சனி, 24 அக்டோபர், 2015

தமிழ் போற்றும் ‘தி இந்து’[24.10.2015] தமிழ் நாளிதழ் வாழ்க!

‘தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்குக் குவியும் அரசு வேலை வாய்ப்புகள்’ என்று தலைப்பிட்டு, ஓர் இனிப்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது ‘தி இந்து’[24.10.2015] தமிழ் நாளிதழ். அதை வாசிக்கும் வாய்ப்பில்லாதவர்களூக்காக இந்தப் பதிவு.
தனியார் நிறுவனங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் குவிந்துவருகின்றன.

தமிழ்வழி பொறியியல் கல்வித் திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 இடங்கள் உருவாக்கப்பட்டன. ‘தமிழ்வழியில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தமிழில் நடத்தப்படும்; செமஸ்டர் தேர்வையும் அவர்கள் தமிழிலேயே எழுதலாம்’ என்று அறிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்வழிப் பொறியியல் படிப்புகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, தமிழ்வழியில் சிவில் இன்ஜினீயரிங் 660 இடங்கள், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் 720 இடங்கள் என மொத்தம் 1380 இடங்கள் உள்ளன.

தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளின் முதல் ‘பேட்ச்’ 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆங்கிலவழியில் பொறியியல் படித்த மாணவர்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. சம்பளமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சம்பளம் குறைவாக இருந்தபோதிலும் கிடைத்த வேலையில் சேரும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகள், தனியார் நிறுவனங்கள் நடத்தும் வளாகத் தேர்வுகளில்[கேம்பஸ் இண்டர்வியூ] மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வு செய்யப்படும் நிலை உருவானதால், தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் சேர மாணவ - மாணவிகள் மிகவும் தயங்கினர். அண்மையில் நடந்து முடிந்த பொறியியல் கலந்தாய்வில்கூட, தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆகியோர் மட்டுமே தமிழ்வழிப் படிப்பைத் தேர்வு செய்தனர்.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சிறப்பு ஒதுக்கீடு 5 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்கள் இல்லாததால், பொறியியல் பிரிவை 20 சதவீத ஒதுக்கீடு எட்டவில்லை.

தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளின்[சிவில், மெக்கானிக்கல்] முதல் ’ ‘பேட்ச்’ கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் வெளியே வந்தது. தனியார் நிறுவனங்களில், தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நெடுஞ்சாலைத் துறையில்.....

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் 213 உதவிப் பொறியாளர்களை[சிவில்] தேர்வு செய்யக் கடந்த செப்டெம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு நடத்தியது. மொத்தக் காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.

தமிழ்வழிப் பட்டதாரிகள் ஏராளமானோர் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

விரிவுரையாளர் பதவிகள்....

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல்[சிவில், மெக்கானிக்கல் உட்பட] மற்றும் பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளில் 604 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு விரைவில் தேர்வு நடத்தப்படவுள்ளது. தமிழ்வழியில் சிவில், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு விரிவுரையாளர் பணியிலும் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் 100 உதவிப் பொறியாளர்களை[சிவில் -  75, மெக்கானிக்கல் - 25] போட்டித் தேர்வு மூலமாகத் தேர்வு செய்ய இருக்கிறது. இதில், சிவில் பிரிவில் 12 இடங்களும், பொறியியல் பிரிவில் 4 இடங்களும் தமிழ்வழிப் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உதவிப் பொறியாளர் பணிக்கு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில்[www.twadrecruitment.net] விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை. பேராசிரியர் மகிழ்ச்சி.....

தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு, பெருகிவரும் அரசு வேலை வாய்ப்புகள் குறித்து அண்ணா பல்கலைக் கழக சிவில் இன்ஜினீயரிங் துறைத் தலைவர், பேராசிரியர் கே.நாகமணி கூறும்போது, “தமிழ்வழியில் பொறியியல் படிக்கின்ற மாணவர்கள் செமஸ்டர் தேர்வைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ அல்லது இருமொழி கலந்தோ எழுதலாம். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் அளிக்கப்படும் 20 சதவீத ஒதுக்கீடு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் பொதுப் போட்டியின் கீழும் வேலைவாய்ப்புப் பெறலாம். தற்போது அரசுப்பணி வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், வருங்காலத்தில் அதிகப்படியான மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் படிப்பில் சேரும் சூழல் உருவாகும்” என்றார்.

தமிழ்வழியில் கற்க விரும்பும் மாணவர்களின் என்ணிக்கை அதிகரித்தால் தமிழ்வழியில் கற்பதற்கான இடங்களை அரசு அதிகரிக்கும்.

தமிழ்வழியில் கற்போர் எண்ணிக்கை பெருகினால்,  அவர்களின் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு இருபதிலிருந்து ஐம்பதாகி, மேலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

“தமிழ் வாழும்; வளரும்” - இது நம் எல்லோருடைய நம்பிக்கையும் ஆகும்.

புதன், 21 அக்டோபர், 2015

தப்புத்...தப்புத்...தப்புத்..தப்பாய் ஒரு கணக்கு!!! [2011இல் கிறுக்கியது]

கண் மூடி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த இறைவனை நீண்ட நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் இறைவி.

அதை மனக்கண்ணால் உணர்ந்த இறைவன், "ஏதோ சொல்ல நினைக்கிறாய் போல. சொல்” என்றார்.


“சொல்ல நினைக்கல. கேட்க நினைக்கிறேன்” என்றார் இறைவி..


“கேள்”

“கடவுள் நீங்க ஒருத்தர்தானா?”

ஒரு முறை அதிர்ந்து அடங்கியது இறைவனின் பொன் நிற மேனி.

“நான் ஒரு போதும் அப்படிச் சொன்னதில்லை” என்றார் இறைவன்.

“நீங்க சொன்னதில்லை. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் சொல்கிறார்கள்.”

“எல்லாரும் சொல்வதில்லை. ‘நான் ஆன்மிகவாதி; கடவுளின் அவதாரம்’ என்று பீற்றிக்கொண்டு அலைபவர்கள் சொல்கிறார்கள்.”

“அதென்ன கணக்கு, ‘ஒன்று’? கட்டற்ற...கணிப்புக்கு உட்படாத... அதிபிரமாண்டமான பிரபஞ்சத்தில் ஒரே கடவுள்தான் உண்டு. அவர்தான் அனைத்தையும் தோற்றுவித்து இயக்குகிறார் என்பது என்ன கணக்கு? ஒருவருக்கே அத்தனை நற்குணங்களையும் நிகரற்ற பேராற்றலையும் உரித்தாக்கிக் கொண்டாடுவது ஏன்? நற்குணங்கள் கொண்ட பல நல்ல கடவுள்கள், ஆதிக்க மனப்பான்மை இன்றி, ஒத்த மனப் போக்குடன் ஒருங்கிணைந்து இந்தப் பிரபஞ்சத்தை ஆளுவது சாத்தியமான ஒன்றுதானே?.......இப்படிச் சிலர் கேட்கிறார்கள்! அவர்கள்.....”

குறுக்கிட்ட இறைவன், “அவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள்...பகுத்தறிவாளர்கள்” என்றார்.

“எது? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகள் விடை காண முடியாத புதிர்கள். மேம்போக்காக நோக்கும் போது, பிரபஞ்ச இயக்கம் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில், கடவுளின் கட்டுப்பாட்டில் அது இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, கடவுள் என்ற ஒருவர் தேவையற்றவர் ஆகிறார்” என்று சொல்பவர்களும் நிலவுலகில் இருக்கிறார்கள்” என்றார் இறைவி.

“அவர்கள்தான் நாத்திகர்கள்.” மெலிதாகப் புன்னகைத்தார் இறைவன்.

“கடவுள் உண்டுங்கிறாங்க. இல்லைன்னும் சொல்றாங்க. நரகம் சொர்க்கம்கிறாங்க. செத்த பிறகு ஆவியா பேயா அலையணும்னு அடிச்சிப் பேசறாங்க. அதெல்லாம் ஒன்னுமில்ல. செத்தா மண்ணு. அவ்வளவுதான்னும் அலட்சியமா சொல்றவங்களும் இருக்காங்க. ஒன்னும் புரியல. மனுசனா ஏன் பிறந்தோம்னு தெரியல........இப்படிப் புலம்பறவங்களும் அங்கே இருக்காங்க.” என்று இறைவி சொல்ல.......................

“அவர்கள் எல்லாம் சராசரி மனிதர்கள்” என்றார் இறைவன்.

“இப்படி இன்னும் என்னவெல்லாமோ கேள்விகள் கேட்கிறாங்க பூலோகவாசிகள். இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியலையேங்கிற உறுத்தல் இருந்துட்டே இருக்கு. எல்லார்த்துக்கும் நீங்கதான் விடை சொல்லணும்” என்று தன் கேள்விகளுக்கு முத்தாய்ப்பு வைத்தார் இறைவி.

முகத்தில் சிறு விரக்திப் புன்னகை மலர்ந்து மறைய, இறைவன் சொன்னார்:

“யுகம்...யுகம்...யுகம்...யுகம்...யுகமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை எந்தவொரு கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியாது. யோசித்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.”

மோனத்தில் புதைந்து போனார் இறைவன்!