புதன், 8 ஏப்ரல், 2026

பிள்ளை பெறும் உரிமை இனி பெண்களுக்கே!

தெலங்கானா மாநிலம், ஹன்மகொண்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவன் அந்தக் கொலைகாரன்[அஸ்ஹருதீன்]. இரு பெண் குழந்தைகளின் தந்தை.

இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், இவன் மனைவி இரு முறை கர்ப்பம் தரித்தார்.

பிறக்கவுள்ள குழந்தைகளும் பெண்களாகவே இருக்கும் என்றஞ்சி, தன்னவளைக் கருக்கலைப்புச் செய்ய வைத்துள்ளான்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபர்ஹத்[கொலைகாரன் மனைவி] மீண்டும் கர்ப்பமானபோது, ​​பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாகத்தான் இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவன் தனது மனைவியை மீண்டும் ஒருமுறை கருக்கலைப்பு செய்துகொள்ளுமாறு கடுமையாக வற்புறுத்தினான்.

மனைவி அதற்குச் சம்மதிக்க மறுத்தபோது, ​​அவன் அவளையும் குழந்தைகளையும் நீச்சல் குளத்திற்கு[இவனுக்குச் சொந்தமானது. அதன் மூலம் கிடைத்த வருமானத்தில்தான் குடும்பம் நடத்தியுள்ளான்] அழைத்துச் சென்று, குளத்தில் தள்ளிக் கொலை செய்துவிட்டு, அது தற்செயலாக நிகழ்ந்ததாகச் சொல்லி நாடகமாடியுள்ளான்[காவல்துறை அவனைக் கைது செய்து விசாரிக்க, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்> ஊடகச் செய்தி].

இவன் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டதாகத் தகவல் இல்லை.

இரண்டுக்குப் பிறகு பிள்ளைகள் வேண்டாம் என்று நினைத்திருந்தால், மனைவியைக் கருத்தடை செய்துகொள்ள அனுமதித்திருக்க வேண்டும். செய்யவில்லை. மனைவி மீது முழு நம்பிக்கை இல்லையென்றால் இவன் ஆண்களுக்கான வாசெக்டமி(Vasectomy - விந்து நாளம் துண்டிப்பு) செய்திருக்கலாம். அதில் விருப்பம் இல்லையெனின் ஆணுறை பயன்படுத்தியிருக்கலாம்[இதெல்லாம் கூடாது என்று குர்ஆன் சொல்கிறதோ?].

இவற்றில் எதையும் பின்பற்றாமல், தன் பெண்டாட்டியை அடுத்தடுத்துக் கருவுறச் செய்து வதை செய்திருக்கிறான். தான் குடும்பத் தலைவன் என்னும் அகங்காரத்தில் வாழ வேண்டிய மூன்று அப்பாவி உயிர்களைக் கொன்றிருக்கிறான்.

இந்த இஸ்லாமியன் என்றில்லை, பிற மதம் சார்ந்த ஆண்களும்கூட, பிள்ளை பெறும் விசயத்தில் தன்னிச்சையான போக்கைத்தான் பின்பற்றுகிறார்கள்.

பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதிலாகட்டும், பெண்களுக்குக் கருத்தடை செய்வதிலாகட்டும் முடிவெடுப்பவன் ஆண்தான்[பெரும்பாலும்].

இந்த நிலை அடியோடு மாற்றப்படுதல் வேண்டும்.

பிள்ளையைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குபவள் பெண்ணே என்பதால், பெற்றெடுக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் உரிமை பெண்ணுக்கே வழங்கப்படுதல் வேண்டும்.

இது விசயத்தில் கணவன்கள் அடக்குமுறையைக் கையாண்டால், மனைவிமார்கள் நீதிமன்றத்தை அணுகுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய & மாநில அரசுகள் மேற்கொள்ளுதல் உடனடித் தேவை ஆகும்.