புதன், 10 ஆகஸ்ட், 2016

போகிற போக்கில் [நான் செய்த] சின்னஞ்சிறு பொதுத் தொண்டு!

சேலத்தில், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்த நண்பரைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தேன்.

வள்ளுவர் சிலையைக் கடந்து மருத்துவமனை செல்லும் சாலையில் நுழைந்தபோது, ஒரு தேனீர்க் கடையின் முன்னால் திரண்டிருந்த கும்பல் என் கவனத்தை ஈர்த்தது.

“என்ன அது கும்பல்?” -சற்று எட்ட நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டேன்.

“டீ குடிக்க வந்த ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சினை. கூட்டம் சேரவும் ரெண்டு பேருக்கும் ஆதரவா அவங்க அவங்க ஜாதிக்காரங்க திரண்டுட்டாங்க. காரசார விவாதம் நடக்குது. எந்த நேரத்திலும்  கலவரம் வெடிக்கலாம்” என்றார் அவர்.
நடக்கப்போவதை அறியும் ஆவல் எனக்கும் இருந்தது. நண்பர் ஆபத்தான நிலையில் இருந்ததால் ஸ்கூட்டரை நகர்த்தினேன்.

வாகனத்தின் வேகத்தைக் கூட்டியபோது, எதிரே வந்தவர் என்னைத் தேக்கினார். 

“என்னங்க கும்பல்?”

“அதுவா.....” கொஞ்சம் யோசித்தேன். இவர், ‘முரண்பட்டு நிற்கும் இரு தரப்பில் ஒரு தரப்பைச் சார்ந்தவராக இருந்தால்.....’

“யாரோ ரெண்டு பேர் தண்ணியடிச்சிட்டுத் தகராறு பண்ணிக்கிறாங்க. வேலைவெட்டி இல்லாத கூட்டம் வேடிக்கை பார்க்குது. போய் உங்க வேலையைப் பாருங்க...போங்க சார்.” 

அடுத்தடுத்து, வழி மறித்து வினவிய  இருவருக்கும் இதே  பதிலைச் சொல்லிவிட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தேன்.

‘ஏதோ நம்மாலான நல்ல காரியம்’

மனம் முழுக்க ஒருவித திருப்தி பரவியது.
===============================================================================





சனி, 6 ஆகஸ்ட், 2016

புரியாத சாமியும் புத்தியுள்ள கந்தசாமியும்!

“கந்தசாமி, கோயிலுக்குப் போறியாப்பா?” -அம்மா கேட்டார்.

“எனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லேன்னு தெரியுமில்ல. அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?” -அம்மாவிடம் பொய்க் கோபம் காட்டினான் கந்தசாமி.

“அதில்லப்பா. நீயும் அப்பாவும் நடத்துற ஓட்டலில், வர்ற கொஞ்சம் லாபமும் வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சரியாப் போயிடுது. அஞ்சாறு வருசமா அசல் அப்படியே இருக்கு. குடும்பச் செலவுக்குப் பணமில்ல. நம்பிக்கையிழந்த உன் அப்பா, தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். தொழில் இன்னும் லாபகரமா நடக்கணும்னா, பிடிவாதத்தைக் கைவிட்டு, சாமி கோயிலுக்குப் போயி, சாமி சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு வாப்பா.”
அம்மாவின் குரலில் என்றுமில்லாத கண்டிப்புத் தெரிந்தது.

மவுனமாகக் கிளம்பிப் போனான் கந்தசாமி.

அவன் வீடு திரும்பியதும், “விழுந்து கும்பிட்டயா? மனப்பூர்வமா வேண்டிகிட்டியா?” என்றார் அம்மா.

“நான் கோயிலுக்குப் போகல; கடன் கொடுத்தவங்களைத் தேடிப் போயி, அவங்க காலில் விழுந்து கும்பிட்டு நிலைமையைச் சொன்னேன். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலைக் கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சிக் கொடுன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.

அம்மா, சாமி படத்தின் முன்னால் நின்று கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
17.04.2013 இல் இதே தளத்தில் வெளியான கதை இது.