சனி, 20 ஜூன், 2026

சிலிர்ப்பூட்டும் சிருங்கார நடையில் ஒரு வரலாற்றுக் கதை[அறிஞர் அண்ணா]!

#உலகமே வியந்தது அவனது வீரத்தையும் தீரத்தையும்.

ரோமாபுரியின் மூலைமுடுக்கெல்லாம் அந்த ரணகள மாவீரன் பெற்ற வெற்றிகள் குறித்தே பேசப்பட்டது. 

ஒட்டுமொத்த உலகமும் புகழ் மகுடம் சூட்டி அவனைப் பாராட்டியது; புகழ்ந்து போற்றியது.

இந்தச் சாதனையாளன் ஒரு சாகசக்காரியுடன் நடந்த போரில் தோற்றான் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், அவன் தோற்றுத்தான் போனான்.

அவள் சேல் விழியாள்.

மாமன்னர்களையெல்லாம் தன் காலடியில் விழவைத்த மாயவித்தைக்காரி அவள்.

களத்தில் பகைவர்களைச் சிதறடித்த அவன்  அவளின் சிருங்காரச் சிரிப்பில் சிதறிப்போனான்.

களத்தில் எதிரிகளைக் கலங்கடித்த அவனை அந்தக் காரிகை கட்டிலறையில் வீழ்த்தினாள்.

அவளை வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் வந்த அவன் அவளின் பாதம் பணிந்தான்.

அவளின் அழகை வியந்து சிந்து பாடினான்.

முடி தரித்த வேந்தர் பலரைப் பிடி சாம்பலாக்கிய அந்த வீரனை... வெற்றியன்றி என்றுமே தோல்வி கண்டிராத தீரனைக் காந்தக் கண்களால் கவர்ந்திழுத்து மோகப் படுகுழியில் வீழ்த்தினாள் அந்த மோகனாங்கி.

வலிய முதலையிடம் சிக்குண்ட பெரிய மதயானை ஆனான் அவன்.

இது, ஒரு சாகசக்காரி, தன் சரச சல்லாபத்தால் ஒரு சரித்திர நாயகனை அடிமையாக்கிய கதை.

அவள், எகிப்து நாட்டு எழிலரசி கிளியோபாட்ரா! அவன் ரோம் நாட்டு மாவீரன் ஆண்டனி!#

                         ===================

மூலம்: 'அண்ணா சொன்ன குட்டிக்கதைகள் 100'; பாலாஜி பப்ளிகேசன்ஸ், சென்னை.

***நூலின் பக்கங்கள் வெகுவாகச் சிதைந்த நிலையில், கவிதை நடைக் கதையின் சில வரிகள் அனுமானத்தின் மூலம் சரிசெய்யப்பட்டன.