செவ்வாய், 17 நவம்பர், 2020

மத வெறியும் மனிதகுலப் பேரழிவும்!!!

திருப்பாலைக்குடி என்ற கிராமத்திலிருந்து பஸ்ஸில் ஏறினேன், என் மனைவியோடும் மகளோடும். மூன்று பேர் ஓடிவந்து ஏறவும் பஸ் புறப்படவும் சரியாய் இருந்தது.

அவர்களுக்கு உட்கார இடமில்லை; நின்றார்கள். ஒரு நடுத்தர வயதுக்காரர் எங்களை நோட்டமிட்டார்.

என் மனைவியின் நெற்றியில் பொட்டில்லை. மகளுடைய நெற்றியிலும்தான்.

அடுத்து நின்றவரிடம் உரக்கச் சொன்னார்:

“இந்த முஸ்லீம்களைக் கண்டாலே வெட்டணும்.”

பலர் அதைக் கேட்டார்கள். பஸ் இரைச்சலில் அமுங்கிவிடாத தொனியில்தான் அவர் அதைச் சொன்னார்.

சிறிது தயக்கத்திற்குப் பிறகு கேட்டேன்: “முஸ்லீம்களை ஏன் வெட்டணும்?”

“பக்கத்துக் கிராமத்தில் ஒரு பொம்பளையைக் கெடுத்துக் கொலை பண்ணிட்டானுவ.”

“ரொம்பக் கொடுமை. இதைச் செஞ்சது முஸ்லீம்தான்கிறதுக்கு என்ன ஆதாரம்?”

“கேள்விப்பட்டோம்.”

“கேள்விப்பட்டதை வச்சி இப்படிப் பேசலாமா?”

அமைதி.

“ஒரு பொம்பளையை மானபங்கப் படுத்தறவன் முஸ்லீமோ இந்துவோ எவனா இருந்தாலும் வெட்டணும்னுதான் நான் சொல்லுவேன். முஸ்லீமை வெட்டணும்னு நீங்க சொல்றது என்ன நியாயம்?”

அவர் சொன்னார்: “நீங்க சொல்றது சரி. எல்லாரும் சொல்றாங்கன்னு நான் வார்த்தையை விட்டுட்டேன்.

‘அண்ணன், தம்பி, மாமன், மச்சான், வாப்பா, காக்கா’ என்று நாங்கள் வளர்த்து வந்த உறவுகளுக்கு என்ன ஆனது? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது மண்ணில் இப்பொழுது வேகமாகப் பரவுவது...மத நோய்.

எனது ஊரில் பல தெருக்களில் சாக்கடை தேங்குகிறது. முக்குக்கு முக்கு குப்பை நாறுகிறது. குடிப்பதற்குப் போதுமான தண்ணீர் இல்லை. ஒழுங்கான மருத்துவ வசதி இல்லை. மின் விளக்குகள் சிம்னி விளக்குகள் போல் அழுது வடிகின்றன, விரல்விட்டு எண்ணக்கூடிய சில செல்வந்தர்களின் வீடுகள் தவிர. இந்த அவலம் எல்லாத் தெருக்களிலும் இருக்கிறது. இதில் இந்து முஸ்லீம் என்ற பேதமில்லை.

இத்ற்காக யாரும் போராட முன்வரவில்லை. ஆனால், மதத்தைக் காப்பதற்காக மட்டும் வன்முறை வெறியாட்டம் தூண்டி விடப்படுகிறது........

..........கொஞ்ச நாட்கள் முன்பு, எங்கள் ஊரிலும், நான் ஊரில் இல்லாதபோது, இப்படியொரு அநாகரிகம் நடந்து ஊர் அமளிப்பட்டு, துப்பாக்கி புகைந்தது.  சில நாள் கழித்து என் மருமகன் சொன்னார்: 

“கலவரம் தொடங்கினவுடனே எங்களை அந்த ஆசாரி அப்பு தன் வீட்டுக்குள்ளே கூட்டிகிட்டுப் போய்ட்டாரு. அதே மாதிரி சில முஸ்லிம் நண்பர்களுக்கும் இந்துக்கள்தான் புகலிடம் கொடுத்தாங்க. சில இந்துக்களை சில முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே கூட்டிட்டுப் போய்ப் பாதுகாத்தாங்க.”

“அப்போ யாரெல்லாம் அடிச்சிகிட்டது?” என்று என் மாப்பிள்ளையிடம் கேட்டேன்.

“சமூக விரோதிகள். அவங்களுக்கு இது ஒரு சாக்கா அமைஞ்சிட்டுது” என்றார் அவர்.

ஒரு வெறியாட்டத்துக்கு இடையிலும் பலர் மனிதர்களாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc
மதம் கடந்து, மனித நேயம் போற்றி வாழ்ந்து மறைந்தவரும், என் நண்பரும், கவிஞரும், பேராசிரியருமான 'இன்குலாப்' அவர்களின் படைப்பு இது.

திங்கள், 16 நவம்பர், 2020

'இந்த நிலை' நீடித்தால் மனித இனம் அழியும்!!!

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துகொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது.

கிட்டத்தட்ட 200 ஆய்வுகளின் முடிவுகளுக்குப் பிறகு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து வீழ்ச்சியடையும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியின் முடிவுகள் மிகவும் கவலையளிப்பதாகக் கூறும் ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் ஹகாயி லெவின், அவை எதிர்வரும் ஆண்டுகளில் உண்மையாகலாம் என்று கூறுகிறார்.

ஆராய்ச்சி மிக விரிவாக மேற்கொள்ளப்பட்டது. அளவீட்டின் அடிப்படையிலும் மிகப்பெரியது. 1973 முதல் 2011-ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தொற்று நோய் நிபுணரான (அபெடிமியோலாஜிஸ்ட்) டாக்டர் ஹகாயி லெவின், இதே போக்கு தொடர்ந்தால், மனித இனம் அழிந்து போகும் வாய்ப்பு அதிகமாகும் என்கிறார்.

வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்துக் கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் நடக்கப்போகும் அசம்பாவிதங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது என்கிறார்.

இந்த ஆய்வில் இணைந்து பணிபுரியாத விஞ்ஞானிகள்கூட, இந்த ஆய்வின் தரம் பற்றிச் சிலாகித்துப் பேசுகின்றனர். ஆனால், இந்த ஆய்வின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது அவசரகதியில் எடுத்த முடிவாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் அமெரிக்காவில் வசிக்கும் ஆண்களுக்கு அதிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் டாக்டர் லெவின், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லை என்கிறார்.

அதற்கான காரணமாக, இந்த நாடுகளில் இதுவரை பெரிய அளவிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படாததைச் சில ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் ஆண்களுக்கு, இந்தப் பிரச்சனை தற்போது இல்லாவிட்டாலும், அவர்களும் ஒருநாள் இந்தப் பிரச்சனையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று டாக்டர் லெவின் கூறுகிறார்.

                                    *                              *                        *

ஐயோ பாவம் ஆண்கள்!

மனித இனம் எப்போதோ அழிந்து தொலையட்டும், விந்தணு குறைந்த 'மலட்டு' ஆண்களைப் பெண்கள் மதிக்க மாட்டார்களே! இதுவல்லவோ ஆண்களின் இப்போதைய கவலை!!