ஞாயிறு, 29 மார்ச், 2026

’கின்னஸ்’இல் இந்து மதக் கடவுள் பெயர்கள்!!!

கணபதி, கணேசன், விநாயகன், பிள்ளையார், கயமுகன், ஒற்றைக்கொம்பன், சித்திபுத்தி விநாயகன், அங்குசபாணி, ஆனைமுகத்தோன், மகா கணபதி, விக்கினேஸ்வரன், தும்பிக்கை ஆழ்வார், சக்தி கணபதி, லட்சுமி கணபதி, ஊர்த்துவ கணபதி, ஐங்கரன், இரட்டைப் பிள்ளையார் என்றிப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் விநாயகனுக்கு மட்டும் உள்ளன.

இவரின் இளவலான முருகக் கடவுள் வேல் முருகன், அருள் முருகன், பழனி முருகன், கந்தன், குமரன், வேலன், சரவணன், ஆறுமுகன், விசாகன், குருநாதன் என்று பெரும் எண்ணிக்கையிலான பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இவர்களின் தந்தையான பரமசிவன் பரமேஸ்வரன், ஈஸ்வரன், அர்த்தநாரி ஈஸ்வரன், மாதொருபாகன், கபாலீஸ்வரன், சுந்தரேசன், காசி விஸ்வநாதன், காளத்தியப்பன், குற்றால நாதன், பட்டீஸ்வரன், சொக்கநாதன் என்றிவ்வாறு ஆயிரத்துக்கும் மேலான பெயர்களைப் பெற்றுள்ளார்.

பரமனின் துணைவியான ஈஸ்வரி பரமேஸ்வரி, பார்வதி, உமையாள், அம்பாள், காமாட்சி, சங்கரி, சுந்தராம்பாள், மீனாட்சி என்று ஏராளமான பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.

இன்னும், திருமால், பிரம்மன், இந்திரன், வருணன், வாயுபகவான், அக்கினி தேவன், ஐயப்பன், மெய்யப்பன் முதலான பல கடவுள்களும் பல்வேறு பெயர்களால் சுட்டப்படுவது யாவரும் அறிந்ததே.

உருவ வழிபாடு நிகழ்த்தும் மிகப் பல மதங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'இந்து' மதத்தில் உள்ள கடவுள்களை எண்ணி முடிப்பது சாத்தியமாயினும், இவர்கள் அத்தனைப் பேருக்குமான பெயர்களை எண்ணிப் பட்டியலிடுவது எளிதான செயலல்ல.

இவற்றை நூலாக அச்சிட முனைந்தால் அது மிக மிக மிகப் பல பக்கங்களாக நீளும் என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

உலகில் கடவுள்களை வழிபடும் மதங்கள் உள்ளன.

எந்தவொரு மதம் சார்ந்த மக்களும் இந்து மதம் சார்ந்த மக்களைப் போல், தங்களின் கடவுள்களுக்கு இந்த அளவுக்குப் பெயர்கள் சூட்டி வழிபடுவதாகத் தெரியவில்லை.

இது ஒரு சாதனை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்தச் சாதனையைக் குறிப்பிட்டு இந்து மதத்தவர்கள், உரிய முறையில் ஒரு கோரிக்கையை முன்வைத்தால், இது 'கின்னஸ்' உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்பது உறுதி... உறுதி... உறுதி.

வாழ்க இந்து மதக் கடவுள்கள்! வளர்க அவர்களுக்கான பெயர்களின் எண்ணிக்கை!!

வெள்ளி, 27 மார்ச், 2026

அழியாத ஆன்மா அருள்மிகு ஆண்டவனைச் சென்றடைதல்!

கடவுள் இருப்பதை உண்மை என்றே நம்புவோம். அவர்தான் நம்மைப் படைத்தார் என்பதும் உண்மையாகவே இருக்கட்டும்.

செய்திருக்கும் பாவப் புண்ணியங்களுக்கு ஏற்ப[இரண்டையும் செய்யத் தூண்டியது யார்?” என்று இடைமறித்துக் கேள்வி கேட்க வேண்டாம்] அடுத்தடுத்துப் பிறவிகள் எடுத்து இன்பங்களையோ துன்பங்களையோ அனுபவிக்கிறோம் என்று ஆன்மிகர்கள் சொல்வதையும் உண்மை என்றே ஏற்போம்.  றனஆன்மாவுக்கு அழிவில்லை என்கிறார்கள். அனைத்துப் பிறவிகளிலும் அதிக அளவில் பாவங்களே செய்துகொண்டிருந்தால், பிறப்பும் மறுபிறப்பும் வரம்பில்லாமல் தொடருமா?

மகான்களோ ஞானிகளோ, திடமான பதில் தந்தவர் எவருமில்லை. எனினும், ஆகச் சிறந்த பக்திப் பித்தராக வாழ்ந்து, கணக்குவழக்கில்லாமல்  புண்ணியம் செய்தால் கடவுளைச் சென்றடையலாம் என்கிறார்கள்.

மறுபிறவிக்கு வரம்பு உண்டா என்பது பற்றியும், இறைவனைச் சென்றடைவதற்குச் செய்திருக்க வேண்டிய புண்ணியத்தின் அளவு[கிலோ கணக்கிலா, டன் கணக்கிலா?] என்ன என்பது குறித்தும் வரையறை செய்யப்படவில்லை.

ஏதோ ஒரு கட்டத்தில் ஆன்மா வடிவில் நாம் இறைவனை[நாம் வணங்குபவரையா, ஏதாவதொரு கடவுளையா என்று குறுக்குக் கேள்வி கேட்க வேண்டாம்]ச் சென்றடைவதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு நமக்கு எழும் சந்தேகங்கள் பல உள்ளன.

கடவுள் அண்டவெளியிலும் ஒவ்வொரு துரும்பிலும் அணுவிலும் எங்கெங்கெல்லாமும் இரண்டறக் கலந்திருப்பவர் என்கிறார்கள். 

இதையும் உண்மை என்றே ஏற்றுக்கொண்டால்.....இதன் மூலம் அவருக்கென்று தனி உருவமோ, குறிப்பிட்ட தங்கும் இடமோ இல்லை என்பதை அனுமானிக்க இயலுகிறது.

இந்நிலையில், இறைவனைச் சென்றடையும் நாம் அவருடன் இரண்டறக் கலந்துவிடுவோமா? அவ்வாறாயின் நாமும் கடவுளா? அந்த ஒரிஜினல் கடவுள் அதற்குச் சம்மதிப்பாரா? மாட்டார்.

கடவுளாக மாறாமல் ஆன்மாவாகவே இருப்போம் என்றால் நாம் எங்கே தங்குவோம்? தங்கவைக்கப்படுவோம்?

எங்கே? எங்கே? எங்கே?

நமக்கான அந்த இடம் எது?

ஏதோ ஓர் இடம் என்றாலும்[கேள்விகள் வேண்டாம்] புலன்கள் ஏதும் இல்லாத நிலையில், அங்கே இருக்கும் நம் செயல்பாடு என்னவாக இருக்கும்?

அதாவது, நாம் என்ன செய்துகொண்டிருப்போம்?

அவதாரி மோடியோ, கடவுளின் குருவான சத்துக்குரு ஜக்கியோ அங்கிருந்தவாறு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருக்க, அதை நாம் மெய் மறந்து[உடம்புதான் இல்லையே, மன்னித்திடுக] செவிமடுத்து, கால வரையறையில்லாமல் பேரானந்தத்தில் மிதப்போமா?

நாமிருக்கும் இடத்தில் இன்னும் பல ஆன்மாக்கள் இருந்தால், மத வேறுபாடு இல்லாமல், ராமச்சந்திர மூர்த்தி, சிவபெருமான், ஆஞ்சநேயன் என்னும் அனுமான் குரங்கு, அல்லா, கர்த்தர் என்று பிரபலமான கடவுள்களைப் போற்றித் துதிபாடுவோமா?

இறைவனோடு கலந்துவிட்டோம் என்னும் மிதப்பில் காலமெல்லாம் கிளுகிளுத்துக் கிடப்போமா?

ஆன்மாவாம், கடவுளாம், சென்றடைதலாம். ஒரு புண்ணாக்கும் புரியலீங்க!

மீளவே இயலாத பெரும் குழப்பத்தில் உங்களை ஆழ்த்தியிருந்தால் பொறுத்தருள்வீர்!!