மிக முக்கியக் குறிப்பு: மோடி அவர்களுக்குப் ‘புரட்சி நாயகன்’[‘புரட்சித் தலைவர்’ பட்டம் ஏற்கனவே ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது அறியத்தக்கது] என்று அடைமொழி சேர்த்ததில் கொஞ்சமும்[0%] ‘வஞ்சப் புகழ்ச்சி’ இல்லை; இது 100% உண்மைப் புகழ்ச்சி!
* * * * *
எதிர்ப்புக்கான காரணம்.....
அனைத்து இந்துமதக் கடவுள்களாலும் தங்களுக்கான பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்ட ‘பிராமணர்’ அல்லர் மோடி என்பது.
இந்நிலையில், குடமுழுக்குச் செய்யப்படும் புதிய கோயில்களின் கருவறைக்குள் நுழைந்து, பிரதிஷ்டை[சாமி சிலைகளுக்கு உயிரூட்டுவது] செய்யப்படவுள்ள சிலையை உரிய இடத்தில் இருத்தி, மந்திரம் ஓதுவது, தீபாராதனை காட்டிப் பூஜை செய்வது முதலான புனிதச் சடங்குகளைச் செய்யும் உரிமையைப் பெற்றவர்கள் பிராமணர்களே என்பது நினைவுகூரத்தக்கது.
மோடி பிராமணன் அல்லர் என்பது நம் நம்பிக்கை.
பிராமணன் அல்லாத மோடி, கருவறைக்குள் நுழைவதோடு[தமிழ்நாட்டில் பிரபலங்கள் சிலர் கருவறைக்குள் நுழைவதற்கு[மட்டும்] அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கடந்த கால நிகழ்வு] ராமர் சிலையைத் தொட்டு எடுத்துக் கொடுப்பது அனைத்து இந்துக் கடவுள்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட சங்கராச்சாரி என்னும் பிராமணனை[சாதி குறிப்பிடுவது தவிர்க்க இயலாததாக உள்ளது]க் கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கிருக்கிறது.
சிலையைத் தொட்டெடுத்துக் கொடுப்பவர் பிரதமர் என்பதால், அதை வெளிப்படுத்த இயலாமல், ‘அயோத்தியில் எல்லாவற்றையும் மோடி செய்துவிட்டால், பிறகு மத குருமார்களுக்கு என்ன வேலை?’ என்று கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.
இவரைப் போலவே வேறு சில சாமியார்களும் “கலந்துகொள்வதில்லை” என்று சொல்லி மோடி மீதான வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர்களும்கூட, புதிய ராமர் கோயில் குடமுழுக்கு விசயத்தில் மோடி அரசியல் செய்வதாகச் சொல்லித் தங்களின் எதிர்ப்பை உலகறியச் செய்திருக்கிறார்கள்.
இவர்கள் தவிர, தீவிரப் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் பலரும், “ராமனை இவர் கொண்டாடுவதன் நோக்கமே, பக்தியின் பெயரால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான்” என்று சொல்லக்கூடும்.
எது எப்படியோ,
பிராமணன் அல்லாத மோடி, அயோத்தி ராமர் கோயிலின் கருவறை[சந்நிதிக்குள்]க்குள் நுழைந்து ராமன் சிலையைத் தொட்டெடுத்துக் குடமுழுக்கு விழாவைத் தொடங்கி வைப்பதென்பது, ஆன்மிகப் புரட்சி மட்டுமல்ல, இந்நாள்வரை வரலாற்றில் இடம்பெறாத சமுதாயப் புரட்சியும்கூட!
மோடி ஆகச் சிறந்த ஒரு புரட்சியாளன்!!
இந்தப் புரட்சி நாயகனை “வாழ்க பல்லாண்டு” என்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்!!!
* * * * *