அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 18 மார்ச், 2020

ரஜினி முதலமைச்சர் ஆக[100%] ஒரே வழி!!!

#ரஜினிக்குத் தீவிர அரசியலில் இறங்குவதற்கான மன வலிமை இல்லை. களத்தில் தனக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நண்பர்களையோ, ரசிகர்களையோ, வாக்களிக்கும் மக்களையோ அவர் அரைகுறையாகக்கூட நம்பத் தயாராயில்லை. சக மனிதர்கள் மீது அத்தனை அவநம்பிக்கை.

அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிடவும் அவரால் இயலவில்லை. உச்ச நடிகராக நீடிப்பது இனி சாத்தியம்[வயது 71] இல்லை என்ற நிலையில், முதலமைச்சராகும் அதிர்ஷ்டம் அடித்தால் எஞ்சிய வாழ்நாளை சூப்பர் அரசியல்வாதியாகக் கழிக்கலாம் என்னும் நப்பாசை அவருக்கு உண்டு.

எனினும், ரெண்டுங்கெட்டான் மனநிலையில் உள்ள அவர் கட்சி தொடங்கமாட்டார் என்பது உறுதி. பதவி ஆசையைத் துறக்க இயலாமல் அவ்வப்போது பேட்டி என்னும் பெயரில் எதையாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்#

12.03.2020 இல் நான் எழுதிய பதிவில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.
அதை மெய்ப்பிக்கும் வகையில்.....

“நான் உருவாக்கிய அலை சுனாமியாக மாறுகிறது. அதை உருவாக்க நானும் ரசிகர்களும் மக்களை நோக்கிச் செல்வோம். அந்த அரசியல் சுனாமியை யாரும் தடுக்க முடியாது. 
சில நாட்களுக்கு முன்பு நான் போட்ட அரசியல் புள்ளி சுழலாக மாறியுள்ளது. இந்தச் சுழலை யாராலும் தடுக்க முடியாது. அதை மக்கள்தான் வலுவான அலையாக மாற்ற வேண்டும்”[இந்து தமிழ், 18.03.2020] என்றிப்படிப் பேசியிருக்கிறார்.

இதற்கிடையே, தென் மாவட்டங்கள் சிலவற்றில், நடத்தப்பட்ட சர்வேயில், இவரின் பேச்சுக்கு 85% மக்கள் ஆதரித்து வாக்களித்திருப்பதாகவும், இதையறிந்த உச்ச நடிகர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாகவும் நக்கீரன்[18.03.2020] செய்தி வெளியிட்டிருக்கிறது.

தனக்கு ஆதரவாக ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னரும் நடிகர் கட்சி தொடங்குவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. “எல்லாம் அவன் சொன்னால் நடக்கும்” என்று அவ்வப்போது மேல் நோக்கிக் கை நீட்டுவார் என்பது மட்டும் உறுதி.

ரஜினியோ குஜினியோ யாராக இருந்தாலும் கடவுள் எனப்படுபவர் வாய் திறந்து சொல்லப்போவதில்லை. துணிச்சலுடன் தேர்தலைச் சந்திப்பதன் மூலம் ரஜினி முதல்வர் ஆகப்போவதும் இல்லை. அதற்கான ஒரே வழி.....

நாட்டை ராஜாக்கள் ஆண்ட முன்னொரு காலத்தில், யானையிடம் மாலையைக் கொடுத்து, அது யார் கழுத்தில் சூட்டுகிறதோ அந்த நபரை அரியணை ஏற்றுகிற ஒரு வழக்கம் இருந்ததாகச் சொல்வார்கள்.  

நம் மக்களும், அனைத்து அரசியல்வாதிகளும் மனம் வைத்தால், ஒரே ஒரு முறை அதை நடைமுறைப்படுத்தலாம்.

பாகனிடம் சொல்லிவைத்து, யானையை நேரே ரஜினியின் வீட்டிற்குச் செலுத்தி, அவர் கழுத்தில் மாலை சூட்டச் செய்தால் ரஜினி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார். சிஸ்டம் சரிசெய்யப்படும்!
=====================================================================