வந்துநின்ற ஆட்டோவிலிருந்து கிராமத்திலிருக்கும் அம்மாவும் அப்பாவும் இறங்குவதைப் பார்த்து மகிழ்ந்த மல்லிகா, அப்பா கைத்தாங்கலாகத் தன் புருசனை நகர்த்திவருவது கண்டு வருந்தினாள்.
மிதமிஞ்சிய போதையில் தெருவோரங்களில் விழுந்து கிடக்கும் குடிகாரக் கணவனை, வழக்கமாகத் தெரிந்தவர்கள் வீடு சேர்ப்பார்கள். இன்று அப்பா.
"வீடு கல்யாணம்னு சமையல் வேலைக்குப் போய் நான் சம்பாதிக்கிறேன்ல." -மல்லிகா.
"இனிமே பணம் கொடுக்காதே."
"ஏற்கனவே அதைச் செய்து பார்த்துட்டேன்பா. கடன் வாங்க ஆரம்பிச்சுட்டார்."
"இது எவ்வளவு நாளைக்கு? கொடுத்த பணம் வரலேன்னா யாரும் கடன் தர மாட்டாங்க. திருந்திடுவான்."
"அப்படித்தான் நானும் நினைச்சேன். திருந்துவார்னு எதிர்பார்த்த உங்க மருமகன் டாஸ்மாக் கடை முன்னாலயே பிச்சை கேட்க ஆரம்பிச்சுட்டார். வேறு வழியில்லாம அவர் கேட்கும்போதெல்லாம் குடிக்கப் பணம் கொடுத்துடுறேன்” -ஆற்றாமையுடன் குரலில் வேதனை பொங்கச் சொன்னாள் மல்லிகா.
தலையில் கை வைத்துக்கொண்ட மாதவன், சிறிது நேர யோசனைக்குப் பிறகு சொன்னார்: “இந்தக் குடிகாரனை நம்பி மூனு பொண்ணுகளைப் பெத்துட்டே. அதுகளைப் படிக்க வைத்துக் கல்யாணம் பண்ணனும்னா ஓரளவுக்காவது சேமிக்கணும். கொடுத்து உதவுற அளவுக்கு என்கிட்டேயும் பணம் இல்ல. உனக்குச் சம்மதம்னா சொல்லு, நானே இவனை விஷம் கொடுத்துக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிடுறேன்.”
“ஐயோ அப்பா…” -பெற்றவனின் கால்களைக் கட்டிக்கொண்டு, சற்று நேரம் கதறி அழுதாள் மல்லிகா; உங்களை ஜெயிலுக்கு அனுப்பிட்டு நாங்க உயிரோடு இருப்போமா அப்பா?” என்று தேம்பினாள்.
“இவனைத் திருத்த வேற வழி தெரியலையேம்மா?” -கட்டிலில் சரிந்தார் அவர்.
தன் பங்குக்குச் சிறிது நேரம் தலையில் அடித்துக்கொண்டு அழுது தீர்த்த அம்மாக்காரி, சுவரில் தொங்கிய சாமி படத்தைப் பார்த்து, “பிள்ளையாரப்பா, நீதான் என் மருமகனைத் திருத்தணும். கைவிட்டுடாதே சாமி” என்றவாறு படத்தின் முன்னால் நெடுநேரம் குப்புற விழுந்துகிடந்தாள்.
