''அம்மா ஆன்மாவின் துணையுடன் நாங்கள் நல்லாட்சி நடத்துவோம்'' என்று தமிழ்நாடு 'செய்தி - விளம்பரம்' துறை அமைச்சர் அவர்கள், கோவில்பட்டியில் உரையாற்றியிருக்கிறார்[நாளிதழ்கள், 26.10.2018].
புரட்சித்தலைவியின் மறைவால் இன்றளவும் துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழக மக்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அறிவிப்பு இது.
அமைச்சருக்கு நம் பணிவான வேண்டுகோள்.....
அடுத்த கூட்டத்தில் உரையாற்றும்போது, ''புரட்சித்தலைவி ஜெயலலிதா[அம்மா] மட்டுமல்ல, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா ஆகியோரின் ஆன்மாக்களின் உதவியையும் நாட இருக்கிறோம்'' என்று மறவாமல் அறிவிப்புச் செய்துவிடுங்கள். இதனால், நம் மக்களின் மகிழ்ச்சி பன்மடங்கு பெருகும்.
ஆன்மாக்களை வரவழைப்பது அத்தனை எளிதல்ல என்பதால், கோடீஸ்வரக் கோயில்களுக்குக் குழுவாகச் சென்று வழிபாடு நிகழ்த்துங்கள்; பெரும் பொருட்செலவில் விசேட பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்; கோயில் உண்டியல்களை நிரப்புங்கள்.
நீங்கள் வரவழைக்க விரும்பும் ஆன்மாக்கள் வான்வெளியிலிருந்து சொர்க்கபுரிக்கு இடம்பெயர்ந்திருக்கவும் கூடும். அங்கிருந்து அவைகளை வரவழைத்திட மகாப் பெரிய யாகங்கள் செய்திட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள்.
ஓர் எச்சரிக்கை.....
அண்மையில் காலமான கருணாநிதியின் ஆன்மா, புரட்சித்தலைவியின் குரலில் பேசி உங்களையெல்லாம் தவறான பாதையில் செலுத்தவும்கூடும். விழிப்புடன் செயல்படுங்கள்.
எப்போதாவது பெரியார் பெயரையும் உச்சரிப்பதன் மூலம் நீங்கள் பகுத்தறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புவது உண்டு. அந்தப் பெரியாரின் ஆன்மா நரகத்தில் உழன்றுகொண்டிருக்கும் என்பதால் அதை வரவழைக்கும் முயற்சியை முற்றிலுமாய்த் தவிர்த்திடுங்கள்.
கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு என்று படு பயங்கரக் கொடூரச் செயல்களில் ஈடுபட்ட அயோக்கியர்களின் ஆன்மாக்கள் அண்டவெளியில் எப்போதும் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும். அத்தகைய ஆன்மாக்கள் உங்களின் நல்லாட்சிக்குப் பங்கம் விளைவிப்பதைத் தடுத்திட, ஜோதிடக்கலை வல்லுநர்களை வரவழைத்து உரிய பரிகார பூஜைகளைச் செய்திடுங்கள்.
வாழ்க அம்மாவின் ஆன்மா! அதன் துணையுடன் தொடர்க உங்களின் நல்லாட்சி!!
------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------