எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

சத்குருவும் ‘சத்சத்’குருக்களும்!!!

கடவுளின் குருவும் பிறவி ஞானியுமான ‘ஜக்கி’ திருவாய் மலர்ந்தருளிய தத்துவ முத்துகளில் கணிசமானவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.

இவற்றில், குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றால் உங்களை நீங்களே, ‘சத்’சத்குரு என்று அழைத்துக்கொள்ளலாம். 

உங்களுக்குச் சரளமாக ஆங்கில பேச முடியுமென்றால், ஏதேனும் ஒரு மலையடிவாரத்தில் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு ஆசிரமம் உருவாக்குங்கள்.

ஆசிரமத்தில் ‘அபூர்வயோகி’ சிலை நிறுவி, அதைப் பிரபலமானவரை[பிரியமானவராகவும் இருத்தல் நல்லது]க்கொண்டு திறக்கச் செய்திடுவீர்.

மூஞ்சி முழுக்கத் தாடி மீசை வளர்த்து[அதுக்குக் கொடுப்பினை வேண்டும்] விதம் விதமாய் விலையுயர்ந்த ஆடையுடுத்து, “சத்சத்குரு என்னும் பெயரில் ஆன்மிகம் போதித்து ‘மகாசமாதி’ மூலம் சொர்க்கபுரி செல்லப் பயிற்சி தரப்படும்” என்று அடித்துவிடுங்கள். 

செலவைப் பொருட்படுத்தாமல் ஊடகங்களில் விளம்பரம் செய்தல் மிக அவசியம்.

உங்களைத் தேடி அணி அணியாய் மக்கள் திரண்டு வருவார்கள். 

ஆங்கிலத்தில் புரியாத தத்துவங்களை அள்ளித் தெளியுங்கள். கை தட்டி ரசித்து, நன்கொடைகளை அள்ளி வழங்கும் மூடர் கூட்டம் உலகெங்கிலும் உள்ளது. அப்புறம்.....

அப்புறம் என்ன, சொகுசுக் கார்கள், ஹெலிகாப்டர்கள் என்று உலகம் சுற்றலாம்; உல்லாச புரிகளில் பவனி வரலாம்.

வாசிப்பைத் தொடருங்கள்.