சனி, 23 ஜூலை, 2022

நான் இந்தியன்!... 'இந்தி'யனல்ல!!

கீழ்க் காண்பது என் 'கை பேசி'க்குச் சற்று முன்னர் வந்த செய்தி.

//AD-ARWGOV

One nation. One emotion. One identity. This 15th Aug, bring home the National Flag & celebrate Azadi Ka Amrit Mahotsav with Har Ghar Tiranga//

'ஒரு நாடு. ஒத்த உணர்ச்சி[தமிழனாக இந்தியன்]'... சரி.

'One identity'?

அதென்ன  'ஒரு அடையாளம்'?...  'இந்து'வாக இருத்தலும் 'இந்தி' பேசுதலுமா?

பிறப்பாலும், இனத்தாலும், மொழியாலும், நாகரிகத்தாலும் வேறு வேறு அடையாளங்களைக் கொண்டவர்களின் தொகுப்புதானே இந்தியா[நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று யாரும் சொல்லவில்லையே?] அப்புறம் எதற்கு 'ஒரு அடையாளம்' என்னும் சொற்சேர்க்கை?

அப்புறம்.....

'Azadi Ka Amrit Mahotsav with Har Ghar Tiranga' என்று புரியாத மொழியில்[இந்தியா, சமசுக்கிருதமா?] சொல்லி அதைக் கொண்டாடச்[celebrate] சொல்கிறார்கள்.

கொண்டாடுவதற்கு முன்னால் நாம் எழுப்பும் கேள்வி.....

அந்தந்த மாநிலத்தவருக்கு அவரவர் தாய்மொழியில் செய்தி அனுப்பலாமே. இந்தியைத் தவிர[ஆங்கிலம் தீண்டத் தகாத அந்நிய மொழி?] வேறு இந்திய மொழி தெரிந்தவர்களே நடுவணரசு அலுவலகங்களில் இல்லையா?!

கூகுளாரிடம் கொடுத்தால் நொடிப் பொழுதில்[ஓரளவேனும் புரியும் வகையில்] மொழியாக்கம் செய்வாரே?

'கர் புர்[Har Ghar]  இந்தி வளர்ந்தால் மட்டுமே இந்தியா வளரும் என்று நினைக்கிறார்களா?

ஆட்சி நடத்தப் பெரும்பான்மை பலம் இருப்பதால் தாய்மொழிப் பற்றாளரை மதிக்காத விபரீதப் போக்கு இதற்கெல்லாம் காரணமா?

இப்போதைக்குக் காரணம் எதுவாகவோ இருக்கட்டும், இனியேனும் யோசித்துச் செயல்படுவது 'இந்தி'க்காரர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியருக்கும் நன்மை பயப்பதாக அமையும்!

வெள்ளி, 22 ஜூலை, 2022

ஒன்றரை வயதில் 'பூப்பு' எய்திய இங்கிலாந்துக் குழந்தை!!!

'லிசா' என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்கு இப்போது 23 வயது.

ஒன்றரை வயதுக் குழந்தையாக இருந்தபோதே இவளின் பிறப்புறுப்பில் ரத்தம் வெளியேறத் தொடங்கியது. அது மேலும் சில நாட்கள் தொடர்ந்தது.

வருத்தம் அடைந்த இவளின் பெற்றோர் மருத்துவரை அணுகினார்கள். "இதற்கு முன்கூட்டிப் பருவமடைதல்' என்னும் அரிதான நிகழ்வு காரணமாக இருக்கலாம்" என்று ஆறுதல் மொழி கூறி அனுப்பினார் அவர்.

8 வயதிலிருந்தே, இவள் வயது வந்தவரைப் போல ப்ரா அணிய வேண்டியிருந்தது. இங்கிலாந்தின் நியூகேஸில் பகுதியைச் சேர்ந்தவரும், இப்போதைய, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியருமான 'லிசா லூயிஸ்', இந்த நிலை காரணமாகத் தனது வகுப்புத் தோழர்கள் தன்னை மோசமாக இழித்துப் பேசுவதாகக் கூறியுள்ளார்.

பேட்டி ஒன்றில், "மற்றவர்களைவிடவும் நான் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்தேன். எனது மார்பகத்தின் அளவு மிகவும் அதிகரித்தது, 7 வயதிலிருந்தே அது வளர ஆரம்பித்திருந்தது. அதனால், பிரா அணிய நேர்ந்தது. தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது, ​​நான் எனது பள்ளித் தோழிகளுடன் நீச்சல் செல்வேன். உடை மாற்றும் அறையில், மற்றவர்கள் என்னைப் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். மார்பக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாயா என்று என்னிடமே கேட்டுக் கேலி செய்வார்கள்" என்று மிகவும் வருத்தப்பட்டாராம்.


இதை 'முன்கூட்டிப் பருவமடைதல்' என்று மருத்துவர் கூறினாரே, இந்த முன்கூட்டிப் பருவமடைதல் உலக அளவில் எத்தனைக் குழந்தைகளுக்கு நிகழ்ந்துள்ளது என்பதை அறிய இயலவில்லை.


பெற்றவர்கள் வேதனைக்கு உள்ளாகும் வகையில், பருவ வயதைத் தாண்டியும் பூப்பு எய்தாத பெண்களுக்கிடையே இந்தச் சிறுமியின் வாழ்வில் ஏன் இந்த அவலம்?!


எல்லாம் 'அவன்' செயல்! அவனின்றி அணுவும் அசையாது!! ஹி... ஹி... ஹி!!!


***பதிவு செய்திருந்த ஆங்கிலச் செய்தியின் ஆதார முகவரி, கவனக்குறைவால் காணாமல்போனது. சிறிது நேர முயற்சியில் மீட்டெடுக்க இயலவில்லை. வருந்துகிறேன்.