அவனுக்கு வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம்; முதிர் காளை.
முதுகலைப் படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத நிலையில், அம்மா வேண்டிக்கொண்டதால் வாரம் ஒரு முறை அந்த மலைக்கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக்கியிருந்தான் அவன்.
அன்று அம்மாவாசையோ ஆத்தாவாசையோ, மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிடவும் மிக அதிகம். கண்களுக்கு விருந்தளிக்கும் கட்டழகுக் கன்னிகள் நிறையவே தென்பட்டார்கள்.
கூட்டமான கூட்டம். இளவட்டங்கள் அங்கே இங்கே பராக்குப் பார்ப்பது போல் பாசாங்கு செய்துகொண்டே, மனதுக்குப் பிடித்த குமரிப் பெண்களை உரசுவதற்குத் தோதான சூழ்நிலை; கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டால், தொடவே கூடாத இடத்தையும் தொட்டுப் பார்க்கலாம்.
இதை ஒரு கலையாகச் செய்பவர்கள் உண்டு. ‘அவன்’ இதுக்காகவெல்லாம் சிறு முயற்சிகூடச் செய்ததில்லை. எதிரில் வருவது வயசுப் பெண் என்றால், அவள் இடிப்பது போல் வந்தாலும், அடங்கி ஒடுங்கி ஒதுங்கிச் செல்லும் ‘நல்ல’ பிள்ளையாகவே வாழ்ந்து பழகிவிட்டவன் அவன்.
அன்றையத் தினத்தின் அதிகாலையிலேயே சனிபகவானின் ‘துஷ்டப் பார்வை’யில் சிக்குண்டிருந்ததாலோ என்னவோ, காலம் காலமாக அவனின் கட்டுப்பாட்டிலிருந்த அந்த உணர்ச்சி கட்டவிழ்த்துக்கொண்டிருந்தது. அவன் கண்களுக்கு அங்கு வந்திருந்த அத்தனைப் பெண்களும்[கிழவிகள் நீங்கலாக] காமதேவனால் அனுப்பப்பட்ட தேவலோகத்துக் கவர்ச்சி மங்கைகளாகக் காட்சியளித்தார்கள்.
அவனின் மனக் கட்டுப்பாடு சிதைந்து சிதறியது.
பராக்கெல்லாம் பார்க்காமலே, பதித்த பார்வையை மீட்டெடுக்காமலே எதிர்ப்பட்ட ஓர் இளநங்கையின் இடது மார்பில் அழுத்தமாகவே விரல் பதித்துவிட்டான்.
அவனை முறைத்த அந்தப் பெண், “நீயெல்லாம் அக்கா தங்கையோடு பிறக்கலையா?” என்று கடும் கோபத்துடன் கடிந்துகொண்டாள். அவள் சொல்லிமுடிப்பதற்குள்ளாகவே சுற்றியிருந்தவர்களின் கவனம் அவன் மீது பரவியது. அவர்களில் ஆண்களும் இருந்தார்கள்.
அவளின் தூண்டுதல் இல்லாமலே மூன்று நான்கு பேர் அவனைத் தாக்கத் தொடங்கினார்கள்.
உதை, குத்து, மண்டையில் இடி என்று கலந்துகட்டி அடித்தார்கள். முன் அனுபவம் ஏதும் இல்லாததால் தப்பிக்கும் வழி தெரியாமல், நட்ட தலையுடன் மலைக்கோயிலின் பாறைப் படிகளில் சரிந்தான் அவன்.
அடுத்து என்ன நடக்குமோ என்று சிந்திக்கும் திறன் இழந்து கிடந்தபோது, அவன் மீதான தாக்குதல் நின்றுபோயிருந்தது. அதற்குக் காரணமாக இருந்தவள் அந்தப் பெண்தான் என்பது சில வினாடிகளில் புரிந்தது.
அவன் மீது குடை போலக் கவிழ்ந்த நிலையில், “தப்புப் பண்ணின இவனை நான் பார்த்துக்கிறேன். எல்லாரும் விலகிப் போங்க” என்று கண்டிப்பான குரலில் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவன் எழுந்து உட்கார்ந்தான்; அவளை அண்ணாந்து பார்ப்பதற்கான திராணியை முற்றிலுமாய் இழந்திருந்தான்.
சில நிமிடங்களில் வேடிக்கை பார்த்த கும்பல் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது.
அது மலைக்கோயில் என்பதால் பக்தர்கள் மேலே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.
“சாமி கும்பிடத்தானே வந்தே?” -சுரணையற்ற குரலில் அவள் கேட்டாள்.
தலை நிமிராமலே, “ம்ம்ம்...” என்று முனகினான் அவன்; எழுந்து, கலைந்திருந்த ஆடையைச் சரிசெய்துகொண்டு, மௌனம் சுமந்து மலை உச்சியிலிருந்த கோயிலுக்குச் செல்லும் படிகளில் ஏறலானான்.
அவள் மேலே வருவாளா, கீழிறங்கிச் செல்வாளா என்பது பற்றியச் சிந்தனையே அவனுக்கு இல்லை. வேறு எவரைப் பற்றியும் அவன் நினைத்தானில்லை. அளப்பரியக் குற்ற உணர்ச்சி மனதை முற்றிலுமாய் ஆக்கிரமித்திருந்தது.
தொடர்ந்து படிகளில் ஏறினான்.
கோயிலுக்குள் நுழையக் கொஞ்சம் படிகளே இருந்த நிலையில், சற்றுத் தொலைவிலிருந்த செங்குத்தான குன்று அவன் கண்ணில் பட்டது.
அதன் ஒரு பக்கச் சரிவில் கிடுகிடு பள்ளத்தாக்கு இருப்பதும், அங்கிருந்து குதித்தால் வழியில் சிறு சிராய்ப்புக்கூட இல்லாமல் பள்ளாத்தக்கில் விழுந்து உடம்பு சிதறிச் செத்துப்போகலாம் என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருந்தது.
குன்று நோக்கி நடந்தான். சில நிமிடங்களில் குன்றின் உச்சியை அவன் அடைந்துவிடுவான்.
நடந்தான். சுமார் பத்துத் தப்படிகள் வைத்தால் அங்கிருந்து குதிப்பது சாத்தியமாகும்.
ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு...
ஐந்தாவது தப்படிக்காகக் காலை உயர்த்தியபோது ‘விசுக்’ என்று பின்னாலிருந்து யாரோ அவனை இழுப்பது தெரிந்தது.
அந்த ‘யாரோ’, யாரைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டுச் சிறுமைப்பட்டானோ அந்தப் பெண்தான். அவள் இழுத்த வேகத்தில் பின்னோக்கித் தள்ளாடியபடி அவளின் மார்பின் மீது சாய்ந்தான் அவன்.
அவள் சினம் கொள்ளவில்லை. அவன் மீது அனுதாபப் பார்வையைப் படரவிட்டு ஆதரவாகத் தாங்கிக்கொண்டாள்.
“செய்த தப்புக்கு ரொம்பவே நீ வருத்தப்பட்ட மாதிரி தெரிஞ்சுது. சந்தேகப்பட்டுத்தான் உன்னைப் பின்தொடர்ந்தேன். தற்கொலை செய்யத் துணிஞ்சதிலிருந்தே நீ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்னு தெரியுது. தப்புக்கான தண்டனையை அனுபவிச்சிட்டே. நீ கும்பிட வந்த அர்த்தநாரி சாமியும் உன்னை மன்னிப்பார். அவரைப் பார்க்க அப்புறம் ஒரு நாள் வரலாம். தற்கொலை முடிவைக் கைவிட்டு, நேரே உன் வீட்டுக்குப் போ” என்றாள் கண்டிப்பான தொனியில்.
சற்றே தாமதித்து, “என் முன்னால நட” என்று சொல்லி, பின்னால் நகர்ந்து இரு கைகளாலும் அவனின் முதுகு பற்றித் தள்ளினாள்.
அவள் அவன் கண்களுக்கு ‘அம்மன்’ சாமியாகத் தெரிந்தாள். அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டவனாக மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி இறங்கலானான்.
====================
***மேற்கண்டது உண்மை நிகழ்வு என்பதால் ‘புனைவு’ சேர்ப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.