எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

தரங்கெட்ட, தறுதலைத் தமிழன்களின் புகலிடமா ‘யூடியூப்’?!

அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற அந்தக் கொடூர நிகழ்வின்[வன்கொடுமை] பின்னணியில் வெளியாகும் காணொலிகள் எண்ணிலடங்காதவை.

இந்த வினாடிவரை அந்த எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.

பாதிப்புக்கு உள்ளான மாணவியின் எதிர்காலம் குறித்துக் கவலை தெரிவித்து ஆலோசனைகள் வழங்குவதற்கு மாறாக, ‘யார் அந்த சார்?’ என்று கேள்விக்கணை தொடுத்து, ஆளும் தி.மு.க. அமைச்சர்களின் படங்களை ஒட்டி, “இவர்தான்... இவரேதான். வசமா சிக்கிக்கிட்டார். தப்பவே முடியாது” என்பதாகத் தடாலடியாய்த் தலைப்புக் கொடுத்து, அசிங்கமாகவும் ஆபாசமாகவும் வசைபாடுகிறார்கள் காணொலிக்காரர்கள்; அவர்களும் தமிழர்கள்தான்!

‘தி.மு.க.’வினர் குற்றம் புரிந்திருந்தால், அவர்கள் தண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

இந்நிகழ்வு குறித்து ஆய்வு செய்யும் குழு எதுவும், இதுவரை எவரையும் அடையாளப்படுத்தாத நிலையில், ‘விசாரணை முற்றுப்பெறவில்லை; வதந்திகளைப் பரப்ப வேண்டாம். அது விசாரணைக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குந்தகம் விளைவிக்கும்’ என்று குழுவினர் வேண்டுகோள்[உத்தரவிடவில்லை] வைத்த பிறகும், நீதிமன்றம் கண்டித்த பின்னரும்.....

பொய்யும் புனைசுருட்டும் கலந்த காணொலிகளைத் தொடர்ந்து ‘யூடியூப்’இல் வெளியிடுபவர்கள் உயர் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்த/திகழும் தமிழினத்தவர்தானா?

அல்ல, அல்லவே அல்ல. அவர்கள் காலிகள்! கயவாலிகள்!!

வேண்டாதவர்களைக் குற்றவாளிகளாக்கி அற்பச் சுகம் காணும் அயோக்கியர்கள்! ‘யூடுயூப்’ தரும் அற்பத் தொகைக்காகத் தன்மானத்தை விலைபேசும் தறுதலைகள்!!