வெள்ளி, 17 ஜூலை, 2026

ஜோசப் தவிர அத்தனை அமைச்சர்களும்[தவெக] அயோக்கியர்களா?!?!?

//முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அமைச்சர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் அமைச்சர் பதவி உடனடியாகப் பறிக்கப்படும் என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்//[ஊடகங்கள்]

ஜோசப் அவர்களே, 

உங்களின் அமைச்சரவை சகாக்களை எடுபிடிகளை “லஞ்சம் வாங்கினால் பதவி பறிப்பேன்” என்று மிரட்டியிருப்பது நீங்கள் அசாத்தியத் துணிச்சல்காரர் என்பதையும், உலகம் கண்டிராத உத்தமப் புத்திரர் என்பதையும் அடையாளப்படுத்தியிருக்கிறது. பாராட்டுகள். 

பணிவுடன் எனக்கான சில சந்தேகங்களை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

சந்தேகங்கள்:

ஒன்று: திரைப்படத் துறையில் ஈடு இணையற்ற கதாநாயகனாக வலம்வந்த நீங்கள், பெற்ற ஒவ்வொரு படத்துக்குமான ஊதியத்தில் பெரும்பகுதி கறுப்புப் பணம்[கொஞ்சமே கொஞ்சம் வெள்ளை] என்பது உலகறிந்த ரகசியம்.

மக்களுக்குப் பயன்பட வேண்டிய வரியை ஏய்த்தது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுல்ல, தண்டிக்கப்பட வேண்டியதும்கூட[வழக்கு தள்ளுபடி?].

எந்தவிதமான சிறு தண்டனையிலிருந்தும் நீங்கள் தப்பித்ததோடு, இன்று தமிழ்நாட்டின் முதல்வர் அரியணையில் அமர்ந்து கோலோச்சுகிறீர்கள்.

ஊழல் செய்தால் பதவி பறிப்பேன் என்று அமைச்சர்களைப் பார்த்து எச்சரித்திருக்கிறீர்களே, அவர்கள் எல்லோருமே அயோக்கியர்கள்[லஞ்சம் வாங்குவதால்] என்றும், நீங்கள் மட்டுமே யோக்கியர் என்றும் நினைக்கிறீர்களா? ஊர் உலகம் இதை நம்புமா?

இரண்டு: உங்கள் முன்னால் கூனிக் குறுகி[செங்கோட்டையன் வழக்கமாகக் செய்வது இது] அமர்ந்திருப்பவர்களை[அமைச்சர்கள்] உங்கள் 'தவெக’ கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தினீர்களே, அப்போதே இவர்களெல்லாம் யோக்கியர்கள்தானா என்று பரிசோதித்திருக்க வேண்டும்.  செய்யத் தவறியது ஏன்?

மூன்று: இவர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவியைப் பிச்சையாகப் போட்டபோதாவது, இவர்களைச் சீதாப்பிராட்டி போல, அக்கினிப் பிரவேசம் செய்வித்து, அத்தனைப் பேரும் பத்தரைமாற்றுத் தங்கங்கள் என்பதைக் கண்டறிந்திருத்தல் வேண்டும். ஏன் செய்யவில்லை?

நான்கு: இவர்களுக்குப் பதவி அளித்தவுடனே, உங்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர்களை[ஒற்றர்கள்] இவர்களிடம் அனுப்பி, லஞ்சம்[வேலையில் சேர்தல், ஒப்பந்தம் பெறுதல் போன்றவை] கொடுக்கவைத்து, கை[மனதும்] சுத்தமானவர்களா என்பதைச் சோதித்திருக்கலாம். சோதிக்காதது ஏன்?

ஐந்து: “பதவி பறிப்பதாக நீங்கள் சொன்னவுடனே, “ஊழல்[குறிப்பாக லஞ்சம் பெறுதல்] செய்தால் நீர் எங்களின் பதவியைப் பறிப்பீர். நீரே ஊழல் செய்தால் உம்முடைய பதவியும் பறிக்கப்படும் என்பதை ஏனய்யா மறந்தீர்?” என்று உம்முடைய அமைச்சர்களில் ஒருவர்கூட கேட்கவில்லை. அத்தனைப் பேருமே மானமும் ரோஷமும் இல்லாதவர்களா என்று உங்களுடைய மனசாட்சி கேட்டிருக்கும். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?

நான் கேட்க நினைத்தவற்றுள் மிக முக்கியமானவை மேற்கண்டவை.

சிந்தித்து விடை அறிவது ஒரு மாநிலத்தை ஆளுகிற உங்களுக்குப் பயன் தருவதாக அமையும்.

பிழை காணின் பொறுத்தருள்க!