திங்கள், 4 ஜூன், 2018

'அது' தெரியும்! அதுக்கப்புறம்.....???

ஆயிரம் வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாத விஷயத்தை ஒரு புகைப்படம் விளங்க வைத்துவிடும் என்று சொல்வார்கள். கட்டுரைகள் செய்ய முடியாத விஷயத்தை, ஒரு புகைப்படம் எளிதில் உணர்த்திவிடும் என்பதால் சர்வதேச நாளேடுகள், புகைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிப்பது உண்டு[பழைய விகடனில் இடம்பெற்ற வாசகம் இது].
அந்த வகையில், வியட்நாம் போரின் போது அமெரிக்கப் படைகள் நடத்திய வெடி குண்டுத் தாக்குதலுக்குப் பயந்து குழந்தைகள் ஓடி வருவது போன்ற படம் உலகை முதன் முதலாக உலுக்கிப் போட்டது. [வியட்நாமில் ட்ராங் பாங் என்ற இடத்தில், 11 வயதுச் சிறுமி நிர்வாணமாக ஓடி வரும் படத்தை, 1972ஆம் ஆண்டு ஜுன் 8ஆம் தேதி,  புகைப்படக் கலைஞர் 'நிக் உட்' பதிவு செய்திருந்தார்]. 

முதலில் இந்தப் படத்தைப் பிரசுரிக்க 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் குழு மிகவும் யோசித்தது. அந்தப் படத்தில் சிறுமி ஒருவர்  நிர்வாணமாக ஓடி வந்ததுதான் அவர்களின் தயக்கத்துக்குக் காரணம்.  பின்னர், போரின் கொடூரத்தை மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தப் புகைப்படத்தை முன்பக்கத்தில் வெளியிட்டனர்.

அடுத்த நாள் அமெரிக்காவே கொதித்து எழுந்து விட்டது. உடனடியாக வியட்நாமில் அமெரிக்கா போரை நிறுத்த வேண்டுமென அமெரிக்க மக்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பல நெருக்கடிகளுக்கிடையே இருந்த அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களே போராட்டத்தில் குதித்ததும்தான் வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து யோசிக்கத் தொடங்கியது. [உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் படம், பின்னர் சிறந்த புகைப்படத்திற்காக வழங்கப்படும் 'புலிட்சர் 'விருதினை வென்றது].

நெஞ்சைவிட்டு அகலாத இந்த நிகழ்வை/செய்தியை நம்மில் மிகப் பெரும்பாலோர் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கக்கூடும்.

அப்போது படம் எடுத்துச் சாதனை புரிந்த 'நிக் உட்', படம் எடுக்கப்பட்ட சிறுமி 'கிம்புக்' ஆகியோரின் இப்போதைய நிலை என்ன என்பது குறித்து நம்மில் எவரும் யோசித்திருக்க மாட்டோம். 

ஆனந்தவிகடன் வார இதழுக்கு அவர்களின் நிலை குறித்து அறியும் ஆர்வம் இருந்ததோ என்னவோ, அண்மையில், கேரள மாநிலத்திற்கு 'நிக் உட்' வருகை புரிந்ததையும், கேரள அரசு அவரின் வருகையை ஒட்டி விழா எடுத்துச் சிறப்பித்ததையும் மோப்பம் பிடித்துவிட்ட விகடன் குழு, கேரளா சென்று அவரைச் சந்தித்ததோடு அவருடனான பேட்டி[விகடன், 11.04.2018]யையும் வெளியிட்டது.

பேட்டியில், ரத்தக் காயங்களுடன் இருந்த 'கிம்புக்'கைத் தன் காரில் ஏற்றிச் சென்று, சிகிச்சையளித்துப் பிழைக்க வைத்ததையும், இன்றளவும் அவர்[கிம்புக் பாட்டி] நலமாக இருப்பதையும் ஐ.நா.வின் அமைதித் தூதராக அவர் பணி புரிவதையும் விவரித்ததோடு, அடுத்தமுறை இந்தியா வரும்போது அவரையும் அழைத்துவருவதாகவும் கூறியிருக்கிறார் நிக் உட்.

கூடவே, ஒரு பெரும் சோகச் செய்தியையும் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அது.....

'கெவின் கார்ட்டர்' என்னும் புகைப்படக்காரர் பற்றியது.

சூடானில் கடும் பஞ்சம் நிலவிய நேரம் அது. பல நாள் உணவின்றி, எலும்பும் தோலுமாய், குப்புறக் கவிழ்ந்து கிடக்கிறாள் ஒரு சிறுமி[பதிவர்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள். என்னுடைய ஒரு பதிவில் இப்படத்தை இணைத்திருந்தேன்]. எந்த நேரத்திலும் அவரின் உடம்பிலிருந்து உயிர் பிரியலாம் என்பதால், அந்தச் சிறுமியைக் கொத்தித் தின்பதற்காகக் காத்திருக்கிறது ஒரு கழுகு.


இந்தக் காட்சி கெவின் கார்ட்டரின் கண்ணில் பட்டது. படம் எடுத்தார். புகைப்படக்காரர் என்ற முறையில் தன் கடமை முடிந்ததாகக் கருதி[கூடுதல் செய்திகள் தவிர்க்கப்பட்டன] அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.

பின்னர், சிறுமியைக் காப்பாற்றாமல் படம் மட்டும் எடுத்தது அறம்தானா என்னும் கேள்வி அவர் மனதை வாட்டி வதைத்திருக்கிறது. ஆறுதல் பெறும் வகையறியாமல் கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த அதிர்ச்சிச் செய்தியை விவரித்து முடித்த 'நிக் உட்' சொல்கிறார்.....

''கிம்புக் உயிர் பிழைக்காமல் இருந்திருந்தால் நானும் கெவின் கார்ட்டர் போல் தற்கொலை செய்துகொண்டிருப்பேன்.''

''இவர்களைப் போன்ற நல்லவர்களால் வாழ்கிறது இவ்வுலகம்'' என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?-----------------------------------------------------------------------------------------------------------நன்றி: விகடன்






ஞாயிறு, 3 ஜூன், 2018

காந்தியை இழிவுபடுத்தும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர்!!!

''அவரால் காரியம் ஆகணும்னா, எளியனே, இனியனே, உத்தமனே, சத்தியனேன்னு உம்முடைய புத்தி போனபடி புகழ்ந்து தள்ளும்; இனியும் காந்தியுடன் ஒப்பிடாதீர்!''

ஆனந்த விகடனுக்கு[06.06.2018] அளித்த ஒரு பேட்டியில், ''ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி; காந்தி முன்னெடுத்துச் சென்ற எளிமை, பணிவு, அடக்கம் மூன்றும் ரஜினிகாந்திடம் இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்.

''ரஜினி உண்மையான காந்தியவாதியா? காந்தி அளவுக்கு எளிமையானவரா? பணிவு மிக்கவரா? தன்னடக்கம் கொண்டவரா?

காந்தியின் பெயரில் ஒரு இயக்கத்தை நடத்திவரும் மணியன், காந்திக்கும் உண்மைக்கும் பிறவற்றிற்கும் இருந்த உறவை முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தால் மேற்கண்டவாறு உளறியிருக்கமாட்டார்.

''உண்மை[சத்தியம்]யே பேசி வாழ்வேன்'' என்பது காந்தி கொண்டிருந்த முக்கியமான கொள்கைகளில் ஒன்று. 

இளம் பருவத்தில், கட்டுப்படுத்த இயலாத காம உணர்ச்சிக்கு ஆளானபோதெல்லாம், மணல் மூட்டைகளைச் சுமந்து ஓடியிருக்கிறார் காந்தி; ஜிலுஜிலு நீரில் நீண்டநெடு நேரம் குந்திக் கிடந்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா சென்றபோது, ''மனதாலும் பிற பெண்டிரைத் தீண்ட மாட்டேன்'' என்று தாயிடம் சத்தியம் செய்தவர் காந்தி. தாய்நாடு திரும்பும்போது, தீவு ஒன்றில், கப்பல் கேப்டனின் தூண்டுதலால்  ஒரு விடுதிக்குச் சென்று  விலைமகளுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டார். தாய்க்குச் செய்துகொடுத்த சத்தியம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்ய, விடுதியிலிருந்து வெளியேறி, செய்யவிருந்த தவற்றிலிருந்து தப்பியிருக்கிறார். இவை, காந்தியின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள்.

தம்மை மனப்போராட்டங்களுக்கு ஆளாக்கிய இம்மாதிரியான நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் தம் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் காந்தி.

தந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட முயன்ற தம் இழிகுணத்தை நினைந்து மனம் நொந்திருக்கிறார்.

உண்மையான, சத்தியம் தவறாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதில் தமக்கு உண்டான, மேற்கண்டவை போன்ற அனுபவங்களைத் தம் சுய சரிதையான 'சத்திய சோதனை''யில் காந்தியடிகள் விவரித்திருப்பதை மணியன் அவர்கள் அறிந்திருக்கக்கூடும்..

இத்தகைய காந்தியுடன்தான் நடிகர் ரஜினியை ஒப்பிட்டு,  ''உண்மையான காந்தியவாதி அவர்[ரஜினி]'' என்று மனம் கூசாமல் கதையளந்திருக்கிறார் மணியனார்.

காந்தியின் எளிமை உலகறிந்தது. கோவணத்துடன் காட்சியளித்த தமிழக விவசாயியின் கோலம் கண்டு மனம் மாறி எளிய உடைக்கு மாறியவர் அவர். சர்ச்சிலின் பார்வையில் 'அரை நிர்வாணப் பக்கிரி'. இதே அரை நிர்வாணக் கோலத்துடன் அயல்நாடெல்லாம் சென்று வந்தவர்.

ஆடம்பரத்தையும் அதீத உணவையும் வெறுத்தவர். கொஞ்சம் நிலக்கடலையும் சிறிளவு ஆட்டுப்பாலும் அவரின் ஒருநாள் உணவுத் தேவையை நிறைவு செய்தன.

இவ்வகையில், எளிய...மிக எளிய வாழ்வு வாழ்ந்த காந்தியுடன் சூப்பர் ஸ்டாரை ஒப்பிடுவதற்கான துணிவை மணியன் பெற்றது எவ்வாறு என்பது புரியவில்லை.

ராமனின் தீவிர பக்தர் என்றாலும், கடவுளின் இருப்பு, இயக்கம், இயக்குதல் குறித்தெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தவர் காந்தி. எனினும், கடவுள் குறித்த விவாதங்களில், தம் கருத்துக்கு ஆதரவாகப் போதிய ஆதாரங்களை முன்வைக்க இயலாதபோது, ''இதற்கு மேலும் நான் விவாதிக்க விரும்பவில்லை[ஆழம் தெரியாமல் காலை விடமாட்டேன்], என்னளவில் நான் கடவுளை நம்புகிறேன்'' என்று பணிந்து சொன்னவர் அவர். 

இவ்வகைப் பணிவுடன் செயல்படும் பண்பு ரஜினியிடமிருந்து வெளிப்பட்டதுண்டா? ''ஆம்'' எனின், அவை வெளிப்பட்ட தருணங்களை மணியன் பட்டியலிட்டிருக்கலாம். செய்யவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது மூண்ட கலவரத்தை முடக்குவதற்காக 21 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொள்வதற்கான மன உறுதியும், தவறு செய்துவிட்டோம் என்பதை உணரும்போது[ஒத்துழையாமை இயக்கம்...மக்களால் போலீஸ் தாக்கப்படுதல்...], ''இமாலயத் தவறு செய்துவிட்டேன்'' என்று வருத்தம் தெரிவிக்கும் தன்னடக்கமும் காந்தியின் குருதியில் கலந்துவிட்ட உயர் குணங்கள். 

இக்குணங்கள் ரஜினிக்கு இருப்பதை எடுத்துக்காட்டுகள் தந்து உறுதிப்படுத்தினாரல்லர் காந்தியின் பெயரால் இயக்கம் நடத்தும் அரசியல்வாதி மணியன்.

ஆக.....

காந்தியுடன் ரஜினியை ஒப்பிட்டுத் தமிழருவி மணியன் பேட்டியளித்திருப்பது, காந்தியின்மீது பற்றுக்கொண்ட பலரையும் அதிச்சிக்குள்ளாக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.