சனி, 9 மே, 2026

தனிப்பெரும் தலைவர் ‘திருமா’வுக்குத் ‘திருஷ்டி’ சுத்திப்போடுங்கப்பா!!!

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க, ‘தவெக’ விஜய் கட்சி பெரும்பான்மை பெறுவதற்கான பேரத்தில் அயாராமல் ஈடுபட்டிருக்கும் சூழலில்.....

‘விசிக’ தலைவர் திருமாவளவன் தன் நிலைப்பாட்டைச் சற்று நேரத்தில் அறிவிப்பார் என்று, இவருக்கு அடுத்த கத்துக்குட்டித் தலைவர்கள் சொல்லுவதாக, இன்று காலையிலிருந்தே ஊடகங்கள் செய்தி வெளியிட்டவாறு உள்ளன.

பல மணி நேரம் கழிந்தும் திருமா திருவாய் மலர்ந்தருளவில்லை.

‘சிறிது நேரம்’ என்பது சில நிமிடங்களா, பல மணி நேரமா? ‘விசிக’வின் க.கு.தலைவர்கள் விளக்கம் அளிப்பார்களா?

இவருடைய[திருமாவளவன்] முடிவை ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் பதற்றத்துடன் எதிர்பார்ப்பதை வைத்து, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மேல் மட்டத் தலைவராக இவர் உயர்ந்துவிட்டார் என்று சொல்லாம்.

இரண்டே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை[‘திமுக’வுடன் கூட்டணி சேர்ந்து பெற்றவை]க் கைவசம் வைத்துள்ள இவர் பெற்றுள்ள உயர் அந்தஸ்து நம்மை வியக்க வைக்கிறது.

திருமா மாபெரும் அதிர்ஷ்டசாலி.

இதற்காக நாம் இவர் மீது பொறாமைப்படவில்லை. மாறாக.....

‘தவெக’ அமைச்சரவையில் பங்கு, உதவி முதல்வர் பதவி, முதல்வர் பதவி[+வைட்டமின் ‘ப’] என்றிவற்றில் எது வேண்டும் என்று விஜய்யிடம் சொல்லிப் பேரத்தை முடிக்கலாமே[ஆதரவு இல்லை என்றும் அறிவிக்கலாம்]? ஏன் நாட்கணக்கில் எதிர்பார்க்க வைத்து மக்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கிறார்?

தன் முடிவை எதிர்பார்த்து நாடே காத்திருப்பதில் பெறும் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் நாட்கணக்கில் நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா?

தனிப்பெரும் தலைவர் திருமாவளவனுக்கே வெளிச்சம்!

வெள்ளி, 8 மே, 2026

பொறுக்கிகளின் புகலிடம் ஆனது தமிழ்நாடு அரசியல் களம்!!!

2026 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஆட்சி அமைப்பதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில்,  ‘அதிமுக’, ‘தவெக.’ ஆகிய இரு அணிகளுக்கிடையே, பற்றாக்குறை[தேவை 118 உறுப்பினர்கள்] ஆதரவாளர்களைப் பெறுவதில் மிக மிக மிகக் கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ‘தவெக’க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

மார்க்ஸ் கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் அதற்குக் கிடைத்துள்ளது. 

திருமாவளவனின் ‘விசிக’வின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே நடிகர் ‘விஜய்’யால் ஆட்சியமைக்க இயலும்.

அதைத் தடுக்கும் வகையில், ஆட்சியமைக்க முயலும் ‘அதிமுக’ அணி திருமாவளவனின் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தருவதாக ஆசை காட்டியுள்ளது.

அந்தப் பதவிக்குத் திருமாவளவன் ஆசைப்படுவதைத் தடுத்துத் தங்களின் ஆதரவாளராக்க, அவருக்குத் துணை முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்திருக்கிறது ‘தவெக.’ கட்சி.

234 உறுப்பினர் அடங்கிய தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டே இரண்டு உறுப்பினர்களைப் பெற்றுள்ள திருமாவளவனுக்கு[வேறு யாராக இருந்தாலும்] இத்தனை முக்கியத்துவமா?

இப்படியொரு கேள்வியை எழுப்பி விடை தேடுவது நம் நோக்கமல்ல.

‘எத்தனை எத்தனையோ உயர் பண்பாளர்களும் நேர்மையாளர்களும் கடமையுணர்வு படைத்தவர்களும் நிறைந்திருந்த தமிழ்நாட்டு அரசியலில், பதவிக்காக எப்படியெல்லாமோ பேரம் பேசும் கழிசடைகள் வந்து புகுந்துவிட்டார்களே’ என்னும் நம் வேதனையை வெளிப்படுத்தவே இந்தப் பதிவு.

தமிழ் மக்களைக் காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவனை[இருந்தால்] வேண்டுகிறோம்!