?!

'பலர் இணைந்து செயல்படும் இடம்' என்பது போன்ற இச்சொல்லுக்கான பொருள்கள் பலரும் அறிந்ததுதான் என்றாலும், 'கிளப்' என்பது வசதிபடைத்தவர்கள் கூடுகிற இடம் என்றுதான் என் போன்ற சாமானிய மக்கள் நினைக்கிறார்கள்.

'தினமணி', 'இந்து தமிழ்', 'ஆனந்த விகடன்' போன்ற இதழ்கள் பிறமொழிச் சொற்களை விலக்கி, தரமான நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் இந்நாளில் குமுதம் இவ்வகையில் பின்தங்கியிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

மொழி குறித்த உங்களின் போக்கை அன்புகொண்டு மாற்றிக்கொள்ளுங்கள். இனி.....

'குமுதம் பிரார்த்தனைக் கிளப்' என்பதற்குப் பதிலாக, 'குமுதம் கூட்டு வழிபாடு' என்று தலைப்பை மாற்றுங்கள்.

ஒரு சாதாரண வலைப்பதிவு எழுத்தாளன் என்பதற்காக[உங்களுக்கு வேண்டாதவனும்கூட] என்னின் இந்த வேண்டுகோளைப் புறக்கணிக்க மாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை.

நன்றி குமுதம் வரதராசன் அவர்களே.
==================================================================================
[இம்மடல் குமுதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது]






ஞாயிறு, 12 மே, 2019

மதம் கடந்த மனிதம்!!!

இன்றைய[12.05.2018] ஊடகங்கள் பலவற்றிலும் வெளியானது கீழ்வரும் செய்தி. மிக்க மகிழ்வுடன் மனதார நாம் அனைவரும் வரவேற்கும் இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

மனிதம் போற்றிய இளைருக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

நன்றி: https://awesomemachi.com/youngster-breaks-ramzan-fasting-for-donating-blood/

#அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் பனுல்லா அகமது. 26 வயதாகும் இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது அறை நண்பனான தபாஷ் பகதியும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாகப் பணியாற்றி வருகிறார். தபாஷ் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ரத்ததானம் போன்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஜன் என்பவருக்கு உடனடியாக 2 யூனிட் ரத்தம் தேவை என தபாஷுக்கு அழைப்பு வந்துள்ளது. பல இடங்களில் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்காத நிலையில் தன் அறை நண்பண் பானுல்லாவிடம் விஷயத்தை கூறியிருக்கிறார். இதையறிந்த பானுல்லா தானே ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஆனால் பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுக்க வேண்டாம் என தபாஷ் கூறியுள்ளார்.
ஆனால் சூழ்நிலையை புரிந்து கொண்ட பானுல்லா மருத்துவமனைக்குச் சென்று நோயாளிக்கு 1 யூனிட் ரத்தம் கொடுத்துள்ளார். இது குறித்துத் தபாஷ் பேசிய போது, “எனக்கு ரத்த தானம் தொடர்பாக அழைப்பு ஒன்று வந்தது. அதில் நோயாளி ஒருவருக்கு கட்டி அறுவை சிகிச்சை செய்ய அவருக்கு ‘பி’ பாஸிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது. நாங்கள் பலரிடம் கேட்டோம். ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை. நல்லவேளை, என் நண்பன் ரத்தத்தை தானமாக வழங்கினான். நோன்பிருக்கும் நிலையிலும் அவன் ரத்தம் வழங்கியது பெருமையாக உள்ளது” என்றார்.
இது குறித்துப் பேசிய பனுல்லா “என் நண்பன், பி பாஸிட்டிவ் ரத்தம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுக்கொண்டிருந்தான். நான் என் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசித்தேன். நான் ரத்த தானம் செய்ய முடியும். ஆனால் உடல்நலம் சரியில்லாமல் போகலாம். அதனால் விரதம் வீணாகிவிடும் என்றனர். அப்போது நான் என் விரதத்தைக் கைவிட்டு ரத்தம் கொடுக்க முடிவு செய்தேன். மனித வாழ்க்கையும் மனிதநேயமும் தான் அனைத்துக்கும் மேல். நான் ரத்த தானம் செய்ய முடிவெடுத்தபோது எனக்கு வேறு எண்ணமே இல்லை. ரத்தம் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். உடல் ரீதியாகப் பொருந்தும் அனைவருக்கும் ரத்தத்தை தானம் செய்ய வேண்டும். ரத்தத்தைத் தானம் செய்வது கடவுளுக்குச் செய்யும் சிறந்த சேவையாகும். இந்த உணர்வு சிறப்பாக உள்ளது” என்று பனுல்லா கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள் இருக்கும் ரமலான் நோன்பைக் கைவிட்டுப் பனுல்லா ரத்ததானம் செய்தது அனைவர் உள்ளத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது#
----------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 10 மே, 2019

'அந்த' 80% 'இந்தி'யர்கள் இந்தி படிக்கவில்லையா?!?!

'தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில், உணவு விடுதி, சிறிய கடைகள், பேரங்காடிகள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையங்கள் என்று பல்வேறு இடங்களிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில்[80%] வேலை பார்க்கின்றனர்' -இது இன்றைய 'தமிழ் இந்து'[10.05.2019] நாளிதழ்ச் செய்தி.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிலிருந்து இந்தியை வளர்த்தெடுக்கவும் இந்திய நாட்டை 'இந்தி' நாடாக்குவதற்கும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது இந்திய அரசு. இந்தி படித்தால் எளிதாக[குறிப்பாக வட மாநிலங்களில்] வேலை கிடைக்கும்; சொகுசாக வாழலாம் என்று பரப்புரையும் செய்யப்பட்டது/படுகிறது. ஆனால், இந்தி மாநிலத்தவர் இங்கு வேலை தேடி வருகிறார்களே, அது ஏன்?

அவர்கள்[தமிழ்நாட்டில் கட்டுமானம் முதலான அடிமட்டத் தொழில்களில் ஈடுபடும் இந்தியாவின் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்] இந்தி படிக்கவில்லையா? படிக்குமாறு தூண்டப்படவும் இல்லையா? படித்தும் வேலை கிடைக்கவில்லையா?

அங்கு நிலவும் கடுமையான போட்டியில், சிறப்பாகப் படித்துத் தேறியவர்கள் படித்தவர்களுக்கான அத்தனை காலி இடங்களையும் நிரப்பிவிடுவதால் இவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியே இல்லாமல் இங்கு வந்து குவிகிறார்களா?

இந்திக்காரர்கள் இங்கு வேலை தேடி வருவது இருக்கட்டும், அவர்களால் இன்று நிரப்பப்பட்டுள்ள 80% இடங்களில் முன்பு வேலை பார்த்தார்களே தமிழர்கள், அவர்களெல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள்?

என்ன செய்கிறார்கள்?! என் பதில்.....

இந்தி படித்து வட மாநிலங்களுக்கு வேலை தேடிப் போயிருக்கிறார்கள்!ஹி...ஹி...ஹி!!!
==================================================================================
நன்றி: 'வினவு'









புதன், 8 மே, 2019

அமேசான் கிண்டிலில் வெளியான என் நூலுக்கான மதிப்புரை!

ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition)

ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition) Kindle Edition



4.0 out of 5 stars1

ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition) Kindle Edition

₹0
மதிப்புரை....Top Reviews
28 April 2019
Verified Purchase
Some things are acceptable and some things are not. Really thought provoking concepts are discussed in the book. Buddhan Karuthu sums up the whole of existence.
People who can't take criticism about their beliefs, please avoid this book. Reducing the price will encourage more people to read the author's works.