எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

போதைப் புருசனும் புத்திசாலிப் பெண்டாட்டியும்![குடும்பக் கதை> பழசோ பழசு]

"கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குற" -கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ், முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா? என்றாள் கல்யாணி.

“ஏண்டி பொய் சொல்றே?”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலைன்னு கோபப்பட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்கறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” -முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” -குழைவாகச் சொல்லிக்கொண்டே, உடம்பெங்கும் காமம் பரவ, கண்கள் கிறங்கக் கல்யாணியின் கை பற்றினான் கண்ணுச்சாமி.

வெடுக்கெனக் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட கல்யாணி, “குடிச்சிட்டு வந்து என்னைத் தொடுறதை நிறுத்திக்கோ. நான் கர்ப்பம் ஆயிட்டா, ‘உன்னை நான் தொடவே இல்லை’ன்னு கூசாம பொய் சொல்லுவே” என்று கடுகடுத்தாள் கல்யாணி.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் கண்ணுச்சாமி.

                                *   *   *   *   *
'குமுதம்’ வார இதழில்[2010] வெளியான கதை[கதாசிரியன்... நானே நான்!].