அவன் அவளின் அன்றைய ஐந்தாவது வாடிக்கையாளன். தாபத்தைத் தணித்துக்கொண்டு அவளுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்தான்; அவிழ்த்துப்போட்ட ஆடையைத் திரும்ப உடுத்துக்கொண்டு அவளிடம் சொல்லிக்கொள்ளாமலே அங்கிருந்து நகர்ந்தான்.
தேடிவருகிறவர்களைத் திருப்திப்படுத்தி அனுப்பி வைப்பவள் அவள். திருப்தி அடைதல் எல்லாம் அவளுக்கு இல்லை. அதை அவள் எதிர்பார்ப்பதும் இல்லை. அவளின் தொழில் அத்தகையது.
ஆரம்பத்தில்[காதலித்தவனை நம்பி ஓடிப்போய், அவனால் ‘அந்த’த் தொழிலில் தள்ளப்பட்டது தனிக் கதை] வாடிக்கையாளர்கள் ஓரிருவர் என்றிருந்தபோது, அந்தரங்க உறவில் ‘அதை’ எதிர்பார்த்தது உண்மைதான் என்றாலும், அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது அது அவளை முழுக்க முழுக்க ஒரு மனித இயந்திரமாகவே மாற்றிவிட்டது.
வருமானம் தவிர வேறு எதையும் அவர்களிடமிருந்து அவள் எதிர்பார்ப்பதில்லை.
அலுவலகம் செல்வது போல, விடுதியொன்றில் அறையெடுத்துத் தங்கித் தொழில் செய்துவிட்டு வீடு திரும்புவதை வழக்கமாக்கினாள்.
எழுந்து நிற்கக்கூடத் தெம்பில்லாமல், படுக்கையில் கிடந்து பழைய நினைவுகளில் முழ்கியிருந்தபோது, ‘தட் தட் தட்’ சத்தம் கேட்க அறைக் கதவைத் திறந்தாள் அவள்.
அசட்டுச் சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தவர் அவளுடைய வாடிக்கையாளர்தான். அன்றைய வருகையாளர்களில் ஆறாவது நபர் அவர்.
அவர் வழக்கமாக வருபவர் மட்டுமல்ல, ‘ரேட்' கேட்காமலும் கணக்குப் பார்க்காமலும் கைக்கு வந்ததைக் கொடுத்துவிட்டுச் செல்பவர்.
சிரமப்பட்டு எழுந்து நின்று, இயந்திர கதியில் வலிந்து பெற்றப் புன்னகையுடன் அவரை வரவேற்றாள் அவள்; “உட்காருங்க” என்று அருகிலிருந்த இருக்கையைக் காட்டினாள்.
அவர் அமர்ந்தார்; அடுத்தச் சில வினாடிகளிலேயே அவளை அணைத்தார்; படுக்கையில் கிடத்தினார்; புணர்ந்தார்; கணக்குப் பாராமல் பணம் கொடுத்தார்; புறப்பட்டுப் போவதில் அவசரம் காட்டினார்.
அவளும் ஓர் உணர்ச்சியற்ற இயந்திரம் போல அவரை வழியனுப்பி வைத்தாள்.
ஆம், விருப்பம் இல்லாமலே ஈடுபட்ட அந்தத் தொழில் அவளை ஒரு முழுமையான இயந்திரம் ஆக்கியிருந்தது.
அன்றைய வருமானம் தந்த திருப்தியுடன் ஆடை திருத்தி வீடு திரும்பினாள்.
அவளின் வரவை எதிர்பார்த்து ஏங்கிக்கிடந்த அவளின் நான்கு வயது மகளின் கண்களில் மகிழ்ச்சி பொங்கிவழிந்தது; கையிலிருந்த பொம்மையை வீசி எறிந்துவிட்டுத் தாயை நோக்கி அவள் ஓடிவந்தாள்.
மகளைத் தூக்கிக் எடுத்து கட்டிலில் கிடத்தி, அவளின் முன் நெற்றி தடவி, கன்னங்களில் முத்த மழை பொழிந்து, ஒரு தாயாக நீண்ட நேரம் அவளை இறுக அணைத்தவாறு கிடந்தாள் அவள். எவனெவனோ அணைத்தபோது கிடைக்காத இன்பத்தை அப்போது அவள் அனுபவித்தாள். அது பேரின்பம்.
"இந்த என் செல்வத்துக்காகத்தான் யார் யாரையோ அரைமனதோடு அரவணைத்துக் கிடந்து பணம் சம்பாதித்தேன். இன்றோடு இந்த அசிங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று மனதுக்குள் சபதம் எடுத்தாள், ஓர் இயந்திரப் பெண்ணாகத் தொழில் செய்தவாறு அதீதப் பாசமுள்ள தாயாகவும் வாழ்ந்துகொண்டிருந்த அவள்!
=============================================================================
***"வாலிப வயதுதானே, ஒரு இட்லிக்கடை வைத்தோ வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்தோ பிழைப்பு நடத்தலாம்; மகளின் மீது அன்பைப் பொழியலாம். இவளுக்கு இந்தக் கேவலமான தொழில் எதற்கு?" என்று கேள்வி கேட்காமல் வாசித்தால் இதுவொரு 'நல்ல சிறுகதை'தான்!
கதாசிரியர்? ஹி... ஹி... ஹி!!!

