புதன், 1 அக்டோபர், 2025

நான்கு சுவர்களுக்குள் ஒரு சொர்க்கம்!!!

அவர்களுக்கு அது முதலிரவு.

அறைக் கதவு தாளிடப்பட்டு அரை மணி நேரம் ஆகியும் அவனும் அவளும் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை!

அவன் கத்தியால் ஆப்பிளைக் கீறிக்கொண்டிருந்தான். அவள் சடைப்பின்னலால் உள்ளங்கையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏன் இந்தத் திரை? ஏதாவது சொல்லு” என்றான் அவன்.

“நீங்க சொல்லுங்க” என்றாள் அவள்.

“அதான், சொல்லுன்னு சொல்லிட்டேனே” -கண் சிமிட்டிச் சிரித்தான் அவன்.

அவள் சொன்னாள்: “இன்னிக்கி அது வேண்டாங்க.”

“பயமா இருக்கா?”

“ம்ம்ம்...ஊகூம்.”

“மூடு இல்லையா?”

“அப்படியெல்லாம் இல்ல.”

“பின்னே...?”

“அது வந்து...வந்து...” -ஏதோ ஒருவிதத் தயக்கம் தொண்டைக்குழி வாசலில் வார்த்தைகளை வழி மறித்தது.

“சும்மா சொல்லு.” -தைரியம் சொல்லி, அவளின் கன்னக் கதுப்பில் ஆப்பிளை உருட்டி அழகு பார்த்தான் அவன்.

அரை நிமிட யோசனைக்குப் பின்னர் அவள் சொன்னாள்: “என் ஜாதகத்தில் தோஷம் இருக்கு. வரன் அமையவே இல்ல. பொய் ஜாதகம் தயார்ப் பண்ணி என் அப்பா உங்களை ஏமாத்திட்டார். என்னால தடுக்க முடியல.”

அவன் ஒரு 'குபீர்'ச் சிரிப்பைப் பிரசவித்தான். 

“ஏன் சிரிக்கிறீங்க?”

“என் ஜாதகமும் போலிதான்.”

“உங்க ஜாதகத்திலும் தோஷமா?”

“எனக்கு ஜாதகமே இல்ல. படிப்பறிவு இல்லாத பெத்தவங்க எழுதி வைக்கல. ஜாதகம் இல்லேன்னா, எனக்குப் பெருசா ஏதோ குறை இருக்குன்னு பெண் வீட்டார் சந்தேகப்படுவாங்களேன்னுதான் இந்தப் பித்தலாட்டம். இதைச் சொல்லத்தான் நானும் தயங்கிட்டிருந்தேன். நீ துணிஞ்சி சொல்லிட்டே. அது சரி, இதுக்கும், அது இப்போ வேண்டாம்னு சொன்னியே, அதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்குங்க. என் மெய்யான ஜாதகத்தில் தோஷம் இருக்கில்லியா? அது உங்களுக்குக் கெடுதல் பண்ணும். அதனால, ஒரு ஜோதிடர் மூலமா பரிகாரம் பண்ணனும். அதுக்கப்புறம்தான் அது.”

“பரிகாரமே இல்லேன்னா?”

“நமக்குள்ள அது எப்பவும்  வேண்டாம். நீங்க இன்னொரு கல்யாணம் செய்துக்குங்க.”

அவன் சிலிர்த்தான்; “உண்மையாத்தான் சொல்றியா?” என்றான்.

“சத்தியமாங்க.”

‘ஆகட்டும்’ என்பது போலத் தலையசைத்துவிட்டு, “என் தோஷத்துக்கும் பரிகாரம் பண்ணனும்” என்றான் அவன்.

“உங்களுக்குத்தான் ஜாதகமே இல்லையே?”

“ஜாதகம் எழுதாததால தோஷமே இல்லேன்னு ஆயிடாது. கெட்ட தோஷம் ஏதும் இருந்துட்டா அது உன்னைப் பாதிக்கும்தானே?”

“அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. உங்களுக்கு ஒரு கெடுதலும் வராம இருந்தாப் போதும்.”

நெகிழ்ந்து இளகினான் அவன்; கண்கள் கலங்கச் சொன்னான்: “எத்தனை நல்ல மனசு உனக்கு. இந்த மனசு எவ்வளவு பெரிய தோஷத்தையும் அண்டவிடாம, கவசமா என்னைப் பாதுகாக்கும். பரிகாரம் எதுவும் தேவையில்ல.”

சொல்லிக்கொண்டே அவளின் தோளைத் தொட்டான்; கேசம் வருடி வாசம் நுகர்ந்தான்; கண்களா, இரு கன்னங்களா, இதழ்களா... எங்கே முதல் முத்தம் பதிப்பது என்ற பரிதவிப்புடன் அவளைத் தழுவித் தன்னிலை இழந்துகொண்டிருந்தான் அவன்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

அரசர்களின் யானை மீதான நகர்வலமும் இக்கால அரசியல்வாதிகளின் ஆணவமலமும்!

பொருள்களைக் கொண்டுசெல்லவும் மக்கள் பயணிக்கவும் லாரி, கார் முதலான ஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

கார்களிலும் பேருந்துகளிலும், ஏனைய பயணிகள் வாகனங்களிலும் உள்ளே அமர்ந்து பயணிக்கலாமே தவிர, அவற்றின் மேற்கூரைகளின் மேல், தடுப்புகள் அமைத்து அமர்ந்துகொண்டோ, நின்றுகொண்டோ பயணிப்பது[சரக்கு வாகனங்கள் உட்பட] சட்ட ரீதியான குற்றச் செயலாகும்> ‘வாகனத்தின் மீது நின்று நகர்வலம் செல்வது என்பது கடுமையான போக்குவரத்து விதிமீறலாகும், இது சட்டப்படி தண்டனைக்குரியது’.https://www.google.com/search?.....

இந்தச் சட்ட விதி பொதுமக்களை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையும் கட்டுப்படுத்தும்.

அப்புறம் எப்படி இவர்களை வாகனங்களின் மேல் பரப்பில் தடுப்புகள் அமைத்து நின்றுகொண்டோ, பந்தாவாக அமர்ந்துகொண்டோ[அக்கால உச்ச அதிகாரம் படைத்த அரசர்கள் யானை மீதான அம்பாரியில் அமர்ந்து நகர்வலம் வந்தாற்போல] அடிமைகள் போல் அணிவகுத்து நிற்கும் அப்பாவிப் பொதுமக்களைப் பார்த்துக் கையசைக்கவும் உரை நிகழ்த்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்?

இவர்கள் என்ன அறிவுலக மேதைகளா? ஆய்வுலக அறிஞர்களா? மக்களுக்காகவே உழைக்கும் பொதுநல உணர்வாளர்களா? 99.99% கோடிகளில் சுருட்டிச் சுகபோகமாக வாழத் திட்டமிடும் சுயநலவாதிகள்.

இவர்களுக்கு எதற்கு நகர்வலம் ஊர்வலம் காடுவலம் சுடுகாடுவலம் எல்லாம்?

தேர்தல் காலங்களில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கலாம்; ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்யலாம். உச்ச அதிகாரம் படைத்தவர்களாயினும், மேற்கண்டவாறு வீதிவலம் சென்று, மக்களின் அன்றாடப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிப்பது பெரும் குற்றம். இதற்கு அனுமதியளிப்பதும் குற்றமே[விதிகளைக் கடுமையாக்கப் புதிய சட்டங்கள் இயற்றலாம்].

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இப்படியான அனுமதியை இவர்களுக்கு வழங்கியவர்கள் வெறும் மூடரல்ல; முழு மூடர்கள்.

உரிய முறையில் அறிஞர் குழு அமைத்து, அரசியல்வாதிகளின் இந்த அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது உடனடித் தேவை. 

அரசியல்வாதிகள் இதைச் செய்யமாட்டார்கள். மக்கள் வெகுண்டெழுந்தால் செய்யவைக்கலாம்.

அது நிகழ்வது எப்போது?