புதன், 12 மார்ச், 2025

மோடியின் நுண்ணறிவை அறியாத ஜெய்ராம் ரமேஷு[INC]க்குக் கண்டனம்!!!

 


இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இனக் கலவரத்தால் பல உயிரிழப்புகளுக்கும் பெரும் பொருட் சேதங்களுக்கும் உள்ளாகியிருக்கும் மணிப்பூருக்குச் செல்வதைத் தவிர்த்த நம் பெருமதிப்பிற்குரிய பிரதமர் மோடி, மொரீஷியசுக்குப் பயணம் மேற்கொண்டதன் மூலம் மணிப்பூர் மக்களை அவர் அவமானப்படுத்திவிட்டதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

கலவரப் பூமியான மணிப்பூருக்குச் செல்வதை மோடி முற்றிலுமாய்த் தவிர்த்தது ஏன் என்பதை அவர் புரிந்துகொண்டிருந்தால் இப்படிக் கூறியிருக்கமாட்டார்.

மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது’ என்கிறது ‘பிபிசி’[22.07.2023]ன் பழைய செய்தி. இன்றளவும் இந்நிலையே நீடிப்பதாகத் தெரிகிறது.

இந்தியத் திருநாட்டின் பிரதமர் என்ற வகையில் கலவரத்தை அடக்குவதற்குப் போதுமான அளவு ராணுவ வீரர்களை அனுப்பினார்[குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அனுப்பினால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிடும்] மோடி.

படையினர் தம் கடமையைச் சரிவரச் செய்தபோதிலும் ‘மெய்தேய்- குகி’ ஆகிய இனத்தவரிடையேயான மோதல் ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை.

இந்த இக்கட்டான நிலையில், இரு தரப்பாரிடையேயான மோதல் தொடருமேயானால், ஒரு காலக்கட்டத்தில் இரு இனத்தாரில் ஓரினத்தார்[குறிப்பாக, கிறித்தவ மதத்தவரான ‘குகி’ இனத்தவர்> இவர்களுக்கு பாதுகாப்புப் படையின் ஆதரவு இல்லை?] முற்றிலும் அடக்கப்படுவர், அல்லது அழிக்கப்படுவர் என்னும் நிலை உருவாகும்.

அதன் பின்னர் மணிப்பூரில் முழு அமைதி நிலவும்.

இந்தவொரு எதிர்கால நிகழ்வைத் தம் கூர்த்த அறிவினால் மோடி அனுமானித்ததால்தான் மணிப்பூர் செல்வதைத் தவிர்த்தார் என்பதை ரமேஷ் அவர்கள் புரிந்துகொண்டு, மேற்கண்டவாறு மோடியை விமர்சித்ததற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்பது வரவேற்கத்தக்கதாக அமையும்.

* * * * *
BBC செய்தி[22.07.23]:
//மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு ‘குகி’ இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது.


மணிப்பூர் இப்போது இரண்டு துண்டுகளாகிவிட்டதைப் போல் காட்சியளிக்கிறது. ஒரு பகுதி மெய்தேய் சமூக மக்களிடமும் மற்றொரு பகுதி குகி சமூகத்தினரிடமும் உள்ளது.


கண்ணுக்குத் தென்படும் காட்சிகள், இந்த வன்முறை மாதக்கணக்கில் நீடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன; மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.


மெய்தேய், குகி இன மக்கள் பழைய பிரச்னைகளை மறந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் இந்த வன்முறைத் தீயில் கருகிக் கொண்டிருக்கிறது.https://www.bbc.com/tamil/articles/c3ge52rk0wxo //