எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 4 மே, 2025

‘பஹல்காம் படுகொலைகள்’... வேண்டாம் வெற்று ஆரவாரம்; வெறிக் கூச்சல்!!!

‘22.04.2025ஆம் நாள் பஹல்காமில்[காஷ்மீர்] தீவிரவாதிகள் தாக்கி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது  நிகழ்ந்து 12 நாட்கள் கடந்துவிட்டன.

     [இது சாத்தியமா? சாத்தியம் என்றால் இந்தியாவின் நிலை?]

சம்பவம் நிகழ்ந்த சூட்டோடு இந்த அட்டூழியத்திற்குக் காரணம் பாகிஸ்தானே என்று குற்றம் சாட்டிய நம் இந்திய அரசு அதற்கான உறுதியான ஆதாரங்களை இன்றுவரை கண்டறியவில்லை.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனைப்பேர்[மூவர் அல்லது நால்வர் என்பது வெறும் யூகமே] என்பதுகூட அறியப்படவில்லை.

தாக்குதலின் ‘உள்நோக்கம்’ பற்றியும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இவையெல்லாம் நம் ஒன்றிய அரசின் இயலாமையை வெளிப்படுத்துகின்றன என்று இகழ்ந்துரைப்பது நம் நோக்கமல்ல.

காரணங்கள்.....

கொலைகாரர்களின் திட்டமிடல் அதி புத்திசாலித்தனமானதாக இருக்கலாம்.

அவ்வப்போதோ எப்போதாவதோ தாக்குதல் நடத்துகிறவர்கள் அத்தனைப் பேரையும் கண்டுபிடித்துத் தண்டிப்பது அரசுக்குச் சாத்தியமும் அல்ல.

ஆக, இன்றளவும் 26 பேர் சாவுக்குக் காரணமான கொலைகாரர்கள் கைது செய்யப்படாத நிலையில்.....

தினம் தினம் பாகிஸ்தானைக் கலங்கடிக்கும் வகையில் நம் அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஊடகங்கள் செய்தி[முழுவதும் உண்மையானவை அல்ல] பரப்புவதும், ‘கொலைகாரர்களைக் கூண்டோடு எமனுலகுக்கு அனுப்புவோம்; பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவோம்’  என்பன போல் தலைவர்கள் வெற்றுக் கூச்சல் எழுப்புவதும் உண்மையான நாட்டுப் பற்று உள்ளவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.

“குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயன்றவரை முயலுங்கள். வெறும் வெறிப் பேச்சு வேண்டாம்” -இதுவே நம்மை ஆளுவோருக்கு நாம் வழங்கும் பரிந்துரை ஆகும்.

தொடர்புடைய இடுகை:

https://kadavulinkadavul.blogspot.com/2025/05/blog-post.html