வியாழன், 23 அக்டோபர், 2025

டெல்லிக்கு அருகே சபரிமலைக் கோயில்... மோடிஜியால் முடியும்!


நம் குடியரசுத் தலைவர் ‘முர்மு’ அவர்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள்.

நம் பிரதமர் மோடி அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அயோத்தியில் பாலராமருக்குக் கோடானுகோடி செலவில் கோயில் கட்டியது போல, கோடியோ கோடி செலவில்[பக்தி வளர்ப்பில் பணம் ஒரு பொருட்டல்ல] டெல்லிக்கு அருகில்  ஒரு மலையைத் தேர்வு செய்து, அற்புதமான அழகிய ஐயப்பன் சாமி கோயிலையும் கட்டியிருப்பார். ஐயப்பன் வழிபாடு குடியரசுத் தலைவருக்கு மிக எளிதானதாக அமைந்திருக்கும்.

‘முர்மு’ அவர்களின் அடுத்த, கேரளாவில் உள்ள சபரிமலைப் பயணத்தைத் தவிர்ப்பதற்காக, இப்போதே நம் பிரதமர் அவர்கள் ஐயப்பன் சாமிக்குக் கோயில் கட்டும் பணியை[டெல்லிக்கு அருகில் உள்ள மலையில்] மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

டெல்லிக்கு மிக அருகில் மலை ஏதும் இல்லை. சுமார் 270 கி.மீ தொலைவில் அவை உள்ளன.

*டேராடூன்[டெல்லியிலிருந்து 270 கி.மீ]:

*பர்வானூ (டெல்லியிலிருந்து 295 கிமீ)

டெல்லியிலிருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக் கோயிலுக்கான தூரம்[2,750.7 கிமீ> NH 52 வழியாக], இவற்றோடு ஒப்பிடும்போது மிக மிக அதிகம்

என்வே, மேற்கண்டவை போன்ற மலைகளில் ஏற்றதொரு இடத்தைத் தேர்வு செய்து, அங்கு கேரளாவின் சபரிமலைக் கோயிலைப் போன்றதொரு கோயிலை, கடவுளால் அனுப்பப்பட்ட நம் பிரதமர் மோடிஜி அவர்கள் உருவாக்கிட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

இதனால், மோடிஜி, முர்மு, அமித்ஸு போன்ற மேலிடத்தார் மட்டுமல்லாமல், டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரங்களில் வாழும் ஏழைபாழைகளும் மேற்கண்ட கோயிலுக்குச் சென்று ஐயப்பனின் அருளைப் பெறுவது எளிதில் சாத்தியமாகும்.

மோடிஜி மேற்கொள்ளவுள்ள இந்த இறைப்பணிக்கு அம்பானி, அதானி போன்ற அருளாளர்கள் மட்டுமல்லாமல், பக்திமான்களில் பலரும் நிதியை வாரி வழங்குவார்கள் என்பது உறுதி. 

அனாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் புகலிடங்கள், அரசு மருத்துவமனைகள், போதுமான வசதியில்லாத தனியார் மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு உதவுவதால் கிடைக்காத புண்ணியத்தை, பக்திப் பணிகளுக்கு உதவுவதன் மூலம் பெறலாம் என்பது அறியத்தக்கது[ஹி... ஹி... ஹி!!!]!

சாமியே சரணம் ஐயப்பா!

புதன், 22 அக்டோபர், 2025

அடித்த பாம்பை[பாகிஸ்தான்] அடிக்கும் பராக்கிரமர்கள் மோடியும் ராஜ்நாத்தும்!!!

அண்மையில் நான்கே நான்கு நாட்கள் நடைபெற்ற ‘இந்தியா-பாகிஸ்தான் போர், பாகிஸ்தான்காரன் மோடியின் பாதக்கமலங்களைக் கண்ணீரால் கழுவியதால் அல்ல, சட்டாம்பிள்ளை டிரம்ப் மிரட்டலால்தான் நிறுத்தப்பட்டது என்பது உலகம் அறிந்த ரகசியம் என்கிறார்கள் நடுநிலை நாட்டவர்கள்.

இந்த ரகசியத்தை அறிந்திருந்தும், தான் நடத்திய ‘ஆப்ரேசன் சிந்தூர்’தான் பாகிஸ்தானியனைப் பணிய வைத்ததாக அவ்வப்போது அறிவிப்புச் செய்து ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைக்கிறார் மோடி.

அவர் அடித்த அடியில் நிலைகுலைந்து, மீண்டெழும் வகையறியாமல் தவித்துக்கிடப்பதாகச் சொல்லப்படும், நம் ‘பக்கா’ எதிரி பாகிஸ்தானியனைக் மிரட்டி[சுற்றிவளைத்து]க், குலைநடுங்கச் செய்திருக்கிறார் நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தபோதுதான், மேற்கண்டவாறு மிரட்டினார் அவர். அது.....

“பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் நமது பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்புக்குள்தான் உள்ளது.” 

“ஒட்டுமொத்த உலகின்[அற்பப் பாகிஸ்தான் உள்ளடக்கம்] ஒவ்வொரு மில்லிமீட்டரும் பிரமோஸ் ஏவுகணையின் வரம்புக்குள்தான் உள்ளது” -என்றிப்படி அவர் பேசியிருந்தால், அதைக் கேட்டு ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் உடம்பும் சிலிர்த்திருக்கும்!

வாழ்க மோடி! ராஜ்நாத்தும் வாழ்க!

https://www.hindutamil.in/news/india/1380198-every-inch-of-pakistan-within-brahmos-range-rajnath-singh.html