//மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என, தி.மு.க.,வினர் கூறி வருவதால் கடும் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை, 'கொங்கு நாடு' என்ற பெயரில், தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனை பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள்[?!?!] தெரிவிக்கின்றன.// https://www.dinamalar.com/news_detail.asp?id=2799858[இச்செய்தி, 10.07.2021இல் 'தினமலர்' நாளிதழில் மட்டுமே வெளியானது!]
* * *
'மூடுவிழா'
'தமிழ்நாட்டின் மேற்கு மண்டலப் பகுதியை, 'கொங்குநாடு மாநிலம்' என்னும் பெயரில் யூனியன் பிரதேசமாக மத்திய அரசு உருவாக்க உள்ளது' என்று 'தினமலர்' நாளிதழ் நேற்று[10.07.2021] வெளியிட்ட செய்தி இந்தியாவெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி நம் பிரதமர் மோடி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இவ்வாறான ஒரு பிரிவினைத் திட்டம் நடுவணரசிடம் இல்லை என்ற நிலையில், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மைத் தமிழர்களிடையே[அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 'திமுக'வை வெற்றிபெறச் செய்தவர்கள்] 'பாஜக' மீது கொண்டுள்ள வெறுப்புணர்வை அதிகரிக்கவே செய்யும் என்று எண்ணிய நம் பிரதமர் மோடி அவர்கள், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர்கள் பலரும், பொய்ச் செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்ட 'தினமலர்' மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
மூத்த அமைச்சர் ஒருவர் 'தினமலர்' நாளிதழை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று ஆவேசமாகக் கூறியதாகத் தெரிகிறது.
கடும் கோபத்திலிருந்த பிரதமர் அவர்களும் இந்தத் 'தினச்சரடு' நாளிதழைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, இது குறித்தத் தகவலை எவ்வகையிலோ 'மோப்பம்' பிடித்துவிட்ட 'தினமலர்' நிர்வாகிகள், பிரதமரின் உத்தரவு நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கருதியதால், தாங்களாகவே தங்களின் பத்திரிகைக்கு மூடுவிழா நடத்திவிட்டு, பிரதமரிடம் மன்னிப்புக் கேட்பதன் மூலம், கிடைக்கவிருக்கும் தண்டனையிலிருந்து ஓரளவேனும் தப்பிக்க முடிவெடுத்துள்ளார்கள் என்று நம்பப்படுகிறது.
இன்னும் ஓரிரண்டு வாரங்களுக்குள்ளாகவே, இந்தத் 'தினப்புருடா' நாளிதழ் நிறுத்தப்பட்டுவிடும் என்ற தகவலும் கசிந்துள்ளது.
====================================================================================
மிக மிக மிக முக்கியக் குறிப்பு:
'மூடுவிழா' என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ள செய்திகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்பதை அறிந்திடுக.
அவ்வப்போது பொய்ச் செய்திகளை வெளியிட்டுப் பரபரப்பூட்டிப் பத்திரிகை விற்பனையை அதிகரித்துக்கொள்ளும் உரிமை தினமலருக்கு மட்டுமே உரியதல்ல.
ஒரு வலைப்பக்க[Blog] உரிமையாளன் என்ற வகையில், பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, ஆதாரமற்ற பொய்த் தகவல்களை இப்பகுதியில் பதிவு செய்துள்ளேன் என்பதைத் தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களின் பொன்னான நேரத்தை வீணடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன்.
வருகைக்கு நன்றி!