செவ்வாய், 29 மே, 2018

ஒரு 'கரு'வுக்கு 'இரு' கதைகள்!!

'old is gold' என்னும் ஆங்கிலப் பொன்மொழியை நினைவில் இருத்திக்கொண்டு வாசியுங்கள். கதைகள் பிடிக்கும்! எழுதியவரை மிகவும் பிடிக்கும்!!

கதை 1:
தலைப்பு: 'நீ தொட்டால்...’ [குமுதம் 08.09.10]
படைத்தவர்: பரமசிவம்

“கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குறே. கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ் முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா?” என்றாள் கல்யாணி.

''ஏண்டி பொய் சொல்றே.”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலே’ன்னு கோவிச்சுட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்குறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது! -முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” -குழைவாகச் சொல்லிக் கொண்டே கல்யாணியின் இடையில் கை போட்டான் கண்ணுச்சாமி.

“குடிச்சுட்டு வந்து என்னைத் தொடுற வேலையை வெச்சுக்காதே. நான் கர்ப்பம் ஆயிட்டா ''எப்பத் தொட்டேன்?''னு சந்தேகமா பார்ப்பே” என்றாள் அவள்.

“இதோ பாருடி, நான் தாலி கட்டின புருசன். படுன்னா படுக்கணும்” என்று அவள் தோளைத் தொட்டான் அவன்.

அவனைத் தள்ளிவிட்ட அவள், “நான் சொன்னா சொன்னதுதான். இனியும் குடிச்சிட்டு வந்து என்னைத் தொடக் கூடாது. மீறித் தொட்டா என் உடம்பில் உசுரு இருக்காது” என்றாள் கண்டிப்பான குரலில்.

குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் கண்ணுச்சாமி.

கதை 2:
தலைப்பு: ‘தொட்டுப்பார்...’ [ராணி]
படைத்தவர்: ‘பசி’

நள்ளிரவு.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்தான் பொன்னுச்சாமி.

ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். அவள் ‘ரேட்’ அதிகம். ஒரே ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான் பொன்னுச்சாமி.

பிள்ளையார் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. என்றாலும் இவன் கையில் இப்போது பைசா இல்லை. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டது.

பொன்னுச்சாமியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காந்திநகர் சரசுவைத் தேடிப் போனான்.

''போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ வெளியே” என்று இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

'அதே’ நினைப்பாக இருந்த பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் இவன்.

இவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவள் மார்பின் மீது படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“நான் உன் புருசன் சொல்றேன், படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவ முற்பட்டான் இவன்.

எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்த சிவகாமி, “கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சிட்டியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன். ஜாக்கிறதை” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் பொன்னுச்சாமி.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாளை புதுப்பதிவு வெளியாகும்.

ஞாயிறு, 27 மே, 2018

கொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்!!!

கொதிக்கும் எண்ணைக்குள் கை துழாவி, வடைச்சட்டி[வானலி]யில் நம்ம ஊர்ச் சாமியார்களும் சாமியாரிணிகளும் வடை சுடுவதை ஊடகங்களின் மூலம் அறிந்து பிரமித்திருப்பீர்கள்.

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், தாய்லாந்து நாட்டின் 'சோங் புவா லம்பு' மாகாணத்தில், எரியும் அடுப்பின் மீதுள்ள எண்ணை நிரப்பிய தாம்பாளத்தில்[[பத்திரிகையில் வேறு பெயர் போட்டிருந்தார்கள்] உட்கார்ந்துகொண்டு[இடுப்பளவு] பக்த சிரோன்மணிகளுக்கு ஆசி வழங்கியிருக்கிறார்[சில நாள் முன்பு 'தினத்தந்தி'யில் வாசித்தது] ஒரு சாமியார்.

இப்படியொரு அபூர்வ சக்தி படைத்த சாமியாரிடம் ஆசி பெறுவதோடு, இவர் தொட்டுக்கொடுக்கும் பொருள்களை வாங்கினால்[பணம் கொடுத்துதான்] வாழ்க்கையில் சுபிட்சம் கிட்டும் என்பது தாய்லாந்து வாசிகளின் நம்பிக்கை. இதன் மூலம், சாமியாருக்குச் சொந்தமான கடையின் பலசரக்கு விற்பனை அமோகமாம்.

பாவம், நம்ம ஊர்ச் சாமியார்களுக்கு இப்படியான அதிர்ஷ்டம் இல்லை. 

இவர்கள் கொதிக்கும் எண்ணையில் கை நனைப்பது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்ட நினைவு எனக்கு உள்ளது. 

'குதிவாதம்'  என்னும் நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

எனக்கு அப்போது முப்பது வயதிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் குதிகாலைத் தரையில் ஊன்றும்போது ரொம்பவே வலிக்கு. ஊன்றவே முடியாது. வெய்யில் வந்த பிறகுதான் படிப்படியாகக் குறையும். 

என் தந்தை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்.

வடைச்சட்டியில்[வானலி] கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணையில் மூலிகைச் சாற்றைக் கலந்தார் வைத்தியர்; என்னுடைய குதிகாலிலும் சாற்றைப் பூசினார்.

''பயம் வேண்டாம். கொஞ்சம்கூடச் சுடாது'' என்று சொல்லிக்கொண்டே, பச்சிலைச் சாறு பூசிய என் குதிகாலை அரை நிமிடம்போல் கொதிக்கும் எண்ணையில் அமுக்கிப் பிடித்திருந்து விடுவித்தார். ''வலி சரியாயிடும்'' என்று சொல்லிப் புன்னகையுடன் வழியனுப்பினார்.

நம்ப மாட்டீர்கள் நான்கு நாட்களில் வலி காணாமல் போனது.

எனக்குக் குதிவாதம் வருவதற்கு முன்னரேகூட, எண்ணையில் வடை சுடும்[கையில் மூலிகைச்சாறு பூசிக்கொண்டு] சாமியார்கள் ஏதோ சூது பண்ணுகிறார்கள் என்று நான் எண்ணியதுண்டு. சம்பவத்தை நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தால், ''சாமிகளே, கொதிக்கிற எண்ணைக்குள் கையை விடுறீங்க. கொதிக்கிற அந்த எண்ணையைக் கொஞ்சம் உங்க வாய்க்குள்ள ஊத்துங்களேன், பார்க்கலாம்'' என்று சொல்ல நினைத்ததுண்டு. வாய்ப்பு அமையவில்லை.

ஆக, நாம் நம் சாமியார்களைச் சந்தேகப்படுகிறோம். தாய்லாந்துக்காரர்கள்?

தாய்லாந்தில், எண்ணைத் தாம்பாளத்திற்குள் குந்தியிருந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் அந்தச் சாமியாரின் நடவடிக்கைமீது சில சமூக ஆர்வலர்களுக்குச் சந்தேகம் வந்ததாம்; அது குறித்து ஆய்வு நடத்தி உண்மையைக் கண்டுபிடித்தார்களாம்.

'சாமியார் பயன்படுத்திய தாம்பாளம் இரண்டு அடுக்குகளாக இருந்தது[பார்வைக்கு ஒரே பாத்திரமாகத் தெரியும்]. மேலடுக்கில் எண்ணை. கீழடுக்கில் தண்ணீர். எரியும் நெருப்பின் சூட்டைக் கீழடுக்குத் தண்ணீர் உள்வாங்கிக் கொள்வதால், மேலடுக்கு எண்ணை சூடாவதே இல்லை' என்பதே அந்தக் கண்டுபிடிப்பு.

சாமியாரின் ஏமாற்று வேலை இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் அதை நம்ப மறுத்துவிட்டார்களாம் பக்தர்கள். வழக்கம்போல, சாமியார் எண்ணைத் தாம்பாளத்தில் அமர்ந்து ஆசீர்வதிப்பதும் பக்தர்கள் அணி அணியாய்ச் சென்று ஆசீர்வாதம் பெறுவதும் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறதாம்.

நம்ம ஊர்ப் பக்தர்கள் தேவலாம்போலிருக்கிறது.