கடந்த பல மாதங்களாகவே, தமிழின் பெருமையை உலகறியச் செய்வதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார் நம் பிரதமர் மோடி அவர்கள்.
முன்னதாக, இந்த நாட்டின் பிரதமர்களாக இருந்தவர்களில் எவரும் தமிழை ஒரு பொருட்டாக மதித்ததில்லை; உலகறியச் செய்வதில் இவரளவுக்கு முனைப்புக் காட்டியதும் இல்லை.
தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம், “வனக்கம்[வணக்கம்] சொல்லித் தம் பேச்சைத் தொடங்குவதோடு, “தமிழில் பேசவே ஆசை. அது நிறைவேறாததை நினைத்து மிகவும் வருந்துகிறேன்” என்று சொல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்.
நேற்று, சென்னையில் ‘பூத் கமிட்டி’ உறுப்பினர்களுடன் உரையாடுகையில், “தமிழ் என் தாய்மொழியாக இல்லையே” என்று மனம் வெதும்பியிருக்கிறார்.
இவரின் இந்தத் தன்னலம் கருதாத பற்றினை நினைத்துத் தமிழ்த் தாய் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள்.
என்னதான் பழம் பெருமை பெற்றதென்றாலும், ஒரு மாநில மொழிக்காக இவர் தம்மை வருத்திக்கொள்வதில் இவரின் உடல்நிலை பாதிக்கப்படுமேயானால்.....
இந்தியாவில் தலைவிரித்தாடும் வறுமையை ஒழிக்கவும், இந்த நாட்டை உலகின் வளர்ந்த நாடுகளில் நம்பர் 1 ஆக்கவும், ‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே கட்சி ஆட்சி’ என்னும் லட்சியத்தை நிறைவேற்றவும் இனியொரு தலைவர் பிறக்கப்போவதில்லை என்பதை நினைத்து இந்த நாட்டு மக்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள்; கண்ணீர் சிந்துகிறார்கள்.
நாளெல்லாம் தமிழே நினைவாக வாழும் தலைவர் மோடி அவர்கள் அடுத்த பிறவியில் தமிழராகப் பிறந்து ஒரு தமிழனாக இந்த இந்திய நாட்டை ஆள்வார் என்னும் நம்பிக்கையுடன், “தமிழர்களின் வாக்கு ‘பாஜக’ வேட்பாளர்களுக்கே என்று உறுதி சொல்லி, தமிழில் பேச இயலாததை நினைந்து வருந்த வேண்டாம் என்று மிக்கப் பணிவுடன் உலகெங்கும் வாழும் தமிழர் சார்பாக இவரை வேண்டுகிறோம்.
வாழ்க மோடி! வெல்க ‘பாஜக’!!