எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

வேங்கடவன் என்னும் வெங்கடாசலபதி சாமி ரொம்பவே அப்பாவி!!!

ஒரு பக்தர்[பெயர் சொல்ல விரும்பாதவர்] பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா சென்று, அங்குத் தொடங்கவுள்ள தன்னுடைய IT நிறுவனம் லாபகரமாக நடந்திடத்  திருப்பதி வெங்கடாசலபதியை வேண்டிக்கொண்டார். 

அமெரிக்காவில் ஒரு IT நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி, அதில் 60 சதவீதப் பங்குகளை விற்று ரூ.6,000 கோடிக்கு மேல் வருமானம் பெற்றுள்ளார் அவர்; இந்த வெற்றிக்குத் அந்தக் கடவுளின் அருள்தான் காரணம் என நம்பினார்.

அவர் தன் வேண்டுதலை நிறைவேற்றியதற்காக, அந்த வெங்கடாசலபதிக் கடவுளுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோகிராம் தங்கத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார்[இந்தத் தகவலை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாராம்].

தொழில் செய்பவர்கள், தங்களின் காரியம் நிறைவேற அதிகாரிகளுக்குக் கொடுப்பது லஞ்சம். கடவுளுக்குக் கொடுத்தால் அது காணிக்கை.

காணிக்கை என்னும் பெயரில் தம் காரியம் கைகூட, அந்த லஞ்சத்தை[காணிக்கை] முன்னதாகவே கோயில் உண்டியலில் போடுகிறவர்கள் உள்ளனர். அவர்கள் தாம் வணங்கும் சாமியை முழுமையாக நம்புகிறவர்கள். நம்பாத ‘உஷார் பேர்வழிகள்[பக்தர்கள்]’ காரியம் நிறைவேறினால் மட்டுமே காணிக்கை செலுத்துவார்கள். அவர்களில் வெறும் தலைமுடியைத் தந்து ஏமாற்றுகிறவர்களும் உளர்.

வெங்கடாசலபதிக் கடவுளின் அருளால் ரூ6,000 கோடியை லாபமாகப் பெற்ற மேற்கண்ட நபர், உஷார் பேர்வழி ஆவார். அந்தத் தொகை தனக்குக் கிடைத்த பிறகே ரூ140 கோடியைக் காணிக்கை என்னும் பெயரில் திருவேங்கடமலை அதிபதிக்குக் கொடுத்திருக்கிறார்.

மனிதர்களில் எவரும், 100% நேர்மையாகத் தொழில் செய்து கோடி கோடியாய்ச் சம்பாதிப்பது சாத்தியமே இல்லை. அப்படிச் சம்பாதிப்பவர்கள், மேற்பார்வையிடுகிற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தருகிறார்கள்.

எத்தனை விழுக்காடு என்பதை முன்கூட்டியே முடிவு செய்கிறார்கள் அவர்கள். அது 10 சதவீதத்திற்கு மேலாகவும், 50 சதவீதத்திற்கு[பாதிக்குப் பாதி]க் குறையாமலும் இருக்க வாய்ப்புள்ளது.

மேற்கண்ட கோடீசுவரர், வெங்கடாசலபதிக்குக் கொடுத்த லஞ்சம், ரூ6,000 கோடிக்கு வெறும் ரூ149 கோடி மட்டுமே. 03 சதவீதத்திற்கும் குறைவு. ஏழு மலைகளுக்கு அதிபதியான ஏழுமலையானுக்கே அல்வா கொடுத்திருக்கிறார் அந்தக் கில்லாடித் தொழில் அதிபர்!

“இத்தனை அப்பாவியா ஏழுமலையான் என்னும் வெங்கடாசலபதிக் கடவுள்?” என்று கவலையுடன் கேட்கத் தோன்றுகிறது!

                                                   *   *   *   *   *

https://news.lankasri.com/article/nri-donates-121kg-goதெரிவித்திருக்கிறார்ld-to-tirupati-temple-1755673224