வெள்ளி, 4 டிசம்பர், 2020

தமிழகத்தின் தலையெழுத்தும் 'அவதாரப் புருஷன்' ரஜினியும்!!

அரசியல் கட்சி தொடங்கித் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக உறுதி பூண்டுள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சத்தைக் கீழ்க்காணும் மஞ்சள் வண்ண வரிகள் எடுத்தியம்புகின்றன.

நடிகர் நடிப்புத் துறையில் மட்டுமல்ல, நம்மை முட்டாளாக்குவதிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்! எப்படி?

தொடர்ந்து படியுங்கள், புரியும்.

*கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. 

!!சுற்றுப்பயணம் வேண்டாம் நடிகரே.  புயலால் பாதிக்கப்பட்ட சில இடங்களுக்குக் 'குறும்பயணம்'கூடவா மேற்கொள்ள முடியவில்லை? தமிழக மக்களுக்காக உயிரையும் கொடுப்பீங்களாமே?! ஹி...ஹி...ஹி!!!

*வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். 

?எல்லாம் சரி தலைவா, அந்த ஆன்மிக அரசியல்தான் எல்லோரையும் புருவம் நெறிக்க வைக்குது. அரசியல் இருக்கட்டும், ஆன்மிகம்னா என்னன்னுகூட இதுவரைக்கும் சொல்லல; இனியாவது கொஞ்சம் புரியும் வகையில் சொல்வீங்களா?

*தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். 

!!நீங்கதான் கதின்னு தமிழர்கள் தவம் கிடக்கல. உங்களோட ரசிகர் கூட்டத்துக்காகவோ யாரோ சிலரின் வற்புறுத்தலுக்காகவோ அரசியலில் கால் பதிக்கிறீங்க. தியாகம் எல்லாம் வேண்டாம். உங்க தகுதிக்கு ஏத்தது 'தியானம்' மட்டும்தான்!

*கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். 

?!வாக்குக் கொடுத்தீங்களா? எப்போ? யார்கிட்டே? எதுக்கு?!

*நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. 

??மக்கள் ஓட்டுப் போடலேன்னா, நீங்க தோல்வி அடைவீங்க. அது எப்படி மக்களின் தோல்வி ஆகும்? குழப்புறீங்களே 'உச்சம்'?!

*தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. 

!!தலையெழுத்தெல்லாம் நீங்க நம்புற ஆண்டவன்தான் எழுதுறான்னு சொல்வாங்க. அதை நீங்க அழிக்கப்போறதாச் சொல்லுறீங்க. நீங்க என்ன ஆண்டவனின் அவதாரமா?!

*ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும்.

?!ஆண்டவன் கனவில் வந்து சொன்னாரா, அசரீரியாகவா?!

*மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம்.  

??அந்த 'எல்லாம்' எது எதுன்னு பட்டியல் போட்டுட்டீங்களா வருங்கால முதலமைச்சரே?

*இப்போ இல்லைன்னா எப்பவும் இல்ல.

!!!மக்களை இப்போ ஏமாத்தலேன்னா இனி எப்பவும் ஏமாத்த முடியாதுன்னுதானே சொல்லுறீங்க?  ஹ...ஹ...ஹ!!!

*அற்புதம், அதிசயம் நிகழும்'

!!!நிறைய நாடுகளில் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிச்சிட்டதால, அது பூண்டோடு அழியப்போகுது. இதைத்தானே சொல்லுறீங்க?!

வியாழன், 3 டிசம்பர், 2020

கடவுள் பொய்! அணுக்களே மெய்!![காலங்கடந்து நிற்கும் கருத்துப் பதிவு]

'கடவுளுக்குத் தோற்றமோ அழிவோ இல்லை; அவர் எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர்' என்னும் கடவுள் நம்பிக்கையாளரின் அனுமானத்தைத் தகர்க்கும் விதமாக, என்றும் இருத்தலான நிலை அவருக்கு எப்படி வாய்த்தது? அந்நிலையை உருவாக்கியவர் யார்? என்றெல்லாம் சிந்தனையாளர்கள் எழுப்பும் வினாக்களுக்கும் இன்றளவும் விடை தரப்படவில்லை.

'பிரபஞ்ச வெளியில் உலா வரும் கோள்களும், நட்சத்திரங்களும் பிறவும் வடிவமைக்கப்பட்ட விதமும், உயிர்களின் உடலமைப்பும் அவற்றின் ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட இயக்கமும் எத்தனை அதிசயமானது! இந்த அதிசயம் தானாக நிகழ்ந்திருக்க முடியாது. இதை நிகழ்த்த ஒருவர் தேவை. அவரே கடவுள்' என்று கடவுளை நம்புவோர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த ‘அதிசயக் கடவுளை’த் தோற்றுவித்தது யார்? எங்கே எப்படித் தோற்றுவிக்கப்பட்டார்?' என்ற கேள்விகளுக்கு இந்நாள்வரை பதில் இல்லை; 'புரியவில்லை’ என்று ஒப்புக் கொள்ளும் நேர்மையும் அவர்களிடம் இல்லை.

கடவுளோ வேறு எதுவோ, அனைத்திற்கும் மூலகாரணமான ‘ஒன்றின்’ தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற வினாவுக்கு விடை காணும் சாத்தியம் இல்லையென்றாலும், இந்தப் பிரமாண்ட ‘வெளி’யில் வகைவகையான பொருள்களையும் உயிர்களையும் அவற்றின் இயக்கங்களையும் காண முடிவது கருதத்தில் கொள்ளத்தக்கது.

இவை எப்படியோ தோன்றிவிட்டன. இவற்றின் 'இருப்பு’ உண்மை.

இந்த உண்மையைக் கடவுள் நம்பிக்கையாளர், மறுப்பாளர் என அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இதைத் தமக்குச் சாதகமாக்கி, ஏன், எப்படி போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டால் என்ன? கோள்களும் உயிர்களும் பிறவும் இருப்பது உண்மை எனின், அவற்றைத் தோற்றுவித்த ஒருவர் இருப்பது சாத்தியம்தானே? அவர்தான் கடவுள் என்று கடவுள் குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட முயல்கின்றனர் கடவுளைப் போற்றுவோர்.

அத்தகையோரிடம் நாம் முன்வைக்கும் வினா இதுதான்.....

"மையப்புள்ளி இல்லாத, நீளம் அகலம் சுற்றளவு விளிம்பு என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாத அதிசயிக்கத்தக்க அதிபிரமாண்டமான ‘வெளி’யில் இடம் கொண்டிருக்கும் அத்தனை பொருள்களுக்கும் உயிர்களுக்கும் மூலமாக இருப்பது கடவுள் என்னும் ஒரு ‘நபர்’தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?"

அனைத்திற்கும் 'ஒன்றே’ அல்லது ‘ஒருவரே’ மூலகாரணம் என்று தீர்மானிப்பதற்கான அடிப்படை என்ன?

பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் எழுந்த போட்டியால் மூண்ட பெரும் போரால் ஏனையோர் அழிந்துவிட ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?

இதற்கு மிகச் சரியான பதிலை எவராலும் தர இயலாது. “தெரியாது” என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளவும் கடவுளை அனுமானித்தவர்களின் ‘கவுரவம்’ இடம் தருவதில்லை.

எத்தனை எத்தனை யுக யுகாந்தரங்களுக்கு முயன்றாலும், மனித அறிவால் அளந்தறிய முடியாத 'வெளி’யில் இடம் கொண்டுள்ள அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பவை, பேரறிவு சான்ற அணுக்களே என்று ஏன் கருதக் கூடாது?

பெரும் எண்ணிக்கையிலான அணுக்களைக் கட்டுப்படுத்த ‘ஒருவர்’ அதாவது, ‘கடவுள்’ தேவையாயிற்றே என்ற ஐயம் எழுவது இயல்பு.

ஒரு கடவுள் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு நியதியின்படி செயல்படுவாரென்றால், அது அணுக்களுக்கும் பொருந்தும்தானே?

ஒவ்வோர் அணுவும் சில நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, பிரபஞ்சப் பொருள்களையும் உயிர்களையும் உருவாக்குவதும் இயக்குவதுமான செயல்களைச் செய்கிறது எனக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளை உருவாக்கும் அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக்கூட்டங்கள் வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம்; கடவுள் என்னும் ஒற்றை நபர் அல்ல என்று நாம் அனுமானிப்பதில் தவறேதும் இல்லை.

இது வெறும் அனுமானம்தான். கடவுள் என்று ஒருவரை ஆன்மிகவாதிகள் அனுமானம் செய்தது போல.

காலப் போக்கில் எது உண்மை எது பொய் என்பதை அறிவியல்தான் ஆராய்ந்து கண்டறிதல்  வேண்டும். அதுவரை, புரிந்து கொள்ள இயலாத எதையும், “புரியவில்லை” என்று ஒப்புக்கொள்வதே அறிவுடையோர்க்கு அழகு என்று கொள்ளலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மறுபதிவு[13.07.2015]