வெள்ளி, 20 மார்ச், 2026

அடித்து விளையாடும் அறிவியலாளர்கள்! மண்டை காயும் சாமானிய மக்கள்!!

//அப்ராமோ’ என்கிற ஒரு விஞ்ஞானி, பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அல்லது அளவிடவோ விஞ்ஞானிகளிடம் இப்போதும் போதுமான கருவிகள் இல்லை என்கிறார்//*

//பிரபஞ்சம் என்பது அனைத்து வெளி[?], பருப்பொருள்(எடையுள்ள மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் எதுவும்), ஆற்றல், காலம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. பெருவெடிப்பிலிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியது// என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்[அடைப்புக் குறிகளுக்குள் சாமானிய மக்களின் சந்தேகங்கள்].


***[போதுமான கருவிகள் இல்லாத நிலையில் இந்த உண்மையை எப்படிக் கண்டறிந்தார்கள் நாசாக்காரர்கள்?]


***[பெரு வெடிப்புக்கு முன்பு எங்கும் எதுவும் இல்லையா? அதைப் பற்றி எந்த விஞ்ஞானியும் ஏன் வாய் திறப்பதில்லை!?]

 

//ஒரு கோட்பாட்டின்படி, சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிகவும் சூடாகவும் நெருக்கமாகவும் இருந்தது. பின்னர் அது விரிவடையத் தொடங்கியது. அன்று முதல் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சம் நீண்ட காலமாக விரிவடைந்தபோது, விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை மெதுவாக உருவாயின//


***[இவற்றையெல்லாம் எவ்வகையான கருவிகளின் உதவியால் கணக்கிட்டார்கள்?] 


//இன்றும்கூட, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், அதைப் பற்றி நமக்கு(விஞ்ஞானிகளுக்கு) இன்னும் மிகக் குறைவாகவே தெரியும்//


***[அப்புறம் எப்படி விரிவடைவதை உறுதிப்படுத்தினார்கள்?]


//பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதன் பெரிய சித்திரத்தை விஞ்ஞானிகளால் காண முடிகிறது// 


***[சித்திரம் என்றால்[புகைப்படம் அல்ல] அதைக் கற்பனையாக வரைந்தவர் யார்? அல்லது வரைந்தவர்கள் எவரெல்லாம்?)


//பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்தால், ஆற்றல் மென்மேலும் பரவும். இதன் காரணமாக, விண்மீன் திரள்கள் மெதுவாக மேலும் விலகிச் செல்லும். காலப்போக்கில் புதிய நட்சத்திரங்கள் உருவாவது நின்றுவிடும். மேலும், ஏற்கெனவே இருக்கும் நட்சத்திரங்கள் மெதுவாக இறந்துவிடும். அதாவது, "விண்மீன் திரள்கள் மேலும் மேலும் விலகிச் செல்லும், நட்சத்திரங்கள் வயதாகி இறந்துவிடும். இதுவோர் இறுதி நிலை. இதில் பிரபஞ்சம் அடிப்படையில் ஒரு மயானமாக மாறும். பிரபஞ்சம் வேகமாக மங்கி வருவதாக ராட்பவுட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எஞ்சியிருக்கும் கடைசி நட்சத்திரங்கள் மறைவதற்கு சுமார்10⁷⁸  ஆண்டுகள்(அதாவது 1-ஐ தொடர்ந்து 78 பூஜ்ஜியங்கள்) ஆகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்//


***[சுமார் 10⁷⁸ ஆண்டுக்கால நிகழ்வைக் கணக்கிட்டுச் சொல்வது சாத்தியமா? எப்படி?]


//இதைக் காண மனித இனம் உயிர்ப்புடன் இருக்காது. பூமிகூட அதற்கும் மிக முன்னதாகவே அழிந்துவிடும். சுமார் ஆறு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு ரெட் ஜெயன்டாக வளர்ந்து அருகிலுள்ள கோள்களை அழிக்கும். பிரபஞ்சம் மயானம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது//


“இப்போதே அது மயானம் ஆகிவிட்டால் நல்லது. இவர்கள் அளந்துவிடும் அளவில்லாத புருடாக்களால்[?!] மக்கள் மண்டை காய்வது தவிர்க்கப்படும்” -நாம்.

                                 *   *   *   *   *

https://www.bbc.com/tamil/articles/c24dej96ddeo -18 மார்ச் 2026; புதுப்பிக்கப்பட்டது 19 மார்ச் 2026.

வியாழன், 19 மார்ச், 2026

சாதி இல்லை! இங்கெல்லாம் இல்லவே இல்லை!!

விருப்பம் இல்லாமலே ஈரைந்து மாதம் வயிற்றில் சுமந்த, நெஞ்சில் கிஞ்சித்தும் ஈரம் இல்லாத கல்நெஞ்சக்காரிகளால் குப்பைமேட்டில் கிடத்தப்பட்டு, கருணாமூர்த்திகளால் அனாதை இல்லங்களில் அடைக்கலமாகும் அனாதைகள் தவிர, சாதிப்பற்று இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

பெண்ணொருத்தி மயக்கும் பேரழகியாகவோ ஆணொருவன் மிடுக்கான பேரழகனாகவோ இருந்தால், அவர்களின் அழகை மெய்மறந்து ரசிக்கும்போது அவர்களின் சாதி குறித்து எவரும் ஆராய்வதில்லை.மேலும்.....

*பாலுணர்வு இச்சையைத் தணிக்கவோ கட்டுப்படுத்தவோ வேறு வழியே இல்லாமல் தொழில்காரிகளைத் தேடிப் போகும்போது, போகிறவர்களுக்குச் சாதி நினைவுக்கு வருவதே இல்லை[ஆந்திரத்து அழகியா, கேரளத்துக் குட்டியா என்றெல்லாம் விசாரிப்பது உண்டு].

*வன்புணர்வில் ஈடுபடும் வெறி நாய்களின் கண்களுக்குச் சாதி எந்நாளும் தட்டுப்படாது.

*லஞ்சம் வாங்கும்போது சாதி பார்க்காத உத்தமப் புத்திரர்கள் அவதரித்துள்ள பூமி இதுவாக்கும். 'இந்த அதிகாரி 'நம் ஆள்' இல்லை. லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்க வேண்டாம்' என்று முடிவெடுக்கும் சாதிப் பிரியர்கள் எல்லாம் இங்கு இல்லை.

*தேர்தலில் ஓட்டுக் கேட்கும்போது வேட்பாளர்களுக்குச் சாதி தேவைப்படுவதில்லை[சாதி பார்க்காமல் எவரும் போடுவதில்லை].

*விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும்போது, அல்லது புயல், சுனாமி போன்றவை தாக்கும்போது உதவுபவரிடம், "நீங்க என்னய்யா சாதி?" என்று எவரும் விசாரிப்பதில்லை.

*திருடும்போதும், கொள்ளையடிக்கும்போதும், 'இவர் நம் சாதிக்காரர்' என்று களவாணிக் கும்பல் விதிவிலக்கு அளிப்பதில்லை; அந்தத் தொழிலுக்குக் கூட்டாளிகளைச் சேர்க்கும்போதும் அதே... அதே... அதே.

*நடுத்தர வயதைக் கடந்தும் திருமணத்துக்கு வரன் கிடைக்காத போது இனம், மொழி, மாநிலம், நாடு என்று எல்லாம் கடந்து வரன் தேடுகிறார்கள். சாதி பார்த்தால் கட்டைப் பிரமச்சாரிகளாகக் காலம் தள்ள நேரிடும்.

*குடியேறிய அயல் ஊர்களில் தன் ஜாதிக்காரர்களே இல்லாதபோது, "இப்போ எல்லாம் யாருங்க சாதி பார்க்குறாங்க?" என்று சமத்துவம் போற்றும் சந்தர்ப்பவாதிகளை ஈன்றெடுத்த மண் இது.

*எந்தவொரு கடைக்காரரும், "உன் சாதி என்ன?" என்று கேட்டுப் பொருள் விற்பனை செய்வதில்லை.

*பிச்சை எடுப்பவர்கள், போடுபவர்களிடம் சாதி அடையாளம் தேடுவதில்லை.

மேற்கண்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் சாதி வேறுபட்டைத் தவிர்ப்பவர்கள், அவரவர் சாதியாருடன் பெரும்பான்மையினராகச் சேர்ந்து வாழும் இடங்களிலும், திருமணம் நிகழ் இடங்களிலும் ஏன், பிணம் சுடும் மயானங்களிலும்கூட சாதியைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைப்பது ஏன்?

மனப்பூர்வமாய்ச் சிந்தித்தால் இந்த அவலத்திலிருந்து எளிதாக விடுபட முடியும். நம்மில் பெரும்பாலோர் சிந்திக்கத் தயாராக இல்லை என்பது விடுபட இயலாத பெரும் துயரம்!