சனி, 11 ஏப்ரல், 2020

உலகம் அழிந்துகொண்டிருக்கிறதா?!

இங்கே ‘உலகம்’ என்பது இந்தப் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினங்களைக் குறிக்கிறது.

இந்தப் பூமி, இதுவரை ஐந்து உயிரினப் பேரழிவுகளைச் சந்தித்திருப்பதாகச் சொல்கிறது அறிவியல்.

சிறு சிறு அழிவுகள் எப்போதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பேரழிவுகளைத்தான் அறிவியல் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
பேரழிவு என்றவுடன், திடீரென்று ‘படீர்’ வெடிச் சத்தத்துடன் பூமி உருண்டையானது வெடித்துச் சிதறுவதாக எண்ண வேண்டாம். அப்படியொரு அழிவு இந்தப் பூமிக்கு இதுவரை நிகழ்ந்ததில்லை. உயிரினப் பேரழிவுகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதுவும்கூட பெருமளவிலான உயிர்களின் அழிவைத்தான் குறிக்கிறது.

இதுவரையிலான ஐந்து பேரழிவுகளில், முதலாவது பேரழிவு சுமார் 44 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இந்தப் பூமியின் தென்பகுதி நிலப் பிண்டமாகவும், வடபகுதி தண்ணீர் மயமாகவும்[கடல்] இருந்தது. கடலுக்குள்ளும் கொஞ்சமே கொஞ்சம் உயினினங்கள்தான் இருந்தன. 

காலம் செல்லச் செல்ல, கடல் நீரை உறை பனி மூடிக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் கடலின் பெரும் பகுதி மூடப்பட்டபோது, உயிரினங்களில் 85 விழுக்காடு[சதவீதம்] அழிந்துபோயின. கவனியுங்கள், முழுதும் அழிந்துவிடவில்லை[15 சதவீத உயிர்களை அழிக்காமல் விட்டுவிட உத்தரவிட்டது கடவுளோ?!].

இரண்டாவது பேரழிவு, சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா எல்லாம் ஒரே நிலப்பரப்பில் இருந்தன.

அப்போது பூமியில், பூச்சிகளும் செடிகொடிகளும் காணப்பட்டன. அஸ்டிராய்டு எனப்படும் ‘சிறு கோள்’ நிலப்பரப்பைத் தாக்கியதாலும், கடல் மட்டம் கிடுகிடுவென்று சரிந்ததாலும். கடலிலும் நிலத்திலும் வாழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான உயிரினங்கள் அழிந்தன.

மூன்றாவது பேரழிவு நிகழ்ந்தது 29 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்கிறார்கள். இதற்கு, அதீத சக்தி வாய்ந்த சிறுகோள் தாக்குதலும், பருவநிலை மாற்றங்களும் காரணமாக இருக்கக்கூடுமாம். கடலில் வாழ்ந்த உயிரினங்களில் 96 சதவீதமும், நிலப்பரப்பில் வாழ்ந்தவற்றுள் 70 சதவீதமும் அழிந்தன.

நான்காவது பேரழிவு, 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இதற்குக் கண்டங்கள் தனித்தனியே பிரிந்தது காரணம் என்கிறார்கள். உயிரினங்களில் பாதி அழிந்துவிட்ட நிலையில் ‘டைனோசர்கள்’ தோன்றின.

ஐந்தாவது பேரழிவு சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதி பிரமாண்டமான ராட்சத விண்கல் அதி வேகத்தில் வந்து பூமியின் மீது மோதியது காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த நிகழ்வில் டைனோசர்கள் முற்றிலுமாய் அழிந்துபோயிருக்கலாமாம்.

மேற்கண்ட தகவல்களின் மூலம், கோடிக்கணக்கிலான ஆண்டு இடைவெளியில் பேரழிவுகள் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. ஐந்தாவது பேரழிவு நிகழ்ந்து ஆறரைக் கோடி ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. இனி எப்போது வேண்டுமானாலும் ஆறாவது பேரழிவு நிகழக்கூடும் என்று அனுமானிக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். 

தன்னுடைய வாழ்வாதாரங்களுக்காக, பிற உயிரினங்களை மனிதன் அழித்துக்கொண்டிருப்பதைக் காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக ஆறாவது உயிரினப் பேரழிவு நிகழ்ந்துகொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்களாம். ஆக, ஆறாவது பேரழிவு என்பது மனிதனால் நிகழ்த்தப்படுவதாகும்.

இவன் செய்யும் அடாவடித்தனங்களையும், அட்டூழியங்களையும் நாளும் கண்டு கண்டு மனம் வெந்து புழுங்கியிருக்கும் கடவுள், வெகு விரைவில்  ஆறாவது பேரழிவை நிகழ்த்தப்போகிறார் என்கிறார்கள் ஆன்மிகப் பிதாமகன்கள்.

நல்லதே நடக்கட்டும்!
=======================================================================
ஆதார நூல்: அறிஞர் என்.ராமதுரையின் ‘எங்கே இன்னொரு பூமி?’

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

ஒரு தறுதலை ‘தலைவர்’ ஆவது எப்படி?![விறு விறு சிறுகதை]

சரவணமுத்துவுக்கு நாளை விடுதலை. சிறையிலிருந்து வெளிவந்தவுடன் அமைச்சர் செல்லையாவுக்கு இந்த உலகத்திலிருந்தே விடுதலை அளிக்கப்போகிறான். நீதிமன்றத்தில் அவனுக்குத் தண்டனை வாசிக்கப்பட்டபோதே எடுத்த முடிவு இது.

“முத்து, எதுக்கும் பயப்படாதே. இளவட்டங்களை ஒன்று திரட்டு; நம் ஜாதி எதிரிகளை வெட்டிப்போடு; அவனுக வீடுகளைத் தீ வெச்சிக் கொளுத்து. எல்லார்த்துக்கும் நான் இருக்கேன்” என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் நடந்த ஜாதிக் கலவரத்தில் சரவணமுத்துவுக்குக் காலில் கத்தி கட்டிவிட்டவர் இந்தச் செல்லையா.

கலவரம் தொடர்பாக, சட்டம் சரவணமுத்துவைக் கைது செய்தது. இவனைத் தூண்டிவிட்டதே செல்லையாதான் என்பதை நாளிதழ்கள் கோடிகாட்டியபோது, “வன்முறைக்குத் தலைமை தாங்கிய சரவணமுத்துவுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனக்கு வன்முறையில் எள்ளத்தனையும் நம்பிக்கை கிடையாது” என்று சத்தியப்பிரமாணம் செய்தவர் இந்தச் செல்லையா. இவரைத்தான் இப்போது பழிவாங்க முடிவெடுத்திருக்கிறான் சரவணமுத்து.

பேட்டை ரவுடியான செல்லையா, ஓர் அரசியல் கட்சியின் வட்டச் செயலாளராகவும் இருந்தவர். கட்டப்பஞ்சாயத்து, சொத்து அபகரிப்பு என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே அப்போதைய ஆளுங்கட்சிக்கு எதிராக இவரின் கட்சி போராட்டங்களில் ஈடுபட்டபோதெல்லாம் இவரும் போராட்டங்களில் கலந்துகொள்வார், பல வகைகளிலும் சிறை சென்ற அனுபவம் உண்டு.

ஜாதி அபிமானத்தால் இவரின் தொண்டனாக இருந்தவன் சரவணமுத்து. இவர் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகும்போதெல்லாம், பேட்டை வாலிபர்களைத் திரட்டிச் சென்று, “தியாகி செல்லையா வாழ்க! தன்னிகரில்லாத தலைவன் வாழ்க!” என்றெல்லாம் முழக்கங்கள் எழுப்பி, ஊர்வலமாக அழைத்துவருவான்; இவருக்காக இன்னும் எப்படியெல்லாமோ பாடுபட்டவன் இவன். ஆக, செல்லையா, கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக ஆக்கப்பட்டதில் இவனுக்கு முக்கியப் பங்குண்டு.

இவன் கைதாகி, வழக்கு நடைபெற்றபோது வேறு ஆட்கள் மூலம் பெயருக்குக் கொஞ்சம் பண உதவி செய்தார் செல்லையா. இவன் ஐந்தாண்டுக் கடுங்காவல் தண்டனை பெற்றுச் சிறை சென்றபோது நடந்த தேர்தலில் இவர் சார்ந்திருந்த கட்சி வெற்றிபெற்றுவிட, அமைச்சர் ஆனார். அதன் பிறகு, தன் கவுரவத்துக்கு எந்தவிதப் பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இவனுடனான தொடர்பை முற்றிலுமாய் அறுத்துக்கொண்டார்.

தான் விடுதலை ஆனவுடன், அமைச்சரானதற்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் ஆளுயர மாலையுடன் சென்று, தக்க தருணம் பார்த்து அவரைத் தீர்த்துக்கட்டுவது என்று தீர்மானித்தான் சரவணமுத்து.

மாமூல் சடங்குகளுக்குப் பிறகு சரவணமுத்து விடுதலை செய்யப்பட்டான். சிறியிலிருந்து வெளியே அவன் காலடி வைத்தபோது ஒரு பேராச்சரியம் காத்திருந்தது.

இவனின் பேட்டை வாலிபர்கள் பெரும் கும்பலாகச் சேர்ந்து இவனை வரவேற்றார்கள். மலர்மாலைகள் இவனின் கழுத்தை நிறைத்தன. ”மாவீரன் சரவணமுத்து வாழ்க! தன்னிகரில்லாத் தியாகி வாழ்க! எங்கள் தலைவன் சரவணமுத்து வாழ்க!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

சரவணமுத்துவின் முகத்தில் ஆச்சரிய ரேகைகள் படர்ந்தன. யோசித்தான்; தலைமைப் பதவி தன்னைத் தேடி வருவதை உணர்ந்தான்; தானும் ஒரு செல்லையாவாக வாழ்க்கையில் உயர்ந்திட முடியும் என்று நம்பினான். அப்போதிருந்த சூழலில் செல்லையாவைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறை சென்று வாழ்நாளை வீணாக்குவதோ, தூக்கில் தொங்கி உயிரிழப்பதோ முட்டாள்தனம் என்று எண்ணினான்.

சிரித்த முகமும் நிமிர்ந்த நெஞ்சுமாகத் தொண்டர்களை நோக்கிக் கையசைத்தான் சரவணமுத்து.

[கதை, 100% கற்பனை]
========================================================================
பழைய ‘இதயம் பேசுகிறது’[09.01.2000] வார இதழில் வெளியான என் கதை இது.