கடவுள் | ஆன்மா | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் | ஆன்மா | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2026

அழியாத ஆன்மா அருள்மிகு ஆண்டவனைச் சென்றடைதல்!

கடவுள் இருப்பதை உண்மை என்றே நம்புவோம். அவர்தான் நம்மைப் படைத்தார் என்பதும் உண்மையாகவே இருக்கட்டும்.

செய்திருக்கும் பாவப் புண்ணியங்களுக்கு ஏற்ப[இரண்டையும் செய்யத் தூண்டியது யார்?” என்று இடைமறித்துக் கேள்வி கேட்க வேண்டாம்] அடுத்தடுத்துப் பிறவிகள் எடுத்து இன்பங்களையோ துன்பங்களையோ அனுபவிக்கிறோம் என்று ஆன்மிகர்கள் சொல்வதையும் உண்மை என்றே ஏற்போம்.  றனஆன்மாவுக்கு அழிவில்லை என்கிறார்கள். அனைத்துப் பிறவிகளிலும் அதிக அளவில் பாவங்களே செய்துகொண்டிருந்தால், பிறப்பும் மறுபிறப்பும் வரம்பில்லாமல் தொடருமா?

மகான்களோ ஞானிகளோ, திடமான பதில் தந்தவர் எவருமில்லை. எனினும், ஆகச் சிறந்த பக்திப் பித்தராக வாழ்ந்து, கணக்குவழக்கில்லாமல்  புண்ணியம் செய்தால் கடவுளைச் சென்றடையலாம் என்கிறார்கள்.

மறுபிறவிக்கு வரம்பு உண்டா என்பது பற்றியும், இறைவனைச் சென்றடைவதற்குச் செய்திருக்க வேண்டிய புண்ணியத்தின் அளவு[கிலோ கணக்கிலா, டன் கணக்கிலா?] என்ன என்பது குறித்தும் வரையறை செய்யப்படவில்லை.

ஏதோ ஒரு கட்டத்தில் ஆன்மா வடிவில் நாம் இறைவனை[நாம் வணங்குபவரையா, ஏதாவதொரு கடவுளையா என்று குறுக்குக் கேள்வி கேட்க வேண்டாம்]ச் சென்றடைவதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு நமக்கு எழும் சந்தேகங்கள் பல உள்ளன.

கடவுள் அண்டவெளியிலும் ஒவ்வொரு துரும்பிலும் அணுவிலும் எங்கெங்கெல்லாமும் இரண்டறக் கலந்திருப்பவர் என்கிறார்கள். 

இதையும் உண்மை என்றே ஏற்றுக்கொண்டால்.....இதன் மூலம் அவருக்கென்று தனி உருவமோ, குறிப்பிட்ட தங்கும் இடமோ இல்லை என்பதை அனுமானிக்க இயலுகிறது.

இந்நிலையில், இறைவனைச் சென்றடையும் நாம் அவருடன் இரண்டறக் கலந்துவிடுவோமா? அவ்வாறாயின் நாமும் கடவுளா? அந்த ஒரிஜினல் கடவுள் அதற்குச் சம்மதிப்பாரா? மாட்டார்.

கடவுளாக மாறாமல் ஆன்மாவாகவே இருப்போம் என்றால் நாம் எங்கே தங்குவோம்? தங்கவைக்கப்படுவோம்?

எங்கே? எங்கே? எங்கே?

நமக்கான அந்த இடம் எது?

ஏதோ ஓர் இடம் என்றாலும்[கேள்விகள் வேண்டாம்] புலன்கள் ஏதும் இல்லாத நிலையில், அங்கே இருக்கும் நம் செயல்பாடு என்னவாக இருக்கும்?

அதாவது, நாம் என்ன செய்துகொண்டிருப்போம்?

அவதாரி மோடியோ, கடவுளின் குருவான சத்துக்குரு ஜக்கியோ அங்கிருந்தவாறு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருக்க, அதை நாம் மெய் மறந்து[உடம்புதான் இல்லையே, மன்னித்திடுக] செவிமடுத்து, கால வரையறையில்லாமல் பேரானந்தத்தில் மிதப்போமா?

நாமிருக்கும் இடத்தில் இன்னும் பல ஆன்மாக்கள் இருந்தால், மத வேறுபாடு இல்லாமல், ராமச்சந்திர மூர்த்தி, சிவபெருமான், ஆஞ்சநேயன் என்னும் அனுமான் குரங்கு, அல்லா, கர்த்தர் என்று பிரபலமான கடவுள்களைப் போற்றித் துதிபாடுவோமா?

இறைவனோடு கலந்துவிட்டோம் என்னும் மிதப்பில் காலமெல்லாம் கிளுகிளுத்துக் கிடப்போமா?

ஆன்மாவாம், கடவுளாம், சென்றடைதலாம். ஒரு புண்ணாக்கும் புரியலீங்க!

மீளவே இயலாத பெரும் குழப்பத்தில் உங்களை ஆழ்த்தியிருந்தால் பொறுத்தருள்வீர்!!

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

ஆறறிவைச் சிதைக்க ஓர் ஆண்டவன் போதும்; ஆன்மா எதற்கு?

‘ஆவி அல்லது ஆன்மாவை அழிக்க முடியாது’ என்று கிறித்தவ வேதம்[bible] கூறுகிறது. உடல் இறந்தாலும், ஆவி தொடர்ந்து வாழும். -https://www.blueletterbible.org/faq/don_stewart/don_stewart_102.cfm

‘ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டபோது, ​​அந்த நேரத்தில், அல்லாஹ் பிறக்கவிருக்கும் அனைத்து மனிதர்களின் ஆன்மாக்களையும் படைத்தான். ஆன்மா பிறப்பற்றது; அழிவற்றது’ என்கிறது இஸ்லாம் -https://iraiyillaislam.blogspot.com/p/blog-page_99.html

‘ஆன்மா அழியாது; அது அழிவற்றது’ என்று இந்து மதம் கூறுகிறது. உடலின் மரணத்திற்குப் பிறகு ஆன்மா உடலை விட்டு வெளியேறி, கர்மாக்களின் அடிப்படையில் மறுபிறவி எடுக்கிறது என்கிறது அது.

‘ஒவ்வொரு உயிருக்கும் நிரந்தரமான ஆன்மா உண்டு என்றும், கர்ம வினைகளால் அதன் விடுதலைக்கான பாதை அமையும்’ என்றும் நம்புகிறது சமண மதம்.

ஆன்மா அழியாதது என்றும், உடம்பு அழிந்த பிறகும் அது இருந்துகொண்டிருக்கிறது என்றும் பெரும்பாலான மதங்கள் நம்புகின்றன. சில மதங்கள் ஆன்மாவை இறைவனின் பகுதியாகவும், வேறு சில ஆன்மாவை உடலற்ற, நித்தியமான ஒன்றாகக் கருதுகின்றன. -https://www.google.com/search?q=

இவை அனைத்திற்கும் மேலாக, ஆன்மா கடவுளுடன் இணைய வேண்டிய அவசியமில்லை; ஏனென்றால், அதுவே கடவுள் என்றும் சொல்லப்படுகிறது[சொல்லுகிறவர்கள் கடவுளை நம்புகிறவர்களே]. -https://www.dadabhagwan.org/path-to-happiness/spiritual-science/what-is-a-soul/nature-of-soul/

இவ்வாறாக, ‘ஆன்மா’ என்று ஒன்று உணடு என்று மதங்கள் பலவற்றாலும் வலியுறுத்தப்படும் நிலையில், நம்மில் மிகப் பெரும்பாலோர் ‘ஆன்மா’வை நம்புவதில் வியப்பேதுமில்லை.
நம்பாத நாம் முன்வைக்கும் அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்.

‘அனைத்தையும் படைத்த கடவுளே சர்வ வல்லமை படைத்தவர்[படைப்பது & காப்பது & அழிப்பது] என்கிறார்கள் பெரும்பாலான மதவாதிகள். அவரால் அழிக்க முடியாததாக ஆன்மா என்று ஒன்று இருப்பது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை’ என்பதே அது.

மேலும், மதவாதிகளிடம் நாம் வேண்டிக்கொள்வது.....

மக்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைக்க உங்களால் கற்பனை செய்யப்பட்ட கடவுளே போதும். ஆன்மா, கர்மா, மறுபிறப்பு எல்லாம் வேண்டாமே.