சனி, 20 ஜூன், 2026

சிலிர்ப்பூட்டும் சிருங்கார நடையில் ஒரு வரலாற்றுக் கதை[அறிஞர் அண்ணா]!

#உலகமே வியந்தது அவனது வீரத்தையும் தீரத்தையும்.

ரோமாபுரியின் மூலைமுடுக்கெல்லாம் அந்த ரணகள மாவீரன் பெற்ற வெற்றிகள் குறித்தே பேசப்பட்டது. 

ஒட்டுமொத்த உலகமும் புகழ் மகுடம் சூட்டி அவனைப் பாராட்டியது; புகழ்ந்து போற்றியது.

இந்தச் சாதனையாளன் ஒரு சாகசக்காரியுடன் நடந்த போரில் தோற்றான் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், அவன் தோற்றுத்தான் போனான்.

அவள் சேல் விழியாள்.

மாமன்னர்களையெல்லாம் தன் காலடியில் விழவைத்த மாயவித்தைக்காரி அவள்.

களத்தில் பகைவர்களைச் சிதறடித்த அவன்  அவளின் சிருங்காரச் சிரிப்பில் சிதறிப்போனான்.

களத்தில் எதிரிகளைக் கலங்கடித்த அவனை அந்தக் காரிகை கட்டிலறையில் வீழ்த்தினாள்.

அவளை வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் வந்த அவன் அவளின் பாதம் பணிந்தான்.

அவளின் அழகை வியந்து சிந்து பாடினான்.

முடி தரித்த வேந்தர் பலரைப் பிடி சாம்பலாக்கிய அந்த வீரனை... வெற்றியன்றி என்றுமே தோல்வி கண்டிராத தீரனைக் காந்தக் கண்களால் கவர்ந்திழுத்து மோகப் படுகுழியில் வீழ்த்தினாள் அந்த மோகனாங்கி.

வலிய முதலையிடம் சிக்குண்ட பெரிய மதயானை ஆனான் அவன்.

இது, ஒரு சாகசக்காரி, தன் சரச சல்லாபத்தால் ஒரு சரித்திர நாயகனை அடிமையாக்கிய கதை.

அவள், எகிப்து நாட்டு எழிலரசி கிளியோபாட்ரா! அவன் ரோம் நாட்டு மாவீரன் ஆண்டனி!#

                         ===================

மூலம்: 'அண்ணா சொன்ன குட்டிக்கதைகள் 100'; பாலாஜி பப்ளிகேசன்ஸ், சென்னை.

***நூலின் பக்கங்கள் வெகுவாகச் சிதைந்த நிலையில், கவிதை நடைக் கதையின் சில வரிகள் அனுமானத்தின் மூலம் சரிசெய்யப்பட்டன.

வெள்ளி, 19 ஜூன், 2026

ச.ம.உறுப்பினர் எழும்போது தேசியக்கீதம்! பேசி முடித்த பிறகும் அதே கீதம்!!

//3-வது முறையாக நான் பதில் சொல்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்தோடு சட்டமன்றம் தொடங்கியது. தேசிய கீதம் பாடக்கூடாது என்று எதுவும் இல்லை; தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது." -சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு//. இது செய்தி[https://minnambalam.com/].

தமிழ்நாடு சட்டமன்றத்தில், முதல் நாள் நிகழ்வு தொடங்கும்போது ஒரு முறையும்[தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவுடன்], மன்ற நிகழ்வு முடியும்போது ஒரு முறையும் என்று இரண்டு தடவை தேசியக்கீதம் பாடப்பட்டதால், இந்தப் புதிய மரபு குறித்து உறுப்பினர்களில் சிலர் கேள்வி எழுப்பியபோதுதான், மேற்கண்டவாறு அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

“தேசியக்கீதத்தை எத்தனை முறையும் பாடலாம் என்று விதிமுறை ஏதுமில்லை” என்று சொல்ல நினைத்ததைத்தான் “தேசியக்கீதம் பாடக்கூடாது என்று ஏதுமில்லை” என்று கூறியிருக்கிறார் மாண்புமிகு அமைச்சர்.

அவரின் கூற்று 100% சரியே.

நம் நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்துவதற்காகப் பாடப்படுவதே தேசியக்கீதம்[நாட்டுப்பண்].

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகத் தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தவே சட்டமன்ற நிகழ்வு முடிந்தவுடன் தேசியக்கீதம் பாடப்படுகிறது[எழுந்து நின்ற கோலத்தில் உறுப்பினர்கள் அத்தனைப்பேரும் கீதத்தை மனப்பூர்வமாய் முணுமுணுக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஹி... ஹி... ஹி!!!].

இத்தனை தடவைதான் பாட வேண்டும் என்னும் விதியெல்லாம் இல்லை என்று அமைச்சர் கூறியதிலிருந்து அதை எத்தனை முறையும் பாடலாம் என்பது அறியத்தக்கது.

பல முறை பாடினால், நாட்டுப்பற்று மேலும் மேலும் வலுப்படும் என்பதால், கேள்வி எழுப்பவோ கருத்துச் சொல்லவோ விரும்பும் உறுப்பினர்கள் அத்தனை பேரும்[சபாநாயகரும் அமைச்சர்களும் உட்பட], எழுந்து நிற்கும்போதும், பேசி முடித்தவுடனும் மறவாமல் நம் தேசியக்கீதத்தைப் பாடி முடிப்பது வரவேற்கத்தக்கது.

சட்டமன்றத்தில் சபாநாயர் இதை அறிவித்தல் வேண்டும் என்பது நம் பணிவான கோரிக்கை.

===================

https://minnambalam.com/tn-minister-rajmohan-explains-national-anthem-sequence-in-assembly/