திங்கள், 30 ஜூன், 2025

‘தொட்டுக்கொள்ளாமல் ஒட்டாமல் உரசாமல் கட்டியணைக்காமல் வளர்த்த ஒரு காதல்’ கதை!!!

டைமேடையின் இருக்கை ஒன்றில் அமர்ந்து ‘கைப்பேசி’யை நோண்டியவாறு எனக்கான ரயிலுக்குக் காத்திருந்தபோது, என் பெயர் சொல்லி அழைத்த ஒரு பெண்ணின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன்.

மெலிதான புன்னகை தவழ என்னை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவர் அவள் என் கல்லூரித் தோழி; காதலியும்தான்.

“செண்பகம்தானே?” என்று நான் கேட்பதற்குள், “நான் செண்பகம். மறந்துட்டீங்களா உங்...” என்று சொல்லி முடிக்காமல், அருகிலிருந்த அவளின் கணவர், மகள், பேத்தி ஆகியோரையும் அறிமுகப்படுத்தியதோடு, “இவர் என் எம்.ஏ. வகுப்புத் தோழர்” என்று என் பெயர் சொல்லி அடையாளப்படுத்தினாள்.

படிப்பை முடித்து வெவ்வேறு ஊர்களில் வேலை கிடைத்துப் பிரிந்திருந்த நாட்களில் ‘பேசி’யில் பேசிப் பேசியே எங்கள் காதலை வளர்த்தோம்.

என்னை அழைக்கும்போதெல்லாம், “உங்க செண்பகா” என்று தொடங்குவாள். “என் செண்பகமா?” என்று கேட்டுத்தான் நான் பேச்சைத் தொடர்வேன்.

நாங்கள் மனம் ஒன்றிப் பழகியபோதும், ஒரு முறைகூட ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டதில்லை; ஒட்டி உரசிக்கொண்டதும் இல்லை.

உணவகம் சென்று தேநீர் அருந்தும்போதெல்லாம், இருக்கைகளில் இடைவெளி விட்டு அமர்ந்து பார்வையால் அன்பைப் பரிமாறிக்கொண்டவர்கள் நாங்கள்.

ஒன்றாக நூலகம் சென்று அவரவர் வாசித்தறிந்த அரிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதால் வளர்ந்த அறிவார்ந்த காதல் எங்களுடையது.

பூங்காக்களுக்குச் சென்று புதர் மறைவுகளைத் தேடாமல் புல்வெளியில் இடம்பிடித்து, நாட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளை விவாதித்து, காதலிப்பதற்கான தகுதியை மேம்படுத்திக்கொண்டவர்கள் செண்பகமும் நானும்.

திரையரங்குகளுக்குச் சென்று அரை இருட்டில் கட்டியணைத்துக் காமம் வளர்த்தவர்கள் அல்ல நாங்கள்; அதைப் புனிதமானது என்று போற்றி மகிழ்ந்தவர்கள்.

எங்கள் காதல் திருமணத்தில் முடியவில்லை என்பதுதான் பரிதாபம்.

அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது சாதி. சொந்தச் சாதிக்காரனை மணக்க மறுத்தால் தற்கொலை செய்வோம் என்னும் பெற்றோரில் மிரட்டலுக்குப் பணிந்தாள் செண்பகம்.

அதற்கப்புறம் எங்களின் தொடர்பு முற்றிலுமாய் அறுந்தது.

எங்கள் காதலும் பலிக்காத கனவாகிப்போனது.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் காதலர்களாக ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்து, பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டெழுந்து சில கணங்கள் மௌனித்திருந்த நிலையில், நான் அமர்ந்திருந்த இருக்கையைக் காட்டி, உட்காருங்களேன்” என்றேன் அவர்களிடம்.

“நாங்க வந்த ரயில் அரை மணி நேரம் போலத் தாமதம். பஸ் பிடிச்சி ஒரு திருமணத்துக்குப் போகணும். உட்காரவெல்லாம் நேரமில்லீங்க” என்று சொன்ன செண்பகம் தன் கணவரைப் பார்த்து, “போகலாமா?” என்றாள்.

தலையசைத்த அவர் விடை பெறுவதன் அடையாளமாக என்னிடம் கை குலுக்கினார்.

செண்பகமும் என் கையை இறுகப் பற்றிக் குலுக்கினாள். 

இளமையில் தொட்டுக்கொள்ளாமலே வளர்த்த காதல் முதுமையில் எங்களைத் தொட்டுக்கொள்ளச் செய்த அந்த அதிசயம் என்னுள் இனம்புரியாத சிலிர்ப்பை உண்டுபண்ணியது.

அவர்கள் நால்வரும் விடைபெற்று நகரத் தொடங்கினார்கள்.

சட்டெனத் திரும்பிவந்த செண்பகம், “உங்க குடும்பத்தைப் பத்தி எதுவும் கேட்க மறந்துட்டேன்” என்றாள்.

‘இல்லை’ என்பதாகத் தலையசைத்து, “கல்யாணம் பண்ணிக்கல” என்றேன்.

அவளின் முகமெங்கும் சோக இருள் சூழ்ந்தது. “வர்றேங்க” என்றவள் விசுக்கென்று முகம் திருப்பி நகர்ந்தாள்.

அவள் கண் கலங்கியிருக்கியிருக்கிறாள் என்று தோன்றியது. 

நானும் கலங்கிய கண்களுடன் எனக்கான ரயிலை எதிர்பார்த்துக் காத்திருக்கலானேன்.

எது எதற்கெல்லாமோ காத்திருந்து காத்திருந்து ஏமாந்து நொந்து மனம் புழுங்கி மரணத்தைத் தழுவுவதுதானே மனித வாழ்க்கை!

                                         *   *   *   *   *

***நண்பர் ஒருவரின் வாழ்க்கை நிகழ்வே கதை ஆக்கப்பட்டுள்ளது. கதை சொல்பவரும்[‘நான்’] அவரே.

சனி, 28 ஜூன், 2025

பலியாகும் பக்தர்களும் பலி கொடுத்துப் புவி ஆளும் புத்திசாலிகளும்!!!

நகரங்களில் பிறந்து நகரங்களிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கிராமங்களின் மேய்க்கப்படும் ஆட்டு மந்தை பற்றி அறிந்திருப்பார்களே தவிர, மந்தையை நேரில் காணும் வாய்ப்புக் கிட்டியிருக்காது. 

கீழ்வரும் காணொலியில் முட்டி மோதி நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறும் மனிதர் கூட்டத்தைக் கானலாம். அந்தக் கூட்டத்திற்குப் பெயர்தான்  ‘மனித மந்தை’.

தேர்த்திருவிழாவில் அலைமோதும் இந்த மனிதர்களுக்குப் பதிலாக அங்கே செம்மறி ஆடுகள் இருப்பதாகக் கற்பனை செய்தால் ஆட்டு மந்தையை நேரில் காணும் வாய்ப்பையும் பெறலாம்.

இந்த அறிவியல் யுகத்திலும், அலங்கரிக்கப்பட்ட வெறும் பொம்மையை[பூரி ஜெகன்னாதர்]த் தேரில் வைத்து இழுப்பதாலும், அதைக் கண்டு கண்டு கன்னங்களில் போட்டுக்கொள்வதாலும், நினைத்தது நடக்கும் என்று நம்பும் முட்டாள்கள் இந்த நாட்டில் கோடிக்கணக்கில் இருப்பது  வெட்கக்கேடானது.

நாட்டை ஆளுவோருக்கு இது வெட்கக்கேடான செயல் என்பது தெரியும்.

தெரிந்திருந்தும் தொடர் பகுத்தறிவுப் பரப்புரைகள் மூலம் இவர்களைத் திருத்த முயலாமல், விழா என்னும் பெயரில் கூட்டம் கூட வசதிகள் செய்து தரும் அவர்கள் கொலைகாரர்கள்.

ஆம், விழா என்னும் பெயரில், இல்லாத கடவுள்களுக்கு நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைப் பலியிடும்[தேர்த் திருவிழா நெரிசலில் படுகாயமுற்றவர்கள் 170 பேர்> பலர் பலியான தகவல் விரைவில் வெளியாகும்] இவர்கள் கொலைகாரர்களே என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

யார் அந்தக் கொலைகார்கள் என்று கேள்வி எழுப்பலாம். பதில் சொல்வது தண்டனைக்குரிய குற்றமாயிற்றே!


வெள்ளி, 27 ஜூன், 2025

கொடுத்துவெச்ச மகராசன்! பொறாமையில் புழுங்குது என் பொல்லாத மனசு!!

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கியுள்ளார். இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில்[இதில் மெச்சும்படியாக என்ன சாதிக்கிறார்கள்?] கலந்துகொள்ள, அவர் பிரேசில் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பயணத்துடன், டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, கானா, நமீபியா ஆகிய 4 நாடுகளுக்குப் பயணம்[சுற்றுலா] மேற்கொள்கிறார்> செய்தி.

இதன் மூலம் உலகளாவிய நாடுகளுடன் உறவுகளை அவர் மேம்படுத்துவதாக, தினத்தந்தி போன்ற ஊடகங்கள் ஊதிப் பெருக்கி அவரின் புகழ் பரப்புகின்றன.

இயல்பாகவே பொறாமைப்படும் குணம் அடியேனுக்குக் கொஞ்சம் அதிகம்.


மோடி குறித்த இது போன்ற செய்திகளை வாசிக்கும்போதெல்லாம்.....


அவருக்கென்ன, நேரத்துக்கொரு ஆடை! வாரத்துக்கு நான்கு சுற்றுலா! சு.உலா இல்லாதபோது கோயில் கோயிலாகப் பக்தி உலா! தேர்தல் நடக்கவுள்ள உள்நாட்டு ஊர்களில் வீதி உலா!


“கொடுத்துவெச்ச மகராசன்யா” என்று சொல்லிச் சொல்லிப் பொறாமைப்பட்டுப் பட்டுப் புழுங்குது என் பொல்லாத மனசு!

* * * * *

https://www.dailythanthi.com/news/india/pm-modi-to-visit-brazil-next-week-1165272

வியாழன், 26 ஜூன், 2025

'கிணற்றுத் தவளை' அமித்ஷா கவனத்திற்கு... ‘ஆங்கிலம் இணைப்புப் பாலம்; சுவர் அல்ல’!

#டெல்லியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அவர், “ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பேசினார்# -இது செய்தி.

                                                *   *   *   *   *

//கர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற இந்தியாவில்கூட, பள்ளிகளில் ஆங்கிலம் விருப்பமான பயிற்றுவிப்பு ஊடகமாகும். 

இது தேசிய மற்றும் சர்வதேசத் தேர்வுகள் நடத்தப்படும் மொழி; அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும் மொழி.

இளம் தலைமுறையை உலகக் கல்வியாளர்களுடன் இணைக்கும் ஊடகம். 

புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய அல்லது சர்வதேச சமூகங்களுடன் உறவாட விரும்பும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு, ஆங்கிலம் ஒரு தேர்வாக, அதாவது அது ஒரு பாலமாக அமைந்துள்ளது[English a bridge, not a wall]; தடுப்புச் சுவராக அல்ல.

இது ஒரு கிராமப்புற மாணவரின் கனவுகளை ஹார்வர்ட் அல்லது ஆக்ஸ்போர்டின் விரிவுரை அரங்குகளுடன் இணைக்கும் ஒரு பாலம்.

ஓர் இந்தியத் தொடக்க நிறுவனம் தனது தயாரிப்பை ஒரு ஐரோப்பிய முதலீட்டாளருக்கு வழங்க அனுமதிக்கும் பாலம். 

டோக்கியோவில் உள்ள ஒரு சக ஆராய்ச்சியாளருடன் புனேவில் உள்ள ஒரு விஞ்ஞானி உரையாட அனுமதிக்கும் பாலம். 

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.thestatesman.com/opinion/english-a-bridge-not-a-wall-1503449838.html#google_vignette

22 நிமிடங்களில் மோடி ‘அதை’ச் சாதித்தாராம்! அம்ம்ம்ம்மாடியோவ்!!

அறிவிப்பு:

மோடி குறித்துப் பதிவுகள் எழுதுவதில் எனக்குப் போதிய நாட்டம் இல்லை. எனினும், மனம்போன போக்கில் அவர் பேசுவது அதைத் தவிர்க்க இயலாததாக ஆக்குகிறது!

                             *   *   *   *   *

//2025இல் இந்தியா-பாகிஸ்தான்  போர் நான்கு நாட்கள் நீடித்தது. இது மே 7 முதல் 10 வரை நடந்தது// இது ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான உலகறிந்த செய்தி.

போர் என்பது, தொடுக்கப்படுவதற்கு முன்னால், பின்விளைவுகளை ஆராய்தல், திட்டமிடல்[எதிரியின் படைபலத்தோடு தன் பலத்தை ஒப்பிடுதல் போன்றவை], மோதலுக்குத் தயாராவது என்று பல நிலைகளை உள்ளடக்கியது.

நினைத்தவுடன் களத்தில் இறங்குவதோ வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதோ 100% நடவாத காரியம்.

நடத்திக் காட்டியதாக மோடி முழங்கியிருப்பது நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது; அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறது.

22 நிமிடங்களில்.....!?[கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு கவனித்தாரா?!]

இது மனித இனத்தவருக்கு இயலாத காரியம். மோடி கடவுளால் அனுப்பப்பட்டவர்[இவரும் கடவுளே] என்பதால் சாத்தியமாயிற்றோ!?

புதன், 25 ஜூன், 2025

கடவுள்களைக் கொஞ்ச நாள் தூற்றலாம் வாங்க!!!

பக்தக்கோடிகளே,

மனிதர்களாகிய நமக்கு ஆறறிவு வாய்த்ததால் அதன் மூலம் நாம் பெற்ற நன்மைகளைவிடவும் தீமைகளே அதிகம்.

அந்தத் தீமைகளில் கடவுளைக் கற்பித்து வழிபடுவதும்[இதனால் மூடநம்பிக்கைகள் பல உருவாயின] ஒன்று.

‘ஒன்று’ என்று நம்பப்பட்ட கடவுள் எண்ணிக்கை கர்த்தர், அல்லா[ஹ்], சிவன், விஷ்ணு என்று ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டது[கடவுள் ஒருவரே. அவரை வேறு வேறு பெயர் சூட்டி வழிபடுகிறோம் என்று புளுகவும் தெரிந்திருக்கிறார்கள்].

மனித சமுதாயத்தில், காலங்காலமாய் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பவர்கள் பக்தர்களாகிய நீங்கள்தான், நாட்டை ஆளுகிறவர்கள் பலரும் உங்களை ஆதரித்ததால்/ஆதரிப்பதால்.

பக்தர்களாகிய[மத வேறுபாடு கருதாமல்] உங்களிடம் நாம் கேட்க விரும்புவது.....

இந்நாள்வரை, உங்களின் பக்திப் பரம்பரை கடவுள்களைப் போற்றிப் புகழ்ந்து{எல்லாம் வல்லவர், அவரின்றி அணுவும் அசையாது, எல்லாப் புகழுக்கும் உரியவர்[அல்லா> இஸ்லாம்], எல்லாருக்கும் தந்தை அவரே[கர்த்தர்> கிறிஸ்தவம்]} கோயில்கள் கட்டி, கூட்டு வழிபாடுகள் நிகழ்த்திக் கொண்டாடியதால் இந்நாள்வரை மனித இனம் பெற்றப் பலன்கள் யாவை?

தனிப்பட்டவர் வாழ்க்கையிலாகட்டும்  ஒட்டுமொத்தச் சமுதாயத்திலாகட்டும், வாட்டும் வறுமை குறைந்ததா? மருட்டும் நோய்களின் தாக்கம் அருகியதா? போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, ஆதிக்க வெறி, இன வெறி, போன்றவற்றால் நிகழும் மோதல்களால் விளைந்த சீரழிவுகளின் எண்ணிக்கை சிறிதேனும் சரிந்ததா? போலிச் சாமியார்களின் கொட்டம் அடங்கியதா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

இந்தவொரு அவல நிலையில், உங்களுக்கு நாம் அறிவுறுத்த விரும்புவது.....

வழக்கம்போல் கோயிலுக்குச் செல்லுங்கள்.

சென்று, வழக்கம்போல் அவரைப் போற்றிப் புகழாதீர்கள்; மனம்போன போக்கில், “காலங்காலமாய் உன்னை வழிபட்டதால் நானோ இந்த மனித இனமோ பெற்ற நன்மைகள் ஏதுமில்லை. நீ கருணை வடிவான கடவுள்தானா? நீ இருப்பது உண்மைதானா?” என்றெல்லாம் கேளுங்கள்.

நாள் தவறாமல் கேளுங்கள்; தொடர்ந்து கேளுங்கள்.

கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் உங்களின் தூற்றுதலால் திருந்துகிறாரா பார்ப்போம்!

செவ்வாய், 24 ஜூன், 2025

செத்த மொழிக்குக் கோடிகளில் சமாதி கட்டுகிறாரா கில்லாடி மோடி!?!?!

கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா உள்ளிட்ட செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது[https://tamil.oneindia.com].

சமஸ்கிருதம் செத்தொழிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன[கோயில்களில் வேதம் ஓதி, ‘அவர்கள்’ பிழைப்பு நடத்த மட்டுமே பயன்படுகிறது].

10 ஆண்டுகளில் அதற்கு ரூ2533// கோடி செலவு செய்தும்[மோடி ஆட்சியில்] அது செத்த சவமாகத்தான் இருக்கிறது.

சவம் சவம்தான். அதற்குச் செய்த/செய்யும் செலவெல்லாம் வீண் விரயம்தான் என்பது தெரிந்திருந்தும் ரூ2533 கோடியை வீணடித்தது ஏன்?

வீணடிக்கப்பட்டதா அல்லது விவரமானவர்களின் சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்பட்டதா?

சேர்த்த அந்தப் பிழைக்கத் தெரிந்த புத்திசாலி யார்?

புத்திசாலியா, புத்தி சாலிகளா?

அவர் யார் அல்லது, அவர்கள் யாவர் என்பது இந்த நாட்டின் பிதாமகன் மோடிக்குத் தெரிந்திருக்குமா?

                                   *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/union-government-spent-rs-2-533-crore-on-sanskrit-in-10-years-classical-languages-get-only-rs-13-cr-715029.html

'நீட்’ஐ ஒழிக்க ஆகச் சிறந்த ஒரே வழி!!!

 செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி

அக் 2021- அனு, கீர்த்திவாசன்

நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்

ஜூன் 2022- தனுஷ்

ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி

ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ

செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி

மார்ச் 2023- சந்துரு

ஏப்ரல் 2023- நிஷா

ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்

டிசம்பர் 2023- ஆகாஷ்

அக்டோபர் 2024- புனிதா

மார்ச் 2025-இந்து, தர்ஷினி

மேற்கண்டது, ‘நீட்’ தேர்வுத் திணிப்பால் தமிழ்நாட்டில் நிகழ்ந்த தற்கொலைகளுக்கான பட்டியல்[19 பேர் +பெரும் எண்ணிக்கையிலான மனநிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள்].

இந்தத் திணிப்புக்கு முன்பு இம்மாதிரியான தற்கொலைகள் எப்போதாவதுதான் நிகழ்ந்தன என்று உறுதிபடச் சொல்லலாம்.

மாநிலங்களுக்கான உரிமையை[தேர்வு நடத்துதல்] அவற்றிடமிருந்து பறித்த மோடி மனம் திருந்தினால் மட்டுமே ’நீட்’ நீக்கப்படுவது சாத்தியமாகும்.

சர்வ அதிகாரம் படைத்த அவர் திருந்துவது 100% சாத்தியம் இல்லை. மாநிலங்களுக்கான இன்னும் பல உரிமைகளைப் படிப்படியாகப் பறிக்கப்போகிறார் என்பதும் உறுதி. ஒரு காலக்கட்டத்தில், இந்தி மட்டுமே இந்தியாவின் வழக்கு மொழியாவதும், ‘இந்தி’யர்கள் மட்டுமே[மற்ற இனங்கள் அழியும்] வாழும் நாடாக இது ஆவதும் நிகழும். 

எனவே, தமிழின உணர்வுள்ள பல கட்சிகளும்[பாஜக நீங்கலாக] தங்களின் சுயநலத்தைப் புறந்தள்ளி, ஒருங்கிணைந்து ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடுவதுதான் உரிமைப் பறிப்பையும் இன அழிவையும் தடுப்பதற்கான ஒரே வழி.

உண்மையிலேயே, மு.க.ஸ்டாலின் அணியினரும், எடப்பாடிப் பழனிசாமி அணியினரும், இனப்பற்றில் பத்தரை மாற்றுத் தங்கங்கள் என்றால், அவர்கள் இதற்கான போராட்டம் ஒன்றை உடனடியாகத் தொடங்குதல் தவிர்க்கவே கூடாதது.

இதன் விளைவாக, தி.மு.க. ஆட்சி கலைக்கப்படலாம். இந்த இரு தலைவர்களும் கூட்டணித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு, தேசத் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படலாம்.

தலைவர்கள் அடக்கி ஒடுக்கப்படும் நிலையில் இவர்களின் தொண்டர்கள், அஞ்சாமலும் தொய்வில்லாமலும் போராட்டத்தைத் தொடர்வார்களேயானால் மோடி தன் பிடிவாதத்தைக் கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்வதும்; பறித்த உரிமைகளைத் திரும்ப ஒப்படைத்தலும் நிகழக்கூடும்.

இது தமிழினத்துக்கான வெற்றியாக அமையும்.

அடுத்து, மாநிலச் சட்டமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலில், இப்போதுள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப[கூடக்குறைய]தாராள மனதுடன் இடங்களைப் பகிர்ந்துகொண்டால்  அனைவரும் தேர்வாக வாய்ப்புள்ளது.

ஆட்சி அமைப்பதிலும் இன நலனைக் கருத்தில்கொண்டு இதே பங்கீட்டு முறையைப் பின்பற்றலாம்.

சுருங்கச் சொன்னால், அனைத்துத் தமிழர் கட்சிகளும் இணைந்து செயல்படுவது காலத்தின்[பாஜக ஆட்சி நீடிக்கும் நிலையில்] கட்டாயம்.

இணைந்து செயல்படுவார்களா[தமிழின&மொழி அழிவைத் தடுத்திட] தி.மு.க. கூட்டணியினரும் அ.தி.மு.க. அணிக்காரர்களும்?

அந்த நல்ல நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்போம். 

திங்கள், 23 ஜூன், 2025

புத்திசாலிக்குப் புத்தி சொல்லும் புத்தி கெட்ட அண்ணாமலை!!!

"செல்ஃபி கேட்டால் திருநீற்றை அழிக்கிறார் ஒரு அரசியல் தலைவர்"- அண்ணாமலை[ மாலை மலர், 22 ஜூன் 2025 9:01 PM].

திருநீறு என்பது வெறும் சாம்பல்.

‘அதை நெற்றியில் தீட்டுவது பக்தியின் அடையாளம். அதன் மூலம் ஆண்டவனின் அருள் பெற்றுத் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்பது வெறும் விருப்பமே தவிர, அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற மதத்தவர் கையாளும் மத அடையாளங்கள் உட்பட.

கடவுள்[மேம்பட்ட சக்தி] நம்பிக்கை உள்ளவராக இருப்பினும், ஒருவர்  கூர்த்த அறிவுடையராயின் மதச் சின்னங்கள் அணிவதையோ, மத அடையாளங்களை ஏற்பதையோ விரும்பமாட்டார்.

மதச் சின்னங்களில் ஒன்று திருநீறு.

நெற்றியில் திருநீறு பூசுபவர், அயராது சிந்திப்பாராயின், அதைச் செய்வது முட்டாள்தனம் என்பதைப் புரிந்துகொண்டு அந்தச் சின்னத்தைத் தவிர்ப்பார்.     அவர் பாராட்டுக்குரியவர்.

அண்ணாமலையின் எள்ளலுக்கு ஆளானவர் நெற்றித் திருநீரை அழித்ததால் அவரும்[திருமாவளவன்?] பாராட்டுக்குரியவரே.

செல்ஃபி கேட்டதால் திருநீரை அழித்தார் என்று அவரை எள்ளி நகையாடியிருக்கிறார் அண்ணாமலை.

காரணம், அண்ணாமலைக்கு வயதான அளவுக்குப் புத்தி  வளரவில்லை என்பதே.

அதை வளர்த்துக்கொள்வது அவருக்கும் அவரைச் சார்ந்திருப்போருக்கும் நல்லது; நாட்டுக்கும்தான்.

ஞாயிறு, 22 ஜூன், 2025

சிவபெருமானை ‘யோகா மாஸ்டர்’ ஆக்கிய புருடா மாஸ்டர் ஆர்.என்.ரவி!!!

‘யோகா’ என்பது உடல், மனம்[இது குறித்தான ஆய்வுரை பிறிதொரு நாளில் வெளியாகும்] என்னும் இரண்டையும் பக்குவப்படுத்தி இவற்றின் நலம் பேணுவதற்கான ஒரு பயிற்சி மட்டுமே.

உடலை அணு அணுவாய் ஆராய்ந்து, மனத்துடன் இணைத்து அதை மேம்படுத்துவதற்கு நம் சித்தர்கள்  உருவாக்கிய ஒரு கலையாகும் இது.

சங்கிகள் இந்த நுட்பமான கலையை ஆன்மிகத்தின் ஒரு கூறு ஆக்கிவிட்டார்கள்.

ஆன்மா என்ற ஒன்றின் இருப்பு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஆன்மிகத்தை உயர்த்திப் பேசிப் பேசி மக்களின் ஆறறிவு வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் இவர்கள்.

இந்தக் கும்பலுக்குத் தலைமை தாங்குபவர்களே மோடி, அமித்ஷா வகையறாக்கள்.

இவர்களால், ஆளுநர் என்னும் பெயரில் நியமிக்கப்பட்ட அடாவடி ஆன்மிகப் புளுகர்தான் ஆர்.என்.ரவி.

இந்த ஆன்மிக மேதை, “யோகாவை நமக்கு வழங்கியவர் ஆதியோகியான சிவபெருமான்” என்று உளறியிருக்கிறார்.

கற்பனைப் புனைவுகளான புராணங்கள் மூலம் பிரபலக் கடவுளாக ஆக்கப்பட்டவர் சிவபெருமான்.

இவருக்கும் யோகா கலைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

இந்தக் கற்பனைக் கடவுளைத்தான் ஆதி யோகா மாஸ்டர் என்று பேசியிருக்கிறார் இந்த ஆன்மிகப் புருடா மாஸ்டர்.

தரம் தாழ்ந்ததாகத் தமிழினத்தை ஆக்குவதற்கென்றே கங்கணம் கட்டுவித்து அனுப்பப்பட்டவர் இவர்.

தங்களின் அறிவையும் உரிமைகளையும் காத்துக்கொள்வதற்காகத் தமிழர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டிய காலக்கட்டம் இதுவாகும். 

சனி, 21 ஜூன், 2025

நீங்களும் உங்கள் கடவுளும் என் கேள்வி பதிலும்!!!

 நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா? 

“ஆம்” என்பது உங்கள் பதிலாயின், மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் கடவுளை நம்புவதோடு அவ்வப்போதோ எப்போதுமோ அவரிடம் ‘கோரிக்கைகள்’ வைக்கும் பழக்கம் உள்ளவரா?

இதற்கும் “ஆம்” என்பது உங்கள் பதில் எனின், நீங்கள் வைக்கும் கோரிக்கைகளில், “கடவுளே, எனக்குச் சாகாவரம் கொடு” என்பதும் இடம்பெறுவதுண்டா?

நன்கு யோசித்துச் சொல்லுங்கள், இல்லைதானே?

காரணம்?

மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்க இயலாதது; கூடாதது என்பது கடவுள் வகுத்த நெறி. எனவே, சாகா வரம் அருளும்படிக் கோரிக்கை வைத்தால் அவர் அதை நிராகரிப்பார் என்பதுதானே?

உயிர்களை மரணிக்கச் செய்வது கடவுள் வகுத்த உயிர்களுக்கான வாழ்க்கை நெறி என்பது போல, அவை தத்தம் வாழ்க்கையில் இன்ப துன்பங்களை அனுபவிக்க நேர்வதும் அவரால் வகுக்கப்பட்ட நெறிதான்.

எனவே, என்னைத் தாக்கும் துன்பங்களை அகற்றி இன்பங்களை வாரி வழங்கு” என்பது போல நீங்கள் நம்பும் கடவுளிடம் கோரிக்கைகள்[வேண்டுதல்கள்] வைப்பது தவறு என்கிறேன் நான்.

உங்களால் மறுக்க இயலுமா?

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ‘எட்டிக்கனி’[விஷம் உள்ளது] அலங்காரம்... விரைவில்!!!

பாம்பு, பெருச்சாளி, கழுகு, நாய், பசு, காளை, மயில் என்று மனிதர்களால் கடவுளாக வழிபடப்படுகிற உயிரினங்களுக்கிடையே உலக அளவில் பிரபலமானது அநுமான் எனப்படும் குரங்குகார்[கடவுள்!]தான்.

ராவணனுடனான போரில் ராமனின் அணுக்கத் தொண்டனாகச் செயல்பட்டு அவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த[ராமாயணம்] இந்தக் குரங்குகார் ‘ஆஞ்சநேயர்’ என்று பக்தர்களால் பயபக்தியுடன் அழைக்கப்படுகிறதுகிறார்.

உலகெங்கும் இவருக்குக்[குறிப்பாக இந்தியாவில்] கோயில்கள் உள்ளன; மிக உயரமான சிலைகள் உள்ளன.

18 அடி[5.5 மீ] உயரச் சிலை நிறுவிச் சாதனை நிகழ்த்தியவர்கள், கோழிப்பண்ணை, லாரிக் கட்டுமானம், ஆழ்துளைக் கிணறு தோண்டுதல்[ரிக்] ஆகியவற்றின் மூலம் பிரபலமான நாமக்கல் குடிமக்களாகிய நாங்கள்தான்.

அயல்நாடுகளிலிருந்தெல்லாம் எங்கள் ஆஞ்சநேயரைத் தரிசிக்கப் பக்தர்கள் வருகிறார்கள் என்றால், இவர் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்த கடவுள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

விசேட நாட்களில் இவருக்கு நாங்கள் வடைமாலை{100008[லட்சத்து எட்டு] உளுந்து வடைகள்> அநுமன் சாமியின் விருப்பம்> முன்னொரு நாளில் தலைமை அர்ச்சகரின் கனவில் சொன்னது} சாத்தி வழிபடுவது உலகில் வேறெந்தக் கடவுளுக்கும் வேறு எந்தவொரு பக்தர் கூட்டமும் செய்திராத சிறப்பு ஏற்பாடாகும்.

சாத்தப்பட்ட வடைகளைப் பிரசாதமாகப் பெற்றுப் புண்ணியம் சேர்ப்பதற்காகப் பக்தர்கள் முட்டி மோதித் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் படும் பாடு சொல்லி மாளாது.

வடை மாலை என்றில்லை, ஆஞ்சநேயருக்குப் பிடித்தமான வெற்றிலை மாலை அணிவிப்பதோடு, சந்தனக் காப்பு, வெண்ணெய்க் காப்பு போன்றவையும் சாத்தப்படுகின்றன.

அண்மையில், மாம்பழங்களால் ஆஞ்சநேயப் பெருமாளை அலங்கரித்து அபிஷேகம் செய்திருப்பது வேறெந்த ஊரிலும் வேறெந்தப் பக்தர் கூட்டமும் செய்திராத அதிசயம் நிகழ்வாகும்.

இந்நாள்வரை வடை, வெற்றிலை, பழங்கள் போன்றவையே பயன்படுத்தப்பட்ட நிலையில், கசக்கும் எட்டிக்காய்களைக் கொண்டு ஆஞ்சநேயக் கடவுளை அலங்கரித்து அபிஷேகம் செய்திடத் திட்டம் தீட்டியிருக்கிறோம் நாமக்கல் ஆயுட்காலப் பக்தர்களான நாங்கள்.

எட்டிக்கனி விஷம் உள்ள கசப்பான பண்டம் என்றாலும், ஆஞ்சநேயப் பகவானுக்குச் சமர்ப்பிப்பதால்[மாலையாகவும், தட்சணையாகவும்] அபிஷேக ஆராதனைகள் முடிந்தவுடன் விஷம் நீங்கி, கசப்புச் சுவை மாறி இனிப்புக் கனியாக அது மாறும் என்பது அறியத்தக்கது.

இந்நிகழ்வு இடம்பெறும் நாள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும்.

அறிந்து இங்கு வருகை புரிந்து, ஆஞ்சநேயக் கடவுளின் எட்டிக்கனியைப் பிரசாதமாகப் பெற்றுச் சுவைத்துப் புண்ணியம் சேர்ப்பீராக!
 

வெள்ளி, 20 ஜூன், 2025

மோடிக்குக் கூட்டம் சேர்க்க அரசு விடுமுறை! இந்த நாடு இவரின் ‘பட்டா’ நிலமா?!

//ஆட்சியமைத்த ஒரு வருடம் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று(20.06.2025)ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்கிறார்இதனைத் தொடர்ந்து மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை அளித்து மாநில அரசு அறிவிப்பு[கூட்ட நெரிசல் காரணமாம். நெரிசல் இல்லாத விடுமுறை நாட்களில் நடத்தலாமே?] வெளியிட்டுள்ளது. 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சாபுவனேஸ்வர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் & அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் 20ஆம் தேதி விடுமறை அளிக்கப்பட்டுள்ளது//[மாலைமலர்].

ஆட்சியமைத்த ஓராண்டு நிறைவு விழாவாம். ‘பைசா’ பயனில்லாத வெற்று ஆடம்பர விழா இது. மோடி பெரிதாக என்ன பேசிவிடப்போகிறார்? வாயால் நிறைய வடை சுடுவார்.

மோடி கலந்துகொள்வதால், பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டி[மாணவர்களையும் பல்துறை அலுவலர்களையும் அதிக அளவில் அழைத்துவரலாம்], படம் பிடித்து, “ஆகா, மோடி பேச்சைக் கேட்க இத்தனைக் கூட்டமா?” என்று செய்தி வெளியிட்டு மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தி, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவன் என்னும் பிம்பத்தை உருவாக்க உதவும் நடவடிக்கையே இந்த விடுமுறை அறிவிப்பு.

சுயநலமிகள் நாட்டை ஆண்டால் இதுவும் நடக்கும்; இன்னும் என்னவெல்லாமும் நடக்கக்கூடும்!

சனநாயகம் என்னும் பெயரில் ஒரு சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபறுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாட்டு மக்கள்!

https://www.maalaimalar.com/news/national/pm-visit-odisha-declares-half-day-holiday-in-all-govt-offices-in-bhubaneswar-on-friday-777230

வியாழன், 19 ஜூன், 2025

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உள்துறை அமைச்சர்!!!

முன்னாள் அரசு ஊழியர் ஐஏஎஸ் அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா, "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் - அத்தகையச் சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் நகைகள் என்று நான் நம்புகிறேன் என்றார்[https://www.news18.com/amp/india/those-who-speak-english-in-country-will-soon-feel-ashamed-amit-shah-ws-l-9393567.html].

உள்துறை அமைச்சர் இப்படிப் பேசியது மனப்பூர்வமானதும் உண்மையானதும் என்றால், இந்தியாவில் பேசப்படும் அத்தனை மாநில மொழிகளையும்[இந்தி அவற்றுள் ஒன்று மட்டுமே] ஆட்சிமொழிகளாக ஆக்கியிருத்தல் வேண்டும்[இன்றைய அறிவியல்&தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியமே].

இவர்[கள்> +மோடி] நடைமுறைப்படுத்தியிருப்பதோ எங்கெங்கு காணினும் இந்தி... இந்தி... இந்தி... இந்தி[+சமஸ்கிருதம்] மட்டுமே!

இத்தனை வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டு, மாநில மொழிகளை[தாய்மொழிகள்]க் காப்பது தாய்மொழிப் பற்றும் இனப்பற்றும் கொண்டவர்களின் கடமை ஆகும்.

இந்த உண்மையை அறிந்து உணர்ந்து செயல்படுவார்களா நம் மக்கள்?

எத்தனை விருதுகள்[28] மோடிக்கு! அத்தனைப் பெரிய ஆளுமையா இவர்?!?!

//இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இரண்டு சர்வதேசக் கௌரவங்களைப் பெற்றார். இந்திரா காந்தியும் இதேபோல் இரண்டு விருதுகளைப் பெற்றார். டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் இரண்டு சர்வதேசக் கௌரவங்களைப் பெற்றார்[ராஜீவ் காந்தி எதையும் பெறவில்லை].

முன்னாள் பிரதமர்கள் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவாக இருக்கும் நிலையில்.....

பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையை அங்கீகரிக்கும் விதமாக, 2016 & 2025க்கு இடையில் வெளிநாடுகளில் இருந்து 28 மிக உயர்ந்த மாநில[?] விருதுகள்[இவற்றில் கேட்டு வாங்கியவை எத்தனை?!] வழங்கப்பட்டுள்ளன// என்பது செய்தி.

மோடிக்கு அளப்பரிய இந்த விருதுகளைப் பெற்றுத்தந்தது வருடைய தொலைநோக்குத் தலைமையாம்!

அதென்ன ‘தொலைநோக்கு’த் தலைமை? ‘அண்மை நோக்கு’த் தலைமை என்று ஒன்று உண்டா?

உங்களுக்குப் புரிகிறதோ அல்லவோ, எங்கள் குலசாமி சாட்சியாக எனக்குப் புரியலீங்க.

எதற்கு இந்த ஒப்பீடு?

இரண்டிரண்டு விருதுகளைப் பெற்ற நேரு, இந்திரா அம்மையார், மன்மோகன் சிங் ஆகியோரைவிடவும் 28 பெற்ற மோடி அறிஞரா? அதீத ஆளுமைத் திறன் வாய்ந்தவரா? உயர் பண்பாளரா? 

“ஆம்” என்பார்கள் மோடியின் அல்லக்கைகள்.

நீங்கள்?

                                 *   *   *   *   *

https://www.newindianexpress.com/nation/2025/Jun/17/pm-modi-sets-record-with-most-foreign-honours-for-an-indian-pm-after-receiving-cypruss-top-honour

புதன், 18 ஜூன், 2025

‘உச்ச’ நடிகரிடம் நம் 1+1 கேள்விகள்!

'ஜெயிலர் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்குச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார்.

அப்போது அவரிடம் அகமதாபாத் விமான விபத்து குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம். ஆண்டவன் அருளால் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும்" என்றார்[தினத்தந்தி].

“ஆண்டவன் அருளால் இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்கணும்” என்கிறார் புகழின் உச்சியைத் தொட்ட ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்து.

“இந்தப் படு பயங்கர அவல நிகழ்வைத் தடுக்காமல் அந்த அருள்மிகு ஆண்டவன் என்ன செய்துகொண்டிருந்தார்?” என்பது உச்ச நடிகரிடம் நாம் கேட்கும் கேள்வி.

உச்சத்திடம் கேட்கும் இன்னொரு நம் கேள்வி:

“உன்னை நான்தானே கோடி கோடி கோடீஸ்வரன் ஆக்கினேன். குறைந்தபட்சம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக ஒரு கோடி ரூபாய் கொடு ரஜினி” என்று சொல்லியிருப்பாரே?”

நம் 1+1 கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வாரா?

* * * * *

https://www.dailythanthi.com/cinema/cinemanews/ahmedabad-plane-crash-is-very-sad-rajinikanth-1163524

செவ்வாய், 17 ஜூன், 2025

'அது'வும் ஏறத்தாழ விபச்சாரம்தான்!!!

விலைமகளிர் விடுதி.

வாடிக்கையாளனிடம் உரிய தொகையை[பணம்]ப் பெற்றுக்கொண்டு தன்னுடைய ஒட்டுமொத்த உடம்பையும் பிறந்த மேனியாய் ஒப்படைக்கிறாள் விலைமகள்[கற்பனைதான்].

அதாவது, தன் உடம்பைக் காட்சிப்படுத்துவதோடு, அதனைத் தொட்டுக் கையாண்டு உடலுறவு கொள்ளவும் அனுமதிக்கிறாள் அவள்.

இந்தச் 'சுகபோக’ நிகழ்வை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.காட்டுதல் 2.கையாளப்படுதல் 3.உடலுறவு கொள்ளுதல்

வாடிக்கையாளன் உடலுறவு கொள்ள விரும்பாமல்[குடுகுடு கிழம், மறை கழன்ற கலைஞன் போன்றவர்கள்], விலைமகளின் மேனி அழகை ரசித்துக் கையாளுவதோடு நிறுத்திக்கொண்டாலும், உரிய தொகையை முழுமையாகவோ சற்றே குறைவாகவோ கொடுப்பான் என்பது உறுதி.

இங்கே அறியத்தக்கது.....

காசுக்காக ஒரு பெண் தன் உடம்பைக் காட்சிப்படுத்தி[ஓரளவுக்கேனும் ஆடையால் மறைத்து]த் தொட்டுக் கையாளுவதற்கு மட்டுமே அனுமதித்தாலும் அது விபச்சாரமே.

ஆக, காசுக்காக அங்க அசைவுகளுடன் உடம்பைக் காட்சிப்படுத்திக் கையாள அனுமதிக்கிற[-உடலுறவு] ‘அவர்கள்’ஐயும் விபச்சாரிகள் என்றே சொல்லலாம்.

“யார் அந்த அவர்கள்?” என்கிறீர்களா?

உங்களுக்குத் தெரியாதா என்ன, வயசாளி எனக்கு எதுக்குங்க வீண் வம்பு?

திங்கள், 16 ஜூன், 2025

“வாள் வேண்டாம்; நூல் கொடுங்கள்”... பகுத்தறிவாளன் கமல்காசனுக்குப் பாராட்டுகள்!!!

அரசியல்வாதிகளுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களில்[தேவையோ அல்லவோ] அவர்களைக் கவுரவிக்கும் வகையில், ‘வீரவாள்’ பரிசளிப்பது வழக்கத்தில் உள்ள ஒரு பழக்கம்.

அன்று போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதமான இதைப் பரிசாக வழங்குவதன் நோக்கம் யாது என்பது பரிசளிப்பவனுக்கும் தெரியாது; பெறுபவனும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு வகையில், கொலை ஆயுதமான இதைப் பொது மேடையில் கையாளுவதே குற்றச் செயலாகும். நீண்டதொரு வாளால் பிறந்த நாள் ‘கேக்’ வெட்டுகிற ‘ரவுடிகள்’ கைது செய்யப்படுவது இதனால்தான். 

வாளைப் பரிசாக வழங்குகிறவனும் பெறுகிறவனும்கூடக் குற்றவாளிகள்தான். காவல்துறை இவர்களை ஏன் கைது செய்து சிறைப்படுத்துவதில்லை என்பது விடையில்லாத கேள்வி.

வருங்காலத்தில், வாளுக்குப் பதிலாக, ஒரு பெரிய வெடிகுண்டைத் தொண்டர்கள் தங்களின் தலைவனுக்கு வழங்கிப் பெருமிதப்படுவதும் நடக்கக்கூடும்.

இந்தவொரு வாள் பரிசளிக்கும் நிகழ்வு, மாநிலங்களவை[ராஜ்ய சபா]உறுப்பினராகத் தேர்வான கமல்காசன் அவர்களுக்கான பாராட்டு விழாவிலும் இடம்பெற்றுள்ளது. பரிசாக அளிக்கப்பட்ட அதை அவர் ஏற்க மறுத்திருக்கிறார்[நூல் வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்; வாள் வழங்கியவரின் மனம் நோகாமலிருக்க, வாளுடன் புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளார்].

வாளைப் பரிசாக வழங்குவது அநாகரிகமானது என்பதைப் பகுத்தறிவாளன் கமல் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதே இதற்கான காரணம்.

கமல்காசன் பகுத்தறிவு பேசுவது வெறும் பகட்டுக்காக அல்ல; பத்தரைமாற்றுப் பகுத்தறிவாளன் அவர் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்த நிகழ்வு[தன்னை ஆதரிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவது குறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை].

‘சொல் வேறு செயல் வேறு’ என்னும் பழிச்சொல்லுக்கு இடம்தாராத வகையில் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கமல்காசனை மனதாரப் பாராட்டுகிறோம்.

வாழ்க பகுத்தறிவாளன் கமல்காசன்! தொடர்க அவரின் பொதுப்பணி!!

#நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசன் தனது ராஜ்யசபா எம்.பி. வேட்புமனுவைக் கொண்டாடும் ஒரு கட்சி நிகழ்வில் ரசிகர்கள் அவருக்கு வாளைப் பரிசளித்தபோது அவர் பொறுமை இழந்தார். வீடியோவில் பதிவான இந்த சம்பவம், ஹாசன் முதலில் வாளைப் பிடிக்க மறுத்து, இறுதியில் செல்ஃபிக்குப் போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது. எதிர்காலத்தில் புத்தகங்களைப் பரிசாகத் தேர்வுசெய்யுமாறு எம்.என்.எம் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது# - செய்தி.

ஞாயிறு, 15 ஜூன், 2025

தடையைத் தகர்க்கும் ‘அண்ணாமலையார்’ பக்தர்கள்... அல்ல, புத்தி பேதலித்தவர்கள்!!!


பாதுகாப்புக் காவலர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு, அண்ணாமலையார்’[குன்று வடிவில் குடிகொண்டிருக்கிறாராம்] என்று பெயர் சூட்டப்பட்ட கற்சிலையைக் காண முட்டி மோதிச் செல்லும் இவர்கள்[பக்தர்கள்?!] மனிதர்களே அல்ல; அம்மணக் கோலத்தில் காடுகளில் திரிந்த காட்டுமிராண்டிகளின் எச்சங்கள்.

‘அனைத்திற்கும் மேலான சக்திதான் கடவுள். அவர் அனைத்துப் பொருள்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார்’ என்னும் முன்னோர்களின் கருத்தை[சரியோ தவறோ]ப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத இந்த முழு மூடர்களால் சமுதாயத்திற்கு கேடு விளையுமே தவிர கடுகளவும் நன்மை விளைந்திட வாய்ப்பில்லை.

எனவே,

தடுப்புகளைத் தகர்த்துக்கொண்டு கோயிலுக்குள் நுழையும் இந்த அறிவுக் குருடர்களைத் தடுத்து ஒழுங்குபடுத்தாமல், முட்டி மோதிக்கொண்டும் அடித்து உதைத்துக்கொண்டும் செத்துத் தொலைய அனுமதிப்பதே நாட்டு நலனுக்கு நல்லது என்பது நம் எண்ணம்.

“எண்ணிக்கையைப் பொருட்படுத்த வேண்டாம். அவர்களைச் சாக விடுங்கள்” என்பதே கோயில் நிர்வாகத்திற்கும் அரசுக்கும் நாம் விடுக்கும் கோரிக்கை!

                                               *   *   *   *   *
***மேற்கண்டது கடந்த கால நிகழ்வு. இன்றும் இதே நிலைமைதான்.

சனி, 14 ஜூன், 2025

அகமதாபாத் விமான விபத்து... இறந்த 270 பேரின் சிதறிய ரத்தம் உறைவதற்குள்.....

'மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறித் தீப்பிடித்தது[அகமதாபாத்தில்]. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 270 பேர் பலியாகியுள்ளனர்' -இது செய்தி.

'படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி' -இதுவும் விபத்து தொடர்பாகப் பின்னர் வெளியான தகவல்.

மோடியின் ஆறுதல் மொழிகளால், பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தார்களின் துயர் முற்றிலுமாய்த் துடைக்கப்பட்டது எனலாம்.

இந்நிலையில்.....

மோடி, இந்தச் சோக நிகழ்வில் ஒரு பிரதமருக்கான கடமையைச் செவ்வனே செய்து முடித்த கையோடு, வழக்கமான தன் உலகச் சுற்றுலாவை நாளை தொடங்குகிறார் என்பது அண்மைச் செய்தி[பிரதமர் மோடி நாளை(ஜூன் 15) முதல் 4 நாள் அரசு முறைப் பயணமாகக் கனடா, சைப்ரஸ் நாடுகளுக்குச் செல்கிறார். கனடாவில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்> ஊடகங்கள்].

இதற்கு முன்பு, மோடி உலகெங்கும் சுற்றுலாச் சென்று உலக நாடுகளுடனான நட்பைப் பலப்படுத்தியதன் விளைவுதான், பாகிஸ்தானுடன் நடந்த போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தன என்பது அறிந்து மகிழத்தக்கது.

இடையில் நின்றுபோன பயணத்தைத் தொடர்வதன் மூலம், மேலும் பல நாடுகளுடனான நட்பை மோடி உறுதிப்படுத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.

“விமான விபத்தில் உயிரிழந்த 274 பேரின் சிதறிய ரத்தம் உறைவதற்குள்ளாக மோடி தன் சுற்றுலாவைத் தொடர வேண்டுமா?” என்று எவரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.

கேள்வி கேட்டவர்கள் பிரதமரை அவமதித்ததோடு தேசத்துக்குத் துரோகம் இழைத்த குற்றவாளிகளாகவும் கருதப்படுவார்கள்.