வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

கண் முன்னே மனைவியின் கள்ள உடலுறவு! கோயிலுக்குப் போன அப்பாவிக் கணவன்!!

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிப்புதூர் பருத்திவிளையில் இடம்பெற்ற, உலகம் கண்டிராத ஓர் அபூர்வ நிகழ்வு இது.


* * * * *


கட்டிய மனைவி கள்ளக்காமுகனுடன் உடலுறவு கொள்வதைக் கண்ணால் காணும் ஓர் ஆண் மகன் செயல்பாடு என்னவாக இருக்கும்?


இருவரில் ஒருவரையோ, இருவரையுமோ வெட்டிப்போடுவான்.


தன் மனைவி காமுகன் ஒருவனுடன் கள்ளப் புணர்ச்சியில் ஈடுபட்டிருப்பதைக் கண்ணால் கண்ட பிறகும் இப்படியானதொரு வெறிச் செயலில் ஈடுபடவில்லை ‘அவன்’.


நல்ல மனதும், கடவுள் மீது அழுத்தமான நம்பிக்கையும் கொண்டிருந்த அந்த அப்பாவி, ஊரிலுள்ள சுடலை மாடன் கோயிலுக்குச் சென்றான்.


“உன்னுடைய தீவிர பக்தன் நான். நீ துணையிருப்பதால் நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையுடன்தான் எந்தவொரு காரியத்தையும் செய்தேன். ஒழுக்கமுள்ள நல்ல பெண்டாட்டியை எனக்குக் கொடு என்று உன்னை வேண்டிக்கொண்டுதான் பெண் பார்த்தேன்; ஈஸ்வரி கழுத்தில் தாலி கட்டினேன்.....


இன்னிக்கி அவள் எனக்குத் துரோகம் செய்துவிட்டாள். அவளையும் என்னையும், இந்த உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களையும் படைத்த நீ இதை ஏன் தடுக்கவில்லை?” என்று சொல்லிக்கொண்டு[இது நம் அனுமானம்] சுடலை மாடன் சாமி சிலையைச் சேதப்படுத்தினான் அவன்.


அவன் பெயர் ஐயப்பன்[“சாமியே சரணம் ஐயப்பா!”]


இவனைக் கைது செய்யும்படி ஊரிலுள்ள பக்தச்சீலர்கள் மறியல் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.


காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான் நம் அனுதாபத்திற்குரிய ஐயப்பன்.


‘கள்ளக்காதலில் ஈடுபட்ட காமாந்தகி கைது; கள்ள உறவுகொண்ட கயவனைத் தேடுகிறது காவல்துறை’[இவை ஊடகச் செய்திகள்].


இவனுக்குத்தான் எத்தனை நல்ல உள்ளம்! எத்தனைப் பெரிய ஏமாளிக்குணம்!


இப்படியும் மனிதர்களா!


இவனைப் போன்றவர்கள் இந்த மண்ணில் எத்தனைபேர் இருப்பார்களோ என்றெல்லாம் நினைக்கும்போது மனம் வெகுவாகக் கனத்துப்போகிறது!!


* * * * *

***'நம்பிக்கைத் துரோகம்’ செய்வது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கடவுளுக்குக் கைவந்த கலையோ!?


முழுத் தகவலும் அறிந்திடக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.


https://www.dailythanthi.com/News/State/a-wife-who-was-alone-with-a-fake-boyfriend-at-home-the-tragic-decision-taken-by-her-husband-after-witnessing-it-816555


வியாழன், 24 ஆகஸ்ட், 2023

‘காதல் யுகம்!’... சுடுகாட்டில் சுட்ட கதை!!

இறந்துபோன என் நண்பர் சுடுகாட்டில் எரிக்கப்பட்டார். அன்று ஈமச் சடங்கு. சடங்கு நிகழ்த்த வேண்டிய அவரின் ஒரே மகன், மொட்டை அடித்துக்கொண்டான்; தாடி மழிக்க மறுத்துவிட்டான்! அதற்கான காரணத்தைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்ட கதை இது. 

“தாடி வளர்க்கிறியே, உடம்பு சுகமில்லையா?” என்று கேட்டான் குமார்.

“இல்ல” என்றான் கீர்த்தி.

“ஸ்டைலுக்கா?”

“இல்ல.”

“வேண்டுதலா?”

“இல்ல.”

“கேட்கிறதுக்கெல்லாம் இல்ல நொள்ளைங்கிற. காரணத்தை சொல்லப் போறியா இல்லையா?” -கோபத்தின் எல்லையைத் தீண்டிவிட்டிருந்தான் குமார்.

“சர்மிளாகிட்டப் பல தடவை ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன். அவ மவுனம் சாதிக்கிறா. ’உன் பதில் கிடைச்சப்புறம்தான் தாடி எடுப்பேன்’னு சொல்லிட்டேன். இன்னிக்கி வரைக்கும் பதில் இல்ல” என்றான் கீர்த்தி, வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால்.

“காதலிக்க வேற பெண்ணா இல்ல. அவளை மறந்துடு.”

“முடியாதுடா.”

இது நடந்து சில நாட்களில், கீர்த்தியின் அப்பா மாரடைப்பில் காலமானார்.

சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.

அன்று ‘ஈமச் சடங்கு’.

“மொட்டை போடணும், வா கீர்த்தி.” -காரியம் செய்பவர் கீர்த்தியை அழைத்தார்.

அவன் சென்றான்.

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்; “தாடியை எடுக்க வேண்டாம்.”

“எடுக்காம சடங்கு செய்யக் கூடாது.”

“செஞ்சா என்ன?”

கூடியிருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்தான் கீர்த்தி.

வேறு வழியில்லாமல், இறந்துபோன நண்பருக்கு ‘மகன் முறை’ ஆகும் ஒருவரை வைத்துச் சடங்குகள் செய்யப்பட்டன.

கீர்த்தி, தாடி மழிக்க மறுத்ததற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

சுடுகாட்டில் குழுமியிருந்த கும்பல் களையத் தொடங்கியபோது, “கலியுகம் முடிஞ்சி போச்சி. இது காதல் யுகம்” என்று அடங்கிய குரலில் ஒருவர் சொன்னார், அருகில் இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக. துக்ககரமான அந்த நேரத்திலும் அவர்கள் ஒப்புக்குச் சிரித்து வைத்தார்கள்!

நானும்தான்!

                                     *   *   *   *   *

***2016ஆம் ஆண்டுப் படைப்பு; புதுப்பிக்கப்படாதது! ஹி... ஹி... ஹி!!!