பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஆகஸ்ட், 2020

பெரியாரை ‘அறியாத’ அ[ட]ப்பாவித் தமிழனுக்கு...!!!

பெரியார் முன்னால், அவரை எதிர்த்து அல்லது மறுத்துப் பேசியவர்கள் பிராமணத் தலைவர்களில் ஒருசிலர் மட்டுமே. ஆனால், பிராமணர் அல்லாத ஒருவர் பெரியாரின் கொள்கைக்கும் கருத்துகளுக்கும், அவர் முன்னிலையிலேயே மறுப்பும் எதிர்ப்பும் தெரிவித்தவர் என்றால் அவர் ஞானபீடப் பரிசுபெற்ற மாபெரும் எழுத்தாளுமை ஜெயகாந்தன் மட்டுமே. 61 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நடந்த தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுக்கு ஈ.வே.ரா.பெரியார் தலைமை வகித்துப் பேசியபோது ‘மூடத்தனங்கள் நிறைந்த புராண, இதிகாசங்களை இன்றைய எழுத்தாளர்கள் ஏன் எதிர்ப்பதில்லை?’ என்று கேள்வி எழுப்பி அவர்களைச் சாடினார். அதற்கு தனது உரையில் பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டே அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சாத்வீகமான பதிலை அளித்தார் ஜெயகாந்தன். அப்படி அவர் என்ன பேசினார்... அதை அவரே எழுதியிருக்கிறார். ‘பெரியார் பற்றிய நடப்பு உரையாடலின் தொடர்ச்சிகளில் ஒன்றாக 4தமிழ் மீடியா வாசகர்களுக்காக அதை இங்கே மீள் பிரசுரிக்கிறோம். - 4தமிழ்மீடியா குழுமம், 22.01.2020.

ஜெயகாந்தன் உரையின் இறுதிப் பகுதி[பதிவின் தலைப்பைக் கருத்தில்கொண்டு] மட்டும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘.....அந்தத் திருச்சி மகாநாட்டில் கலவரமோ குழப்பமோ நேராததற்கு ஒரே காரணம் பெரியார் அவர்களும் மேடையில் இருந்ததுதான். பெரியார் எனது பேச்சை மிகவும் உன்னிப்பாய், செவி மடலைக் கையால் குவித்துக்கொண்டு சிரத்தையோடு கேட்டார்.

இடையிடையே தனக்கு உடன்பாடான கருத்துக்களை நான் கூறுகிறபோதும், மக்கள் கரகோஷம் செய்த பொழுதும் தானும் தனது கைத்தடியால் தரையில் தட்டி, தனக்கு மாறுபாடான கருத்துக்களை நான் பேசிய சந்தர்ப்பத்திலும் ஆரவாரித்து என்னை உற்சாகப்படுத்தினார் பெரியார். அவரது இந்த நாகரிகம் மிக மேன்மையானது என்று நான் அப்போது உணர்ந்தேன்.

அறிமுகமில்லாதவர்கள், எவ்வளவு உயர்ந்தவர்களாயினும், இயல்பாக ஒரு சந்தர்ப்பமோ சூழ்நிலையோ உருவாவதற்கு முன்னால் நானாகப் போய்ப் பேசி உறவாடுகிற இயல்பு எனக்கு இல்லாத ஒன்று. 
பிரசங்கம் முடிந்ததும் பல திராவிடக் கழக அன்பர்கள் எனது பேச்சால் தங்கள் மனம் புண்பட்டுவிட்டதாகப் பெரியார் அவர்களிடம் சென்று முறையிட்டுக் கொண்டனர். அப்போது பெரியார் அந்தத் தி.க. தோழர்களுக்கு மிகவும் கண்டிப்பாக அறிவுரை வழங்கினார்: “பொது வாழ்க்கையிலே அப்படி எல்லாம் மனசு புண்படக் கூடாது. இவர் ஒருத்தர் தான் நமக்குப் பதில் சொல்லி இருக்காரு. நாம் எவ்வளவு பேரைக் கேள்வி கேட்டிருக்கோம்? அவங்க மனசு புண்படுமேன்னு யோசிச்சோமா? அப்படியெல்லாம் யோசிச்சிக்கிடிருக்க முடியாது”. 

அவரது இந்த அறிவொழுக்கம் (intellectual honesty) எனக்கு அவர் அன்று உபதேசித்த ஒரு பாடமாயிற்று. 
பின்னர் அவர் என்னை அழைத்தார். மிக மரியாதையாக, ஓர் ஆஸ்திக சமாஜத்தைச் சேர்ந்த மடாதிபதி போல, மிகவும் பண்போடு, இருபத்து நான்கு வயதே ஆன என்னை, “வாங்க, ஐயா!” என்று கரங்கூப்பி அழைத்தார். அக்காலத்திலெல்லாம் நான் யாரையும் காலில் விழுந்து வணங்கியதில்லை. ஆனால், அப்படி ஓர் உணர்வு எனக்கு அப்போது தோன்றியது உண்மை! 
அவர் என்னை விசாரித்தார். “நீங்க பிராமணப் பிள்ளையா?” 
“இல்லை” என்றேன். 
“ரொம்பச் சந்தோஷம்!” என்றார். 
நான் விடை பெற்றுக்கொண்டேன்.
==============================================================================
ஆதாரம்: ஜெயகாந்தனின், ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ 
நன்றி: ஜெயகாந்தன் ஒரு பார்வை – தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் – முதல் பதிப்பு: 2000 – கலைஞன் பதிப்பகம்சென்னை – 17.